டிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி
கஜா புயல் பேரிடர் 30 ஆவது நாளில்…
நாள்: டிசம்பர் 16, ஞாயிற்று கிழமை, மதியம் 2 மணி,
இடம்: திருத்துறைப்பூண்டி அம்பேத்கர் சிலை (முத்துப்பேட்டை சாலை) அருகில் இருந்து புதிய பேருந்து நிலையம் PSR நினைவு மண்டபம் வரை.
மீண்டெழும் காவிரிச் சமவெளி!
தென்னை, மா, பலா, வாழை, தேக்கு என நட்ட மரங்கள் எல்லாமும் சரிந்தன. குடிசை கூரைகள் பறந்தன. நெல் வயல்வெளிகள் நாசமாயின. மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. படகுகள் புரண்டு பாழாயின. கஜாப் புயல் கடந்து போன பாதையெங்கும் நமது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. 12 மாவட்டங்களை கஜா கிழித்துக் கொண்டுபோனது. காவிரி மறுக்கப்பட்டதால் காய்ந்த மண் இன்றோ கஜாப் புயலால் கலங்கி நிற்கிறது. ஓரிரவில் எல்லாமும் இழந்து வெறுங்கையோடு தெருவில் நிற்கிறோம்.
மாதம் ஒன்று ஆகப்போகிறது! மந்திரிமார்கள் வந்து போனார்கள். அறிவிப்புகள் தந்தார்கள். நன்றாக செயல்படுவதாக அவர்களாகவே சொல்லிக் கொண்டனர். இத்தனை கோடிகள், அத்தனை கோடிகள் ஒதுக்கிவிட்டோம் என்றார்கள்.
அறிவுப்புகள் அறிவிப்புகளாகவே உள்ளன. தார்பாய்கள் எங்கே, உடனடி உதவித் தொகை எங்கே? தென்னைக்கு இழப்பீடு வெறும் 1100 ரூபாயா? அறிவிப்புகள் – வயிறு நிரப்புமா? குடிசைக்கு மேற்கூரையாகுமா? வங்கிக் கடன் அடைக்குமா? பிள்ளையின் கல்லூரி கட்டணத்தைக் கட்டுமா? கோடிகளை ஒதுக்கவில்லை, தெருக் கோடியில் நிற்கும் மக்களைத் தான் ஒதுக்கித் தள்ளுகிறது அரசு.
நமது வளங்களை தேசிய வளங்களாக எடுப்பவரகளுக்கு நமது துயரம் தேசியப் பேரிடராக தெரியவில்லை! மாநில அரசிடம் பணமும் இல்லை, மனமும் இல்லை. மத்திய அரசிடமோ பெருமுதலாளிகளுக்கு தருவதற்குப் பணமுண்டு, மக்களுக்கு கொடுக்க மனமில்லை. கஜாப் புயல் கூரைகளைப் பறக்கவிட்டு முகாமகளுக்கு விரட்டியது. பாழும் அரசு முகாம்களை மூடிவிட்டு தெருவுக்கு துரத்துகிறது!
எந்த அரசாவது சிலைக்கு மூவாயிரம் கோடி ரூபாயைக் கொட்டிவிட்டு புயல் பாதிப்புக்கு முந்நூறு கோடி ரூபாய்தான் என்று சொல்லுமா?
எந்தப் பிரதமராவது நடிகையின் திருமணத்திற்கு நேரம் ஒதுக்கி பேரிடருக்குள்ளான மக்களை சந்திக்க நேரம் இல்லை என்பாரா?
எந்த அரசாவது புயல் அழித்ததால் உறைந்து கிடைக்கும் மக்களை சிறையில் அடைக்குமா?
மறுவாழ்வு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. அடுத்த வேளைக்கு சோறில்லை. ஆனால், அடுத்த வேலைக்குப் போய்விட்டது அரசு! சோறுடைத்த சோழநாடு சோர்ந்து கிடக்கலாமா? ஏர் பூட்டிய உழவர் கூட்டம் ஏங்கி நிற்கலாமா? ஊருக்கெல்லாம் சோறிட்ட மக்கள் வாடி இருக்கலாமா? காவிரிப் படுகை ஓய்ந்துவிட்டால் தமிழ்த் திருநாடே சாய்ந்துவிடும் அன்றோ? அழுது கிடந்தால் ஆகப் போவது எதுவும் இல்லை விழுந்து கிடந்தது போதும். கஜாப் புயல் எவரையும் விட்டுவைக்கவில்லை.
எல்லோரையும் கலங்கவிட்ட கஜாப் பேரிடரை சந்திக்க எல்லோரும் ஒன்றாக வேண்டும். எழுந்து நின்றாக வேண்டும். ஒவ்வொருவரும் எழுந்து நடந்தால் மீண்டுமொரு புயல் கிளம்பும். அது முகத்தை திருப்பிக் கொள்ளும் அரசை அசைத்துப் பார்க்கும்! மறுவாழ்வை கட்டமைக்க கட்டளையிடும், துயர்துடைக்க வழியமைக்கும்.
தேசியப் பேரிடராய் அறிவித்து துயர்துடைக்க செயல்படு என்போம்! துவண்டு அழ வேண்டாம், வெகுண்டு எழுவோம்! ஆற்றுப் பெருக்கற்ற நாளிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் காவிரியின் பிள்ளைகளாய்
மீண்டெழுவோம்…மீண்டெழுவோம்…மீண்டெழுவோம்…
கோரிக்கைகள்:
- கஜாப் புயல் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவித்திடு!
- மாநில அரசு கேட்ட 14,910 கோடி ரூபாயை உடனடியாக மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
- தென்னை ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10000 ரூ இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 175 மரங்கள் என்று குறுக்கக் கூடாது. உள்ளபடி எத்தனை மரங்கள் இருந்தனவோ அதை கணக்கில் எடுக்க வேண்டும்.
- புதிதாக நடுவதற்கு தென்னங் கன்றுகளை இலவசமாக வழங்கு!
- படகுகள், வலைகள், எஞ்சின் என இழப்புகளைத் தனித்தனியாகப் பிரித்து அதற்குரிய இழப்பீட்டை வழங்கு
- நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து மளிகைப் பொருட்களையும் ஓராண்டுக்கு இலவசமாக வழங்கு!
- விவசாயக் கடன், கூட்டுறவு சங்கக் கடன், கல்விக் கடன, சுய உதவிக் குழுக்கள் வழியாக பெற்ற கடன் ஆகியவற்றைப் பாதிப்புக்குள்ளானோர் குடும்பங்களுக்கு ரத்து செய்!
- வீடிழந்த இரண்டு இலட்சம் பேருக்கு தெலங்கானாவில் கட்டிக் கொடுப்பது போல் ’இரு படுக்கை அறை’ கொண்ட 560 சதுர அடி கொண்ட வீடு கட்டிக் கொடு!
- மின்சாரத்தை மீள்கட்டமைக்க அல்லும் பகலும் பாடுபட்டு ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்று.
- மறுவாழ்வை ஏற்படுத்துவதற்கு என்றொரு ஆணையத்தை அமைத்து அதில் மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூக இயக்கங்கள், கட்சிகள் ஆகியோர்களை இணைத்துக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து நடத்தும் பேரணி – ஒன்றுகூடலுக்கு ஆதரவு அளித்து, கோரிக்கை வென்றிட துணைநிற்க அழைக்கிறோம்.
தொடர்புக்கு
அருண்சோரி
7299999168