தண்ணீர் தனியார்மயம் – கோவையிலும் சூயஸ்

25 Sep 2018

கோவை மாநகர குடிநீர் விநியோக கட்டமைப்பை சூயெஸ் என்ற பிரெஞ்சு நிறுவனத்திற்கு தமிழக அரசு தாரை வார்த்துள்ள செய்தியானது அந்நிறுவனத்தின் இணையத்தில் பெருமையாக வெளியிடப்படுள்ளது.ஓராண்டு கால திட்ட ஆய்வு,நான்காண்டுகால திட்ட நடைமுறையாக்கம் அதன் பிறகான 22 ஆண்டு பராமரிப்பு என 27 ஆண்டிற்கு சூயெஸ் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டில்  டில்லி நகர குடிநீர் விநியோக திட்டத்தை வென்ற இந்நிறுவனம் படிப்படியாக பெங்களூரு,கொல்கத்தாவில் கிளை பரப்பி தற்போது தமிழகத்தின் கோவை மாநகர  நீர் விநியோக சேவையை(சந்தையை!) கைப்பற்றியுள்ளது.சுமார் மூவாயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டமே,இந்தியாவில் சூயெஸ் நிறுவனம் வென்ற மிகப்பெரிய திட்டமென அந்நிறுவன இணைய செய்தி அறிவிக்கிறது.

கோவை மாநகர சுற்றுவட்டாரத்தின்  100  கிமீ பரப்பளவில் உள்ள சுமார் 1500  கிமீ குடிநீர் குழாய்கள், குடிநீர் தொட்டிகள், நீராதாரங்கள்,தானியாங்கி குடிநீர் மீட்டர்கள்,வால்வுகள்,1,50,000 குடிநீர் இணைப்பின் அனைத்து விநியோக சேவைகளும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிறுவன (சேவையில்!)கட்டுப்பாட்டில் வருகின்றது.இத்திட்ட அறிவிப்பு வெளியான சில நாட்களில், திட்டம் குறித்த குழப்பங்கள் வெளிப்படவே,மாநகர குடிநீர் சேவையை மட்டுமே இந்நிறுவனம் வழங்கும் மற்றபடி,மாநகராட்சியே வழக்கம்போல குடிநீர் கட்டணத்தை  நிர்ணயக்கும் என  மாநகராட்சி  விளக்கமளித்துள்ளது.தற்போது கோவை மாநகரத்தில் திட்ட ஆய்வுப்பணிகளை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வருவதற்கு,நகர குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்குவதே சரியென்ற வாதமும் முன்வைக்கப்படுகிற சூழலில், பொதுத்துறை அமைப்பைப் பலப்படுத்தாமல் தனியார் சேவையே சிறந்த சேவை என நம்பவைக்க முயற்சிப்பது அரசின் தோல்வியையும் அதன் வர்க்க சார்பு கொள்கைகளையே வெளிப்படுத்துகிறது.

1

உலகமயம்,தாராளமயம்,தனியார்மய யுகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக நலன்களின் அடிப்படையில் அரசின் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன.சுயநலம்,பேராசையின் அடிப்படையிலான பணப்பட்டுவாடா உறவாக இன்றைய சமூக உறவை மாற்றியுள்ள முதலாளித்துவ வர்க்கமானது,வீரம், மானம்,அன்பு என அனைத்தையும் தனது மூலதனத்திற்கு அடிபணிய வைத்தது போல தண்ணீரையும் பண்டமாக தனக்கு கீழாக்கியது.

இயற்கையான உற்பத்தி சாதனமான தண்ணீரைப் பண்டமாக மாற்றுவதற்கு அதற்கொரு பொருளாதார மதிப்பு உருவாக்கப்பட்டது(நிலத்திற்கு உருவாக்கப்பட்டது போல)குழாய் நீர் பாதுகாப்பற்றது.தனியாரால் சுத்திகரிக்கப்பட்ட நீர் மிகவும் பாதுகாப்பானது என மில்லியன் டாலர்களில் விளம்பரம் செய்யப்பட்டது.அரசின் குடிநீர் விநியோக முறை மீது பெரும் தாக்குதல் தொடுக்காமல் குடிநீர் சந்தையை கார்ப்பரேட் நிறுவனங்களால் கைப்பற்ற முடியாத சூழலில் அதை வெற்றிகரமாக செய்து காட்டியது.

’தவிச்ச வாய்க்கு தண்ணீர் தராதவன்’ என்பதை வசைச்சொல்லாக பயன்படுத்திய  சமூகமானது, இன்றைக்கு பத்து ருபாய் அம்மா குடிநீர்,முப்பது ரூபாய் கேன் குடிநீருக்கு தன்னை தகவமைத்துக் கொண்டது!

பாதுகாப்பான குடிநீரை இலவசமாக வழங்குவது அரசின் கடமையே தவிர அரசே குடிநீருக்கு விலை வைக்கக் கூடாது என்ற எதிர்ப்புணர்வு எழவில்லை! அரசு முன்வந்து குடிநீருக்கு விலை வைத்து விற்பதை முன் உதாரணமாக செய்த பின்னர்,கார்ப்பரேட் நிறுவனங்களின் குடிநீர் சந்தைக்கு வேறு நியாயப்பாடு ஏதும் தேவையில்லை என்றாகியது. புட்டி நீர், கேன் நீர் விநியோகம் போக அதன் பார்வை நகர குடிநீர் விநியோக சேவை மீது விழுந்தது.

போக்குவரத்து,மின்சாரம் போல குடிநீர் விநியோகமும் இந்தியாவின் பொதுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை ஒரே மூச்சில் உடனடியாக நிறைவேறவில்லை.அதுவும் உலகின் சிறந்த பொதுத்துறை குடிநீர் விநியோக அமைப்பில் இரண்டாம் இடம் பெற்றுள்ள தமிழகத்தில் குடிநீர் விநியோக கட்டமைப்பை  தனியார் முதலீடுகளுக்கு திறந்துவிடுவதற்கு ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சற்று காலம் எடுத்தது என்றே கூறலாம்.இதில் விதிவிலக்காக திருப்பூர் சாயப்பட்டறை  ஆலை முதலாளிகளின் தண்ணீர் தேவைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்தில் திருப்பூர் நகர குடிநீர் விநியோக ஒப்பந்தம் பெக்டல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவால் 2011 ஆம் ஆண்டில் சாயப்பட்டறைகள் மூடப்பட்டதன்  காரணமாக நீர்த்தேவை குறைய,நிறுவன இழப்பை ஜெயா அரசே ஏற்றுக் கொண்டது தனிக்கதை!

2

மதப்பிரம்மை போல அரசு மீதான சட்டப் பிரம்மைகள் கொண்ட இந்திய சிவில் சமூத்திற்கு(முதலாளித்துவ வர்க்கம் அல்லாத பிற அனைத்துவர்க்கங்கள்) அரசுக்கும் கார்ப்பரேட் முதலாளித்துவ வர்க்கதிற்குமான திருமண பந்த உறவு முறையை எதார்த்தத்தில் புரிந்து கொள்வதற்கு சற்று காலம் எடுக்கின்றதென்றே கூறலாம்.அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் கருவி என்பதும்,இன்றைய ஆளும் வர்க்கமாக முதலாளித்துவ வர்க்கம் உள்ளதும் தங்களின் அனுபவவாத மெய்நடப்பின் வழியேதான் மக்கள் உணர்ந்துகொள்கின்றனர்.அதற்கு அவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியுள்ளது.(குறிப்பாக ஸ்டெர்லைட் எனும் தனியார் ஆலை நிறுவனத்தை காப்பதற்காக அரசின் போலீஸ் படையானது. நிராயுத பாணி மக்களின் மீது ஏவிய காட்டுமிராண்டித்தன தாக்குதலும் உயிர்ப்பலியும்  அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியது அல்ல.அரசு மீதான கண்மூடித்தன மூட நம்பிக்கைகளை ஒழிப்பதில் அப்போராட்டமே பாய்ச்சலை நிகழ்த்தியது.)

இந்த சூழலில்தான் பொதுத்துறை கட்டுப்பாட்டில் இருந்துவந்த  கோவை நகர குடிநீர் விநியோக கட்டமைப்பு சூயெஸ் எனும் பன்னாட்டு முதலாளித்துவ சக்திகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது.இருபத்தி நான்கு மணி நேரமும் சுத்தமான குடிநீர் சேவை வழங்குவது என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என கூறினாலும் எதிர்காலத்தில் தண்ணீர் கட்டணத்தை இந்நிறுவனமே நிர்ணயப்பது,விநியோகத்தை துண்டிப்பது,தண்டம் வசூலிப்பது மற்றும் நகர குடிநீர் ஆதராங்களின் முழுவதும் தனது சொந்த கட்டுபாட்டில் எந்த கண்காணிப்பும் அற்ற வகையில் எடுத்துக்கொள்வது போன்ற ஆபத்துக்களை மக்கள் உடனடியாக உணரவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

தனியார்மய சகாப்தத்தில், “மக்கள் நல அரசு” என்பது கற்பனையில் மட்டுமே நீடிக்க முடியுமே தவிர எதார்த்தத்தில் நீடிக்க முடியாது.ஆகவே தான் இதுகாறும் வறுமையை ஒழிப்போம் எனக் கூறிவந்த முதலாளித்துவ கட்சிகள் தற்போதெல்லாம் நாட்டின் வளர்ச்சியே தேர்தல் கோஷமாக முன்வைக்கிறது.பெரும் சாலைகள்,கட்டுமானங்கள் என பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிலான முதலாளித்துவ வர்க்கத்தின் முதலீட்டுத் திட்டங்களே நாட்டின் வளர்ச்சித் திட்டங்களாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.பெரும் கார்பரேட் நிறுவனங்கள் இக்கட்சிகளுக்கு பல்லாயிரம் கோடி ருபாய் செலவு செய்கிறது.இதற்கு மறுதலையாக ஆட்சிக்கு வருகிற கட்சிகள் தாராளமான வங்கிக் கடன்களையும் சலுகைகளையும் வழங்குகின்றன.

3

ஆட்சியிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பிரதிநிதியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற அஇஅதிமுக அரசானது, கோவை நகர நீர் விநியோகத்தை தனியார்மய போக்கில் இருந்து தடுப்பதற்கு வாய்ப்பில்லை என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.பன்னாட்டு நிதி மூலதனக்காரர்களின் நலன்களின் பேரில் டில்லி கொள்கை முடிவை மேற்கொள்கிறது.டில்லியின் முடிவுக்கு  தமிழக அரசு சாமரம் வீசுகிறது!இந்த நிலையில்,இத்திட்டம் தொடர்பாக சூயஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இணையதள பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி,தமிழக எதிர்க்கட்சி தலைவர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.இந்நிறுவனமானது பொலிவியாவில் மேற்கொண்ட அராஜக கட்டண வசூலும்,அதன் காரணமாக அங்கு எழுந்த போராட்டங்களையும் சுட்டிக் காட்டி,கோவை மாநகர குடிநீர் விநியோகத்தை தனியார்வசம் ஒப்படைப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்த செயல்பாடு பாராட்டத்தக்கது போல  வெளித்தோற்றத்திற்கு தெரிந்தாலும்,உள்ளடக்கத்தில் திமுகவிற்கு சூழலியல் குறித்த எந்தவொரு கொள்கை நிலைப்பாடும் இல்லை என்பதே உண்மை! அன்றைய காலசூழலில்  வெகுமக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பது,எதிர்ப்பை அறுவடை செய்வது என்ற சந்தர்ப்பவாத நிலைப்பாட்டின் வழியேதான் திமுக நிலைப்பாடு எடுக்கிறது.இதற்கு பெரும் உதாரணம் டெல்டாவின் மீத்தேன் திட்டம். முன்னதாக மீத்தேன் திட்டத்தை ஆடம்பர சாதனையாக அறிவித்த திமுக, பின்னர் மக்களிடம் எழுந்த எதிர்ப்பின் காரணமாக தனது நிலைப்பாட்டையே தலைகீழாக மாற்றிக் கொண்டது.மீண்டும் அறிக்கைக்கு வருவோம்.

’குடிநீர் விநியோகத்தை பன்னாட்டு கார்ப்ரேட்டிற்கு வழங்குவதா?’ என்கிற எதிர்க்கட்சி தலைவர், திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட கடல் நீரை குடிநீராக மாற்றுகிற  திட்டத்தையே மாற்றாக முன்வைக்கிறார்.உள்நாட்டு நீராதாரங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு முறையாக பராமரிப்பது,நிலத்தடி நீர்வள சூறையாடலை தடுப்பது,பொது நீர் சேவையை மேலும் நவீனப்படுத்துவது போன்ற அம்சங்களில் மாற்றை மேற்கொள்ளாமல், பன்னாட்டு நிறுவன முதலீடுகளுக்கு வாய்ப்பாக கடல் நீரை குடிநீராக மாற்றுகிற திட்டத்தைப் பெரும் பொருட்செலவில் திமுக அரசு முன்னெடுத்தது. போலவே ஏகாதிபத்திய நிதி மூலதன முதலீடுகள் குறித்த திமுகவின் கொள்கையும் அதிமுகவின் கொள்கையும் ஒருமித்த கண்ணோட்டத்தின் பாற்பட்டவை. மைய அரசின் ஏகாதிபத்திய முதலீட்டு நலன் சார்ந்த திட்டங்களை மாநில அளவில் இக்கட்சிகள் மேற்கொண்டன. பன்னாட்டு நிறுவனங்கள்,சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்குச் சலுகைகளைப் போட்டிபோட்டுக் கொண்டு வழங்கின.

4

கடந்த கால படிப்பினைகள்

அரசின் பொதுத்துறை குடிநீர் விநியோக அமைப்பைப் பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்த்தால் ஏற்படுகிற பின்விளைவுகளுக்கு  இன்றுவரை பொலிவியா எடுத்துக்காட்டாக உள்ளது.ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்றியமையா வாழ்வாதாரத் தேவையான தண்ணீரை  சேவையாக கருதுகிற பொதுத்துறை கண்ணோட்டத்திலிருந்து தனியார்மயத்தின் கீழ் சந்தையாக மாற்றுவதென்பது அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிரானது. அது மக்கள் நலன்களுக்கு நேர் எதிரானது.1980 களில் பொலிவியாவில் தாராளமயம், தனியார்மயம், உலகமயப் பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்டது.பொலிவியாவின் சமூக சிக்கல்களுக்கு ஏற்றத் தாழ்வுகளுக்கு சரியான திட்டங்கள் இல்லை என ஆளும்வர்க்க கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு,பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளபட்டன. பன்னாட்டு நிதியகம்,உலக வங்கியின் கடன்களைப் பெற்ற பொலிவிய அரசு, அதற்கு மறுதலையாக நாட்டின் வளங்களை,பொதுத்துறை நிறுவனங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டது. உலக வங்கிக் கடன்களின் இலக்கும் அதுதான்.

இப்படியாக பன்னாட்டு மூலதனக்காரர்கள் தலைமுடி முதல் நகக் கால்வரை இரத்தம் சொட்ட சொட்ட பொலிவியாவில் இறங்கினார்கள். முன்னணி தண்ணீர் கொள்ளையர்களான பெக்டலும் சூயெசும் பொலிவியாவில் குடிநீர் விநியோக அமைப்பை கைப்பற்றினார்கள்.பொலிவியத் தலைநகரம் லாபாசின் எல் அல்ட்டோ பகுதியின் குடிநீர் விநியோகம் முழுவதும் சூயெசிற்கு கையளிக்கப்பட்டது. சேவைக்கும் சந்தைக்குமான முரண்பாடு உடனடியாக வெடித்தது..சூயெஸ் நிறுவனம், எல் அல்டோவில்  தண்ணீர் கட்டணத்தைத் திடுமென 30 விழுக்காட்டிற்கு உயர்த்தியது. நகர குடிநீர்க் குழாய்கள்,கிணறுகள் அனைத்திற்கும் பூட்டுப் போட்டது. புறநகரங்களில் முறையான குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை என பல்வேறு புகார்கள் எழுந்தன. சுயநல மூலதன முதலீடுகளுக்கும் சாமானிய உழைக்கும் மக்களுக்குமான போர் மூண்டது. சூயெஸ் நிறுவனத்தின் கோர சுரண்டலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்தனர். சூயெஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை உடனடியாக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் வெடித்த இப்போராட்டம் 2005 இல் தீவிரம் பெற்றது. இப்போராட்டம் “நுகர்வோர் கிளர்ச்சி” என்றே பெயர் பெற்றது. போலவே பெக்டல் நிறுவனத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் கொச்சபம்பாவில் நடைபெற்றது.நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த அரசு இறுதியில் ஒப்பந்தங்களை ரத்து செய்தது. அதேநேரத்தில் நிறுவனங்கள் நஷ்ட ஈட்டையும் பெற்றுக் கொண்டன!

இது ஏதோ பொலிவியாவில் நடைபெற்ற கதை என நம்மை ஆசுவாசப்படுத்துக் கொள்ளத் தேவையில்லை.ஏனெனில் இந்தியாவில் பல நகரங்களில் பல்வேறு பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் வேகமாக “தண்ணீர் சந்தையில்” கால் பதித்து வருகின்றன.பல்வேறு நகரங்களில் “மாதிரித் திட்டங்கள்” செயலாக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.ஸ்மார்ட் திட்டங்கள் அனைத்தும் இவர்களுக்கான சந்தையை ஊக்குவிக்கிறது. சூயெஸ்,வியோல்லா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் டாட்டா,ரேடியஸ்,ஆரெஞ் போன்ற உள்நாட்டு முதலாளிகள் தண்ணீர் சந்தையைப் பிடிப்பதற்கு பல்வேறு கையில் அரசியல் லாபிக்களை மேற்கொண்டு வருகின்றன.

வியோல்லா:

கடந்த 2007 ஆம் ஆண்டில் நாக்பூர் மாநகராட்சியானது,  மாதிரி தனியார் விநியோக திட்டத்திற்கான வெள்ளோட்டமாக வியோல்லா என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு தரம்பேத் என்ற பகுதிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டில் நாக்பூர் நகர முழுமைக்குமான  குடிநீர் விநியோக உரிமையை 25  ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.24 மணி நேரமும் பாதுகாப்பான குடிநீர் சேவை வழங்கப்படும் என்ற தளுக்கு பேச்சோடு அரசால் தனியார்மயப்படுத்தப்பட்ட நாக்பூர் குடிநீர் விநியோகத்தின் கட்டமைப்புத் தோல்வி  வெகுவிரைவில் அம்பலமாகியது. இலஞ்சப் புகார்கள்,நான்கு மடங்கு கட்டண உயர்வு, பராமரிப்பு குறைபாடு, அதிகரிக்கிற செலவு என ஏகப்பட்டப் புகார்கள் இந்நிறுவனங்கள் மீது குவிந்தன. நிறுவன ஒப்பந்தத்தை விலக்க வேண்டும் எனக் கோரிக்கை பலமாக எழுந்தன. இந்நிறுவனத்திற்கு மாநகர குடிநீர்விநியோக உரிமை வழங்கிய பின்னர், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு சுமார் 180 கோடி ருபாய் நட்டம் ஏற்பட்டதாக நாக்பூர் மாநகராட்சி ஊழியர் சங்கம் குற்றம்சாட்டுகிறது. நாக்பூர் நகர சிவில் சமூக அமைப்புகளும் நாக்பூர் மாநகராட்சி ஊழியர்களும் இணைந்து வியோல்லாவிற்கு எதிராகப் போரட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

டாட்டா:

ஜெம்செத் டாட்டா நிறுவனமானது 1941 ஆம் ஆண்டிலிருந்து  இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தி துறையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டில் டாட்டா, ஜஸ்கோ என்ற துணை நிறுவனத்தை நிறுவியது. இந்திய நகரங்களின் குடிநீர் விநியோக சந்தையைக் கைப்பற்றுகிற முனைப்பில் நிறுவப்பட்ட ஜஸ்கோ கடந்த இருபது ஆண்டுகளில் மைசூர்,குவாலியர்,போபால்,கொல்கத்தா போன்ற நகரங்களின் குடிநீர் விநியோக ஒப்பந்தங்களைப் பெற்றது. வழக்கம் போலவே24  மணி நேரமும் குடிநீர் சேவை வழங்குகிற உத்திரவாதத்துடன் ஒப்பந்தம் பெற்ற இந்நிறுவனம் நடைமுறையில் இது எதையுமே நிறைவேற்றவில்லை.இதன் உச்சபட்சமாக கடந்த 2013 ஆம் ஆண்டில் மைசூர் மாநகராட்சி ஜஸ்கோவிற்கு  ஏழு கோடி ருபாய் தண்டம் விதித்தது.

ரேடியஸ்:

இந்தியாவில் தண்ணீர் தனியார்மய முயற்சியின் பாய்ச்சலாக நதியை தனியார்மயப்படுதிய நிகழ்வை இங்கே குறிப்பிடலாம்.சுமார் 17 வருடங்களுக்கு முன்பாக நதிநீர் தனியார்மயத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்திய நிகழ்வுதான் அது.இன்றைய சத்தீஸ்கார் மாநிலத்தின் சியோனாத் நதியின் 23 கிமீ நீளத்தை ரேடியஸ் என்ற நிறுவனத்திற்கு  தாரை வார்த்தது. போராய் என்ற தொழிற்சாலை பகுதிகளுக்கு தடையற்ற நீர் வழங்குவதற்காக நாளொன்று சுமார் 30  மில்லியன் லிட்டர் எடுப்பதற்கு ஒட்டுமொத்தமாக நதியே குத்தைக்கு வழங்கப்பட்டது. நிறுவனமோ அதன் கட்டுப்பாட்டில் வழங்கப்பட்ட ஆற்றுப்படுகை முழுவதிலும் மக்கள் பயன்பாட்டைத் தடை செய்தது.விவாசாயப் பயன்பாடு,துணி துவைப்பது என பிற அனைத்து மக்கள் பயன்பாட்டையும் தடுக்கும் விதமாக கம்பிவேலி அமைத்து  தனது கட்டுப்பாட்டில் நதியைக் கைப்பற்றியது.

போராயில் இரு சிறிய தொழிற்சாலை மற்றும் ஒரு பெரிய தொழிற்சாலைக்கு சேர்த்து மொத்தமாக நாளொன்றுக்கு  2.5  மில்லியன் லிட்டர்(Million liter per day) தண்ணீர்  மட்டுமே தேவையாக இருந்தபோது,கட்டாயமாக நாளொன்றுக்கு 4 மில்லியன் லிட்டர் (4 MLD) வாங்க ரேடியஸ் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. மேலும் நிறுவனத்திடம் இருந்து ரூ 15/கியூபிக் மீட்டர்  வாங்குகிற அரசு,தொழிற்சாலைக்கோ ரூ 12/கியூபிக் மீட்டர்  வழங்குகிறது.ஆக,லிட்டருக்கு 20% விழுக்காட்டு நட்டத்தை அரசு ஏற்றுகொண்டது. நிறுவனமோ இலாபத்தை விழுங்கியது.

பெக்டல்:

அந்நிய மூலதன முதலீடுகளைக் குவிப்பதில்  மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் கழக ஆட்சியின் கீழ் தமிழகம் முன்னிலை பெற்றது என்றே கூறலாம்.சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்,கடல் நீரை குடிநீராக்குகிற திட்டம் என பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடுகள் தமிழகத்தில் ஊடுருவின.அதில் தண்ணீர் விநியோகமும் விதிவிலக்கல்ல.திருப்பூர் நகர சாயப் பட்டறை நீர்த் தேவைகள் மற்றும் நகர நீர்த் தேவையை நிறைவு செய்ய, பெக்டல் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு அன்றைய ஜெயா அரசு உரிமை வழங்கியது.இதற்காகவே புதிய திருப்பூர் நகர வளர்ச்சிக் கழகத்தை அரசு அமைத்தது. இத்திட்டத்திற்கான நிதி உதவிகளை வழக்கம்போல உலக வங்கி வழங்கியது. இத்திட்டமானது “பூட்” ஒப்பந்தத்தின் பேரில் பெக்டலுக்கு வழங்கப்பட்டது. திருப்பூரில் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளுக்கும் ஒன்றரை இலட்சம்  மக்களுக்குமான நீர் விநியோகத்தை நாளொன்றுக்கு 18.5 கோடி லிட்டர் என்ற அளவில் வழங்க உத்திரவாதம் வழங்கப்பட்டது. இதற்காக பவானி ஆற்றிலிருந்து 55 கி.மீ தொலைவிற்கு பெரும் குழாய்கள் அமைத்து ஆற்று நீர் உறிஞ்சப்படுகிறது. பவானியில் நீர் தட்டுப்பாடு நிலவியபோதும் நீர் உறிஞ்சி எடுப்பதை நிறுவனம் நிறுத்தவில்லை. மேலும் இத்திட்ட ஆவணங்களின்படி இத்திட்டத்திற்கான பராமரிப்பு செலவு முழுவதையும் திருப்பூர் மாநகராட்சியே ஏற்கும். இந்த நிலையில் உலகளவில் 2008 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் நீதிமன்ற நெருக்கடியும் ஒன்று சேர .திருப்பூர் சாயப் பட்டறைகள் தள்ளாடத் தொடங்கியது;.நீர்த் தேவையும் குறையத் தொடங்கியது.

தண்ணீர் விநியோக உரிமை பெற்ற நிறுவனம் நட்டமடையக் கூடாது என்ற “நல்லெண்ண” அடிப்படையில் மாநகராட்சியே நாளொன்றுக்குப் பத்து கோடி லிட்டர் தண்ணீர் பெறுவதற்கு அரசு உத்தரவிட்டது.முன்பு நகரக் குடிநீருக்கு ரூ 4.50 வசூலித்த நிலையில், திடுமென 21 ரூபாயாக கட்டணத்தை நிறுவனம் உயர்த்தியது. இதில் ரூ 7.50 மாநகராட்சி வழங்க மீதித் தொகை தமிழக அரசு தனது சொந்த நிதிக்கிடங்கில் இருந்து நிறுவனத்திற்கு  எடுத்துக் கொடுத்தது. மேலும் நிறுவனத்தின் கடனுக்கும் வட்டிக் குறைப்பு சலுகை வழங்கப்பட்டது. ஒருபக்கம் தேவைக்கு அதிக அளவில் தனியார் நிறுவனத்திடமிருந்து நீர் கொள்முதல் செய்தது, மற்றொருபுறம் ஐந்து மடங்கு அதிக விலைக்கு நீரைப் பெற்றது என மக்களின் வரிப் பணத்தைத் தண்ணீர் கொள்ளையர்கள் பகல் கொள்ளை அடிப்பதற்கு சட்டப்பூர்வ ஏற்பாட்டை அரசு செய்து கொடுத்தது.

5

குடிநீர் விநியோகம் மீதான உரிமையை பொதுத்துறை நிறுவனத்திடம் இருந்து தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்தல் ஏற்படுகிற மோசமான பின்விளைகளுக்கு உலக அளவில் இருந்து உள்ளூர் மட்டம் வரை எண்ணற்ற படிப்பினை உள்ளது. இந்த சூழலில், கார்ப்பரேட் நலனையே பிரதான நலனாகக் கொண்ட அரசு, மக்கள் நலனை முதலாளித்துவ வர்க்க நலனுக்கு அடகு வைக்கிறது. இது ஏதோ கோவை நகரப் பிரச்சனை என்றோ,குடிநீர் கட்டண நிர்ணயப்பு உரிமையானது மாநகராட்சி வசம் மட்டுமே எப்போதும் இருக்கும் என்றோ நாம் பகல் கனவு கண்டு கொண்டிருக்க முடியாது! படிப்படியாக தங்களது கட்டுப்பாட்டில் நகரின் ஒட்டுமொத்த குடிநீர் விநியோகத்தைக் கொண்டு வருவது,பிற நகரங்களுக்கு அதை விரிவுபடுத்துவது என்ற நீண்ட கால தொலை நோக்கு திட்டத்தின்  அடிப்படையிலேயே இந்நிறுவனங்கள் குடிநீர் சந்தையை உருவாக்கி கைப்பற்றுகின்றன. கோவை நகரத்தின் குடிநீர் சார்ந்த புகார்களை பெறுவதைக் கூட தனது எதிர்கால இலக்காக சூயெஸ் நிறுவனம் தனது இணையத்தில் குறிப்பிட்டள்ளது!

குடிநீர் விநியோகத்தை பொதுத்துறை கட்டுப்பாட்டில் இருந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவது தேசிய நீர்க் கொள்கையின் பகுதியாகும்.கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தியாவின் தேசிய நீர்க்கொள்கையில், நீர்த்தட்டுப்பாட்டை சரிசெய்யவும், நீர் விநியோக முறைகளை மேம்படுத்தவும்ம்  நீர் சேவையில் தனியாரின் பங்களிப்பு அவசியம் என வாதிட்டது இந்திய அரசு! இவ்வாதத்தை முன்வைத்தே இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் “வளர்ச்சி மாதிரி”யிலும் நீர் விநியோக/மேலாண்மை மீதான தனியாரின் ஆளுகைக்கு பொய்யான கருத்துருவாக்கத்தை மேற்கொள்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலே மேலே சில படிப்பினைகளை நாம் குறிப்பிட்டுள்ளோம்.

 

  • அருண் நெடுஞ்சழியன்

ஆதாரம்:

https://www.suez.com/en/News/Press-Releases/SUEZ-wins-a-contract-worth-near-400-million-euros-to-improve-the-water-distribution-service-in-Coimbatore

https://thewire.in/politics/water-privatisation

https://indianexpress.com/article/explained/privatisation-of-urban-water-supply-the-muddy-picture/

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW