சாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை

19 Nov 2018

நேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…இன்றோ காதல் இணையர் நந்தீஷ் -சுவாதி இருவரும் சாதி ஆணவப்படுகொலை !

தமிழகமே! உன் மனசாட்சியைத் தட்டி எழுப்பு!
சாதி ஆணவத்திற்கு இன்னும் எத்தனை பிஞ்சு
குருத்துகளின் இரத்தம் குடிக்கப் போகிறாய் ?

                                                கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 19-11-2018, திங்கள் மதியம் 3 மணி , இடம்: சிம்சன், பெரியார் சிலை அருகில் சென்னை.

ஒருங்கிணைப்பு: தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், இளந்தமிழகம்

தலைமை: தோழர் விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

பங்குபெற்ற அமைப்புகள் , நிர்வாகிகள்:

  1. தோழர் பாலன், செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
  2. தோழர் செந்தில்,ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்
  3. தோழர் அ.சா. உமர் பாரூக், மாநிலப் பொதுச் செயலாளர், எஸ்.டி.பி.ஐ.
  4. தோழர் வே.பாரதி, பொதுச்செயலாளர் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
  5. தோழர் அப்துல் ரசாக், மாநில தலைமை நிலையச் செயலாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
  6. தோழர் சுந்தரமூர்த்தி, தலைவர், தமிழர் விடுதலைக் கழகம் 
  7. தோழர் விவேகானந்தன், மே பதினேழு இயக்கம் 
  8. தோழர் சைலேந்தர், செய்தி தொடர்பாளர், தமிழர் விடியல் கட்சி

நந்தீசு-சுவாதி சாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்து கொண்டனர். சாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்தும் அதற்கு அரசு துணைபோவதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தை இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் ஒருங்கிணைத்தார்.

”ஆளும் கட்சிகளும் தமிழக அரசும் சாதிய வாக்கு வங்கிக்காக பாராமுகமாக உள்ளன. இதுதான் சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரமாக இருக்கிறது. இயக்கங்கள் முன்னெடுத்தப் போராட்டங்களால்தான் அவ்வப்போது இதுபோன்ற ஆணவக்கொலைக்கு எதிரான தீர்ப்புகள் வருகின்றன. அதைகூட நடைமுறைப்படுத்த மறுக்கும் அரசே இவ்விசயத்தில் முதன்மை குற்றவாளி” என தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் கண்டன உரையாற்றினார்.

“இந்தியா சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 15 அன்றுதான் நந்தீஷும் சுவாதியும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அவர்கள் சாதி ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எப்படியாவது இந்த கொலையை மூடி மறைக்கப் பார்த்துள்ளனர். நந்தீஷ் அணிந்திருந்த ஆடையில் இருந்த அம்பேத்கர் படம்தான் அந்த உடல் யாருடையது என அடையாளம் காட்டியுள்ளது. நந்தீஷின் சாவையும் அம்பேத்கரின் படம்தான் அடையாளம் காட்டியது. அரசு இவ்விசயத்தில் மெளனம் காத்து வருவது கண்டனத்திற்குரியது. அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் சாதி ஒழிப்பு பரப்புரைகளில் அக்கறை செலுத்த வேண்டும்.” என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் தலைமையுரை ஆற்றினார்.

மீண்டுமொரு முறை முழக்கங்கள் எழுப்பிய பின் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டத்தின் பத்திரிகை செய்தி பின்வருமாறு.

கடந்த 16-11-2018 இல் நந்தீசு-சுவாதி என்ற காதல் இணையர் கொல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. சுவாதியின் தந்தை, சித்தப்பா உள்ளிட்ட மூவரின் ஒப்புதல் வாக்குமூலமும் இவர்களின் பின்னணியும் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை உறுதிசெய்துள்ளது. நந்தீசு தலித் சமூகப் பிரிவை சேர்ந்தவர். சுவாதி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்.

கொலை நடந்த விதம், அதை மறைப்பதற்காக நந்தீசின் முகம் சிதைக்கப்பட்டதும் சுவாதியின் தலைக்கு மொட்டையடிக்கப்பட்டதும் கொலையின் தொழில்முறைத் தன்மையைப் புரிந்துகொள்ள போதுமானது. இதில் தொடர்புள்ள கூலிப்படை இன்னும் கைது செய்யப்படவில்லை. நந்தீசின் பெற்றோரை அச்சுறுத்தி மாண்டியாவிலேயே  உடல்களை எரியூட்டிவிட்டது காவல்துறை. கொல்லப்பட்டது நந்தீசு, சுவாதி மட்டுமல்ல, சுவாதியின் வயிற்றில் வளர்ந்துக்கொண்டிருந்த மூன்று மாதக் குழந்தையும்! இதுவரை வெளியில் தெரிந்த சாதி ஆணவக் கொலைகளிலேயே மிகவும் கோரமானது இதுவாகும். 2012 இல் இளவரசன் – திவ்யா இணையர் பிரிக்கப்பட்டு இளவரசன் கொல்லப்பட்டது தொடங்கி அரசியல் அரங்கில் முட்டுக்கொடுக்கப்படும் சாதி ஆணவப் படுகொலைகளின் தொடர்வரிசை நடந்து கொண்டிருக்கிறது. இது தமிழகமே வெட்கித் தலைகுனியும் அளவுக்கான காட்டுமிராண்டிதனமாகும். அண்மையில் தெலங்கானாவில் அம்ருதாவின் இணையர் பிணராய் சாதி ஆணவத்தால் கொல்லப்பட்டதைக் கண்டோம்.

சாதி ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்றுமாறு சனநாயக ஆற்றல்கள் வலியுறுத்தி வந்தபோதும் அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இதைப் புறக்கணித்து வருகிறது. மக்களின் சாதியுணர்வோடு முட்டிமோத விரும்பாத முக்கிய அரசியல் கட்சிகள் பட்டும்படாமல் இதைக் கண்டித்துவிட்டு கடந்துவிடுகின்றன. சாதியை வாக்கு வங்கிக்காக நம்பி இருக்கும் பிழைப்புவாத சாதிக் கட்சிகள் காதலையும் சாதி மறுப்பு திருமணங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இதை மீறுபவர்களை கொல்லத் துண்டும் நோக்கிலும் தலித் இளைஞர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும் பேசியும் செயல்பட்டும் வருகின்றனர். இதை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பது நாகரிகத்திற்கு ஒவ்வாததாகும். சாதி அரசியல் கட்சிகளின் பின்புலம் இருப்பதால் இதை இலகுவாக முறியடித்துவிடவும் முடியாது. இடைவிடாத தொடர் இயக்கங்களின் வழியாகத்தான் சாதி ஆணவக் குற்றங்களுக்கு முடிவுகட்ட முடியும். இவ்வார்ப்பாட்டத்தின் வாயிலாகப் பின்வரும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

தமிழக அரசு,

  • சுவாதி-நந்தீசு கொலை வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிய வேண்டும்
  • நந்தீசு குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பும் இழப்பீடும் வழங்க வேண்டும்.
  • கொலையில் தொடர்புடைய கூலிப் படையினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
  • வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை வழங்க வேண்டும்.
  • சாதி ஆணவக் குற்றங்களுக்கு எதிரான வெளிப்படையான கண்டனத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.
  • சாதி ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச் சட்டமியற்ற வேண்டும்.
  • கலப்பு மண இணையர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பி., மாவட்ட சமூக நல அதிகாரி, மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை அமைக்க வேண்டுமென வலியுறுத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக மக்களே!

சாதி ஆணவத்தின் காரணமாக காதலர்களை மணம்புரிய விடாமல் தடுப்பது, மணமானப் பின்பும் பிரிப்பது, பிரிக்க இயலாவிட்டால் கொல்வது என நீளும் உரிமை மீறல்களைச் சட்டம் மட்டுமே தடுத்துவிட முடியாது. பழைய கருத்துகளின் பிடியில் சிக்குண்டுள்ளோரை மீட்டெடுக்க புதிய சக வாழ்வை நாடும் சமூக ஆற்றல்கள் அனைவரும் முனைய வேண்டும். அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், பள்ளி, கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள், சினிமா, விளையாட்டுத் துறையினர், தொழிற்சங்கங்கள், சமயக் குருமார்கள், அரசுத்துறையினர், எழுத்தாளர்கள் உள்ளிட்ட படைப்பாளிகள், இலக்கிய ஆளுமைகள், மாணவர்கள், பெண்ணுரிமை இயக்கங்கள், ஊடகங்கள் என துறைதோறும் உள்ள சனநாயக ஆற்றல்கள் சமுதாய வளர்ச்சிக்கு தடையாய் உள்ள சாதி ஆணவத்திற்கு எதிராய்ப் பேச வேண்டும், போராட வேண்டும், இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW