5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை!

14 Dec 2018

 மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், இராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரசு ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியைப் பிடித்துள்ளன. ஐந்து மாநிலங்களிலும் பா.ச.க. வால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துவதென்ன?

2014 ஆம் ஆண்டு பா.ச.க. இந்துத்துவ நிகழ்ச்சி நிரலைக் கொண்டு ஆட்சிக்கு வரவில்லை. அதற்கு முன்பான காங்கிரசு ஆட்சியினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, ஊழல் ஆகியவற்றிற்கு எதிரானப் பரப்புரையில் குஜராத் மாதிரி வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்து மக்களிடம் வாக்குகளைப் பெற்றது. ஆனால், இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில், கடந்த தேர்தலின் போது மக்களுக்கு முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் நோட்டு வீழ்ச்சி, வளர்ச்சி இன்மை ஆகியவை பா.ச.க. வுக்கு முன்னாள் பெரும்பூதமாக நிற்கிறது. பண மதிப்பிழக்கம், ஜி.எஸ்.டி. என கார்ப்பரேட் சார்பு கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தியது பா.ச.க. ஏற்கெனவே நிலவிக் கொண்டிருந்த பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்தது. கார்ப்பரேட் வளர்ச்சிக் கொள்கைக்கு இசைவாகவும் அது அனுமதிக்கும் அளவிலும் இந்து தேசிய, இந்திய தேசியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது. நீதித்துறை, மத்தியப் புலனாய்வுத் துறை(CBI) பல்கலைக்கழகங்கள், நிதிக் குழு என அரசு நிறுவனங்கள் யாவற்றிலும் இந்துத்துவ ஆற்றல்கள் அமர்த்தப்பட்டன. விவசாயிகள், தொழிலாளிகள், வேலையில்லா இளைஞர்கள் என பெருந்திரளான மக்களின் வாழ்க்கை நெருக்கடி பெருகியது.  இந்நிலையில் வளர்ச்சிக் கொள்கையின் சாதனையென முன்வைத்து மக்களை சந்திக்க முடியாதென்ற நிலையில் காவி அரசியலை மட்டுமே நம்பியிருக்கிறது பா.ச.க. மீண்டும் ராமனை அழைத்து வந்து கோயில் கட்டுவதை தேர்தல் கதையாடல் ஆக்கிப் பார்க்கிறது. ஆனாலும் ‘இந்திப் பகுதிகள்’ என்று சொல்லப்படும் தமக்கு செல்வாக்கு மிக்க இடங்களிலேயே வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்தி நிலத்திலே அடி வாங்கி நிற்கிறது. ஒருபக்கம் ராமனின் பெயரால் ஐந்து இலட்சம் பேரைத் திரட்டினாலும் கார்ப்பரேட் பொருளியல் கொள்கைகளினால் வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாக்குகளால் ஆட்சி அமைக்க முடியாமல் தோல்வியைத் தழுவி நிற்கிறது.

இந்துத்துவ காவி அரசியல் அதனால் பரப்பப்படும் வெறுப்பு அரசியல் ஆகியவற்றுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் காங்கிரசு நடைமுறையில் மென்மையான இந்துத்துவ ஆற்றலாகவே நடந்து கொள்கிறது. மாவட்டந் தோறும் கோசாலைகள், பசு பாதுகாப்பு, மாட்டு மூத்திரத்திற்கென தொழிற்சாலை என காங்கிரசின் மத்தியப் பிரதேச தேர்தல் அறிக்கை காவி நிறத்தில் காட்சித் தந்தது. தான் சிவ பக்தர், பூணூல் போட்ட பிராமணர், மானோசரோவருக்கு யாத்திரைப் போகிறேன் என ராகுலும் தன்னைப் பக்தியில் சளைக்காத இந்துவாக வெளிப்படுத்திக் கொள்கிறார். ஆனால், 2014 இல் காங்கிரசை எதிர்க்கட்சி என்ற தகுநிலை இல்லாத அளவுக்கு கீழிறிக்கி, பா.ச.க.வுக்கு வாக்களித்து அதை மக்கள் ஆட்சியில் அமர்த்தியது ஏன்? 2014 க்கு முந்தைய காங்கிரசின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட உலகமய, தாராளமய, தனியார்மயப்  பொருளியல் கொள்கையினால் விளைந்த நெருக்கடிகளின் மீதான மக்களின் கோபம் அது என்று கருதிப் பார்க்க காங்கிரசு துணியவில்லை. காங்கிரசு கடைப்பிடித்த அதே பொருளியல் கொள்கையை அமல்படுத்தியதால், காங்கிரசால் தோற்றுவிக்கப்பட்ட நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க  பா.ச.க. வால் முடியவில்லை என்பதே உண்மை. ஆனால், காங்கிரசோ பா.ச.க.வின் நடவடிக்கைகளைத் தனிப்பட்ட, துண்டுதுண்டான தவறுகளாக விமர்சனம் செய்துவிட்டு வாக்கு அரசியலில் வெற்றியடைவதோடு முடித்துக் கொள்ளப் பார்க்கிறது. எடுத்துக்காட்டாக, பண மதிப்பிழக்க நடவடிக்கையால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர்; ஜி.எஸ்.டி. யை இவ்வகையில் நடைமுறைப்படுத்தியது தவறு, இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள், விவசாயிகளை அரசு கண்டு கொள்ள வில்லை எனப் பேசிக்கொண்டு இவற்றிற்கெல்லாம் ஆணி வேராக இருக்கும் புதிய தாராளியப் பொருளியல் கொள்கை மீதான பரிசீலனையை செய்ய மறுக்கிறது. நாடெங்கிலும் இருந்து நான்கு முறை விவசாயிகள் தலைநகரான தில்லியில் பேரணி போயினர். மத்தியப் பிரதேசத்தில் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி போராடிய விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். விவசாயிகள் தற்கொலை இன்றுவரை நின்றபாடில்லை. சத்தீஸ்கர் பழங்குடி மக்கள் மத்திய-மாநில பா.ச.க. அரசின் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ராஜஸ்தானிலும் விவசாயிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்த பா.ச.க. வுக்கு எதிராகப் போராடினர். எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீதிமன்றத் தீர்ப்பின் வழி வலுவிழக்கச் செய்யப்ப்பட்டதைக் கண்டித்து தலித் மக்கள் போராடிய போதும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் பொது வெளியில் கும்பல் படுகொலை செய்யப்படுவது இந்திய நாளிதழ்களின் அன்றாட செய்தியாகிவிட்டது.  இப்படியாக, ஏழை,எளிய மக்களின் கண்ணீர், பாதுகாப்பற்றோரின் அவலம், இதற்கெதிராக போராடியதால் அடக்குமுறைக்கு உள்ளாகி ஈந்த உயிர்கள், சிந்திய குருதி இவையாவும் சேர்ந்தே, காப்பரேட் ஆதரவு ஊடகத் தூரிகைகள் தீட்டும் பாசாங்கு வண்ணப் படங்களையும் அரசின் கருத்துருவாக்க இயந்திரங்களையும் மீறி பா.ச.க. வுக்கு எதிரான  மனநிலை உருப்பெற வழிவகுத்தது. ஆனால், காங்கிரசோ தெட்டத் தெளிவான பொருளியல் நெருக்கடியினால் வெளிப்படும் சமூக அரசியல் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதோ அதற்கு தீர்வாக, மாற்றாக தான் முன்வைப்பதென்ன என்பதைப் பற்றி பேசுவதோ இல்லை. இருப்பினும் பா.ச.க. வை வீட்டுக்கு அனுப்பினாலாவது இந்த துயர வாழ்வில் மாற்றங்கள் ஏற்படாதா? என்ற எதிர்பார்ப்பில் இருந்து மக்கள் பா.ச.க. வை எதிர்த்து காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்.

இந்த ஐந்து மாநிலத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னான அரைஇறுதி தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. 2014 இல் பெரும் பின்னடைவைக் காங்கிரசு சந்தித்திருந்தது. 2014 இல் இருந்து 2017 வரையான ஆண்டுகளில் இந்தியாவின் மாநிலங்கள் ஒவ்வொன்றாய் காவிமயமாகி வந்த நிலையில் 2018 இன் இறுதி வேறொரு திசைப்போக்கைக் காட்டுகிறது. அவ்வகையில் கர்நாடகா மற்றும் இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு ஊக்கமளித்துள்ளது. எனவே, இப்போது மாநிலக் கட்சிகளை ஓரணியில் திரட்டிக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன. காங்கிரசு இதில் மைய சரடாக இருப்பதற்கான தகுநிலையை இத்தேர்தல் முடிவுகள் உறுதிசெய்துள்ளன. இந்தப் பின்னணியில், இந்த தேர்தல் முடிவுகளை நாம் எப்படி விளக்கப் போகிறோம் என்ற சவால் நம்முன் உள்ளது.

இன்றைக்கு உருப்பெறும் பா.ச.க. எதிர்ப்பு மதச்சார்பற்ற அணி என்பது புதிய ஒன்றல்ல. இந்த கூட்டணிச் சேர்க்கையை அச்சு பிசகின்றி முன்பொரு வரலாறு கண்டிருக்கிறது. அவ்வகையில் வாஜ்பாய் ஆட்சிக்குப் பின்னான தேர்தல் கூட்டணி வரைபடமும் மோடி ஆட்சிக்குப் பின்னான தேர்தல் கூட்டணி வரைபடமும் ஒன்றே. 2004 இல் வாஜ்பாய் ஆட்சிக்கு எதிராக இதே காங்கிரசு, திமுக கூட்டணி தமிழகத்தில் அமைக்கப்பட்டது. ஒன்றே முக்கால் ஆண்டுகால சிறை வாசத்திற்குப்பின் பொடா சட்டத்தைப் பிறப்பித்த பா.ச.க. ஆட்சிக்கு எதிராக நாற்பது தொகுதிகளிலும் சுற்றிச்சுழன்று வைகோ பரப்புரை செய்தார். ’நாளை நமதே, நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்தோடு இக்கூட்டணி நாற்பது நாடாளுமன்ற இடங்களையும் கவர்ந்தது. இப்படியாக பா.ச.க. வை ஆட்சியில் இருந்து கீழிறக்கி ஆட்சிக்கு வந்த ஐக்கிய மக்கள் கூட்டணி தான் அடுத்த பத்தாண்டுகள் இந்தியாவின் பொருளியல் வாழ்வுக்கு தலைமை கொடுத்தது. அந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட பொருளியல் நெருக்கடி விவசாயம், தொழில்துறை, நிதித்துறை என யாவற்றிலும் வெளிப்பட்டது. மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய வளர்ச்சியை ஏற்படுத்த முடியாமல் பொருளியல் நிபுணர்கள் மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் மக்கள் முன் அவலமாக நின்றனர். தேநீர் விற்ற ஒருவர் ’வளர்ச்சியின் நாயகனாக’ விளம்பரப்படுத்தப்பட்டு ஆட்சி அமைத்தார். ஆனால், விவசாயிகளின் விளைபொருட்களுக்கான விலையை இரட்டிப்பாக்குவோம், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, கருப்புப் பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவோம், ஊழல் இல்லாத புனித ஆட்சி என்ற எல்லா வாக்குறுதிகளும் செல்லாக் காசுகள் ஆகிவிட்டன. விவசாயம், தொழில் துறை, நிதித் துறையில் நிலவிய நெருக்கடியை பா.ச.க. வால் தீர்க்க முடியவில்லை. ஆனால், பணநாயக தேர்தல் அரசியல் மக்களுக்கு அதிகம் தெரிவுகளை விட்டுவைக்க வில்லை. எனவே, பேயுக்கு அஞ்சி பிசாசிடம் தஞ்சம் புகுவதும் பின் பிசாசுக்கு அஞ்சி மீண்டும் பேயின் தயவை நாடுவதும் என மக்கள் கையறு நிலையில் நிறுத்தப்படுகின்றனர்.

வாஜ்பாயை வீழ்த்தப் புறப்பட்ட பொழுது கூட, காங்கிரசு-தி.மு.க. கூட்டணி குறைந்தபட்ச செயல்திட்டம் என்ற ஒன்றை மக்களுக்கு முன் வைத்தது. இப்போது அப்படியான குறைந்தபட்ச செயல்திட்டம் என்ற ஒன்றைப் பற்றிக் கூட பேசுவதில்லை. மதச்சார்பின்மை என்பதைத் தவிர வேறெதையும் எதிர்க்கட்சிகள் பேச மறுக்கின்றனர். ஆனால், அந்த மதச்சார்பின்மையிலும்கூட திட்டவட்டமான செயல்திட்டம் என்று எதுவும் இல்லை. பசு பாதுகாப்புக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றப்படுமா?, சமூகப் பொருளியில் நிலையில் பின் தங்கியுள்ளனர் இஸ்லாமியர்கள் என்றும் அதற்கு தீர்வுக்காண நடைமுறைப்படுத்த வேண்டிய பரிந்துரைகள் என்றும் சச்சார் அறிக்கை முன்வைத்ததை மதச்சார்பற்ற அணி நடைமுறைப்படுத்துமா? சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(UAPA) நீக்கப்படுமா? அல்லது தளத்தப்படுமா? தேசியப் புலனாய்வு முகமை(NIA) கலைக்கப்படுமா? நாடெங்கும் காலக் கணக்கின்றி விசாரணைக் கைதிகளாகவும் தண்டனைக் கைதிகளாகவும் சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? ராமர் கோயில் கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர முடியும் என்றால் பாபர் மசூதியை மீண்டும் கட்ட மதச்சார்பற்றக் கூட்டணி சட்டம் கொண்டு வருமா? மதச் சிறுபான்மையினர் வாக்குகளை வாரி எடுத்துக் கொள்ளும் விருப்பத்திற்கு அப்பால் மதச்சார்பற்றக் கூட்டணி ஆற்றல்கள் மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கும் நல்வாழ்வுக்கும் சுதந்திரத்திற்குமான உறுதியான செயற்திட்டங்கள் எதையாவது முன்வைத்துள்ளனவா? இல்லை.

கூட்டணிக்கான தெளிவானக் கொள்கையை மக்களிடம் முன் வைக்காத நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருந்தால் கொள்கை கோட்பாடற்ற அக்கூட்டணி தொடர்வதும் அப்படி இல்லாத நிலையில் வானவில் போல் கலைந்து போவதும் நடக்கக் காண்கிறோம். ஒரு கூட்டணியில் இருந்து தெரிவு செய்யப்பட்டு நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பியிருந்த தமிழகத்தால் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைக் கூட தடுக்க முடியவில்லை என்றால் வேறெதற்காக அவர்கள் நின்றிருக்கப் போகிறார்கள்? இனப்படுகொலையின் போதும் பின்னும் அந்தக் கூட்டணி அதிகார நிழலில் இருக்கும் வரை நீடித்துக் கொண்டே இருந்தது. இன்னொருபுறம் இதே இனப்படுகொலையைக் காரணமிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு பா.ச.க. வுடன் கூட்டணி வைத்த ம.தி.மு.க. தேர்தல் முடிந்து பாசக பதவி ஏற்கும் போதே கூட்டணியில் இருந்து வெளியேறியது. குறைந்தபட்ச செயல்திட்டம் உறுதிசெய்யப்படாத கூட்டணிகளால் மக்களுக்கு கிடைத்ததென்ன? என்பதற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். மக்களின் துயரங்களையும் , கண்ணீரையும், வலியையும், வேதனையையும், நடத்திய போராட்டங்களையும், எதிர்கொண்ட ஒடுக்குமுறைகளையும் இவற்றால் நிரம்பி வழியும் ஏமாற்றத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்குப் போய்விடலாம் என்பது பாசக எதிர்ப்பு மதசார்பற்ற அணியின் கண்ணோட்டமாக இருக்கிறது.

இந்த பத்தாண்டு காலத்தில், மீத்தேன், ஹைட்ரோகார்பன்,சேல் கேஸ் போன்ற பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி, காவிரி சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி இரத்தம் சிந்திப் போராடினார்கள் மக்கள். நீட் தேர்வு கொலைகார நீட்டாக உயிர்களைக் காவு வாங்கியது. சட்ட சபைத் தீர்மானம் என்றைக்கு எங்கே எந்தக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதென யாருக்கும் தெரியாது. சேலம்-சென்னைப் பசுமை வழிச்சாலைக்கு எதிராகப் போராடினார்கள் விவசாயிகள். ஈழத் தமிழர்களின் சுதந்திரமான வாழ்வை உறுதி செய்ய இனக்கொலைக்கானப் பன்னாட்டுப் புலனாய்வு, அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்பு என தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானமும் குப்பைத் தொட்டிக்கு போனது. எழுவர் விடுதலையிலும் இதே நிலை. மேகேதாட்டு அணைத் தடுப்பு தீர்மானத்திலும் இதே நிலை. மொத்தத்தில் இவற்றிற்கெல்லாம் விடையளிக்கப் போகிறதா  பா.ச.க. எதிர்ப்பு முகாம்? விளைநிலப் பாதுகாப்புச் சட்டம், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுதல், விவசாயத்திற்கு என தனி பட்ஜெட், தலித் மக்களுக்கென தனி பட்ஜெட், சச்சார் கமிசன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் போன்றவைக் குறைந்தபட்ச செயல்திட்டமாக வகுக்கப்பட வேண்டும். இந்துத்துவ எதிர்ப்பு என்பதோடு சேர்த்து மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னுக்கு கொண்டு வர வேண்டும். ராமர் கோயில் கட்டுவதை முழக்கமாக முன்வைக்கும் பா.ச.க. வின் உத்திக்கு இரையாகிவிடக் கூடாது. மக்களின் கோரிக்கைகள், உயிராதாரப் பிரச்சனைகள் நிகழ்ச்சிநிரலாக ஆக்கப்பட்டு அதில் திட்டவட்டமான உறுதித்தன்மையை எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்த வேண்டும்.

காவி-கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சிக்கு அந்த கொள்கைகளுக்கும் மாற்றான குறைந்தபட்ச செயல்திட்டம் தான் இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னான விவாதப் பொருளாகும். மதச்சார்பற்ற அணி என்பதன் பெயரால் காங்கிரசு-திமுக கூட்டணியைக் கண்மூடித்தனமாகவோ அல்லது பொத்தாம் பொதுவான நல்லெண்ணத்தின் அடிப்படையிலோ ஆதரிப்பதால் விவசாயிகளுக்கும் தொழிலாளருக்கும் கூலி விவசாயிகளுக்கும்  தலித் மக்களுக்கும் மதச் சிறுபான்மையினருக்கும் தேசிய இனங்களுக்கும் கிடைக்கப் போவது ஒன்றுமில்லை. பா.ச.க. முகாம், காங்கிரசு முகாம் இரண்டுக்கு வெளியே இருக்கும் பெருந்திரளான மக்கள் முகாமின் நலன் காவி-கார்ப்பரேட் கொள்கைகளுக்கு மாற்றான குறைந்தபட்ச செயல்திட்டத்தை தேர்தல் நிகழ்ச்சி நிரலாக மாற்றப்படுவதில்தான் அடங்கியிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னான இத்தருணத்தில், மேற்படி விவாதத்தை முன்னெடுப்பதுதான் மக்களின் நீண்டகால நலனில் அக்கறை கொண்டோரின் உடனடி கடமையாகும்.

 

பாலன்

பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

Vasan08@rediffmail.com, 7010084440

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW