தமிழக அரசின் ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவு இரத்து! என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு! – கண்டன அறிக்கை
14 உயிர்கள் பலிவாங்கியபின் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு பிறப்பித்த ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த தருண்அகர்வால் குழுவின் மனுவாங்கும் நாடக அறிக்கையை அடிப்படையாக வைத்து தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் வேதாந்தா கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக இரத்து செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாயினர். இதன் விளைவாக தமிழ்நாட்டு எல்லைக்குள் இயங்கிய நாசகர நச்சு ஆலை தமிழக அரசால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் வேதாந்தா கார்ப்பரேட் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து செல்வாக்குச் செலுத்தியது. தமிழகத்தைச் சாராதவர்களின் ஆய்வுக்குழு அமைக்க வேதாந்தாவின் கட்டளைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அடிபணிந்தது. தருண் அகர்வால் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு ஒரே நாள் ஆய்வு நாடகம், எதிர்ப்பு, ஆதரவு மனுக்கள் பெறும் நாடகம் தூத்துக்குடி, சென்னையில் நடத்தப்பட்டது.
தமிழகத்தின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புதுப்பித்தல் மறுப்பு அடிப்படையில் தமிழக அரசு பிறப்பித்த ஆலைமூடல் உத்தரவை தருண் அகர்வால் அறிக்கை அடிப்படையில் இரத்து செய்ய தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமா? ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவைத் தொடர முடியாது. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கு மூன்று வாரங்களுக்குள் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க வேண்டும், ஆலைக்குத் தேவையான மின்சார வசதியை உடனடியாகக் கொடுக்க வேண்டும். ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். ஆலையை திறக்கும் நடவடிக்கையை மாவட்ட கலெக்டர் மேற்பார்வை உறுதி செய்ய வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ரூ.100 கோடி வழங்குவதற்கு வேதாந்தா குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது என உத்தரவில் உள்ளது. விதிமீறல்களுக்கான தண்டனையாக எந்த உத்தரவும் இல்லை. ஆலையை மீண்டும் திறக்க முடியாது என வாய்ச்சவடால் அடித்த முதல்வர் எடப்பாடி என்ன செய்யப் போகிறார்? கொள்கை முடிவெடுத்து சட்டமியற்ற அரசியல் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தினோமே! காது கொடுத்துக் கேட்டதா தமிழக அரசு? பலியான 14 பேர் உயிருக்கு மதிப்பில்லையா?
தமிழக அரசின் உத்தரவை இந்திய அரசின் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் இரத்து செய்கிறது. இது என்ன வகை அதிகாரம்? கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அதிகாரம். தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்கப் போகிறோமா? தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழகம் தழுவிய வகையில் மக்கள் இயக்கங்களின் போராட்டங்கள் தேவை. தமிழக அரசின் மேல்முறையீடு ஒருபுறமென்றால், மறுபுறம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடு! எனும் ஒற்றை முழக்கம் ஓங்கி ஒலிக்கட்டும்!
தமிழ்நாட்டின் அதிகாரத்தைப் பறிக்கும் இந்திய அரசு நிறுவனங்களின் இதுபோன்ற கார்ப்பரேட் ஆதரவு அதிகாரத் தலையீட்டுக்கு எதிராக அணிதிரள்வோம்!
ஆலைமூடலுக்காகப் பலியான 14 பேரின் ஈகத்தை உயர்த்திப் பிடிப்போம்!
மீண்டும் திறக்கவிடாமல் தூத்துக்குடி மக்கள் போராட்டத்திற்குத் தோள் கொடுப்போம்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன்,
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051