தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு! இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு?

28 Nov 2018

 

நவம்பர் 19 அன்று தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வாழ்நாள் சிறையாளர்களாகப் பதினெட்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் தண்டனைக் குறைப்பு சட்டப் பிரிவு 161 இன் படி ஆளுநரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றத்தால் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அதிமுகவினர் தமிழகமெங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். கோவை வேளாண் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் கல்லூரிப் பேருந்தில் தர்மபுரிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது அதை நிறுத்திய அதிமுக தொண்டர்கள் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினர். அதில் காயத்ரி, கோகிலவாணி, ஹேமலதா ஆகிய மூன்று மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த வழக்கில் முதலில் சிறப்பு நீதிமன்றமும் பின்னர் உச்சநீதிமன்றமும் தூக்கு தண்டனை வழங்கின. பின்னர் இவர்கள் போட்ட சீராய்வு மனுவின் அடிப்படையில் தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 2016 ஆம் ஆண்டு இவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையைக் குறைத்து வாழ்நாள் தண்டனை வழங்கியது. இப்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டை ஒட்டி 1858 வாழ்நாள் சிறைவாசிகளைத் தமிழக அரசு விடுவிக்க முடிவெடுத்தது. அந்தப் பட்டியலில் இந்த மூவர் பெயரும் இருந்தது. முதலில் ஒப்புதல் வழங்க மறுத்த ஆளுநர், விடுதலை செய்யுமாறு இரண்டாவது முறை தமிழக அரசு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் விடுவித்துவிட்டார். ’உணர்ச்சிவசப்பட்டு செய்யப்பட்டது, முன் திட்டமிடல் இல்லை, கொல்லப்பட்ட மூவரையும் அவர்களுக்கு முன்பின் தெரியாது’ ஆகிய காரணங்கள் சொல்லப்பட்டதாகவும் அதன் பெயரில் தாம் விடுவித்ததாகவும் ஆளுநர் விளக்கம் தந்துள்ளார்.

இந்த ’கொலைகாரர்களை’ எப்படி விடுவிக்க முடியும் என்று வெகுமக்களில் ஒரு பகுதியினராலும் குறிப்பாக கொல்லப்பட்ட மாணவி கோகிலாவின் தந்தை திரு வீராசாமியாலும் கேள்வி எழுப்பப் படுகிறது. இந்த ’கொலைகாரர்களை’ விடுவித்துவிட்டு இராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிசந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு தமிழரை விடுவிக்க மறுப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

161 ஐ பயன்படுத்தி தண்டனை குறைப்பு செய்யப்படுவது குற்றத்தின் தன்மையைப் பொருத்தோ, குற்றம் யாருக்கு எதிராக இழைக்கப்பட்டது, யாரின் நலனுக்காக இழைக்கப்பட்டது? என்பதை எல்லாம் பொருத்தோ அல்ல! மேற்படி தர்மபுரி கொடுமையில் ‘உணர்ச்சிவசப் பட்டு செய்தார்களா?’ உணர்ச்சிவசப் படவில்லையா?, ‘முன் திட்டமிடல் உண்டா? இல்லையா?’ என்பதெல்லாம் ஆளுநரின் பரிசீலனைக்கு உரியதல்ல. சிறையில் தண்டனை பெற்றுவரும் காலப்பகுதியில் சிறைவாசிகளின் நடத்தையை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். குற்றத்தைப் பற்றி பரிசீலனை செய்வது ஆளுநரின் வேலையல்ல. ஏற்கெனவே அதை நீதிமன்றம் செய்து தண்டனை வழங்கிவிட்டது. தண்டனைக் குறைப்புக்கு குற்றத்தைப் பரிசீலனை செய்யக் கூடாது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் பார்வையிடுகிறேன் என்ற பெயரில் அதிகார அத்துமீறல் செய்துவரும் ஆளுநர் 161 சட்டப்பிரிவின் பொருட்டும் அவர்தம் அதிகாரத்தைத் தவறாகப் புரிந்து வைத்துக் கொண்டு தவறாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.

கோகிலாவை இழந்த அவரது தந்தையின் துயரம் ஆறாத வடுபோல் அவர் நெஞ்சை அழுத்திக் கொண்டிருப்பதை அவர் சொற்கள் காட்டுகின்றன. பெற்று வளர்த்த மகளை கல்லூரிப் பருவத்தில் சாகத் தந்த தந்தையின் துயரத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அவர் ஆழ்மனதில் கனன்று கொண்டிருக்கும் சினமும் நயன்மையானதே(நீதியானது).

இந்நேரத்தில் இந்த குற்றத்திற்கு பின்னுள்ள நமது குமுக மெய்நிலை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் உண்டு. இதே வழக்கில் இந்த மூவரோடு சேர்ந்து தண்டனைப் பெற்றவர்கள் 25 பேர். ஊழல் குற்றச்சாட்டில் தண்டனைப் பெற்ற கட்சித் தலைவிக்காக இவர்களைப் போல் தமிழகமெங்கும் வன்முறையில் ஈடுபட்டோர் இன்னும் அதிகமான பேர். இதைக் கட்டுப்படுத்தவதற்கு மாறாக ஊக்குவித்த அந்தக் கட்சியின் தலைவியும் அடுத்தக்கட்ட தலைவர்களும் இதில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். அந்த ’தலைவிக்கு’ தண்டனை கொடுக்கப்பட்டது எதற்காக? ஊழல் செய்ததற்காக! அதுவும் அவர் ஓர் அரசு அலுவலர் அல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், நாட்டின் முதல்வர்! மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்! தர்மபுரி வன்முறை இந்த ஊழலை நியாயப்படுத்தி நடந்ததுதானே. ஊழல் செய்த ஜெயலலிதா இந்த வன்முறைக்கு பொறுப்பேற்க வேண்டியவராகிறார். கடைசியில் அந்த அம்மையார் ஊழலுக்கு தண்டனைப் பெற்றவராகவே மாண்டு போனார். அவர் இறந்துவிட்டதால்தான் சிறைப்படுத்தப்பட வில்லை. வரலாற்றில் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறார் என்பது வேறு.

ஆனால், தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவம் முடிந்து ஓராண்டில் தமிழக மக்களால் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மீண்டும் நாட்டை ஆளத் தேர்ந்தெடுக்கப்பட்டதே! நமது மக்கள் தேர்ந்தெடுத்தார்களே! அதற்கு பிறகு மூன்றுமுறை அவரை ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகுப் பார்த்தார்களே மக்கள்! ஊழல் குற்றவாளிகள் தலைவர்களாக இருப்பதும், அவர்களைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள் இருப்பதும் நயன்மை, கொள்கை, கோட்பாடு என்பதை எல்லாம் பார்க்காமல், ’இருப்பதைக் கொண்டு காலத்தை ஓட்டுவோம்’ என்று ஜெயலலிதாவுக்கு மக்கள் வாக்களித்துக் கொண்டிருந்ததும் என தர்மபுரியில் மூன்று பெண்கள் எரித்துக் கொல்லப்பட்டதற்கு பின்னால் எவ்வளவு சிக்கலான ஒரு வரைப்படம் இருக்கிறது. ஜெயலலிதா மறைவோடு இது முடிவுக்கு வந்துவிட்டதா? அதுவும் இல்லை. அந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தைக் காட்டி, இரட்டை இலையைக் காட்டி வாக்கு சேகரிக்க முடியும் என்ற நம்பிக்கை நீடிக்கிறதே! மன்னார்குடி மாஃபியா ஒருபுறம், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என கொள்ளைக்கார கும்பல் மற்றொருபுறம். இவர்களின் முதலீடு ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் புகைப்படமும் இரட்டை இலையும் தானே. இதையே பயன்படுத்தி தாமும் கொஞ்சம் வாக்குகள் பெற்று சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்களைப் பெற முடியுமா? என்று கூட்டணி வைக்காத கட்சிகள் தமிழகத்தில் உண்டா? தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வாழ்நாள் தண்டனைப் பெற்று வந்தவர்கள்  மூவர்தான், ஆனால் இந்த அவல நிலை நாட்டில் நீடிப்பதற்கு பின்னால் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்! இவற்றை எல்லாம் பொருத்துக் கொண்டு வாழுமாறு மக்களைக்  கட்டாயப்படுத்தும் இந்த சமூக நிலைமைக்கு எதிராக கோகிலாவின் தந்தையைப் போன்றவர்களின் அறச்சீற்றம் திருப்பப்பட வேண்டும்!

’கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்’ என்ற காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் தூக்குத் தண்டனையையே கைவிட்டுவிட்டன. அதை நோக்கிய உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தூக்கில் போடாவிட்டாலும் வாழ்நாள் முழுக்க ஒருவரை சிறையில் அடைத்து வைக்கலாம் என்பது கூட அவரை கொல்வதற்கு ஒப்பானதுதான். இதுவும் உலகில் மாறிக்கொண்டிருக்கிறது. ‘சிறை’ சீர்த்திருத்த மையம் தானே ஒழிய சித்திரவதை நிலையம் அல்ல. கொடுங்குற்றங்களுக்கு நெடுநாள் சிறைப்படுத்துவதும்கூட சீர்த்திருத்த நோக்கதிலே தான்.

எத்தகைய கொடுங்குற்றங்கள் இழைத்தவராயினும் வாழ்நாளெல்லாம் அவரை சிறையில் அடைத்து வைப்பதற்கு மாறாக சீர்த்திருத்தத்துவதை நோக்கமாக கொண்ட அளவுக்கான  சிறைவாசம் போதுமானது என்ற கொள்கை வழி நிலைப்பாட்டிலிருந்து தூக்கு தண்டனை ஒழிப்பு, வாழ்நாள் சிறைவாசம் ஒழிப்பு ஆகியவைப் பார்க்கப்பட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில்தான், தர்மபுரி வழக்கிலும் சரி இராஜீவ் கொலை வழக்கிலும் சரி நீண்டநாள் இஸ்லாமிய சிறைவாசிகள் தொடர்பான வழக்குகளிலும் சரி குற்றத்தைப் பற்றியும் குற்றம் யாருக்கு எதிராக செய்யப்பட்டது என்பதைப் பற்றியும் பரிசீலனை செய்யாமல், பத்தாண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் கழித்த அனைவரையும் பாகுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உயர்த்திப்பிடிக்கிறோம்.

எழுவர் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுப்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. தர்மபுரி வழக்கில் தொடர்புடைய மூவரை விடுவித்தது சரியென்றால் இராஜீவ் வழக்கில் எழுவரை விடுவிக்க முடியாது என்று ஆளுநர் சொல்லவியலாது. அது தன்முரண்பாடாகும். மாநில அரசுக்கு முடிவெடுக்க இருக்கும் அதிகாரத்தை ஆளுநர் மறுக்க முடியாது. ஏற்கெனவே இதே இராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்ட திருமதி நளினிக்கு இதே சட்டப் பிரிவு 161 ஐ பயன்படுத்தி தூக்கு தண்டனையிலிருந்து வாழ்நாள் தண்டனையாக மாநில அரசு தண்டனைக் குறைப்பு செய்ய முற்பட்டபோது அப்போதைய ஆளுநர் பாத்திமா இப்படிதான் மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார். ஆனால், நீதிமன்றத்தின் வழியாக ஆளுநரெனும் தடைக்கல்லை உடைத்துவிட்டு மாநில அரசு நளினியின் தூக்கு தண்டனையை வாழ்நாள் தண்டனையாக குறைத்தது. எனவே, தனக்கு முன்பே இப்படி அடாவடி செய்த ஆளுநரிடம் இருந்து படிப்பினையைப் பெற்றுகொண்டு சட்ட நெறிகளுக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும். அதாவது, எழுவர் விடுதலைக்கு ஒப்புதல் தர வேண்டும்.

-செந்தில், இளந்தமிழகம்

tsk.irtt@gmail.com, 9941931499

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW