ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும்!

25 Oct 2018

“ரஃபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. மாறாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யுங்கள்”, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற பா.ஜ.க கட்சியின் ஊடகப் பயிற்சி முகாமில், மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சரான அருண் ஜெட்லி இவ்வாறு கூறியதாக ஒரு தகவல் வெளியானது.

ரஃபேல் விவகாரம்  குறித்து நாட்டின் எதிர் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் மக்கள் என எவர் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லத் தேவையில்லை என்ற இருமாப்புடனேயே பா.ஜ.க மோடி தலைமையிலான அரசு இருந்து வருகிறது. ரஃபேல் விவகாரம் தொடர்பான பா.ஜ.க தலைவர்களது முன்னுக்குப் பின் முரணான கூற்றுகள், அவர்கள் நம்மிடமிருந்து மறைக்க விரும்பும் உண்மைகள் ஆகியற்றைப் பார்க்கும் முன், ரஃபேல் விவகாரம் பற்றிய விவரங்கள் சிலவற்றை அறிந்து கொள்வோம்.

 

ரஃபேல் ஒப்பந்தத்தின் பின்னணி:

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், சோவியத் சார்பு நாடுகள், அமெரிக்க ஏகாபத்திய சார்பு நாடுகள் என உலகம் இரண்டாகப் பிரிந்து நின்ற பனிப்போர் காலக்கட்டத்தின் துவக்கத்தில்  விடுதலையடைந்த இந்தியா, அணிசேரா நாடுகள் எனும் பிரிவில் இருந்தாலும், சோவியத் யூனியனுடன் இணக்கம் காட்டியே வந்தது.  பாகிஸ்தானுடனான போருக்குப் பின்னர், தனது இராணுவத்தினை பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட, பிரித்தானியர்கள் விட்டுச்சென்ற பழைய தொழில்நுட்பத்தில் இயங்கிய போர் விமானங்களையும், இராணுவத் தளவாடங்களையும் மேம்படுத்திக் கொள்ள, உள்நாட்டிலேயே உற்பத்தியைத் தொடங்கினாலும், புதிய தொழ்ல்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதிலும், வளர்த்தெடுப்பதிலும் இன்று வரை பின் தங்கியே உள்ளது. இந்நிலையில், இராணுவத் தளவாடங்களையும், போர் விமாங்களைய்ம் பெருமளவு அன்றைய சோவியத் யூனியனிடமிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியது இந்திய அரசு. 90களில் நடந்த உலகமயமாக்கலுக்குப் பின் இந்தியப் பொருளாதாரத்தின் கதவுகள் உலகுக்குத் திறந்து விடப்பட்டன.

ராணுவத் தளவாடங்கள் மற்றும் போர் விமானங்கள் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்களை எட்டியிராத, பாகிஸ்தானுடனான ஆயுதப் போட்டி, மற்றும் கார்கில் போர் உள்ளிட்டவைகளால் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே இருக்கும் ஆயுதத் தேவை, சர்வதேச அளவில் இந்தியாவை மிகப் பெரிய சந்தையாக மாற்றியது. கடந்த 2002 ஆம் ஆண்டில், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முதல்முதலாக பாதுகாப்பு சம்மந்தப்பட்ட உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி, நேரடி அன்னிய முதலீடு 26% வரை அனுமதி உள்ளிட்ட கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன.

 

இரசியா, அமெரிக்கா, ப்ரான்ஸ், இஸ்ரேல், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்து மிகப்பெரிய அளவில் இராணுவத் தளவாடங்களையும், போர் விமானங்களையும் வாங்கிக் குவித்த இந்தியா, முதல் முறையாக, கடந்த 2007 ஆம் ஆண்டு, உலகலேயே மிகப் பெரிய ஆயுத இறக்குமதி செய்யும் நாடாக மாறியது. 2009 ஆம் ஆண்டில் மீண்டும் இந்த நிலையை எட்டிய இந்தியா, இன்று வரை உலக அளவில் அதிக ஆயுத உற்பத்தி செய்யும் நாடாகவே தொடர்கிறது. இருப்பினும், இந்தியாவின் ஆயுதங்கள் மற்றும் இராணுவ விமானங்கள் தேவை நிறைவடையவில்லை.

 

இராணுவத் தளவாடங்கள் மற்றும் போர்விமானங்கள் தொடர்பான தொழில்நுட்பங்களில் எந்தவித முன்னேற்றத்தையும் கண்டிராத இந்தியா, தொடர்ச்சியாக அவற்றை பிற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவைவிட அதிக இறக்குமதி செய்யும் நாடாக விளங்கிய சீனா இன்று சொந்தமாக நவீன போர் விமானங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்களையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், இந்திய அரசோ, ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், பாதுகாப்புத் துறைக்கென மிகப் பெரிய தொகையை ஒதுக்கினாலும், அவற்றில் பெரும் தொகை இதுபோன்ற இறக்குமதிகளுக்கே செலவிடப்படுகின்றன. இவ்வாண்டு பிப்ரவரி மாதம், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 4.04 லட்சம் கோடி ரூபாயாகும். ஆனால், அதே பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் தான். பா.ஜ.க ஆட்சியில் மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் இதே போன்ற நிலை தான் நீடித்தது.

 

ரஃபேல் ஒப்பந்தம்:

கடந்த 2007 ஆம் ஆண்டு, இந்திய விமானப் படையில் நிலவிவந்த போர் விமானங்களின் பற்றாக்குறையைப் போக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இந்திய விமானப் படைக்காக 126 போர் விமானங்கள் வாங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்றது. டஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல் மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்தின் டைஃபூன், இரஷ்ய அரசின் எம்.ஐ.ஜி – 35, அமெரிக்க நிறுவனம் லாக்ஹீட் மார்டீனின் எஃப் – 16, ஸ்வீடன் நாட்டு நிறுவனம் சாபின் க்ரிபென், மற்றும் போயீங் நிறுவனத்தின் எஃப்/ஏ – ஐ8 உள்ளிட்ட விமானங்கள் இந்திய அரசு அறிவித்த டெண்டரைப் பெறுவதற்கான போட்டியிலிறங்கின.

கடந்த 2009 ஆம் ஆண்டு, தொழில்நுட்பத் தகுதி அடிப்படையில் நடத்தப்பட்ட முதல் கட்டத் தேர்வில் ரஃபேல் நிறுவனம் வெளியேறியதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும், இந்திய அரசுக்கும் பிரெஞ்சு அரசுக்கும் இடையில் நடைபெற்ற திரைமறைவு பேச்சுவார்த்தைகளின் பயனாய், கடந்த 2011 ஆம் ஆண்டு, இறுதிப் பட்டியலில், ரஃபேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் டைஃபூனும் இடம்பெற்றன. அதே ஆண்டு இறுதியில், இந்திய அரசிடம் ஏற்கெனவே இருந்த 1990களில் டஸால்ட் நிறுவனம் தயாரித்த 52 மிரேஜ் – 2000 ரக விமானங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை இந்திய அரசும், டஸால்ட் நிறுவனமும் ரூ. 11000 கோடிக்கு இறுதி செய்தன. இதன்படி கணக்கிட்டால், ஒவ்வொரு விமானத்தின் மேம்படுத்தலுக்கும் அன்றைய மதிப்பில் 45 மில்லியன் டாலர்கள் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. விமான மேம்படுத்தல் பணிக்கு இது மிகவும் அதிகபட்ச விலையாகும்.

 

கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கத்தில், இந்திய விமானப் படைக்குத் தேவையான 126 போர் விமானங்களை வழங்க டஸால்ட் நிறுவனமே குறைவான விலையை குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்ட மத்திய அரசு, டஸால்ட் நிறுவனத்திடமே போர் விமானங்கள் வாங்கப்படும் என அறிவித்தது.

ரஃபேல் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:

  • காங்கிரஸ் கட்சியின் கூற்றுப்படி 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க 10.2 பில்லியன் டாலர்களுக்கு டஸால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
  • இந்தத் தொகையில் பாதியை டஸால்ட் நிறுவனம் மீண்டும் இந்தியாவிலேயே முதலீடு செய்ய வேண்டும்.
  • உற்பத்தி செய்யப்படவிருக்கும் 126 போர் விமானங்களில் 18 விமானங்கள் நேரடியாக டஸால்ட் நிறுவனம் பிரான்ஸ் நாட்டிலேயே தயாரிக்கும். மீதம் உள்ள 108 விமானங்கள் இந்தியாவில், டஸால்ட் நிறுவனத்தின் மேற்பார்வையில், எச்.ஏ.எல் நிறுவனம் தயாரிக்கும்.
  • ரஃபேல் போர் விமானங்கள் தயாரிப்பில் எச்.ஏ.எல்லுடன் முக்கியமான தொழில்நுட்பங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

 

புதிய ரஃபேல் ஒப்பந்தம்:

பல்வேறு முட்டுக்கட்டைகள் அவ்வப்போது எழுந்த நிலையில், 2014 தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. மோடி அறிவித்த மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய உதாரணமாக இவ்வொப்பந்தம் அமையப் போகிறது என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு தொடக்கத்தில், ரஃபேல் ஒப்பந்தம் போட்டப்பட்டு வெகு காலம் ஆகிவிட்டதால் ரஃபேல் விமானங்களின் விலை பன்மடங்கு அதிகரித்துவிட்டதாக ஒரு செய்தி இந்திய ஊடகங்களில் வெளிவந்தது. இதை மறுத்த டஸால்ட் நிறுவனத்தின் ட்ராப்பியர், “முதல் நாளிலிருந்து எங்கள் விலை ஒன்றுதான்” என மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 2015இல், ப்ரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் “தயார் நிலையில்”  வாங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

புதிய ரஃபேல் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்.

  • இந்தியாவுக்கு டஸால்ட் நிறுவனம் 36 ரஃபேல் போர் விமானங்களை தயார் நிலையில் வழங்கும்.
  • ரஃபேல் விமானங்கள் அனைத்தும் டஸால்ட் நிறுவனத்தால் ப்ரான்ஸிலேயே தயார் செய்யப்பட்டு வழங்கப்படும்.
  • இந்தியா வழங்கும் தொகையில் பாதியளவை டஸால்ட் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்யப்படும்.

 

புதிய ஒப்பந்தத்தில் உள்ள சிக்கல்கள்:

  • 126 ரஃபேல் போர் விமானங்களுக்குப் பதில் 36 போர் விமானங்கள் மட்டுமே வாங்கப்பட உள்ளன.
  • ரஃபேல் ஒப்பந்தத்தின் விலையை “பாதுகாப்பு” காரணங்களுக்காக வெளியிட முடியாது என மத்திய அரசு தொடர்ச்சியாக கூறி வந்தாலும், ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் செய்திகளில் வெளியான தொகை ரூ. 59000 கோடி ஆகும். இது, முந்தைய காங்கிரஸ் அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தைவிட பல மடங்கு அதிகமாகும்.
  • புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரஃபேல் விமானம் தயாரிப்பு தொடர்பான எந்தவொரு முக்கிய தொழில்நுட்ப தகவல்களும் இந்திய அரசுக்கோ, வேறு இந்திய அரசு நிறுவனங்களுக்கோ டஸால்ட் நிறுவனம் பகிரத் தேவையில்லை.

புதிய ஒப்பந்தத்தில், அனைத்து விமானங்களும், டஸால்ட் நிறுவனத்தால் மட்டுமே தயாரிக்கப்படும். ஆனால், பழைய ஒப்பந்தத்தில், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவன்ம் சுமார் 108 விமானங்களை டஸால்ட் நிறுவனத்தின் மேற்பார்வையில் தயாரிக்கும் என ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. இதன் மூலம் முக்கியமான தொழில்நுட்ப விவகாரங்களை இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான  எச்.ஏ.எல் நிறுவனம் டஸால்ட்டிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். இது, இந்தியா உள்நாட்டிலேயே போர் விமானங்கள் தயாரிக்க் வேண்டும் என்ற அதன் நீண்ட நாள் கனவை நோக்கி முன்னேற உதவியிருக்கும். ஆனால், தற்போது அந்த வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.

  • புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், டஸால்ட் நிறுவனம் இவ்வொப்பந்தத்தின் மூலம் பெறும் வருவாயில், பாதியளவு, அதாவது, சுமார் ரூ. 30000 கோடியை மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்ய, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமும், பாதுகாப்பு தொடர்பான உற்பத்தியில் நீண்ட அனுபவமும் கொண்ட எச்.ஏ.எல் நிறுவனத்துக்கு பதிலாக, இத்துறையில் எந்த அனுபவமும் இல்லாத, மோடியின் 2015 ப்ரான்ஸ் பயணித்திற்கு வெறும் 13 நாட்கள் முன்னர் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிட்டட் நிறுவனத்துடன் கூட்டாக உதிரி பாகங்கள் தயாரிக்க உள்ளதாக அறிவித்தது.

 

மோடியின் தலையீடு:

இவ்வொப்பந்தம் பற்றி பிரதமர் மோடி ப்ரான்ஸில் அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின் பேட்டி அளித்த அப்போதைய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், தனக்கு ஒப்பந்தத்தின் சரத்துகள் பற்றி தெரியாது எனத் தெரிவித்தார். அதிலிருந்து சில மாதங்களுக்குப் பின் பாராளுமன்றத்தில் பேசிய பரிக்கர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு போட்ட முந்தைய ஒப்பந்தம் இனி செல்லாது என அறிவித்தார். மோடியின் அறிவிப்பு வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடியின் வெளிநாடுகளுக்கான செயலாளர் ஜெய்சங்கர், ரஃபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாக,  டஸால்ட், இந்திய அரசின் பாதுகாப்புத் துறை மற்றும் எச்.ஏ.எல் நிறுவனங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.

பணமதிப்பிழப்பு நடவிடிக்கையைப் போலவே யாருக்கும் தெர்விக்காமல், முழு ரகசியத்துடன் மோடியின் நேரடி மேற்பார்வையில் இவ்வொப்பந்தம் கையெழுத்தானது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகிறது. தனது பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் தெரியாமல், தனது செயலாளருக்கும் தெரியாமல், மோடி இவ்வளவு ரகசியமாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டிய தேவை என்ன என்பதை இங்கு நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் அடையும் பலன்கள்:

காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தின்படி இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம் அதிக பலனடைந்திருக்கும் என்ற போதிலும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் அவ்வொப்பந்தத்தின் மூலம் பலனடைந்திருக்கும். ஏனெனில், ஏற்கெனவே, டஸால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்திக்கான தனியார் பங்குதாரராக ஏற்கெனவே முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ரூ. 1 லட்சம் கோடி ரூபாய் வரை டஸால்ட் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய முடிவு செய்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், சிறிது ஆண்டுகள் கழித்து பாதுகாப்புத் துறை மற்றும் ஏரோஸ்பேஸ் துறையிலிருந்து விலகுவதென முகஷ் அம்பானியின் குழுமம் முடிவு செய்ததால் இவை எதுவும் நடக்கவில்லை.

 

2014 ஆம் ஆண்டோடு, முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்கும் டஸால்ட் நிறுவனத்துக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியானது. இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு, மோடியின் தலையீட்டில், அனில் அம்பானியின் நிறுவனத்துக்கும் டஸால்ட் நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

 

கடந்த அக்டோபர் 3, அன்று வெளியான செய்திக் குறிப்பு ஒன்றில் ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனம் தமக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையான ரூ. 550 கோடியைத் தர வேண்டிய காலக்கெடு முடிவடைந்தும் தராததால், அந்நிறுவனத்தின் தலைவர் அனில் திருபாய் அம்பானி, இந்தியாவை விட்டு வெளியே செல்ல தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கடன்களில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் அனில் அம்பானிக்கு கை கொடுக்கும் முயற்சியாகவே இப்புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மோடியின் அறிவிப்பு 2015இல் வெளியான 10 நாட்கள் கழித்து, டஸால்ட் நிறுவனமும், புதிதாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிட்டட் நிறுவனமும் இணைந்து டஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்தை தொடங்குவதாக அறிவித்தனர். பா.ஜ.க ஆட்சி செய்யும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் நேர்காணல் ஒன்றில் பேசிய முன்னாள் ப்ரெஞ்சு அதிபர் ஹோலண்டே, ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசே முன்மொழிந்ததாகவும், தனது அரசாங்கத்துக்கு இது குறித்துப் பேச எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைவது, இவ்வொப்பந்தத்துக்கு கட்டாயம் என டஸால்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்குள் நடந்த சந்திப்பில் தெரிவித்ததாக, ப்ரெஞ்சு இதழான மீடியா போர்ட் இதழ் தெரிவித்துள்ளது.

ஆக, ரிலையன்ஸுடன் இணைந்து செயல்பட டஸால்ட் நிறுவனம் இந்திய அரசு தரப்பிலிருந்து, அதாவது மோடி தரப்பிலிருந்து கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பானது.

ரஃபேல் ஊழல்:

சூறையாடும் முதலாளித்துவத்தின் உச்சம் இது என எதிர்க் கட்சிகள் உள்பட பலரும் குற்றம் சாட்டிய பிறகும், முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துவரும் பா.ஜ.க தலைவர்கள், ரஃபேல் ஒப்பந்தத்தின் விலை குறித்து பேசுவது தேசியப் பாதுகாப்புக்கு எதிரானது எனக் கூறினர். உச்சபட்சமாக, ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கக் கோருவதன் மூலம் ராகுல் காந்தி, பாகிஸ்தான், சீனாவுடன் கூட்டு சேர்ந்துவிட்டார் என குற்றம் சாட்டினர். இந்நிலையில், தனது 2017 ஆண்டறிக்கையில், ரஃபேல் நிறுவனமே, இவ்வொப்பந்தம் குறித்த தகவலை வெளியிட்டு, மத்திய அரசுக்கு இக்கட்டை ஏற்படுத்தியது. ரஃபேல் நிறுவனத்தின்படி, இவ்வொப்பந்த்தின் விலை ரூ. 55000 கோடி ஆகும்.

மோடி அரசு முந்தைய காங்கிரஸ் அரசை விட அதிக விலைக்கு ரஃபேல் விமானங்களை வாங்குவது இதன் மூலம் உறுதி ஆகியுள்ள நிலையில், புதிய ரஃபேல் ஒப்பந்தத்தின்படி வரவுள்ள போர் விமானங்களில் புதிதாக பல மேம்பட்ட அம்சங்கள் இருப்பதாக அறிவித்தது மத்திய அரசு. அப்படி என்ன புதிய அம்சம் என்ற கேள்விக்கு, மீண்டும் “பாதுகாப்பு” என்ற ஒற்றை காரணத்தைக் கூறி பதில் தெரிவிக்க மறுத்து வருகிறது. ஒருவேளை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒட்டி அச்சடிக்கப்பட்ட புதிய 2000 நோட்டுகளில் ஜி.பி.எஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது என்பன போன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, பின்னர் அதனாலேயே கேலிக்குள்ளான நிலையை அவர்கள் ஞாபகம் வைத்திருக்கக்கூடும்.

 

நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்தரும் கல்வி உள்ளிட்ட சேவைகளுக்கான பட்ஜெட்டைவிட, பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை மிக அதிகமாக ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக் கொண்டே செல்லும் மிகத்தவறான பொருளாதாரக் கொள்கை உடையது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு.

மோடியின் மேற்பார்வையில் நடந்த, இந்திய அரசுக்கோ, எச்.ஏ.எல் நிறுவனத்துக்கோ எந்த நன்மையும் பெற்றுத் தராத, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், டஸால்ட் நிறுவனத்துக்கும் மட்டுமே பலன்களை அள்ளி வழனங்கும் இவ்வொப்பந்தத்தை “ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி குரலெழுப்புவோம்.

 

  • பாலாஜி திருவடி

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW