சபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா ?

03 Jan 2019

’பாலின சமத்துவத்தை உயர்த்தி பிடிப்போம்’ என்ற முழக்கத்தோடு லட்சக்கணக்கான கேரளப் பெண்கள் சனவரி 1 அன்று மாபெரும் வனிதா மதிலை எழுப்பி பெண்ணடிமை பிற்போக்குத்தன மத நம்பிக்கைகளுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டி ஓர் வரலாற்றை படைத்து விட்டனர். அவர்களின் போராட்டம் இந்திய துணைக்கண்டத்திற்கே ஓர் எடுத்துகாட்டாகும். அடுத்த சில மணி நேரங்களில், சனவரி 2 அதிகாலை 3.45 மணியளவில் 40 வயதுகளில் உள்ள பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள்,பல ஆண்டுகாலமாக பெண் உடலை தீட்டாக்கி வைத்திருந்த சபரிமலை கோயிலின் பிற்போக்குத்தனமான வழிபாட்டுமுறையை தகர்த்தெறிந்து தங்கள் வழிபாட்டு உரிமையை மீட்டெடுத்து ஐயப்பனை வணங்கி கேரள பெண்களின் வரலாற்றை மாற்றி எழுதினர்.

 

தனது மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளாலும், சிறுபான்மை, தலித் மக்களுக்கு எதிரான வன்முறையான நடவடிக்கைகளாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து கொண்டிருக்கும் பிற்போக்கு மதவாத பாசிச பா.ஜ.க விற்கு இது பெரிய அதிர்ச்சியை கொடுத்து விட்டது. பெண்கள் வழிபட்ட செய்தியை கேள்வி பட்டதிலிருந்து கேரளா முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இன் துணை அமைப்பான சபரிமலை கர்ம சமிதி சனவரி 3 அன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. வணிகர்கள் இந்த முழு அடைப்பு போராட்டதிற்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார்கள். இன்று (03.01.2018) கேரளா முழுவதும் பா.ஜ.க உள்ளிட்ட வலதுசாரி கட்சிகள், அமைப்புகள் பேருந்துகள் மீது கல்வீச்சு, சி.பி.எம் கட்சி அலுவலகங்களை எரிப்பது போன்ற வன்முறை வெறியாட்டத்தில் இறங்கி உள்ளது. காவல்துறையுடன் ஏற்பட்ட மோதலில் சபரிமலை கர்ம சமிதி தொண்டர் ஒருவர் இறந்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சி.பி.எம் தலைமையிலான ஆளும் இடது சன நாயக முன்னணி அரசு ‘இந்துக்களின் கோயில்களை அழிக்க நினைக்கிறது’ என்ற பிரச்சாரத்தை கிளப்பி விட்டு, இடது முன்னணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் இருக்கிறது. சபரிமலை தேவசம் கோயில் நடையை மூடி ‘தீட்டு கழிக்கும்’ பூசையை செய்தது நாடு முழுவதும் முற்போக்காளர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

 

ஆனால், பா.ஜ.க விற்கு மாற்று நாங்கள் தான் எனக் கூவிகொண்டு இருக்கும் காங்கிரசுக்கு சபரிமலை கோயிலில் அனைத்து பெண்களும் வழிபடும் உரிமை குறித்து பார்வை என்ன? பாலின அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிற பிற்போக்கு மத நம்பிக்கைகளை உடைத்து ஐயப்பனை வழிபட்ட இரண்டு பெண்களின் செயல்பாடு மத நம்பிக்கையாளார்களை காயப்படுத்தி விட்டது. நாங்கள் மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம். இதை கண்டித்து கேரளா முழுவதும் போராட்டங்களை நடத்துவோம் என்பதோடு 40 வயதுகளில் உள்ள பெண்கள் ஐயப்பனை வழிபட்டதை ஓர் கருப்பு நாளாக அறிவித்து இருக்கிறது கேரள காங்கிரசு. காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி ’ஆணும் பெணும் சமம். பெண்கள் தாங்கள் விரும்புகிற எந்த இடத்திற்க்கும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும், ஆனால், இது கட்சியின் முடிவுக்கு மாறானது’ என கூறி இருக்கிறார். சபரிமலையில் பெண்கள் வழிபடும் உரிமை சம்பந்தமான வழக்கில் மத வழிபாட்டு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்பதே கேரள காங்கிரசின் நிலைப்பாடு.

2006 இல் காங்கிரசின் மாநாட்டில் ‘இந்தக் கொடி தான் என்னுடைய மதம்’ என்று தன்னை முற்போக்காளராகக் காட்டிக் கொண்டு, தேசிய அரசியலில் முதல் அடி எடுத்து வைத்த ராகுல் காந்தி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் யை மதவாத சக்திகள் என்று தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்தவர். சிறுபான்மை மக்களுக்கு ஆதரவான கட்சி என்பது 2014 தேர்தல் தோல்விக்கான காரணங்களில் ஒன்று என்பது காங்கிரசின் தேர்தல் மீளாய்வு. 2019 தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விடத் துடித்துக்கொண்டிருக்கும் காங்கிரசுக்கு சிறுபான்மை ஆதரவு/மத சார்பின்மை என்ற அரசியல் செயல் உத்தியை விட ‘மென்மையான இந்துத்துவ கட்சி’ என்ற செயல் உத்தி சிறந்த பலனைக்கொடுக்கும் என்பது முடிவு.

 

இதன் வெளிபாடே ராகுல் காந்தியின் ‘மென்மையான இந்துத்துவவாதி அவதாரம்’   ‘’என்னோட கோத்திரம் டட்டாத்திரேயா, நான் ஒரு காசுமீர் பார்பனர்’ என்றும், ‘ நானும் சிவ பக்தன் தான்’ என்று தானும் ஒரு பார்பனிய உயர் சாதியை சேர்ந்தவன்,மத கடவுள் நம்பிக்கை உள்ளவன் தான் என்று காங்கிரசின் புதிய தேர்தல் உத்தியை பொது மேடைகளில் அறிவித்தது. சபரிமலை கோயிலில் இரண்டு பெண்கள் வழிபாட்டு உரிமையை நிலை நாட்டிய செய்தி ‘மத நம்பிக்கையாளர்களை புண்படுத்தி விட்டது’ என்று கூறி கோடிக்கணக்கான பெண்களை இழிவு படுத்தும் மத வழிபாட்டு நடைமுறைக்கு ஆதரவாக இந்து மக்களின் மனங்களை வெல்ல கேரளா முழுவதும் இன்று (03.01.2018) போராட்டங்களை நடத்த காங்கிரசு முடிவு செய்ய தள்ளியுள்ளது. ஒரு பக்கம், காங்கிரசு கட்சியின் ‘மென்மையான இந்துத்துவ’ செயல் உத்தியை வைத்து ஆட்சிக்கட்டிலில் ஏற முயற்சி செய்து கொண்டே, மறுபுறம், ஆண் பெண் சமத்துவத்தை தன்னுடைய சொந்த கருத்து என்று பேசி முற்போக்காளராகவும் காட்சி அளித்து பெண்களின் வாக்கு வங்கியையும் கவர முயற்சி செய்கிறார்.

இதே தேர்தல் செயல் உத்தியை கொண்டு தான், சமீபத்தில் நடந்த ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க விடம் போட்டி போட்டுக்கொண்டு, ‘வேதக் கல்விக்கு தனித் துறை, சமஸ்கிருத மொழியை பரப்ப ஏற்பாடு, பசு சாலைகளை அமைக்க அரசு மானியம்’ என இந்து மக்களின் மனங்களை வெல்ல பல வாக்குறுதிகளை காங்கிரசு அளித்துள்ளது.

பசுக் குண்டர்களால் நடத்தப்பட்ட கும்பல் கொலைகள் பற்றியோ, மாட்டிறைச்சிக்காக பசுவை வெட்டுதல், ராமர் கோயில் விவகாரங்கள் பற்றியோ ஊடக விவாதங்களில் பங்கு பெற வேண்டாம் என்றும், காங்கிரசை இந்துக்களுக்கான கட்சி அல்ல என்பது போன்று தோன்றச் செய்கிற இந்து மத மக்கள் சார்ந்த பிரச்சினை சம்பந்தப்பட்ட விவாதங்களில் பங்கு பெற வேண்டாம் என்றும் கட்சியினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அறிவுரைகளாகும்.

பெரு முதலாளி கும்பல்கள் இந்திய துணைக்கண்டத்தின் இயற்கை வளங்களை, மனித வளங்களை சூறையாடும் நவ தாரளமய பொருளாதார கொள்கைகளை அமல்படுத்துவதே பா.ஜ.க வுக்கும் காங்கிரசுக்கும் முதன்மை நோக்கம். இங்குள்ள உழைக்கும் மக்களின் பறிபோகிற வாழ்வாதாரங்கள் குறித்தோ, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு, உரிமைகள் குறித்தோ கவலை கொள்வதல்ல. எனவே, காங்கிரசை பொறுத்தவரை, மத சார்பற்ற, சிறுபான்மை மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக இருப்பதா அல்லது மென்மையான இந்துத்துவ கட்சியாக இருப்பதா என்பது பெரு முதலாளிகள் நலனுக்காக சேவை செய்யவும், அதற்காக ஆட்சி கட்டிலில் அமர்வதுமே ஆகும்.

 

பரிமளா, தமிழ்நாடு பெண்கள் இயக்கம்

parimalapanju@gmail.com, 9840713315

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW