கோடியக்கரையில் கஜா புயலின் கண்ணைக் கண்டவர்கள் அரசின் பார்வைக்காக காத்திருப்பு…

30 Nov 2018

(கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (10) – வேதாரண்யம் கோடியக்கரை )

கஜா..கஜா..கஜா…என்று செய்தி தொலைக்காட்சிகளின் வழியாக ஒரு பரப்பரப்பை ஏற்படுத்தி, முன்தயாரிப்புப் பணிகள் பற்றி ஒரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது அரசு. ஆனால், வானிலை ஆய்வு மையத்தால் கஜா புயல் எங்கே கரையைக் கடக்கும், 120 கி.மீ. வேகத்திலோ அல்லது அதற்கு மேலாகவோ வீசினால் என்னவாகும் என்று கணிக்க முடியவில்லை. கடைசியில் கஜா புயல் கரையைக் கடந்ததோ வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில். கஜா புயலின் கண் என்று சொல்லப்படும் மையம் திருமறைக்காட்டையே அடையாளம் தெரியாத அளவுக்கு ஆக்கிவிட்டது. கோடியக்காட்டில் பச்சைபசேல் என்றிருந்த 24 சதுர கிலோமீட்டர்  காடு இன்று அடையாளம் தெரியாமல் கிடக்கிறது. மரங்கள் அனைத்தும் நாசமாக்கப்பட்டு மான்கள் பெருமளவில் இறந்துவிட்டன. ராமர் பாதத்தில் நூற்றுக்கணக்கில் வரவேற்றுக் கொண்டிருக்கும் குரங்குகள் இப்போது பத்து விழுக்காடுகூட இல்லை என்கிறார்கள் அப்பகுதியில் வாழ்பவர்கள். மூலிகை செடிகள் அதிகம் உள்ள இக்காட்டில் ஏற்பட்டிருக்கும் இழப்பை எப்படி ஈடுசெய்யப் போகிறோம் என்பது இது குறித்த அறிவு கொண்டோருக்குரிய கவலையாக இருக்கிறது. ஆட்சியாளர்களுக்கோ எதையாவது செய்வது போல் தோற்றம் காட்டுவது, யார் மீதாவது பழிப் போடுவது என்பதைத் தாண்டி மண்ணையும் மக்களையும் வளங்களையும் பற்றி துளியளவு கவலைக்கூட இல்லை என்பதை பலமுறை மெய்ப்பித்துவிட்டார்கள். கம்பராமாயணத்தைச் சேக்கிழார் எழுதியதாக சொல்லும் முதல்வருக்கு மூலிகை செடிகளின் அழிவுப் பற்றியும், இம்மண்ணின் மரபான அறிவுச் செல்வங்கள் பற்றி என்ன மனக்கவலை இருக்க முடியும்?

கடலில் இருந்து கோடியக்காடு, திருமறைக்காடு வரை உப்பளங்கள் நிறைந்து இருக்கின்றன. ஆக்கம் செய்யப்பட்டு குவிக்கப்பட்டிருந்த உப்பு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. உப்பளத் தொழில்செய்வோர் நிலைமைகள் சீரடைவதற்காக காத்திருக்கின்றனர். சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் உணவுக்கான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது, மேலும் அதற்கு இணையாக  ‘கேம்பிளாஸ்ட’ நிறுவனம் தொழில்துறைக்கான உப்பை உற்பத்திசெய்கிறது. உப்பளங்கள் இப்பகுதியில் கனிசமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

 

கோடியக்காட்டில் வாழும் குடிசைவாசிகள் வீடிழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியில் இருந்து வரும் துயர்தணிப்புப் பொருட்களைக் கொண்டு இதுவரை எதிர்கொண்டு வருகின்றனர். இதில் சிலர் உப்பங்களிலும், சிலர் மீன் பிடித் தொழிலாளர்களாக கூலிக்கு செல்வதிலும், திருமறைக்காட்டில் வேலை செய்து கொண்டும் வாழ்க்கை நடத்தி வருபவர்கள்.

கோடியக்கரைதான் கடலைத் தொட்டுக் கொண்டிருக்கும் பகுதி. கஜா புயல் கரையைக் கடந்த போது,  ’உலகமே அழியப் போகிறதோ’ என்று எண்ணும் அளவுக்கு அங்கு இருந்த மக்களை அலறவிட்டுள்ளது. குடிசைவாசிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். நாகை மாவட்டம் நம்பியார் நகரில் இருந்து கோடியக்கரை வரையிலான கரையோரப் பகுதியில் கஜாப் புயலின் பாதிப்புகள் உள்ளன.

 

 

’படகுகள் கவுந்து கிடக்கின்றன, வலைகள் சேதம் அடைந்துவிட்டன, சில போட்டுகள் இரண்டா உடைஞ்சு கிடக்குது…இஞ்சின் மண்ணில் புதைந்து கிடக்கின்றன’ என்று மீனவர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை விளக்குகின்றனர். ஒரு படகு 2.75 இலட்சம், இஞ்சின் 65,000, வலைகளின் மதிப்பு பல இலட்சம் வரை வரும். வலைகள் 10 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அதற்கு ஏற்றாற் போல் அதன் விலை இருக்கும். பொதுவாக படகு வாங்கும் பொழுது 12 ஆண்டுகள் உத்தரவாதம் கொடுக்கின்றனர். ஆனால் நிரலளவாக(சராசரியாக) 2 ஆண்டுகளிலேயே பழைய படகை கொடுத்து புதிய படகுகள் வாங்கிவிடுவார்களாம்! அதிகபட்சம் போனால் 5 ஆண்டுகள் வரை பயன்படுத்துவார்களாம். ‘வங்கு’ ஆட்டம் கண்டுவிட்டால் அந்த படகுகளைப் பயன்படுத்த முடியாது, பாதுகாப்பு குறைவு என்ற அச்சத்தில் மீனவர்கள் படகை மாற்றிவிடுகின்றனர். மொத்தத்தில் படகு, வலை, இஞ்சின் எல்லாம் சேர்த்து பத்து இலட்சம் வரைகூட முதலீடு தேவைப்படும். இந்நிலையில் இப்படி படகு, வலை, இஞ்சின் எல்லாமே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசு அறிவித்திருக்கும் இழப்பீடாக, அதிகபட்ச பாதிப்புக்கு 85000 ரூ என்பதும் குறைந்தபட்ச பாதிப்புக்கு 30000 ரூபாய் என்பதும் பாதிக்கப்பட்டோர் மீண்டும் தொழில் தொடங்கப் போதுமானதல்ல. வசதி இருப்பவர்கள் இதை வைத்துகொண்டு எப்படியோ சமாளித்துவிடுவார்கள். ஆனால், வசதியில்லாதவர்கள் எதுவும் செய்ய முடியாது என்று கவலை குன்றாத முகத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால், இது மட்டுமின்றி அங்கு வேறொரு பிரச்சனையும் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

கோடியக்கரையில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களில் ஒருபாதியினர் உள்ளூர்காரர்கள், இன்னொரு பாதியினர் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து அங்கு மீன்பிடிப்பவர்கள். பெருமாள்பேட்டை, கோட்டுச்சேரி, செருதூர், காரைக்கால் எனப் பல்வேறு ஊர்களில் இருந்து மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து தொழில் செய்வதுண்டு. கடினமான காலங்களில் அதாவது இந்த செப்டம்பர் முதல் சனவரி வரையான மாதங்களில் கோடியக்கரை வந்துவிடுகின்றனர். அங்குள்ள கம்பெனிகள் எதிலாவது பதிவு செய்து கொண்டு டோக்கன் பெற்றுக் கொள்கின்றனர். டீசல், சாப்பாடு போன்ற செலவுகளை கம்பெனிகள் பார்த்துக் கொள்ளும். கிடைக்கும் வருமானத்தில் குறிபிப்ட்ட விழுக்காடு கமிசனாக கொடுத்துவிட வேண்டும். இவர்கள் குடும்பத்தோடு தங்குவதற்கு கொட்டாய் போட்டுக் கொடுத்துவிடும் கம்பெனி. குடும்பத்துடனும் வருவார்கள் அல்லது தனியாக வந்தும் தங்கியிருந்து மீன் பிடிப்பார்கள்.

இப்படியாக 30 கிராமத்தில் இருந்து கோடியக்கரை வந்துள்ள மீனவர்கள் கலங்கி நிற்கின்றனர். கோடியக்கரையில் சேதம் அடைந்த படகுகளில் பாதிக்குப் பாதி இப்படி வெளியூர்களில் இருந்து வந்தவர்கள். கடல் வழியாகவே கோடியக்கரைக்கு புலம்பெயர்ந்து வந்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள். நீண்ட நாட்கள் உப்பு மண்ணில் இஞ்சின்கள் புதைந்து கிடந்தால் மேலும் பழுதாகிவிடும் என்பதால் படகில் இருந்து இஞ்சினைக் கழற்றி சரிசெய்வதற்கு சிலர் முயன்று வருகின்றனர். ”ஊருக்குப் போவதற்குகூட காசில்லாத நிலைமை இருக்கிறது. படக்குகளை இங்கேயே விட்டுவிட்டு எப்படி ஊருக்குப் போவது? பிழைக்க வந்த இடத்தில திங்க சோற்றுக்கு வழியில்லாம் இருக்கோம்” என்று வருந்துகிறார் பெருமாள்பேட்டையைச் சேர்ந்த மீனவர்.

எப்போதும் போல, அரசதிகாரிகள் அங்கு வந்து மக்களை சந்தித்திருக்கவில்லை. படகுகள் சேதம் பற்றிய கணக்கெடுப்பின் போது கோடியக்கரையை சேர்ந்தவர்களோடு இவர்களும் இணைந்து கொள்ள முடியாது. உங்கள் ஊரின் கணக்கில் இதை சேர்த்துவிடுங்கள்” என்று கம்பெனி சொல்லிவிட்டதால் கோடியக்கரைக்கு பிழைக்க வந்துள்ள மீனவர்கள் கையறு நிலையில் நிற்கின்றனர். ஆனால், கோடியக்கரையில் சேதம் அடைந்து கிடக்கும் படகுகளை எப்படி எங்கள் ஊர் கணக்கில் கொடுக்க முடியும் என்று இவர்கள் கேட்கின்றனர்? எனவே, கோடியக்கரையில் வந்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும் வெளியூர்காரர்களின் படகு, வலை சேதங்களை கோடியக்கரையிலேயே கணக்கெடுத்து இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்.

இழப்பீட்டுத் தொகையை அரசு உயர்த்த வேண்டும், இஞ்சின்களை பணமின்றி பழுது பார்த்துக் கொடுக்கும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் மீண்டும் தொழில் தொடங்குவதற்கு தேவையான வட்டியில்லா கடனாக  கொடுக்க வேண்டும் என்று அரசை எதிர்ப்பார்க்கின்றனர்.

கஜாப் புயல் பல்வேறு பிரிவினரை பாதித்துள்ளது. மீனவர்களிலும் பலவகைப்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து குறிப்பானப் பிரிவினரின் குறிப்பான தேவைகளை நிறைவு செய்ய முன்வர வேண்டும்.

இயற்கை பேரிடர் என்று சொல்லி அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. மக்களின் வாழ்வை மீட்டெடுக்க உதவ வேண்டிய கடமை அரசினுடையதே!

 

– மக்கள் முன்னணி ஊடகத்திற்காக

செந்தில், 9941931499

 

குறிப்பு : (கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைமையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது; இத்துடனேயே சீற்றங் கொண்ட புயல் சிதைத்தெறிந்த மாவட்டங்களில் உள்ளபல்வேறு பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் மீண்டெழுவதற்கு அரசிடம் அவர்கள்முன்வைக்கும் கோரிக்கைகளையும் கண்டறியும் பணியை தமிழ்த்தேச மக்கள் முன்னணிசெய்துவருகிறது. கஜா புயல் புரட்டிப் போட்டு போய்விட்டது; புயலில் பாதிக்கப்பட்டஇலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சாங்கூட்டிலிருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகள் இன்னும்உணரப்படவில்லை. களத்தில் இருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகளை ஆய்வறிக்கையாய்முன்வைக்கிறோம். கேளாத செவிகள் கேட்கட்டும், காணாத கண்கள் திறக்கட்டும்,)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW