ரிசர்வ் வங்கி Vs மோடி அரசு : திசைமாறுகிற ஆட்ட விதிகள் 

02 Nov 2018

அண்மையில் அமெரிக்க பெடரல் வங்கி மேற்கொண்ட வட்டிவீத  உயர்வு நடவடிக்கையை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்  கடுமையாக விமர்சித்திருந்தார். வங்கியின் வட்டி வீத உயர்வானது வளர்ச்சியை குறைக்கும் என வாதிட்டார். அதேநேரம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஜாக்சன் ஹோலில் நடைபெற்ற தாராளமய அறிவுஜீவிகள், மத்திய வங்கி அதிகாரிகளின்  ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பெடரல் வங்கித் தலைவர் ஜெரோம் பவெல், வட்டி வீத உயர்வு முடிவில் உறுதியாக நிற்போம் என மறைமுகமாக அதிபருக்கு பதிலடி கொடுத்துள்ளார். பெடரல் வங்கியின் மீதான அமெரிக்க அதிபரின் விமர்சனமானது  அதன் “சுதந்திர” செயல்பாடுகளை முடக்குகிற நோக்கம் கொண்டதாக  தாராளமய பொருளாதார அறிவுஜீவிகள் கருதுகிறார்கள். பத்திரிக்கைகள், நிக்சன் காலத்திய நெருக்கடியை (VOLKCKER SHOCK) ட்ரம்ப் கொண்டு வரப்போவதாக  பத்தி எழுதுகின்றன. துருக்கி வங்கி மீதான அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகனின் அரசியல் தலையீட்டால் ஏற்பட்டு வருகிற பொருளாதார நெருக்கடிகளை (துருக்கி  நாணயமான லிரா சரிவு, கடன் அதிகரிப்பு) மேற்கோள் காட்டுகின்றன. துருக்கியில் இருந்து அமெரிக்க பாடம் கற்க வேண்டும் என வாதிடுகின்றன. டிரம்ப்போ, எர்டோகன் போல வங்கியை கட்டுக்கொள் கொண்டுவரவேண்டுமென்கிறார்.

மேற்குலகில் அமெரிக்க பெடரல் வங்கிக்கும் அமெரிக்க அதிபரக்குமான  முரண்பாடு ஒவ்வொரு நாளும் கூர்மையாகி வருவதுபோலவே இந்தியாவிலும் மத்திய ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசிற்குமான முரண்பாடு தற்போது பொதுவெளியில் விவாதப்பொருளாகியுள்ளது. மத்திய அரசிற்கும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் இடையில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற மோதல்கள் ஏற்பட்டதுண்டு.ஆனால் அவையாவுமே மூடிய அறைக்குள்ளான சுமூக பேச்சுவார்த்தையில் தீர்க்கப்படும்.

தற்போது இதுபோன்ற  பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளதால் சட்டப் பிரிவு – 7ஐ பயன்படுத்துகிற எல்லைக்கு அரசு செல்கிறது. அரசு மீதான ரிசர்வ் வங்கியின் குற்றச்சாட்டு, ரிசர்வ் வங்கி மீதான நிதி அமைச்சரின் குற்றச்சாட்டு, ஆர் எஸ் எஸ் குற்றச்சாட்டு  என  கடந்த காலத்தைய மோதலைவிட வேறொரு பரிணாமத்தில் இம்மோதல் வெடித்துள்ளது..

தற்போது எழுந்துள்ள முரண்பாடுகள்  திடுமென ஒரு இரவில் நடைபெற்ற நிகழ்வல்ல. ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் பதவியேற்ற நாள்தொட்டு தற்போது ராஜனிமா செய்யப் போவதாக செய்தி வருகிற ஆளுநர் உர்சித் பட்டேல் வரைக்கும் வங்கிக்கும் – மோடி அரசிற்குமான  மோதல் நீண்ட நிகழ்ச்சிப் போக்கின் பகுதியாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நெருக்கடியானது சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய வரலாற்றில் இதுவரை ரிசர்வ் வங்கி மீது எந்த அரசும் பயன்படுத்தியிராத அதிகார திணிப்பை (பிரிவு-7) ஆளும் மோடி அரசு மேற்கொள்வது வரை ஆழமாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி  Vs சூறையாடும் முதலாளிகள், மோடி – I

இந்திய ரிசர்வ் வங்கி முன் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய சிக்கல் வாரக் கடன் பிரச்சனை ஆகும். மார்ச் 2018 ஆண்டுவரை வங்கிகளின் வாரக் கடன் தொகையானது சுமார் 10,35,528 கோடியாகும். கடந்த மார்ச் 2015 ஆம் ஆண்டில் 3,23,464 ருபாயாக இருந்த வாரக் கடன் தொகையானது, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே 6.2 l லட்சம் கோடி ருபாய் உயர்ந்துள்ளது. இந்தியாவின் பெரு முதலாளிகள் வங்கிக் கடன்களை முறையாக செலுத்தாமல் வங்கிகளின் மூலதன இருப்பும் வங்கி செயல்பாடும் நலிவடைந்துவருகின்றன. பலவீனமடைந்து வருகிற வங்கிகளின் நிதிச்சுமைகளை ஒழுங்கப்படுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே நேரத்தில் அதன் தன்னாட்சி அதிகாரமும் அரசியல் எல்லைக்கு உட்பட்டே இருந்தது.

இதன் வெளிப்பாடாகத்தான் கடந்த 2015 ஆம் ஆண்டில் வங்கிக்கடன்  மோசடியில் தொடர்புடைய முக்கிய கார்ப்ரேட்கள் தொடர்பான ஆவணங்களை தொகுத்து, அதன்  மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற வரைவுக்குழுவிற்கு அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கடிதம் எழுதினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிற்கு ராஜன் எழுதிய  முக்கிய கடித விவகாரத்தை (வயர் பத்திரிக்கைக்கு) ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. ராஜன் ராஜினாமா செய்வதற்கு முன்பாக முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற வரைவுக் குழுவிடம் வாராக் கடன் தொடர்பாக 17 பக்க விளக்கம் அளித்தார்.அதில் 2015 இல் கடன் மோசடியாளர்கள் பட்டியில் குறித்து தான் எழுதிய கடிதம் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தினார்.

ஆனால் இதுநாள் வரையிலும் இந்த பட்டியிலை அரசு வெளியிடவும் இல்லை, நடவடிக்கை குறித்த விளக்கமும் இல்லை. மாறாக விஜய் மல்லையாவை தொடந்து நீரவ் மோடி, சோக்சி என கடன் மோசடியாளர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோடுவதுதான் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் பலவீனமான மூலதன இருப்பில் திண்டாடுகிற வங்கிகளுக்கு மூலதனத்தை வழங்குவது, சிறு குறு நிறுவனங்களுக்கு மேலதிக கடன் வழங்குவது, பணப் புழக்கம் ஆகியவை  தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி சட்டபிரிவு-7 ஐ இன் மூலமாக ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு பலமுறை அழுத்தம் கொடுத்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் இதழ் செய்து வெளியிட்டது.

பொது நலனின் பெயரில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து வழிகாட்டுதல் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி சட்டபிரிவு 7 இல் உள்ளது. அதேநேரத்தில் இதுவரை எந்த அரசும் இந்தப் பிரிவை பயன்படுத்தியதே இல்லை என்பதால், இது எவ்வாறு அமலாக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் தாராளமயமாக்கம் அமலாக்கப்பட்ட 90 களிலோ, 2008-13 பொருளாதார மந்த கட்டத்தின் போதோ இதுவரை எந்த அரசும் பயன்படுதியிராத சட்டப்பிரிவு-7 ஐ மோடி அரசு அமலாக்குவதன்  நோக்கமென்ன என ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய மோதல் போக்கு முற்றுவதற்கான முக்கிய இரு மையக் காரணிகளை சற்று சுருக்கமாக பார்க்கலாம்:

வாராக் கடன்(Non Performing Assets-NPA)

கடந்த பிப்ரவரி மாதம், வாராக் கடன் தொடர்பாக முக்கிய சுற்றிரிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிருந்தது. அதில் ரூ 2000 கோடிக்கு அதிகமாக கடன் பெற்ற நிறுவனங்களின் கடன் நிலுவையானது 180 நாட்களை கடந்து தொடர்ந்தால், அந்நிறுவனங்களை திவாலான நிறுவனமாக அறிவித்து திவால்சட்ட  நடைமுறையின்படி நிறுவனங்களின்  சொத்தை  ஏலம் விடுவதற்கான பணியை  தொடங்கவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இதன்படி சுமார் 3.8 லட்சம் கோடி மதிப்பிலான 70 வாராக் கடன் நிலுவை பட்டியில் மீதான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. இந்த 3.8 லட்சம் கோடியில் நான்கில் மூன்று பங்கு பெரும் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் பெற்றதாகும். இம்முடிவு அமலாக்கப்பட்டால் குஜாரத் மாநிலத்திற்கு சொந்தமான  நிறுவனமான Gujarat State Petroleum Corporation திவாலானதாக அறிவிக்கப்படும். ஏனெனில் மோடி அமித்ஷாவின் கும்பலாட்சியில் இந்நிறுவனத்தின் வாராக் கடன் மதிப்பானது 12,519 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆக, ரிசர்வ் வங்கியின் இம்முடிவு பெரும் தனியார் நிறுவன முதலாளிகளைப் போலவே மோடி –அமித்ஷா கும்பலையும் நெருக்கடியில் தள்ளியது.

ரிசர்வ் வங்கியின் இம்முடிவை எதிர்த்து (குறிப்பாக 180 நாட்கள் குறைவான கால அவகாசம் என்பது நிறுவனங்களின் வாதம்) அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. மோடி அரசும் இதில் குற்றவாளி ஆக வாய்ப்பிருப்பதால், ரிசர்வ் வங்கியின் இந்நடவடிக்கையை  எதிர்த்து தனது சூறையாடும் முதலாளிகளுடன் சேர்ந்துகொண்டு உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்தது. இந்திய அரசியல் வரலாற்றில் ரிசர்வ் வங்கிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த முதல் அரசு என்ற வரலாற்று  பெருமை பெற்றது. இவ்வழக்கு விசாரணையின்போது தங்களின் மீதான வாராக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கடுமையான  கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு ,ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை பிரிவு 7 இன்  மூலமாக அரசு தலையீடு செய்ய பரிசீலிக்கவேண்டுமென  மின்துறை நிறுவனங்கள் கோரியிருந்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடைபிடிக்கிற நெறி முறைகளை தளர்த்துவதற்கு மத்திய அரசு நேரடியாக ரிசர்வ் வங்கியை கட்டாயப்படுத்தவேண்டும் என்பதாகும்.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லியோ ஒரு படி மேலே சென்று ‘2008 முதல் 2014-ம் ஆண்டுவரை, வங்கிகள் தங்கள் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு அனைவருக்கும் கடன் அளித்தன. யாருக்குக் கடன் கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது என்ற பாகுபாடு இல்லாமல் கடன் கொடுத்தன. இதைத் தடுப்பதற்கு ரிசர்வ் வங்கி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்போதே ரிசர்வ் வங்கி இதைத்தடுக்காத காரணத்தால்தான் இப்போது வாராக்கடன் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது’’ என வாரக் கடன் சிக்கலின் மொத்த பொறுப்பையும் ரிசர்வ் வங்கி மீது திருப்பிவிட்டார்.

இதே அருண் ஜெட்லி, ரகுராம் ராஜன் அளித்த அறிக்கை குறித்தும், அதன் மீது ஏன் இதுநாள் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்தோ வாய் திறக்கவில்லை.

முறைப்படுத்துகிற செயல்திட்டம் (Prompt corrective Action-PCA)

பொருளாதார மந்த நிலையால் கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன் நிலுவைத் தொகை அதிகரித்துள்ளதாக பாஜக அரசு  வாதிடுகிறது. மேற்கொண்டு இந்நிறுவனங்களுக்கு மேலதிக கடன் கொடுக்கிற பட்சத்தில், பொருளாதார முன்னேற்றமும் வளர்ச்சியும் சாத்தியமாகும், கடன் சிக்கலும் தீர்க்கப்படுமென நம்புகிறது. கடன்காரனிடன் கொடுத்த கடனை அடைக்க மேலும் அவனிடமே கடன்  பெறுகிற முடிவுறாத சுழற்சி வளையத்தில் கார்ப்பரேட் நலனில் பேரிலும் எதிர்வருகிற நாடாளுமன்ற தேர்தல் அரசியல் நலனின் பேரிலும் வாராக் கடன் வசூலிப்பில் நிறுவனங்களிடன் அனுசரணை காட்ட நிர்பந்திக்கிறது பாஜக அரசு. மறுபுறம் ரிசர்வ் வங்கியோ, மேலதிக கடன் கொடுக்கிற பட்சத்தில்,திட்டங்களில் மேற்கொள்ளப்படுகிற கார்ப்பரேட் நிறுவனங்களின்  முதலீடுகள் தேக்கம் அடைந்தால், வங்கியின் மூலதன கையிருப்பும், கடன் நிலுவையும் மென் மேலும் சிக்கலாகும் என அஞ்சுகிறது. மேலும்,கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி முதலீடுகளை தவறான திட்டங்களில் முதலீடு செய்வதாகவும், வேறு வகைகளில் வங்கிக் கடனை திருப்பிவிடுவதாகவும் எண்ணுகிறது. எனவேதான் அதிகமாக கடன் வழங்கி, பலவீனமான மூலதன கையிருப்பு உள்ள 12 வங்கிகளை உடனடி முறைப்படுத்துகிற செயல்திட்ட வரையறைக்குள் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது. இதன்படி, இந்த வரையறையில் உள்ள வங்கிகள் மேற்கொண்டு கடன் வழங்குவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. இந்த வரையறையை ‘Double A’ விற்கு கீழே உள்ள கடனாளர்களுக்கு மட்டுமாவது தளர்த்த வேண்டுமென பாஜக அரசு கோரியது. ஏனெனில் கடன் சார்ந்த வளர்ச்சியானது, சந்தையில் பணப் புழக்கத்தை கொண்டு வருமெனவும், வருகிற தேர்தலில் இது எதிரொலிக்கும் என பாஜக நம்புகிறது. ரிசர்வ் வங்கியோ அரசின் கோரிக்கைக்கு செவி மடுக்கவில்லை. அதற்கு காரணமும் உள்ளது.

கடந்த 2015 ஆண்டுக்கு பிந்தைய காலகட்டத்தில் மட்டும் சுமார் 2,30,000 கோடிரூபாயை  மறுமுதலீடாக (re capitalization) அரசு வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. இதில் பாதி மூலதனமது தற்போது  முறைப்படுத்துகிற செயல்திட்ட வரையறையில் வருகிற 12 வங்கிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வங்கிகளின் சொத்து மதிப்பு மென்மேலும் நலிவுப்பாதையிலே சென்றுகொண்டுள்ளது.

கடந்த கால வங்கிக் கடன் நெருக்கடி அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட பன்னாட்டு நிதியகமானது, வங்கிகளின் மூலதன  இருப்பிற்கு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. இவை பேசல் விதிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் வங்கிகளும் நாடுகளின் அரசும் உள்ளன. இதன் காரணத்தால் பாஜக அரசானது பல்வேறு வழிகளில் வங்கிகளுக்கு மூலதன முதலீட்டுத் திட்டங்களை இந்திர தனுஷ் என்ற பெயரில்  2015 ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இதன்படி தற்போதைய காலகட்டம் வரையிலும் வங்கிகளுக்கு ரூ.50,000 கோடி மூலதனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக தற்போதுவரை  சுமார் ரூ.35,000 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனைத் தொடந்து, கடந்த ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 2 கோடியே 11 லட்சம் மறுமுதலீடு வழங்கப் போவதாக பாஜக அரசு அறிவித்தது. இதில் ரூ.1,35,000 கோடி மறு முதலீட்டு பத்திரம் மூலமாகவும், ரூ.58,000 கோடி பங்கு விற்பனை மூலமாகவும், இந்திர தனுஷ் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.18,000 கோடி அரசாங்கம் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் தற்போதைய நிலவரமும் ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.

அண்மையில் தீனா வங்கியை பரோடா வங்கியோடும் விஜயா வங்கியோடும் இணைக்கப்போவதாக பாஜக அரசு அறிவித்தது .தீனா வங்கியின் 22 விழுகாட்டு சொத்து மதிப்பு வாராக் கடனாக உள்ளது. மோசமான மூலதன இருப்பும் கடன் நிலுவையும் வைத்துள்ள தீனா வங்கியின் பலவீனத்தை மறைப்பதற்கு  சற்று லாபமாக இயங்கி வருகிற பரோடா வங்கியோடு இணைக்கிற முடிவுக்கு சென்றது.

இவையெல்லாம் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் வங்கிகளுக்கு அரசு மூலதனத்தை வழங்கத் தவறுகிற நிலையில், ஐரோப்பிய கடன் நெருக்கடி சுழலில் சிக்கியது போலவே இந்தியாவில் ஏற்படும் என ரிசர்வ் வங்கி அஞ்சுகிறது. இதன் காரணமாகவே மென்மேலும் வங்கிக் கடன் வழங்குகிற நடவடிக்கையை ரிசர்வ் வங்கி முடக்கியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வளர்ச்சியை பாதிக்கும் என பாஜக ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு எதிராக நிற்கிறது. ரிசர்வ் வங்கி மேற்கொள்கிற முறைப்படுத்துகிற செயல்திட்டத்தை தளர்த்துமாறு நிர்பந்திக்கிறது.

ஆனால் ரிசர்வ் வங்கி இதில் உறுதியாக உள்ளது. முன்னதாக பாஜக அரசு மேற்கொண்ட முந்த்ரா கடன் திட்டம் மற்றும் கிசான் கடன் திட்டங்கள் போன்றவை வங்கிகளின் வாராக் கடனை அதிகரிக்க வைப்பதாக நாடாளுமன்ற வரைவுக்குழு தலைவர் முரளி மனோகர் ஜோசியிடன் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் விளக்கியது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி  Vs சூறையாடும் முதலாளிகள்,மோடி – II

மக்கள் வரிப்பணத்தை வங்கியின் மூலமாக சூறையாடும் முதலாளிகளின் பகல் கொள்ளைக்கு கேடயமாக செயல்படுவதற்குத்தான்  ரிசர்வ் வங்கி மீதான சட்டப் பிரிவு-7 அஸ்த்திரத்தை ஆளும் மோடி அரசு கையிலெடுத்துள்ளது. தனது கட்சிக்கு தேர்தல் நிதியை வாரி வழங்குவதற்கும் போலி வளர்ச்சி முழக்கத்தை முன்னெடுப்பதற்கும் இந்தியாவின் சூறையாடும் முதலாளிகளை காக்க வேண்டிய கட்டாயத்திற்கு மோடி தள்ளப்பட்டுள்ளார்.

தனது முடிவுகளுக்கு ரிசர்வ் வங்கியை பணிந்துபோகச் செய்வதற்கு சம்பந்தமே இல்லாத ஆர் எஸ் எஸ் குருமூர்த்தியையும், கார்ப்பரேட் அதிபர் சதீஸ் காசினாத்தையும் ரிசர்வ் வங்கியின் இயக்குனராக்கி, ரிசர்வ் வங்கியின் முக்கிய கூட்டங்களிலும் கொள்கை முடிவுகளிலும்  குழப்பத்தையும் நெருக்கடியையும்  ஏற்படுத்தி வருகிறது மோடி அரசு.

இந்தப் பின்புலத்தில்தான்  கடந்த அக்டோபர் 23 இல்  ரிசர்வ் வங்கியின் 18 உறுப்பினர்களைக் கொண்ட  வாரியக் கூட்டம் முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்பட்டது. சுமார் எட்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் திட்டமிட்ட தலைப்புக்கள் பேசி முடிக்க இயலாத நிலையில் இம்மாதம் 19 ஆம் தேதியன்று மீண்டும் கூடுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் கூட்டத்திற்கு அடுத்த  சில நாட்களில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில்  பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரல் ஆச்சார்யா ரிசர்வ் வங்கி என்பது, சுயாட்சிகொண்ட சுதந்திரமான அமைப்பு. ஆனால், சமீபகாலமாக மத்திய அரசு, அதன் சுதந்திரத்தை மதிப்பதில்லை. விரைவிலோ அல்லது கால தாமதமாகவோ சந்தையில் மிகப்பெரிய பொருளாதாரப் பெருந்தீ பற்றிக்கொண்டு சேதத்தை உருவாக்கும். சுதந்திரமான இந்த வங்கியின் முக்கியத்துவத்தை அவர்கள் அப்போது உணர்வார்கள்.

சந்தைக்கு என தனிப்பட்ட ஒழுங்கு இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை ஒருபோதும் மத்திய அரசு அழித்துவிட முடியாது. அதேசமயம், சட்டத்தை மீறி மத்திய அரசு செய்யும் தவறுகளுக்கும் பாவங்களுக்கும் நிச்சயம் விலை கொடுக்க வேண்டியது இருக்கும்’’ என ரிசர்வ் வங்கியின் மீதான மோடி அரசின்  தலையீட்டை வெளிப்படையாக அம்பலப்படுத்தினார்.

இந்த அம்பலப்படுத்தல் யுத்தியை, அரசின்  நெருக்குதல்களை எதிர்கொள்ளும்போதெல்லாம் ரிசர்வ் வங்கி கையாண்டு வந்துள்ளது. கடந்த காலத்தில் துணை ஆளுனர் டாக்டர் ரெட்டியும் இதுபோன்று பொதுவெளியில் அரசை விமர்சித்தார். இது அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ரிசர்வ் வங்கி ஆளுநர் மேற்கொள்கிற உக்திகளில் ஒன்றாகும். இது உடனடியாக வேலை செய்தது.

எதிர்கட்சிகள் இதை பற்றிப் பிடித்துக் கொண்டன. அதேவேளையில், பாஜக அரசால் ரிசர்வ் வங்கி இயக்குனராக்கப்பட்ட  அலுவல்ரீதியில் அரசுப் பணியாளர் அல்லாத குருமூர்த்தி விரால்  ஆச்சர்யாவின் விமர்சனத்தை கடுமையாக கண்டித்து கடிதம் எழுதியுள்ளார். “பிஷப் பிராங்கோ முலக்கலை சபரிமலையில் தந்திரியாக நியமித்தால் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்கூட வரமாட்டார்கள்” என்ற தத்துவ புகழ் குருமூர்த்தி, ரிசர்வ் வங்கிக்குள் அமர்த்தியதன் நோக்கமும் இதுதான்!

இந்தியாவின் தன்னாட்சி அதிகாரம் மிக்க ஜனநாயக நிறுவனங்களாக நம்பப்படுகிற சிபிஐ, தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயக நிறுவனங்களை தனது சொந்த நலனுக்கான கைப்பாவை நிறுவனங்களாக மாற்றுகிற  பாஜகவின் அரசியல் தலையீடுகள், எதிர்கட்சிகளால் தீவிரமாக விமர்சிக்கப்பட்டு வருகிற நிலையில் விரால் ஆச்சர்யாவின் விமர்சனம் கொந்தளிப்பை உருவாக்கியது. ரிசர்வ் வங்கி மீதான மோடி அரசின் தலையீடு பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இதை தணிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்

‘‘ரிசர்வ் வங்கியுடன் சில விஷயங்களில் பொதுமக்களின் நலன் கருதி மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அதேசமயம் அதன் சுதந்திரம் மற்றும் தனிச்சையான செயல்பாடுகளில் தலையிடவில்லை” என தெரிவித்தது, மற்றபடி தவறியும் சட்டப்பிரிவு  7 இன்  கீழ் உத்தரவு வழங்கப்பட்டதா  என்பது குறித்து அறிக்கையில் எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. அதேநேரத்தில் ரிசர்வ் வங்கியின் சட்ட வரையறைக்கு உட்பட்டளவில் ரிசர்வ் வங்கி தன்னாட்சியுடன் செயல்படும் என்ற விளக்கத்தை வழங்கத் தவறவில்லை. இதன் அர்த்தம், பிரிவு-7 ஐ மத்திய அரசு பயன்படுத்துவது என்பது ரிசர்வ் வங்கி சட்டத்திற்கு உட்பட்டதே என்பதாகும்!

“நாங்கள் சுதந்திரமானாவர்கள், இந்திய ரிசர்வ் வங்கி முழு தன்னாட்சி அதிகாரம் மிக்கது. ஆனால் பாருங்கள் நிதி அமைச்சரைக் கேட்டுத்தான் இக்கூற்றை உங்களிடம் நான் தெரிவிக்க வேண்டும்” என முன்னால் ரிசர்வ்  வங்கி ஆளுநர் டாக்டர் ரெட்டி பத்திரிக்கையாளர் ஒருவரிடத்தில் வேடிக்கையாக கூறினாராம். இந்திய ரிசர்வ் வங்கி தன்னாட்சிமிக்கது என்றாலும் அரசு அனுமதிக்கிற எல்லைக்கு உட்பட்டே அதன் அதிகாரம் செல்லும் என்பதை தனது  Advice and dissen:My life in Public Service நூலில், ரிசர்வ் வங்கியின்  தன்னாட்சி வரம்பை மூன்றாக பிரித்து விளக்கப்படுத்துகிறார் ரெட்டி. ஒன்று அன்றாட நிர்வாக(Operational Issues) செயல்பாடுகள் தொடர்பானது. இந்த செயல்பாடு தன்னாட்சி தன்மைக் கொண்டது, சுதந்திரமானது. இரண்டவாது கொள்கை முடிவுகளை(Policy matters) எடுப்பது. இதைப்பொறுத்தவரை அரசின் ஆலோசனைகளை கேட்டே, அதாவது வடக்கு பிளாக்கின் வழிகாட்டுதலின்படியே ரிசர்வ் வங்கி செயல்படும். மூன்றாவது, கட்டமைப்பு மாற்றங்கள்(Structural changes). இவை கண்டிப்பாக அரசுடனான நெருக்கமான ஆலோசனைகளின்பேரில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்கிறார்.

இவரின் விளக்கத்தின்படி பார்த்தால் வாரக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் கொள்கை முடிவுகள் அடிப்படையிலானதாக மத்திய பாஜக அரசு பார்க்கிறது. ரிசர்வ் வங்கியோ இதை தனது நிர்வாக செயல்பாட்டின் அங்கமாக பார்க்கிறது எனலாம்.முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் ரகுராம் ராஜனின் சமீபத்திய நூலான I do what I do இல், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் பொறுப்புகள் குறித்து திட்டவட்டமான வரையரைகளை மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை என குறிப்பிட்டிருப்பார். ரிசர்வ் வங்கி ஆளுநர், அமைச்சகத்தின் செயலாளரிடமிருந்து சம்பளம் வாங்குபவர், நாட்டின் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் ஆலோசனை வழங்குபவர் என்ற அர்த்தத்திலேயே இதுவரை ஆளுநர் பதவியின் செயல்பாடுகள் அமைந்துவந்தன. ஆளுனரின் பொறுப்பு குறித்த மத்திய அரசின் திட்டமிட்ட அரைகுறை விளக்கமானது, ஆளுனரை பிரதமர் அலுவலகத்திற்கு கட்டுப்பட்டவையாக மாற்றுகிறது.

அதீத தேசியவாதிகள் Vs வங்கிகள்,தாராளமய பொருளாதாரவாதிகள்

முதலாளித்துவ வர்க்கத்தின் நிர்வாக அலகாக திகழ்கிற ஆளும் அரசிற்கும் அதே முதலாளித்துவ வர்க்கத்தின் நலனுக்கு சேவை செய்கிற வங்கிக்கும் இடையில் எழுகிற முரண்பாடு நட்புவகைப்பட்ட முரண்பாடென்று கூறலாம். ஏனெனில் வங்கிகளுக்கும் அரசுக்கும் தற்போதைய ஏகாதிபத்திய சகாப்தத்தின் தாராளமய கொள்கை அமலாக்கத்தில் எந்தவிதான முரண்பாடும்  இல்லை என்பது தெளிவு. வங்கிகளும் சரி அரசும் சரி உலகமயமாக்கப்பட்ட நிதி மூலதன சக்திகளின் முதலீடுகளை ஒழுங்கு செய்வதில், உதவுவதில் ஒருமித்த கொள்கை உடையவை.

அதேநேரத்தில் முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதிதுத்துவப்படுத்துகிற கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் போது குறிப்பாக நாட்டின் ஆளும்கட்சியாக தொடர்ந்து நீடிக்க அல்லது கைப்பற்ற சில சமயங்களில் வங்கிகள் அல்லது நிதி மூலதனமுதலீடுகளை ஒழுங்கு செய்கிற தன்னாட்சி  நிறுவனங்களனாது முதலாளித்துவ கட்சிகளால் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.பொருளாதார நெருக்கடி காலங்களில் இது தீவிரமாகிறது. தேர்தல் அரசியல் நலனை கணக்கில் கொண்டு கவர்ச்சிவாத அரசியல் மற்றும் குறுகிய கால நோக்குடன் அரசியல்வாதிகள் வங்கி முடிவுகளில் தலையீடு செய்கின்றன என்கிறது வங்கிகள்.வங்கிகளும் தேச அரசை ஆளும் கட்சியும் முரண்படுகிற முக்கியப் புள்ளி இதுதான்.

வட்டி வீத உயர்வும்/குறைவும் நாட்டின் முதலீடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சியையும் நேரடியாக தாக்கத்தை செலுத்துவதாக ஆளும் கட்சிகள் கருதுகின்றன,வங்கிகளோ நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கவும்,விலை வாசி உயர்வையும்,நாணய மதிப்பையும் கட்டுக்குள் வைக்க வட்டி வீத உயர்வு/குறைப்பு நடவடிக்கையை நீண்ட கால நலனில் பேரில் எடுப்பதாக கூறுகின்றன.

தாராளமய சகாப்தத்தின் அந்திமக் காலத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியை சூழல்பட்டுள்ள நிலையில், குறிப்பாக 2008  ஆம் ஆண்டுக்கு பிந்தைய காலகட்டத்தில் தாராளமயத்தால் பிணைக்கப்பட்டிருந்த தேச அரசுகளும்,ஒருமித்த கருத்து கொண்டிருந்த முதலாளித்துவ கட்சிகளும் தாராளமயத்தை தாகுகின்றன. தாராளமயத்தை பயனடைந்த  அமெரிக்க இன்று அதற்கு எதிராக பன்னாட்டு ஒப்பந்தம்,அமெரிக்கவே முதன்மை என தற்காப்புவாதத்திற்குள் நுழைந்துள்ளது.பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுதியதுள்ள இந்த சூழ்நிலையை கையாள்வதற்கு அதீத தேசியவாதத்தை முதலாளித்துவ கட்சிகள் கையிலெடுத்துள்ளனது.இதில் முதலில் தாக்குதலுக்கு உள்ளாவது நாடுகளின் தன்னாட்சி  அதிகாரமிக்க வங்கிகள்.

பெரும் பொருளாதார நெருக்கடி சூழலில் உலக நிதி மூலதன கொள்கை வகுப்பாளர்கள்,வங்கிகள் தாராளமய பொருளாதாரவாதிகள் ஆகியோர் அதீத தேசியவாதிகள்,மத அடிப்படைவாத பழமைவாத கட்சிகளின் சந்தர்ப்பவாத,பாப்புலிச அரசியல் நிகழ்ச்சி நிரலால் பெரும் தாக்குதலுக்கு ஆளாகிவருவது தற்போதையஉலகளாவிய  போக்காக உள்ளது.அதேநேரத்தில்  நெருக்கடி காலத்தைய சமூக அரசியல் மேலாண்மையை காப்பற்றிக்கொள்வதில் இவ்விரு முகாமும் ஒத்திசைந்து இயங்குகிறது.

“ரிசர்வ் வங்கி தொடர்புடைய ஒவ்வொரு முடிவுகளையும் மத்திய அரசு, அரசியல்வாதிகள் குறுகிய கண்ணோட்டத்தில் டி20 கிரிக்கெட் போட்டி போன்று எடுக்கிறது. ஆனால், நாங்கள் டெஸ்ட் போட்டி முடிவுகள் போன்று நிதானமாக எடுக்கவேண்டியுள்ளது.டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு செசனும் நிலைத்திருப்பது முக்கியம், அப்போதுதான் அடுத்த செசனில் வெற்றி பெற முடியும்” என்ற ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சர்யாவின் கருத்தானது, உலகளாவிய தாராளமய பொருளாதார அறிவுஜீவிகளின் கருத்தை வெளிப்படுத்துகிறது. இந்த அமைப்பை காப்பற்ற நீண்ட கால நோக்கங்களுக்கு ஏற்ப செயல்படவேண்டும் என்பதும் இந்த அமைப்பின் சமூக கொந்தளிப்பை கையாளவும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவும் குறுகிய கால மத அடிப்படைவாத, தற்காப்புவாத, அதீத தேசியவாத முழக்கத்தை முன்னெடுக்க வேண்டுமென்ற முதலாளித்துவ அரசியல் சக்திகளின் நோக்கமும் நேருக்கு நேராக முட்டி நிற்கிறது.

இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில் நிதி மூலதனமானது உலகமயமாக்கபட்டுவிட்டது. வங்கிகளைப் பொறுத்தவரை, உலகின் அனைத்து நிதி மூலதன முதலைகளின்  முதலீடுகள் மற்றும் அதனால் குவிக்கப்படுகிற உபரி லாபத்தை உத்திரவாதப்படுத்த உருவாக்கப்பட்டவை. பன்னாட்டு நிதியகம், உலக வங்கியின் வலைப் பின்னலில் உலக நிதி மூலதன ஊடுருவல்கள் தேச எல்லைகளை கடந்து நிகழ்ந்துவருபவை. நாடுகளின் நாணயக் கொள்கையை உறுதிப்படுத்துவதன் வழியே முதலீடுகளையும் உபரி லாபத்தையும் உறுதிப் படுத்தப்படுகின்றன. சந்தையின் தேவைகளையும் அளிப்பையும் சந்தையின் மாயக் கைகளே  தீர்மானிப்பவையாக முதலாளித்துவ அறிவுஜீவுகள் நம்புகின்றனர் .முதலாளித்துவ பொருளாதார கொள்கைகள் முட்டுச் சந்தை எட்டி விட்டது என்பதையே இந்த நெருக்கடிகள் வெளிப்படுத்துகின்றன. இந்த நெருக்கடி கால கட்டத்தில் முதலாளித்துவ கட்சி பிரதிநிதிகளின் ஒரு பிரிவினர், பழமைவாதிகளின் மத்தியில்  உலக நிதி மூலதன நிறுவனங்கள் அதன் நம்பகத்தன்மையை இழக்கின்றன.  ஒருவருக்கொருவர் பகிரங்கமாக மோதிக் கொள்கிறனர்.

18,19 ஆம் நூற்றாண்டின் போட்டி முதலாளித்துவ சகாப்தம், 20 ஆம் நூற்றாண்டின் நிதி மூலதன கும்பலின் ஏகபோக கட்டமான ஏகாதிபத்திய சகாப்தம் அடுத்து விதிவிலக்கான கீநிசிய தேவை நிர்வாக சகாப்தம் நிறைவுற்ற தற்போதைய 21 ஆம் நூற்றாண்டு கால ஏகாதிபத்திய சகாப்தத்தில் தனக்கான சவக்குழியை தானே விரவைவாக வெட்டி வருகிற முதலாளித்துவ சக்திகளின் வெளிப்பாடுதான் இவர்களுக்கிடையிலான மோதல்கள்.

இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய பொருளாதார நெருக்கடியும் தற்போதைய சூழலும் அடிப்படையான சில பண்புகளில் ஒத்துள்ளதாக ரகுராம் ராஜன் கருதுகிறார். எவ்வாறு அப்போதைய நெருக்கடியில் அதீத தேசியவாத முழக்கத்தினால் பாசிஸ்ட்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்களோ தற்போதும் அது போன்றொதொரு அடிப்படைவாத அரசியல் சக்திகளின் எழுச்சி கட்டத்தில்  நுழைந்துவிட்டோமோ என கவலை கொள்கிறது. அதேநேரத்தில் இரண்டாம் உலகப் போரில் ஏகாதிபத்தியத்தின் பலவீன கண்ணியை உடைத்த மக்கள் சீனப் புரட்சியையும் அவர்கள் கவலையோடு கண்ணுறுகிறார்கள். ஆக பொருளாதார நெருக்கடிகள் பாசிஸ்ட்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் கம்யூனிஸ்ட்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் வலு சேர்ப்பதாக தாராளமய பொருளாதார அறிவுஜீவிகள் அஞ்சுகிறார்கள். தற்போது கடந்த கால கீனிசிய தேவை நிர்வாக கொள்கையின் அடிப்படையிலான மக்கள் நல அரசு உடைந்து ஏகபோக நிதி மூலதனக்காரர்களின் காலகட்டத்தில் ஏற்பட்டு வருகிற மாற்றப் போக்குகள் மக்களை மெதுவாக பற்றி பிடிக்கும்.

தற்போதைய நெருக்கடி நிலையை முதலாளித்துவத்தின் ஏதோ ஒரு முகாமோ, பழமைவாத சக்திகளின் துணையோடு, மிகுந்த பிரச்சார பலத்துடன் கவர்ச்சிவாத முழக்கத்தின் துணையுடன்  அதீத தேசியவாதிகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிவருகின்றனர். இந்த சுற்றில் இவர்கள் மக்கள் செல்வாக்கு பெறுவதற்கு சேம நல அரசு மீதான மக்களின் தோற்ற மயக்கம் களையாத பின்தங்கிய வர்க்க உணர்வு நிலையும் ஒரு  காரணமாக உள்ளது. ஆனால் இது தற்காலிகமானது, தற்போது தாராளமயவாதிகளும் அதீத தேசியவாதத்திற்குமான சண்டையில் மக்கள் பார்வையாளர்களாக உள்ளனர். இந்த இரு முகாமும் மக்களுக்கு பகை சக்திதான். ஆகவே இதன் அடுத்த சுற்றில் மக்கள் பங்கேற்ப்பாளர்களாக மாறுவார்கள்!

  • அருண் நெடுஞ்சழியன்

ஆதாரம்:

https://www.aljazeera.com/news/2018/08/turkey-lira-crisis-180814132601100.html

https://www.investopedia.com/articles/markets/081515/how-inflation-and-unemployment-are-related.asp

https://www.ft.com/content/c987fc2a-a147-11e8-b196-da9d6c239ca8

https://www.businessinsider.in/Trump-just-attacked-the-Fed-again-an-ugly-economic-lesson-from-the-Nixon-administration-shows-why-his-criticism-is-so-worrying/articleshow/65487506.cms

https://thewire.in/economy/modi-govt-has-invoked-never-used-powers-to-direct-rbi-governor-reports

https://thewire.in/economy/rbi-npa-liquidity-bad-loans-board-meeting

https://www.theguardian.com/commentisfree/2016/aug/21/death-of-neoliberalism-crisis-in-western-politics

https://www.thehindu.com/news/national/govt-opposed-rbi-in-court-for-first-time/article24794823.ece

https://www.news18.com/news/business/bankers-race-to-resolve-rs-3-8-trillion-bad-loans-as-rbi-deadline-ends-tomorrow-1857227.html

https://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/rbis-prompt-corrective-action-just-baby-steps-before-weak-banks-leap/articleshow/66439175.cms

https://thewire.in/political-economy/exclusive-rti-confirms-raghuram-rajan-sent-pmo-list-of-npa-defaulters-no-action-taken

https://www.indiatoday.in/business/story/npa-woes-to-continue-for-banks-in-2018-19-rbi-1326388-2018-08-29

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW