பசுமைப் பொருளாதாரமும் அதனால் ஏற்படப்போகும் வேலைவாய்ப்பு மாற்றமும்
நீண்ட காலமாக உலக நாடுகள் பழுப்புப் பொருளாதாரத்தையே கடைபிடித்து வந்த நிலையில், அது வெறும் குறுகிய கால இலாபநோக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு இருந்ததால், நீண்டகால இலாபத்தை அடைவதற்கு மாற்றுப் பொருளாதாரத்தை நோக்கியத் தேடலைத் தொடங்கின. அந்த சமயத்தில், நிலைத்த வளர்ச்சியை அடைவதற்கான வழியாக ஐ.நா. வினால் 1992 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது தான் பசுமைப் பொருளாதாரம். அதன் பிறகு, பிரேசிலில் 2012 ஆம் ஆண்டு நடந்த ‘ரியோபிளஸ் 20’ மாநாட்டில், “பசுமைப் பொருளாரத்தை நோக்கி” என்ற அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில், சுற்றுச்சூழல் ஆபத்து, வேலையின்மை, வறுமை மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றைக் குறைத்து, எந்தவொரு சுற்றுச்சூழல் சீரழிவும் இல்லாமல், பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல்வாழ்வை நிலைநிறுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் மூலம் நிலையான வளர்ச்சியை அடைவதே பசுமைப் பொருளாதாரத்தின் இலக்கு எனக் கூறியுள்ளது. இதை நடைமுறைப்படுத்த வேளாண்மை, கட்டுமானம், மீன்வளம், எரிசக்தி, வனம், போக்குவரத்து, நீர்வளம், சுற்றுலா, கழிவு மேலாண்மை மற்றும் தொழிற்சாலை போன்ற 10 துறைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் அரசு மற்றும் நிறுவனங்கள் செய்யவேண்டிய திட்ட வரைமுறைகளையும் குறிப்பிட்டுள்ளது.
இலாப வெறி கொண்ட இந்த முதலாளிகள், புதிதாக சமூக மற்றும் சுற்றுச்சூழல் அக்கறையுடன் சிந்திக்கிறார்களே என்கிற சந்தேகத்துடன் இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் வந்தது. தேடியதில் அவர்களின் நோக்கமாக கண்டறிந்தது,
* நிலைத்த சுரண்டல் மற்றும் இலாபம்
* வல்லரசு நாடுகள் வளரும் நாடுகளை தன்னிச்சை நடவடிக்கைகள், வரிகள் மற்றும் பொருளாதார தடைகள் மூலமாக அச்சுறுத்துவது
* புவியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருவதால், 2030 ம்ஆண்டுக்குள் மக்கள் வேலை செய்யும் நேரம் 2 சதவீதமாக குறைந்துவிடும். அதனால் குறையும் உற்பத்தித் திறனை சமாளிப்பது
* தற்போது பசுமைப் பொருளாதாரத்துடன் தொடர்புடையத் துறைகளின் சந்தை மதிப்பானது, புதைபடிவ எரிபொருள்களின்(fossil fuels) சந்தை மதிப்பிற்கு இணையாக (உலக பங்குசந்தையில் 6 விழுக்காடு, தோராயமாக 40 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள். Refer chart). இதன் வளர்ச்சி இதே வேகத்தில் இருந்தால், 2030 ம் ஆண்டு இதன் சந்தை மத்திப்பு 10 சதவீதமாக (தோராயமாக 9 இலட்சம் கோடி அமெரிக்கடாலர்கள்) மதிப்பிடப்பட்டுள்ளது.
* வளரும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள மக்கள் வளத்தை, உற்பத்தித்திறனை முழுவதுமாக உபயோகிப்பது. (அதற்கு மக்களின் வறுமையை ஒழித்தல் என்ற மெருகேற்றப்பட்ட வார்த்தைகளை உபயோகிக்கின்றனர்).
இப்படி பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்ட இந்தப்பசுமைப் பொருளாதாரம் மூலம் 2.4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO- International Labour Organization) மதிப்பிட்டுள்ளது. ஆனால் புதுப்பிக்க முடியாத ஆற்றல் துறைகளில் உள்ள 60 இலட்சம் பேர் வேலையை இழப்பர். எனவே 1.8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதில் 1.4 கோடி வேலைகள் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளிலும், 30 இலட்சம் வேலைகள் அமெரிக்காவிலும், 20 இலட்சம் வேலைகள் ஐரோப்பாவிலும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதுள்ள வேலைவாய்ப்பு கட்டமைப்பில் மாற்றங்கள் தேவை. எந்தெந்த வகையில் மாற்றங்கள் இருக்கும் என ILO, “உலக வேலைவாய்ப்பு சமூக பார்வை – 2018” (World Employment Social Outlook- Trends 2018) ல் மதிப்பிட்டு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளவை:
* 2018 ல், உலகில் வேலையில்லா மக்களின் எண்ணிக்கை 19 கோடி வேலையின்மை விகிதம்: 5.5 விழுக்காடு
* 2017 ல் 140 கோடியாக இருந்த சுயதொழில் மற்றும் வீட்டுவேலை செய்வோரின் எண்ணிக்கை, 2018 ல் 1.7 கோடி அதிகமாகும்.
* வேலைச்சந்தையில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. வளரும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில், தீவிர வறுமையில் 30 கோடி மக்கள் உள்ளனர். இவர்களின் நாள் ஊதியம் 1.9 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவு. 2018 ல் இவர்களின் எண்ணிக்கை 11.4 கோடி அதிகரித்துள்ளது. வேலை செய்வோரில் 40 விழுக்காடு மக்கள் இந்தவகையில் உள்ளனர். மிதமான வறுமையில் 43 கோடி மக்கள் 2017 ல் இருந்தனர். இவர்களின் நாள் ஊதியம் 1.9 லிருந்து 3.1 அமெரிக்கடாலர்கள். இவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
* வேலைச் சந்தையில்சமத்துவமின்மை பெரும் சவாலாகவே உள்ளது. பெண்கள் அவர்கள் வேலை செய்யும் துறை, தொழில், வேலை வகை என பல்வேறு காரணிகளால் வேறுபடுத்தப்படுகிறார்கள். வளரும் நாடுகளில் 82 விழுக்காடு பெண்கள் சுய/வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஆண்கள் 72 விழுக்காடு மட்டுமே. அதேபோல், 25 வயதிற்கு குறைவானவர்களில் 13 விழுக்காடு பேர் வேலையற்று உள்ளனர். ஆனால், 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் 4.3 சதவீதம் பேரே வேலையற்று உள்ளனர்.
* வேலை செய்வோரின் சராசரி வயதும்அதிகரித்துக்கொண்டே உள்ளது. 2017 ல் சராசரி வயது 40. இது 2030 ல் 41 ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில், 2017 ல் 65 வயதிற்கு அதிகமாக இருந்தவர்கள் 3.5/10. இது 2030 ல் 5/10 ஆக உயரும்.
ஒவ்வொரு நாட்டிலும் துறை சார்ந்து வேலைவாய்ப்புகள் எவ்வாறு இருக்கும் எனவும் WESO ல்குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப்பற்றிய சில தகவல்கள்:
* விவசாயம், சிறுகுறு வணிகம் மற்றும் வரைமுறைபடுத்தப்படாத தொழில்களில் வேலை செய்வோரை, மிகப்பெரிய உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
* வளர்ந்த நாடுகளில் சேவை சாரந்த வேலை வாய்ப்புகளே அதிகமாக இருக்கும். 2025 ல் இது 75 விழுக்காடாக இருக்கும். ஆனால் வளரும் நாடுகளில் 25 விழுக்காடு வேலைகளே சேவை சார்ந்து இருக்கும். மற்றும் வளரும் நாடுகளில் பாதுகாப்பற்ற உற்பத்தி துறை மற்றும் சுரங்க வேலைகள் அதிகரிக்கும். சுமார் 42 விழுக்காடு மக்கள், வளரும் நாடுகளில் இந்த வேலைகளில் உள்ளனர். ஆனால் உலக சராசரி 19.6 சதவீதம் மட்டுமே.
* 2030 ல் வேலை செய்யும் மக்கள் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தான் அதிகம் இருப்பார்கள்.
* இந்தியா போன்ற தெற்குஆசிய நாடுகளில் 1991ல் 76 விழுக்காடாக இருந்த விவசாயம் சார்ந்த வேலைகள், 2016 ல் 59 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ஆனால் சேவை சார்ந்த வேலைகள் 12 விழுக்காட்டிலிருந்து 24 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
* வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் வளரும் நாடுகளில் மக்கள் வேலை செய்யும் நேரம் அதிகமாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் 0.8 விழுக்காடு வேலை நேர இழப்பு (2.3 கோடி வேலை நாட்கள்), மனிதனால் உருவாக்கப்பட்ட இயற்கை பேரிடர்களால் ஏற்படுகிறது. 2030 ம்ஆண்டில், மாறிவரும் சூழ்நிலை மாற்றத்தாலும் அதனால் அதிகரிக்கும் புவி வெப்பத்தாலும் 7.2 கோடி முழுநேர வேலைவாய்ப்பு இழப்புகளும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தொழில் புரட்சிக்குப் பின், மேற்கத்திய நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுச்சூழலை எவ்வளவு அழிக்க முடியுமோ அழித்துவிட்டு, அதனால் கிடைத்த இலாபத்தை அனுபவித்துவிட்டு, தற்போது வளரும் நாடுகளை அதனால் ஏற்படும் பாதிப்புகளை மட்டும் பகிர்ந்துகொள்ளச் சொல்கின்றன. தற்போது புதிய பொருளாதார முறையை அறிமுகப்படுத்தி, அடுத்து எப்படி உலகில் மீதமுள்ளவளங்களையும் (மனித வளத்தையும்சேர்த்துதான்) சுரண்டி இலாபம் ஈட்டுவது என சிந்தித்துக்கொண்டு இருக்கின்றன. இதனால் பொருளாதாரம் மற்றும் காலநிலை மாற்ற(climate change) விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படப் போவது தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகள்தான்.
ஜூன் 21, 2012 அன்று, பிரேசிலில் நடந்த ரியோ உச்சிமாநாட்டிற்கு அருகே கரி-ஓகாII என்றழைக்கப்பட்ட ஒரு முகாமிலிருந்து உள்நாட்டு மக்களைக் கொண்ட குழு ஒன்று ஐ.நா. அதிகாரிகளுக்கு தன் நோக்கங்களை அறிவித்தது. 500 க்கும் அதிகமான உள்நாட்டுக் கைதிகளால் கையொப்பமிடப்பட்ட இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது என்னவென்றால்:
“பசுமை பொருளாதாரம் என்பது இயற்கையை தனியார்மயமாக்குதல், பொருளாதாரமயமாக்குதல், மற்றும் நமது வாழ்க்கை, வானம், நாம் சுவாசிக்கின்ற காற்று, நாம் குடிக்கின்ற தண்ணீர், மற்றும் அனைத்து மரபணுக்கள், தாவரங்கள், பாரம்பரியவிதைகள், மரங்கள், விலங்குகள், மீன், உயிரியல் மற்றும் பண்பாட்டு வேறுபாடு, சுற்றுச்சூழல் மற்றும் புவியியல், வாழ்க்கையை சாத்தியமாக மற்றும் சுவாரஸ்யமாக செய்ய உதவும் பாரம்பரிய அறிவு என அனைத்தையும் சந்தைப்படுத்துதல் மூலம் பெரும் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களால் இலாபம் ஈட்டுவதற்காக எடுக்கப்படும் விபரீத முயற்சி”.
இதற்கு மாறாக, இயற்கையின் ஒவ்வொரு களத்திற்கும் சந்தையின் நோக்கத்தை விரிவடைய விடாமல், சந்தைப்படுத்துதல் மற்றும் நிதி மூலதன குவிப்பை தடுத்து, பொருளாதார சந்தைகள் மற்றும் நிதி துறை ஆகியவற்றின் பங்கை குறைத்து அல்லது அழித்து, உலகின் பொதுவான சுற்றுச்சூழல் மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதல் என்பதே உண்மையானப் பசுமை பொருளாதாரம் ஆகும்.
- தேவி ராமகிருஷ்ணன்
Reference:
https://www.google.co.in/amp/s/www.thehindu.com/news/cities/mumbai/transition-to-green-economy-will-create-more-jobs/article23944845.ece/amp/
http://arulgreen.blogspot.com/2011/06/blog-post_05.html?m=1
https://googleweblight.com/i?u=https://unfccc.int/news/green-economy-overtaking-fossil-fuel-industry-ftse-russel-report&hl=en-IN
World Employment Social Outlook- Trends 2018
World Employment and Social Outlook 2018: Greening with jobs
https://www.yesmagazine.org/issues/its-your-body/going-against-the-green