ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை – இந்தியா அமெரிக்க வல்லாதிக்கத்தை மீற வேண்டும் !

30 Nov 2018
  • டாக்டர். ஜூன்ஜூன்வாலா, ( முன்னால் பொருளாதார பேராசிரியர், IIM பெங்களூரு), Oct 23, 2018, Frontier Weekly.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க வங்கிகளை ஈரானுடன் ரசீதுகள் மற்றும் பணம் கொடுப்பனவைகளை மேற்கொள்வதை நவம்பர் 4 ஆம் தேதியோடு நிறுத்தக் கூறியுள்ளார். உலக எண்ணெய் வர்த்தகம் பொதுவாக அமெரிக்க டாலர்களிலே மேற்கொள்ளப்படுகிறது. கச்சா எண்ணெய் சுமக்கும் கப்பல்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களால் காப்பீடு செய்யப்படுகின்றன.  ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக  அமெரிக்க வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்களும் ஈரானோடு எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்வதை நிறுத்திக் கொள்ள விரும்புகிறார் ட்ரம்ப். இதன் மூலம் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை மேலும் நெருக்கப் பார்க்கிறார் ட்ரம்ப்.

சீனா, இந்தியா, ரஷ்யா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் ஏனைய நாடுகள் இதனால் வியப்படையவில்லை.  ஈராக்கிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கவே இந்நாடுகள் விரும்புகின்றன.  உலக எண்ணெய் வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டாலர்களிலேயே மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஈரானிடமிருந்து வாங்கிய எண்ணெய்க்கு அமெரிக்க வங்கிகள் மூலம் அமெரிக்க டாலர்களில் பணம் செலுத்துவதையே அமெரிக்கா தடை செய்துள்ளது. இந்தியா ஈரானிடமிருந்து வாங்கும் எண்ணெய்க்கு தற்போது அமெரிக்க வங்கிகள் மூலமாகவே டாலர்களில் பணம் செலுத்துகிறது. அது போலவே, ஈரான் இந்தியாவிடமிருந்து வாங்கும் பாஸ்மதி அரிசிக்கு  அமெரிக்க வங்கிகள் மூலமாக அமெரிக்க டாலர்களில் பணம் செலுத்துகிறது. இந்த வர்த்தக பரிவர்த்தனைகளை  இந்தியாவும் ஈரானும் அமெரிக்க வங்கிகள் மூலமாக தான் மேற்கொள்ள வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது. நேரடியாக ஈரானிய ‘ரியாலிலோ’ அல்லது இந்திய ‘ருபாய்’ மூலமாகவோ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். கடைசியாக,  2012 முதல் 2015 வரை ஐ.நா ஈரான் மீது பொருளாதார தடை விதித்த போது இந்தியாவும் ஈரானும் இதையே செய்தன. கொல்கத்தாவில் உள்ள ‘யூகோ’ வங்கியில் ஈரான் வங்கி கணக்கு ஒன்றை திறந்தது. இந்திய எண்ணெய் இறக்குமதியாளர்கள் யூகோ வங்கியில் ஈரானுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தினர். இதன் மூலமாக அனாவசியமாக அமெரிக்க வங்கிகள் மூலமாக அமெரிக்க டாலர்களில் பணப் பரிவர்த்தனை செய்யப்படுவது தவிர்க்கப்பட்டது. இந்த முறையும் அவ்வாறே பணப் பரிவர்த்தனை செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. சமீபத்தில், ரிசர்வ் வங்கி ‘பசர்காத்’ மற்றும் ‘சமன்’ என்னும் இரண்டு ஈரானிய வங்கிகளுக்கு இந்தியாவில் வங்கிக் கிளை துவங்க அனுமதி அளித்துள்ளது. எண்ணெய் இறக்குமதிக்கு ஈரானுக்கு செலுத்த வேண்டிய பணத்தை இந்தியா ரூபாயிலேயே இந்த இரண்டு வங்கிகளில் செலுத்தலாம். அது போலவே, ஈரானிய பாஸ்மதி அரிசி இறக்குமதியாளர்கள் இந்த ரூபாயைக் கொண்டே அரிசி இறக்குமதிக்கு பணம் செலுத்தலாம். இதன் மூலமாக இந்தியாவும் ஈரானும் அமெரிக்க தடையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.

மீதமுள்ள பணத்தையும் வேறு வழிகளில் மடைமாற்றி விடலாம். உதாரணமாக, ஈரான் ஜெர்மனியிடமிருந்து சரக்கு வண்டி வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். ஈரான் ஜெர்மனிக்கு யுரோவில் பணம் செலுத்த வேண்டும். இந்தியா ஜெர்மன் வங்கியில் திறக்கப்பட்டுள்ள ஈரானிய வங்கிக் கணக்கில் யுரோவில் பணத்தை செலுத்தலாம். பிறகு, ஈரான் அந்த யூரோவினைக் கொண்டு ஜெர்மன் சரக்கு வண்டி உற்பத்தியாளருக்கு பணம் செலுத்தலாம்.

அமெரிக்க தடையினால் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை மற்ற நாடுகளினாலும் எதிர் கொள்ளப்படுகிறது. இதை எதிர்கொள்ள சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மாற்று வங்கி அமைப்பு ஒன்றினை அமைத்திட திட்டமிட்டுள்ளனர். இதன் மூலமாக ஈரானுக்கு செலுத்த வேண்டிய பணத்தினை அமெரிக்க வங்கிகள் மூலமாக அல்லாமல் நேரடியாக இந்த மாற்று வங்கி அமைப்பின் மூலம் செலுத்த முடியும். இந்தியா இந்த மாற்று வங்கி அமைப்பினில் இணைந்து , ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்க தடையை மீறித் தொடர வேண்டும். உலகளாவிய இந்த மாற்று வங்கி அமைப்பின் எழுச்சி உலக வர்த்தக பரிவர்த்தனைகளில் உள்ள அமெரிக்க வங்கிகளின் மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும். ஏறத்தாழ 39 சதவீத உலக நிதி பரிவர்த்தனைகள் அமெரிக்க வங்கிகள் மூலமாக அமெரிக்க டாலர்களில் நடக்கிறது. ஏறத்தாழ 35 சதவீத உலக நிதி பரிவர்த்தனைகள் ஐரோப்பிய வங்கிகள் மூலம் யூரோவில் நடக்கிறது. இந்த  மாற்று வங்கி அமைப்பின் எழுச்சியின் மூலம் உலக நிதி வர்த்தகத்தில் அமெரிக்க வங்கிகளின் பங்கு வெகுவாக குறையும். இதன் விளைவாக உலக அரசியலில் அமெரிக்காவின் மேலாதிக்கமும் வெகுவாக குறையும்.

அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள தடை மற்றுமொரு வகையிலும் அமெரிக்க பொருளாதரத்தை ஆட்டம் காணச் செய்யும். இன்று அமெரிக்க பொருளாதாரம் மேலோங்கி இருப்பதற்கான காரணம் அமெரிக்க டாலர் “உலகின் இருப்பு நாணயமாக”( Global Reserve Currency) இருப்பதுதான். ஒவ்வொரு நாடும் அதன் பரிவர்த்தனைகளுக்கு உதவுவதற்கும் எதிர்பாராத பொருளாதாரத் சிக்கல்களிலிருந்து அதன் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கும் ஏதாவது சர்வதேச வங்கியில் கொஞ்சம் பணத்தை இருப்பு தொகையாக வைத்துள்ளது. இந்த இருப்பு தொகை பெரும்பாலும் அமெரிக்க வங்கிகளில் அமெரிக்க டாலர்களிலேயே வைக்கப்படும். இது அமெரிக்கா உலக நாடுகளிடம் கோராமல் தானாகவே கிடைக்கும் கடன் ஆகும். உதாரணமாக , இந்தியாவின் அந்நிய செலவாணி இருப்பை அதிகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்க வங்கிகளில் வைப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு 100 பில்லியன் டாலர்கள் கடனாக தானாகவே கிடைக்கிறது. இந்தியாவை போன்றே சீனா, ஜப்பான் உள்ளிட்ட இதர நாடுகளும் அமெரிக்க வங்கிகளில் பெருந்தொகையை அமெரிக்க வங்கிகளில் வைத்துள்ளனர். இந்த உலக நாடுகளின் மொத்த வைப்பு தொகையின் மதிப்பு மட்டும் 21 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் சீனாவும் ஜப்பானுடைய வைப்பு தொகை மட்டும் தலா 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த நெருக்குதல் உலக நாடுகளை அமெரிக்க வங்கிகளில் உள்ள தங்கள் இருப்புத் தொகையை திரும்பப் பெற்று ஐரோப்பிய, சீன, ஜப்பானிய அல்லது இந்திய வங்கிகளில் வைக்கவே ஊக்குவிக்கும். ஏற்கனவே, ரஷ்யா தனது மொத்த வைப்புத் தொகையான 150 பில்லியன் அமெரிக்க டாலர்களில் 85 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரும்பப் பெற்றுள்ளது. ட்ரம்பின் இந்த கொள்கை முடிவுகள் உலக நாடுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவிற்கு உலக நாடுகளின் வைப்புத் தொகையின் மூலமாக கிடைக்கும் கடன் இல்லாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.

இத்தகையதொரு மாற்றம் ஈரானுக்கு நெருக்கடியை உண்டாக்குவதற்கு பதிலாக அமெரிக்காவிற்கு தான் நெருக்கடியை உண்டாக்கும். ஒபாமாவின் கடைசி வருடத்தில் 600 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அமெரிக்க அரசாங்கத்தின் பட்ஜெட் பற்றாக்குறை தற்போது 890 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா பொருளாதாரத்தின் போட்டித் திறனும் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த வருடம் சூலை-ஆகஸ்ட் மாதங்களில் அமெரிக்க இறக்குமதி 0.6 சதவீதம் அதிகரித்தும் ஏற்றுமதி 0.8 சதவீதம் குறைந்தும் உள்ளது. ஆக, அமெரிக்க பொருளாதாரத்தின் தற்போதைய செழிப்பின் காரணம் அமெரிக்க பொருளாதாரத்தின் போட்டித் திறனால் (competitiveness) அல்ல. மாறாக, அமெரிக்கா வாங்கும் கடன் அதிகரித்ததாலே  ஆகும். அமெரிக்க அரசாங்கம் அதிகமாக கடன் வாங்கி அந்த பணத்தை வேலை வாய்ப்புகளை உண்டாக்குவதற்கும் அமெரிக்க குடிமகன்களின் வருவாயை பெருக்குவதற்கும் பயன்படுத்தி வருகிறது. இது நிரந்தரமாக நீடிக்க முடியாது.

ஒரு புறம், பட்ஜெட் பற்றாக்குறை அதிகமானதால் அதை சமாளிக்க பிற உலக நாடுகளின் கடனை சார்ந்திருப்பது அதிகமாகியுள்ளது. மற்றொரு புறம், அமெரிக்க வங்கிகளின் மூலமாக ஈரானுக்கு நெருக்கடி கொடுப்பது, உலக நாடுகளை அமெரிக்காவிற்கு கடன் கொடுப்பதில் பின் வாங்க வைத்துள்ளது. இவை இரண்டும் சேர்ந்து, அமெரிக்க பொருளாதரத்தை மென்மேலும் நெருக்கடிக்குள் தள்ளும்.

தற்போதைய சூழலில் அமெரிக்க மேலாதிக்கத்தின் காரணமாக இந்த தடை கொஞ்சம் தாக்கம் செலுத்தும். இருப்பினும், அமெரிக்க கவசத்தில் பல ஓட்டைகள் உள்ளன. அமெரிக்க ஏற்றுமதி குறைந்து வரும் அதே சமயத்தில்

அதன் இறக்குமதி அதிகரித்துக் கொண்டே உள்ளது. அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை ( Budget Deficit) அதிகரித்துக் கொண்டே உள்ளது. அமெரிக்க வங்கிகளின் மூலம் ஈரானுக்கு பணம் செலுத்துவது ஏற்கனவே குறைந்துக் கொண்டே வருகிறது. பிற நாடுகளில் இருந்து அமெரிக்க வங்கிகளில் வைக்கப்படும் வைப்பத் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே, அமெரிக்க பொருளாதாரத்தின் தற்போதைய சமநிலை வெகு நாள் நீடிக்காது.

இத்தகையதொரு சூழலில், இந்தியா தனக்கான பாதையை தானே வகுக்க வேண்டும். இதற்கு சரியான வழி சீனா, ஜப்பான்,ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்க வங்கிகளுக்கு மாற்றாக ‘வங்கி அமைப்பினை’ உருவாக்குவதே ஆகும். இரண்டாவதாக, அமெரிக்க வங்கிகளில் உள்ள உலக நாடுகளின் வைப்புத் தொகையை திரும்பப் பெறக் கோரி உலக அளவில் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும். உலகப் பொருளாதாரத்தின் மீதான அமெரிக்காவின் ஒற்றை மேலாதிக்கத்தை விலக்கி பல-துருவ உலகப் பொருளாதரத்தை நிறுவுவதை நோக்கி பயணிப்பதே வருங்காலத்தில் உலகப் பொருளாதரத்தில் நமது குரல் செவி மடுக்கப்படும்.

  • டாக்டர். ஜூன்ஜூன்வாலா, ( முன்னால் பொருளாதார பேராசிரியர், IIM பெங்களூரு)

தமிழில்: லீனஸ்

Frontier
Oct 23, 2018

http://www.frontierweekly.com/views/oct-18/23-10-18-India%20should%20circumvent%20US%20Dominance.html

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW