கஜா பேரிடர் – பெண்கள் போராட்டத்தை தொடர்ந்து 6 மாதத்திற்கு சுய உதவிக் குழு வட்டி/கடன் வசூலிக்க தடை விதித்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் !
இன்று (20-12-2018) மதியம் சுமார் 1 மணியிலிருந்து திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைபூண்டி மற்றும் மன்னார்குடி வட்டத்தைச் சேர்ந்த மாரிநகரி, வடக்கு நாணலூர், களப்பால், ரெகுநாதபுரம், செந்தாமரைக்கண், இளநகர், எழிலூர், கள்ளிக்குடி, வெங்காத்தான்குடி, பண்டார ஓடை, ஆட்டூர் சமத்துவபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயல் பாதித்த நிலையில் வீடிழந்து, வாழ்வாதாரங்கள் இல்லாமல் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்க கூடியவர்களிடம் சுய உதவிக் குழுக்கள் வழிக் கடன் கொடுத்த எல் & டி, எக்விடாஸ், லோக் கிராமவிடியல், விடிவெள்ளி , முத்தூட் பைன்னான்ஸ், எஸ் பேங்க் போன்ற நுண்கடன் நிறுவனங்கள் தினமும் மக்களை மிரட்டி வருகின்றனர். வட்டித் தவணையை செலுத்தாவிட்டால் வழக்குப் போடுவோம் என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரம் பழைய நிலைக்கு வரும்வரை பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.
- கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய நுண்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
- ஊரில் வீடு இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை ரூ. 4100 லிருந்து ரூ 10,000 உயர்த்திக்கொடு.
- நிவாரண கணக்கெடுப்பில் விடுபட்ட பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை மீண்டும் கணக்கிலெடுத்து நிவாரணம் வழங்கிடு
- அரசால் வழங்கப்பட்டுள்ள 27 வகையான நிவாரண உதவிப் பொருட்களை உடனடியாக வழங்கிடு
- மேற்கண்ட மைக்ரோபின் – நுண்கடன் நிறுவனங்கள் கந்துவட்டி போல் வட்டிவிகிதம் 25% மேல் வசூலிப்பதை தடைசெய்து.
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து உறுதியான பதில் வராத நிலையில் போராட்டம் தொடர்ந்தது.
மதியம் சுமார் 1 மணிக்கு தொடங்கியப் போராட்டம் மாலைப்பொழுதையும் கடந்து தொடர்ந்து கொண்டிருந்தது. சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது ஆறு மாத கால அவகாசமேனும் தர வேண்டும் என்று முன் வைக்கப்பட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியர் திரு.நிர்மல் குமாருக்கோ மக்களை சந்திக்க மனமில்லை. மாறாக அவர் அலுவலகத்திற்குள் இருந்தபடி கோரிக்கையைப் பரிசீலிப்பதாகவும் மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்கள் பரிந்துரை செய்வதாகவும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆறு மாத அவகாசம் கொடுப்பது இந்திய ரிசர்வ் வங்கித் தான் முடிவு செய்ய முடியும் என்று சொன்னார்கள். ஆனால், இன்னொருபுறம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் காவல் துறையினரைக் குவிக்கும் முடிவை எடுக்க மட்டும் அவரால் முடிந்தது. நேரம் போகப்போக காவல் துறை மக்களை அச்சுறுத்தும் வகையில் குவிக்கப்பட்டது.
ஆயினும் மக்கள் கலைந்து செல்ல தயாரில்லை. மாவட்ட ஆட்சியரின் நேரடி உறுதிமொழி இல்லாமல் அவ்விடத்தை நகரப் போவதில்லை என்று மக்கள் உறுதியாக நின்றனர். மாவட்ட ஆட்சியர் ஆணையில்லாமல் எந்நேரத்திலும் மக்களைக் கைது செய்து இடத்தைக் காலி செய்யும் ஆயத்தப் பணிகள் நடக்கத் தொடங்கியிருந்தன. கஜாப் புயல் என்ற பேரிடரால் பாதிக்கப்பட்டு வீடிழந்து, வாழ்வாதாரம் இழந்து ஒரு மாதம் கடந்த பின்னும் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களில் இருந்து ஒரு 150 பேர் வந்துள்ளார்களே, அவர்கள் எல்லோரும் பெண்கள் ஆயிற்றே என்று எண்ணிப்பார்க்க கூட ஆட்சியாளர்களுக்கு மனமில்லை. ஏதுமற்ற எழை, எளிய மக்களா தன்னை நிர்பந்திப்பது என்ற தன்முனைப்பால் மாவட்ட ஆட்சியர் மக்களை சந்திக்க மறுத்துக் கொண்டிருந்தார். தமிழக அரசின் வழக்கமான பாணியாக காவல்துறையைக் கொண்டே போராட்டங்களைக் கையாண்டுவிடலாம் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தார்.
ஆயினும் கைது செய்வதோ தடியடி நடத்துவதோ அரசை முற்றாக அம்பலப்படுத்தி விடும் என்பதால் அத்தகைய முடிவை நோக்கிச் செல்லவில்லை. கடைசியாக சுமார் 8:30 மணி அளவில் போராடுபவர்கள் சார்பாக ஒரு குழுவோடு பேச முன் வந்தனர். அதன்படி, நான்கு பெண்கள் மாவட்ட ஆட்சியர் நிர்மல் குமாரை சந்திக்க அலுவலகத்திற்குள் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்கள் கடனைத் திருப்பிக் கட்ட சொல்லி கேட்கமாட்டார்கள் என்றும் அப்படி மீறிக் கேட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அப்புகாரை காவல்துறை பெற்றுக் கொள்ளும் என்றும் பிரதிநிதிக் குழுவிடம் உறுதியளித்தார்.
ஆனால், அத்துடன் அவர் முடித்துக் கொண்டால் பரவாயில்லை. கூடுதலாக, ”உங்களைத் தூண்டிவிடுகிறார்கள், உங்களோடு இருப்பவரக்ள் தீவிரவாதிகள்” என்று தோழர்களை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் நோக்கில் பேசினார். ஆனால், மக்களோ இது எங்களுடைய வயிற்று வலி, நாங்கள் எப்படி பேசாமல் இருப்போம். எங்களை ஏன் எவரும் தூண்டிவிட வேண்டும்” என்று பதில் அளித்தனர்.
கடனை அடைக்க ஆறு மாத கால அவகாசம் என்ற ஒரு கோரிக்கையில் வெற்றி அடைந்த ஆறுதலோடு மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இருள் இன்னும் விட்டகலாத தமது சொந்த ஊர்களை நோக்கிச் சென்றனர். தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் அருண்சோரி, பிரபாகரன் மற்றும் சதீஷ் குமார் மக்களோடு ஊர்களுக்கு திரும்பினர்.
சிறு கோரிக்கை என்றாலும் ஆட்சியாளர்களிடம் இருந்து வென்றெடுப்பதற்கு போராட்டம் இன்றியமையாதது. அதிலும் துயர்துடைப்பு பணிகள் செய்வது போல் பாவனை செய்து வரும் எடப்பாடி அரசு மக்களை எந்த அளவுக்கு அலட்சியமாக நடத்துகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. கோரிக்கை வென்றெடுக்கப்பட்ட தோடு ஆட்சியாளர்கள் எத்தகையவர்கள் என்பதை உணர்த்தியது மூலம் வெற்றிகரமான போராட்டத்தை நடத்திய பட்டறிவோடு மக்கள் போராட்டக் களத்தில் இருந்து புறப்பட்டனர்.
– அருண்சோரி, தஞ்சை மாவட்ட செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, 7299999168