தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!

03 Oct 2018

* தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!

* தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!
————————

“ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ரத்து செய்து விட்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டியக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக, ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, ஆலையின் வாயிலில் சீல் வைத்து ஆலையை நிரந்தரமாக மூடியது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுப் பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில், குழு ஒன்றை அமைத்தது. இக்குழு, கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி ஆலையில் ஆய்வு நடத்தியது. அன்று கருத்து கேட்பு கூட்டத்தில், பொது மக்களிடம் மனுக்களையும் பெற்றது. இந்த மாதம், வரும் 5 ,6-ஆம் தேதிகளில் சென்னையில், மக்களிடம் கருத்து கேட்பதாகத் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டியக்கத்தினர் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பி.மி.தமிழ்மாந்தன், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆய்வுக்குழுவில் இடம்பெறக்கூடாது எனக் கூறிய வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட, பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. ஸ்டெர்லைட் ஆலையை, 2 மணி நேரத்தில் ஆய்வு செய்த இந்தக் குழு, பொது மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதற்கான சட்ட விதிகளுக்குப் புறம்பாக, தனது நோக்கத்திலிருந்து விலகி, ஆலை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 600 கி.மீ தள்ளியுள்ள சென்னையில் மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்த உள்ளது. இதை ஆலைக்கு சாதகமான செயலாகவே பார்க்க முடியும்.

அதேபோல, ஆலையால் பாதிக்கப்பட்டுள்ள காற்று, நிலத்தடி நீர், கடல்வளம், உப்பள பாதிப்பு பற்றியும்,பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பற்றியும் எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், மக்களிடம் மனுக்கள் பெற்று, அவர்களை ஏமாற்றி திசைதிருப்பும் வேலையைப் பார்க்கிறது.

இந்த மனுக்களைக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது எனத் தெரிந்தும் மக்களைத் தவறாக வழி நடத்துகிறது.

எனவே, பசுமை தீர்ப்பாயம், இந்த ஆய்வுக் குழுவை ரத்து செய்துவிட்டு, தூத்துக்குடி வட்டார மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!

ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்கு அளித்த அனுமதியை ரத்து செய்து விட்டு, வேதாந்தா நிறுவனத்தின் பணியாளர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்!

தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் அரசாணை ஏற்புடையது அல்ல!
” ஆலை விவகாரத்தில் அரசு தன்னுடைய இரட்டை வேடத்தைக் கைவிட்டு விட்டு, ஆலையை நிரந்தரமாக மூட, தமிழக மாசு கட்டுப்பாட்டுத் துறையால் ‘மிக ஆபத்து மிகுந்த அடர்சிவப்புத் தொழிற்சாலை’ என்ற வரையறைக்குள் கொண்டு வரப்பட்ட தாமிர உருக்காலையைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்ற கொள்கை முடிவு எடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் அதற்கான சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!”

பி.மி.தமிழ்மாந்தன்,
ஒருங்கிணைப்பாளர்,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், தூத்துக்குடி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW