பாலியல் வன்முறையில் உயிரிழந்த சௌமியா’வின் கிராமம் சிட்லிங்கத்தில் நேரடி விசாரணை – தோழர் ரமணி

12 Nov 2018

சௌமியா கொலைக்கு காரணமான முக்கியக் குற்றவாளிகள் மற்றும்  இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பலை உடனடியாக கைது செய்!

தருமபுரி, அரூர் ஒன்றியம் காட்டுப்பகுதியை கொண்ட சிட்லிங் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மலைவாழ் மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். லம்பாடி, போயர் ஆகிய பிரிவு மக்கள் வசிக்கிறார்கள். சிறிது விவசாயம், கூலி வேலை தவிர, இளம் பெண்கள், இளைஞர்கள் பெரும்பாலும் திருப்பூர் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்கிறார்கள். அடிப்படை வசதிகளோ, போக்குவரத்தோ, படிப்பறிவோ, வேலைவாய்ப்போ இல்லாத கிராமமாக இருக்கிறது. பூர்வகுடிகளை தவிர வெளி ஊரிலிருந்து வந்து குடியேறியவர்கள் சில அரசியல் புள்ளிகள் கோட்டப்பட்டி காவல் துறையினரோடு இணைந்துக்கொண்டு கட்ட பஞ்சாயத்தில் பணம் பார்ப்பதே தொழிலாக கொண்டுள்ளனர். அரூர் காவல் நிலையம் கட்டப்பஞ்சாயத்து நிலையமாக செயல்பட்டு வருகிறது. எந்த குற்றம் நடந்தாலும் காவல்துறை பணம் வாங்கி கொண்டு பிரச்சனையை மூடி மறைப்பது அன்றாட செய்தி என மக்கள் பதிவு செய்தார்கள். அதுதான் சௌமியாவிற்கான கொடூரத்திலும் நடந்திருக்கிறது.

வழி நெடுக அடர் காட்டுப்பகுதி. மூங்கில் தோட்ட காடுகளெல்லாம் சவுமியாவிற்கு நேர்ந்த கொடூரத்தை கண் முன் கொண்டுவந்தது. பாபிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வரும் சௌமியா (17 வயது) உடன் பிறந்தவர் ஒருவர்.

கடந்த 5.11.2018 அன்று காலை 8 மணிக்கு தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்திருக்கிறார். சௌமியா மாதவிடாய் 2வது நாளில் இருந்துள்ளார். மதியம் 1.30 மணி அளவில் சௌமியா மலம் கழிக்க சென்றிருக்கிறார். அதே ஊரை சேர்ந்த சதீஷ்,25, ரமேஷ் 20 வயதுகொண்ட இருவரும் (சதீஸ் பழங்குடி , ரமேஷ் யின் அப்பா வன்னியர், அம்மா பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்) பின் தொடர்ந்து சென்றுள்ளனர். வெளியே வந்த சௌமியாவை புதருக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்திருக்கிறார்கள். உறவினர்வந்து பார்க்கவே விட்டுவிட்டு ஓடி இருக்கிறார்கள்.

அழுது கொண்டே வீட்டிற்கு வந்த சௌமியா வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல, அன்று மாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அடுத்த நாள் வர சொல்லி அனுப்பி உள்ளனர். அடுத்தநாள் 6.11.2018 அன்று போகவே விடுதிக்கு அனுப்பி உள்ளனர். அன்று முதல் 10.11.2018 காலை வரை சௌமியாவிற்கான சிகிச்சை அளிக்கப்படவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்படவும் இல்லை.கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் புகாரை மறைத்து “பெண்ணோட வாழ்க்கை வீணாகிவிடும்” என்று மழுப்பி கையை பிடித்து இழுத்ததாக மட்டும் பதிவு செய்து விட்டு பெற்றோர்களிடம் 6000 பணத்தையும் வாங்கி இருக்கிறார். பின் மாணவியை சிகிச்சைக்கு அனுப்பாமல் நேராக விடுதிக்கு அனுப்பி உள்ளனர். 10.11.18 காலை 8 மணி அளவில்  தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு கவனிக்கப்படாத நிலையில் சௌமியா காலை 11 மணி உயிரிழந்துள்ளார்.

குற்றவாளிகள் தப்பித்துவிட்டனர். அவர்களை தேடி பிடிக்காத காவல்துறை குற்றவாளியை தட்டி கேட்டதற்காக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களை 2 நாள் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். மிரட்டி இருக்கிறார்கள். பின் வெளியே விட்டிருக்கிறார்கள்.

அதே கிராமத்தில் அண்மையில் லட்சுமி என்கிற 60 வயது பாட்டியை 4 பேர் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தப்பித்துள்ளனர். குற்றவாளிகளின் குடும்பம் 7 லட்சம் பணம் காவல்துறைக்கு கொடுத்து கைது செய்யாமல் மறைத்துவிட்டனர். மாறாக, அவரின் 16 வயதுபேத்தி இடம் அந்த கொலை குற்றத்தை ஒத்துக்க சொல்லி அடித்து மிரட்டி சிறையில் தள்ளியுள்ளனர். குற்றவாளிகள் வெளியே ஏதும் அறியா ஏழை பெண் இன்று சிறைக்குள்ளே.

இன்று 11.11.18 குற்றவாளிகளில் ஒருவன் சதீஷ் பிடித்துவிட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். இன்னொருவனைதேடி வருகிறார்களாம். மாவட்ட ஆட்சியர் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளார்.

நேற்று ராஜலட்சுமி இன்று சௌமியா….

பெண்கள் – சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகள் கொடூர வடிவம் எடுத்து வருகிறது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

சௌமியாவிற்கான நீதி வெல்வோம். நீதி வெல்லும்வரை போராடுவோம்.

சௌமியா வின் கிராமம் சிட்லிங்கத்தில்…

 

ரமணி

பொதுச்செயலாளர்

சாதி ஒழிப்பு முன்னணி

8508726919

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW