புயல் நிவாரண அரசியல் – கார்ப்பரேட், காவி கும்பல் ஊடுருவல்.. நாம் வேடிக்கை பார்க்கலாமா?
2004 ஆம் ஆண்டு தமிழகத்தை சுனாமி தாக்குதலுக்கு உள்ளாக்கிய பின்பு அடுத்த சில நாட்களில் நிவாரண உதவி என்ற பெயரில் தொண்டு நிறுவனங்கள் சுனாமி போல படையெடுத்தன… அதற்குப் பின் கடற்கரை மக்களின் அரசியல் அணிதிரட்டல் என்பது பகல் கனவாகவே மாறி போனது. கடலூர் நாகை மாவட்ட கடற்கரையோரத்தில் தெருவிற்கு ஒரு தொண்டு நிறுவனங்களின் பதாகைகள் தொங்க விட பட்டன, இந்தி நடிகர் விவேக் ஓபராய் தேவனாம்பட்டினத்தை தத்தெடுத்தார்! அமிர்தானந்தமயி ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டித்தருவதாக அறிவிப்பு வெளியிட்டார். இவையெல்லாம் அறிவிப்புகளாக மட்டுமே இருக்கிறது – பெயருக்கு சில வீடுகள் கட்டி புகைப்படம் எடுக்கப்பட்டதோடு முடிந்தது.
தற்போதைய கஜா புயல் தாக்குதலுக்குப் பின்னர் ஓஎன்ஜிசி’யும் (ONGC) வேதாந்தா’வும் நிவாரண பணியின் பெயரால் சுழல துவங்கியிருக்கிறார்கள். இதற்கு முன்பு வரை Corporate Social Responsibility (CSR) நிதியைத் தொண்டு நிறுவனங்கள் வழியாக செலவழித்து வந்தவர்கள் தற்போது நேரடியாக! வேதாந்தா- ஸ்டெர்லைட் ஸ்டிக்கரும், ஓஎன்ஜிசி ஸ்டிக்கரும் ஒட்டிய நிவாரண பொருட்களை கம்பெனியின் மும்பை கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கொண்டு வந்து இங்கு இருக்க கூடிய உயர்அதிகாரிகள் முன்னிலையில் விநியோகித்து கொண்டிருக்கிறார்கள்.
காவிரி சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க சொல்லி போராடினார் விவசாயிகள். ஆனால், ‘பெட்ரோலிய’ மண்டலமாக அறித்தது மத்திய அரசு. ஏற்கனவே அப்பகுதியில் எண்ணெய் எரிவாயு உறிஞ்சும் ஓஎன்ஜிசியும் மீத்தேன் வாயு எடுக்க ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்டும் போட்ட ஒப்பந்தம் காலாவதியானதும் புதிய ஒப்பந்தம் போட்டிருக்க கூடிய வேதாந்தாவுக்கு எதிராகதான் காவிரி சமவெளியைச் சேர்ந்த விவசாயிகள், இயற்கை வளத்தையும் தங்களின் விவசாய நிலங்களையும் காக்கப் போராடி கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்று அந்த கொள்ளைக்கார கார்ப்பரேட்களிடமே உணவுக்கு கையேந்தி நிற்கிற கொடுமை!
மற்றொருபுறம் ராஷ்ட்ரீய சேவா சங்கம் (ஆர்எஸ்எஸ்) திருத்துறைப்பூண்டி நகரத்தின் மேட்டு தொருவில் அமைத்திருந்த நிவாரண பொருட்கள் பராமரிப்பு மையத்திலிருந்து கருப்பு முருகானந்தம் தலைமையிலான கும்பல் ‘ரஜினி ரசிகர்’ மன்ற கொடி அணிந்த வாகனத்தில் நிவாரண பொருட்களை விநியோகித்து கொண்டிருந்தார்கள். இடதுசாரிகளின் கோட்டை, கீழத்தஞ்சையின் இதயம் இந்த திருத்துறைப்பூண்டிதான். தோழர் பி.சீனிவாசராவ் விதைக்கப்பட்டது இங்குதான்.. அவரின் காலடிதடம் பதியாத இடம் கிடையாது. இன்றும் செங்கொடி இல்லாத ஊர் என்று ஒன்று இல்லை. ஆனால் நிவாரணப் பணியில் நாடாளுமன்ற இடதுசாரிகளின் பங்கு என்பது வெளியில் இருந்து சில பொருட்களை சேகரித்து கொண்டு வந்து விநியோகித்தால் மட்டும் போதுமா?
இந்த கையாலாகாத அரசை அம்பலப்படுத்த இதைவிட வேறு வாய்ப்பு என்ன இருக்க முடியும்? அரசு எந்திரத்திற்க்கு மாற்றாக கீ்ழ் இருந்து ஒரு அமைப்பு வடிவத்தை வைத்திருப்பது கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே… விவசாய சங்கம், இளைஞர் அமைப்பு, மாதர் சங்கம், என்று அனைத்து இடங்களிலும் புயலால் சாய்க்க முடியாத கம்பங்களில் செங்கொடி பறந்து கொண்டுதான் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்றாக வேறு கொடி ஏற்ற முயன்றவனை மகனாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும் உணர்வுபூர்வமாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த மக்கள். ஆனால் அவ்வளவு அரசியல் விசுவாசம் கொண்ட மக்களை பண்ணையாரிடம் கூலியை இறைஞ்சு கேட்காதே, உரிமையோடு கேள் என்று உயிர் கொடுத்து போராடிய கட்சி, இன்று காவி-கார்ப்பரேட் கும்பல் அம்மக்களிடம் ஊடுருவுவதை அனுமதிக்கலாமா?
காவி-கார்ப்பரேட்களைப் பொருத்தவரை இது வெறுமனே நிவாரண பணி அல்ல அவர்கள் வேர்கால் மட்டத்தில் தங்களுக்கான சமூக சக்திகளை உருவாக்கி உருதிரட்டி கொள்ளும் வாய்ப்பாகவே இதை பார்க்கிறார்கள். இப்படிதான் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற இடங்களில் தங்களுடைய சமூக அடித்தளத்தை அமைத்துக் கொண்டார்கள். ஆனால் அப்பகுதியில் ஏற்கனவே வலுவான சமூக அடித்தளம் வைத்திருக்கும் பாரளுமன்ற இடதுசாரிகள் அரசிடம் கோரிக்கை வைப்பதோ, வெளியில் இருந்து நிவாரண உதவிகளை கொண்டு வந்து கொடுப்பதோ போதுமானதாகுமா? தங்களுடைய ஊழியர்களைத் திரட்டி அனுப்பி அம்மக்களோடு ஒன்று கலந்து நின்றிருக்க வேண்டாமா?
– சதீஷ் குமார்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி, 9940963131