வர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை!

26 Dec 2018

1968 டிசம்பர் 25, கீழத்தஞ்சை மாவட்டம் வெண்மணி கிராமத்தில் நாற்பத்து நாலு பேர் உயிரோடு கொழுத்தபட்டார்கள் என்பது இரத்தம் கசிந்துருகும் தீயின் அனல் குன்றாத வரலாறு.  தமிழக அரசியல் வரலாற்றின் நினைவடுக்குகளில் ஆழப் புதைக்கபட்ட மக்கள் வரலாறுகளில் இதுவும் ஒன்று. எங்கே மக்களின் நினைவுகளில் மேலெழும்பினால் வரலாற்றின் பக்கங்களில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமோ என அஞ்சுகிறவர்கள் புதிதாக ஆயிரத்தொரு கதைகளை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் தமிழகத்தில் வர்க்கப் போராட்டத்தின் வரலாறென்பதே ஒன்று கிடையாது என்பது அவர்களது தத்துவத்தின் நியதி. அது உண்மையா? என  வாழ்க்கையில் இருந்து எழுகின்ற கேள்விகளுக்கு அவர்களின் நெஞ்சங்கள் பதிலுரைக்கட்டும்.

இராவணன் காலத்தில் இலங்கையை எரித்த கதையுமல்ல, நந்தனை எரித்த மத்திய காலத்து கதையுமல்ல, நவீன அரசியல் வரலாற்றில் குடியரசு காலத்தில் அரை நூற்றாண்டுக்கு முன் எரிக்கபட்ட கதைதான்  இவ்வளவு மங்கலாக தெரிகிறது. அந்த கதையின் களத்தில் இருந்து பிறந்தவர்களே இன்று தடம் புரண்டு பேசுகின்ற வேதனையும் இங்குதான் இருக்கிறது. தமிழக வரலாறு என்பது காங்கிரசின் சத்தியாகிரக வரலாறு மட்டுமல்ல, சுயமரியாதை இயக்கத்தின் சமூகநீதி வரலாறு மட்டுமல்ல, தனித்தமிழ் இயக்கத்தின் மொழிப்போர் வரலாறு மட்டுமல்ல, குண்டடிப்பட்டு, சிறைப்பட்டு, தூக்குமேடை ஏறி, பண்ணை ஆதிக்கத்திற்கு எதிராய் எழுந்து தீயிட்டு கொழுத்தபட்ட செங்கொடி இயக்க மறவர்களின் வரலாறும் தான். அதுதான் இன்றைக்கு மறைக்கபடுகிறது திரிக்கபடுகிறது.

தமிழகத்திலே ஒன்று பேசப்படுகிறது என்று சொன்னால் அது பார்வை பறிபோனவன் யானையைத் தடவி உருவ கதை சொன்னது போல உருவம் சிதைந்த, சாறம் இழந்த தனிப் பொருளாக மாறிவிடுகிறது. வெண்மணியிலே கொழுத்தபட்ட நாற்பத்து நால்வர் எதற்காக கொழுத்தபட்டார்கள், வரலாறு அவர்கள் மீது என்ன முத்திரையை பதித்திருக்கிறது, வரலாற்று ரீதியாக எந்த இயக்கத்தின் தனித்தன்மைகள் இந்த நிகழ்வுபோக்குகளுக்கு வழிகோலியிருக்கும் என்ற தர்க்க முரணுக்குள் செல்லாமல் தீர்ப்பெழுதும் ஆயிரத்தொரு கதைகள்தான், இன்றைக்கு அதிகாரத்தில் இருக்கின்ற செல்வாக்கு செலுத்துகின்ற கருத்தியல்களுக்கு கவசமாக விளங்கிகொண்டிருக்கின்றன. அரைமரக்கா கூடுதல் நெல் கூலி கேட்டதற்காக கொல்லப்பட்டார்கள் என தொடங்கி, சாதிக்காக என மாறி, தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகளின் தேவையற்ற கலக நடவடிக்கைக்கு மக்கள் பலியானார்கள் என விமர்சிக்கப்பட்டு, பண்ணையார் நாயுடு சாதி ஆகவே தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என இன சாயம் பூசப்பட்டு, ஒடுக்கபட்ட சாதிகளிலே ஒரு சாதி வீரம் மிகுந்தது அதனால் கொல்லப்பட்டார்கள் என சாதிநாயகம் பேசப்படுகின்ற பற்பலப் பார்வைகள் வரலாறென்று பதிவு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை என்ன, இந்த பார்வைகள் எதை மறைக்கின்றன, ஏன் இந்த விவகாரத்தில் முரண்பாட்டின் ஒரு கூறை, சிறிய கூறை, விவரத்தை யானை கதையைப் போல மொத்த உருவமாக்கி பேசுகின்றனர், சாறமான வர்க்க போராட்டம் என்ற கருத்தை முன்னுக்கு கொண்டு வருவதை மறைக்கின்றனர். கருத்துகள் வெறும் பார்வைகள் மட்டுமல்ல, அது அதிகாரத்தில் இருப்பதை நிலைநிறுத்துவதையும், வருவதற்கான பாதயையும் செப்பனிடுகின்றன. ஆக, இங்கு வர்க்கப் போராட்டம், சாதிய நிலவுடமை வர்க்க எதிர்ப்புப் போராட்டமாக வெண்மணிப் படுகொலையைப் பார்ப்பதை மறுக்கின்ற பார்வை அதற்கான அரசியல் அதிகார சக்தியை முன்னுக்கு வரவிட மறுக்கின்ற பார்வையே ஆகும்.

 சாதிய நிலவுடமைக்கு எதிரான வர்க்க போராட்டமும், பிற பார்வைகளும்.

வெண்மணிப் படுகொலை அனைவரும் அறிந்தது போல தனித்த ஒரு நிகழ்வல்ல, கீழத்தஞ்சை விவசாயக் கூலித் தொழிலாளர்களின் சங்கிலித் தொடரான உரிமைப் போராட்ட நடவடிக்கைகளுக்கான பண்னை ஆதிக்க சக்திகளின் மூர்க்கமான எதிர்வினை. அது வெறுமனே கூலி போராட்டம் மட்டுமல்ல, சாணிப்பாலுக்கும் சவுக்கடிக்கும் எதிரான சுயமரியாதை போராட்டமாக, நில உரிமைக்கும், நிலச் சீர்திருத்தத்திற்குமானப் போராட்டமாக, பண்ணை ஆதிக்க எதிர்ப்பிற்கும், சமூக அதிகாரத்திற்கானப் போராட்டமாக நீண்ட போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவம்தான் அது. அதை கூலிப் போராட்டமாக மட்டுமே சித்திரிக்கின்ற பார்வையே ஒரு குறுகிய சீர்திருத்தவாத பார்வையாகும், வர்க்கப் போராட்ட வளர்ச்சியை ஒரு பொருளாதாரப் போராட்டமாக சித்தரிப்பதே வர்க்கப் போராட்டத்தை, அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தைக் கைவிடுவதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது.

.1. சி.பி.ஐ.(எம்) வெண்மணிப் படுகொலைக்கு முன்பும் பின்பும் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு சமாதானமான முறையில் அரசதிகாரத்தில், தேர்தல் கூட்டணி அரசியலில் பங்கேற்பதில் தீவிரமாக முனைந்து கொண்டிருந்தது. எனவே கீழத்தஞ்சை விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை அது நிலவுடமை எதிர்ப்பு வர்க்க போராட்டப் பார்வையோடு அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க தயார் நிலையில் இல்லை என்பதே கூலிப் போராட்டம் என்ற குறுகிய பார்வைக்குள் விவாதத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதற்கான அடிப்படையை அமைத்து கொடுத்தது.

  1. மற்ற பார்வைகளைப் பொருத்தவரை இங்கு நடப்பதெல்லாம் சாதிகளுக்கிடையிலான போராட்ட வரலாறுதான், வர்க்கப் போராட்ட வரலாறு என்பதெல்லாம் நமக்கு பொருத்தமற்ற உலகப்பார்வை. ஆக இங்கு நடக்கிற போராட்டங்கள் அனைத்தையும் வர்ண சாதிய உலகப் பார்வையில் அணுக வேண்டும் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. அதுதான் பார்ப்பன எதிர்ப்பாக, இடைநிலை சாதி எதிர்ப்பாக, அல்லது குறிப்பிட்ட சாதியை எதிராக நிறுத்துவதற்கான அரசியல் நிலைபாட்டிற்கான அடிப்படைகளை வழங்கும்.

3, இரண்டு பார்வைகளும் தனது அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப போராட்டத்திற்கான உலகப் பார்வையை கொடுக்கின்றன, வர்க்கத்திற்கும் சாதிக்குமான உறவு, அதற்கும் நிலசொத்துடைமைக்குமான உறவு, இவைகளுக்கும் அரசியல் அதிகாரத்தில் ஏற்படுகின்ற மாற்றத்திற்குமான உறவு பற்றிய பார்வையை மறுக்கின்றன, இந்த இடத்தில்தான் கீழத்தஞ்சை நிலவுடமை எதிர்ப்பு வர்க்கப் போராட்டம், அரசியல் அதிகாரத்தில் பங்கேற்பதற்கான போராட்டமாக வளர்வதில், நிலவுடமையில் மாற்றத்தைக் கொண்டு வரும் போராட்டமாக மாறுவதில் இருந்து தடுக்கபட்டது. இல்லையென்றால், கம்யூனிஸ்டுகளின் தீய வன்முறை நடவடிக்கையாக, ஒடுக்கபட்டவர்களைப் பலிகொடுக்கின்ற போராட்டமாக பார்க்கின்ற அரசுவாத பார்வை முன்னுக்கு வந்திருக்க முடியுமா?

  1. ஒடுக்கபட்டிருக்கின்ற சாதி நிலவுரிமையற்று இருப்பது வர்க்கப் பிரச்சனையில்லையா? அரசியல் அதிகாரம் என்ற வன்முறைக் கருவி பலத்தின் துணையில்லாமல் நாயுடு என்ற மேல் சாதி சமூக அந்தஸ்து மட்டும் நிலவுடமைமையை குவித்து வைத்து கொள்வதற்கு போதுமானதா? மறுவளமாக பேசினால் நிலம் என்ற பொருளாதார அதிகாரம் இல்லாமல், அதை காக்கின்ற அரசதிகாரம் இல்லாமல், நாயுடு என்ற சமூக சாதி அதிகாரம் மட்டும், பெரும்பான்மையாக இருந்த ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த விவசாய கூலித் தொழிலாளர்களைப் படுகொலை செய்திருக்க முடியுமா?

5,சாதி என்ற நிலவுடமைக்கு முந்தைய- பிந்தைய சமூக உறவையும், நிலவுடமை என்ற உற்பத்தி உறவையும்,அதை தொடர்ந்து மாற்றத்துக்கு உள்ளாக்கிகொண்டிருக்கிற அரசியல் அதிகாரத்தையும் பிரித்து பார்ப்பது சமூகவியலில் அபத்தமான பார்வையாகும். தஞ்சையின் நிலவுடமையில் பலநூற்றாண்டுகளாக நடந்துவந்த மாற்றத்திற்கு யார் காரணம், அங்கு வாழ்கின்ற சாதிகள் மட்டுமா? ஹைதர் அலியும், சரபோஜியும், பிரிட்டிசு அரசும் நிலவுடமையில் உருவாக்கிய மாற்றங்களுக்கு யார் காரணம் வெறும் உள்ளூர் உறவுகள் மட்டும்தான் காரணமா? பதக்தாரர்களாக, ஜமீன்தாரர்களாக உருவாக்கப்பட்டு நிலக்குவிமானமும் அதிகாரமும் வழங்கப்பட்ட மூப்பனாரும்,வாண்டையாரும்,கோபால கிருஷ்ண நாயுடுவும், முதலியார், பிள்ளை, பார்ப்பன, முஸ்லிம் பண்ணைகளும் அங்கு குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்ற அவர்களின் சமூகத்தால் உருவாக்கபட்டவைகளா? இல்லையே. ஹைதர் அலியும், வெள்ளைக்காரனும் தனது வரிவருவாயுக்காக நிலக்குவிமானத்தையும் பண்ணையடிமைத்தனத்தையும் அல்லவா உருவாக்கினார்கள்! இதன் விளைவாக அங்கு பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்ற பள்ளரும் கள்ளரும், பறையரும் இன்னும் பிற சாதியினரும் நிலமற்றோராகவும், குத்தகையாளராகவும் அல்லவா மாற்றபட்டார்கள். அதே தஞ்சையின் மேற்கிலே கொள்ளிடக் கரையோரம் வாழ்கின்ற வன்னியர் உள்ளிட்ட பிற சாதியினருக்கு நிலம் சிறிதாக பிரித்து வழங்கப்பட்டு பெரும் பண்ணைகள் இல்லாமல் சிறுவீத உடமையாளர்களாக மாற்றப்பட்டதற்கும் அதே அரசுகள்தான் காரணமாக இருந்திருக்கின்றன. அதேபோல பார்ப்பன மடங்கள் மட்டுமல்லாமல் வெள்ளாள மடங்களுக்கும் இன்றைக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தஞ்சையிலே இருக்கின்றன, இலட்சக்கணக்கானோர் நிலமற்று இருக்கும் பொழுது இந்த பெரும் நிலவுடமையை மடங்களுக்கு கையளித்தது யார்? இன்றுவரை இந் நிலத்தை உடைத்து பகிர்ந்தளிப்பதை பற்றி சமூகநீதியை பற்றி பேசுகின்ற அரசுகள், ஒடுக்கப்பட்டோர் நலனை  பேசுகின்ற அரசியல் ஏன் பேச மறுக்கிறது, ஏன்? அரசும் வர்க்கமும் தன் உண்மையான ரூபத்தோடு அம்மணமாய் தன் வன்முறை மொழியில் பேசும் என்றா?

நிலவுடமையும், சமூக ஏற்பாடாக சாதியும்,காப்பாக அரசும் பிண்ணிப்பிணைந்திருப்பதைதான் சாதிய நிலவுடமை வர்க்க சமூக அமைப்பு என்கிறோம். ஒடுக்கபட்டோரையும், நிலமற்றோரையும் நிலத்தின் அடிமை தனத்திலிருந்து விடுவித்து நிலவுரிமையையும் அரசியல் அதிகாரத்தையும் கையளிப்பதுதான் உண்மையான வர்க்கப் போராட்டம் மாறாக அப்போராட்டத்தைக் கூலி போராட்டமாகவோ, சாதிப் போராட்டமாகவோ சுருக்குவது வரலாற்றுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

சாதியும் வர்க்கமும்

நிலவுடமை வர்க்க அமைப்பிற்கு முந்தையது சாதி, குல அமைப்பு. ஆனால் இன்றைக்கு சாதிய அமைப்பு புதிய வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நிலவுடமை அதிகாரத்திற்கு ஏற்ப அதை பேணுகின்ற சமூக ஏற்பாடாக ,சாதி வர்க்கமாகவும்,வர்க்கத்தின் வெளிப்பாட்டு வடிவமாக சாதியும் மாறியுள்ளது. ஆகவே பல நேரங்களில் சாதிப் போராட்டம் வர்க்கப் போராட்டமாகவும், வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாட்டு வடிவமாக சாதிப் போராட்டமும் தோற்றம் பெறுகிறது, இறுதியில் நவீன அரசதிகாரத்தின் தீவிர வன்முறையான தலையீட்டு அளவிற்கு வளர்ச்சிப் பெறுகின்ற  போராட்டம் மட்டுமே தன் உண்மையான ரூபத்தில் வர்க்க போராட்டம்தான் என்பதை மெய்பித்து கொள்கின்றன, மற்ற முரண்பாடுகளும் மோதல்களும் தெளிவற்று மயங்கிய நிலையில் சாதியா? வர்க்கமா? என்ற குழப்பமான கேள்வியை எழுப்பிகொண்டே இருக்கின்றன. ஏனென்றால் நவீன அரசு தன் முழுமையான சமூக கட்டுப்பாட்டை எடுக்கும்வரை மோதல் இந்த தன்மையில் வடிவம் பெறுவதில்லை. சுய தேவையைப் பூர்த்தி செய்துகொள்கின்ற தனித்த இறையான்மை கொண்ட சாதிகள் நவீன அரசால் தேச எல்லைக்குள் ஒன்றிணைக்கபடும் பொழுதுதான் வளங்களைப் பங்கிடுவதற்கான வர்க்க மோதல்களாக மாறுகின்றன.

வளமான ஆற்றுப்படுகையான இப்பெருஞ்சமவெளியின் உபரியைக் கொண்டுதான் சோழப் பேரரசு விரிவாக்கம் பெற்றது. அதே போல சமீபத்திய மூன்று நான்கு நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அரசதிகார மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அது மக்கள் குடிகளிடம் இருந்து பறித்த நிலங்களில் பெரும் உடமை மாற்றங்களை கொண்டு வந்தது, நிலத்தில் மட்டுமல்லாமல் சமூக உறவுகளில்,மக்கள் குடியேற்றங்களில்,அதுவரை வரலாற்று ஆவணங்களில் இல்லாத சாதிக்குடிகள் ஒன்றிணைதல், பட்டியல் படுத்தல், தோற்றம் பெறுதல் நிகழ்கின்றன. ஹைதர் அலி தொடங்கி வெள்ளையர் வரை பெரும் மடத்து நில உடைமைகளில் கைவைக்காததோடு, புதிய தனியார் பண்ணைப் பெருநிலவுடமையை உருவாக்கினார்கள் அதுதான் கடந்த நூற்றாண்டின் பண்ணைக் கொடுங்கோன்மைக்கும் படுகொலைகளுக்கும் வித்திட்டது. இந்த பின்புலம்தான் பெருந்திரளான மக்கள் குடிகளும்,ஒடுக்கபட்டவர்களும் நிலமற்றவர்களாக மாறியதற்கும், விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் பெரும்பண்ணைகளாக மாறியதற்கும் காரணமாக அமைந்தது.

எவ்வாறு ஹைதர் அலியும்,பிரிட்டிசாரும் வெவ்வேறு அரசதிகார சக்திகளாக இருப்பினும், சுரண்டல் உபரியைப் பெருவதற்காக பெருநிலவுடமை வர்க்க சமூக அமைப்பை உருவாக்கும் ஒரே கட்டத்திற்கான வரலாற்றுப் பணியை நிறைவு செய்தார்களோ, அதே போன்றுதான் அதற்கு நேரெதிரான திசையில் நின்று வரலாற்றை முடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கம்யூனிஸ்ட் கட்சி தனது வரலாற்றுப் பணியாக பெரும் நிலவுடமையையும் அதன் கொடுங்கோன்மையையும் உடைத்தெறிய வேண்டும், உழுகுடிகளுக்கு நிலத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும், அது நில உறவுகளில் மட்டுமல்ல,சமூக சாதிய உறவுகளிலும் ,அரசதிகாரத்திலும் மாற்றத்தை கொண்டு வரும் என்ற திட்டத்தோடுதான் கடமையாற்றியது. எனவேதான், அதை வெறும் கூலிப் போராட்டம் என்று சொல்வதையோ, வெறும் சாதிப் போராட்டம் என்று சொல்வதையோ உறுதியாக மறுக்கிறோம், சாதிய நிலவுடமை எதிர்ப்பு வர்க்கப் போராட்டம் என மீண்டும் ஒரு முறை உரக்கச் சொல்கிறோம்.

இன்றோ பண்ணைப் பெரும் நிலவுடமையும் தேவையில்லை, இலட்சக்கணக்கான விவசாயக் கூலிகளும் தேவையில்லை. அனைவரும் நிலத்தைவிட்டு வெளியேற வேண்டும் எனபது பெரு மூலதனத்தின் கோரிக்கை. இது எந்த சாதிக்குழுவின் அரசியல் திட்டம். விவாதிப்போம் வாருங்கள் தோழர்களே.

 

பாலன்
பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST
1 comments

Leave a Reply to Rabeek Cancel reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW