சாவர்க்கரின் இந்துராஷ்டிரம் – பெரியாரின் சுதந்திரத் தமிழ்நாடு; யார் கனவு மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது?
ஆர்.எஸ்.எஸ். காரர்கள் திரிபுராவில் ஆட்சியைப் பிடித்து லெனின் சிலையை உடைத்தார்கள். இங்கு இன்னும் ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆனால், பெரியார் சிலைகளை இழிவுப்படுத்திக் கொண்டுள்ளனர். உலக வரலாற்றில் சிலைகளை உடைப்பது, இழிவுபடுத்துவது என்பது வெறும் அடையாளம் அல்ல. ஓர் ஆட்சியின் தொடக்கமாகவோ அல்லது முடிவாகவோ அமைந்துள்ளது.
96 அகவை வரை வாழ்ந்த பெரியார் தமிழ் மக்களின் புதுமக் கால வரலாற்றில் இருந்து பிரித்தெடுக்க முடியாத வரலாற்று ஆளுமையாகும். அவரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட அதே காலப்பகுதியில் தோன்றியதுதான் ஆர்.எஸ்.எஸ் உம் பொதுவுடைமை இயக்கமும் ஆகும். சுயமரியாதை இயக்கம் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தின் இலட்சியங்கள் உயர்ந்தவை; அவை ஒடுக்கப்பட்ட மக்களுக்கானவை; வரலாற்றை முன்னோக்கி நகர்த்தக் கூடியவை. ஆர்.எஸ்.எஸ். ஸின் இலட்சியங்கள் ஆதிக்கத்திற்கானவை; இது ஒருபுறம் இருந்தாலும் இம்மூன்றில் எது இந்திய அரசியலில் வளர்ந்து செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது? ஐயத்திற்கு இடமின்றி அது ஆர்.எஸ்.எஸ் உடையதுதான்.
மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இன்று இந்திய அளவிலான மாபெரும் இயக்கம். இந்தியாவிற்கு வெளியேயும் வலுவான கிளை பரப்பியுள்ளது. இன்று அதில் பார்ப்பனர்கள் மட்டும் இல்லை. எல்லா சாதிக்காரர்களையும் உள்வாங்கி விட்டது. அதன் வெகுசன அமைப்புகள் கணக்கற்றவை. அதில் சட்டப் பூர்வ அமைப்புகளும் உண்டு; சட்ட விரோத அமைப்புகளும் உண்டு. பா.ச.க. அதன் தேர்தல் முன்னணி மட்டும்தான். இந்தியாவிலேயே பெரிய தொழிற்சங்கம் ஆர்.எஸ்.எஸ். உடையது. நாடே பார்க்க பாபர் மசூதியை இடித்துக் காட்டினார்கள். முழுப் பெரும்பான்மையில் ஆட்சி அமைத்து அதை நடத்தியும் முடித்துவிட்டார்கள். ராம்விலாஸ் பாஸ்வானும் அத்வாலேயும் மாயாவதியும் அதனுடன் கூட்டணி வைக்க தயங்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. , பா.ம.க., தேமுதிக என எல்லாக் கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ். உடன் கூடிக்குலாவிய வெற்றி வரலாறு அதற்கு உண்டு.
இப்போது சொல்லுங்கள், இந்தியாவில் எந்த தலைவரின் இலட்சியத்தை அவருடைய வழிவந்தவர்கள் முன்னேற்றியுள்ளனர்? காந்தியா? நேருவா? ஜின்னாவா? அம்பேத்கரா? பெரியாரா? பகத் சிங்கா? சாவர்க்கரா?. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் உண்மையை ஆராய்ந்தால் சாவர்க்கரின் கனவுகள்தான் மெய்ப்பட்டுக் கொண்டுள்ளன! சாவர்க்கரின் வாரிசுகள் என்ன சாதித்துள்ளார்கள்? என்ற பின்புலத்தில் பெரியாருக்குப் பின்னான இந்த 45 ஆண்டுகாலத்தை ஆராய்ந்துப் பார்க்க நாம் துணிய வேண்டும்.
முதலில் பெரியாரினது இலட்சியங்கள் யாவை? வெகுமக்களுக்கு பெரியார் பகுத்தறிவுவாதியாக, கடவுள் மறுப்பாளராக அடையாளப்படுத்தப்பட்ட அளவுக்கு அவரது சுயமரியாதை, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சுதந்திர தமிழ்நாடு பற்றிய சிந்தனைகள் கொண்டு செல்லப்படவில்லை. பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு அடுத்ததாக அவரது சமூக நீதிச் சிந்தனை மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. அதுவும் மக்கள் நேரடியாகப் பலன்பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையோடு மட்டுமே சமூக நீதிப் பார்வையும் சுருக்கப்பட்டு விட்டது. தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் கல்வியறிவு பெருகிவரும் நிலையில் பெண்ணுரிமை சிந்தனைகள் சற்றுக் கூடுதலாக மக்கள் மன்றத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. மிகவும் குறைவாகப் பேசப்பட்ட ஒன்றாக, வெகுமக்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஒன்றாக பெரியாரின் சுதந்திர தமிழ்நாட்டின் தேவைப் பற்றி சிந்தனைகள் உள்ளன.
இன்னொரு பக்கம் பெரியாரின் இலட்சியங்களைத் துலக்கமாக முன் வைக்க வேண்டிய தேவையுள்ளது. இந்துத்துவ ஆற்றல்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பதால் அதன் எதிர்முகாமில் இருப்பவர்கள் கைகோர்க்க வேண்டிய தேவையுள்ளது. அது பொது எதிரிக்கு எதிரான ஒற்றுமை. ஆனால், அதன் பொருள் இவையெல்லாவற்றுக்கு உள்ள வேறுபாடுகளை மறந்துவிடுவதல்ல. கலைஞரின் மறைவுக்குப் பின்னால் பெரியாரின் தொடர்ச்சியாக தி.மு.க. வை முன்வைக்கும் போக்கு தெரிகிறது. ஆனால், இது உண்மைக்கும் மாறானது.
பெரியாரை மறுத்தே திராவிடர் கழகத்தில் இருந்து அண்னா வெளியேறினார். தனது தொடர்ச்சி என்று அண்ணாவை பெரியார் என்றாவது சொன்னதுண்டா? பெரியார் எத்தனை முறை அவர்களைக் ’கண்ணீர்துளிகள்’ என்று சொல்லி இருப்பார்! தி.மு.க. வின் தொடக்க நாட்களில் அண்ணா முன்வைத்த திராவிட நாடு கோரிக்கையை 1956 க்குப் பின்பு ஏதாவது ஓரிடத்தில் பெரியார் வலியுறுத்தியது உண்டோ? சரி, திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டுவிட்டு மாநில சுயாட்சி என்று பின்வாங்கியதையாவது பெரியார் ஆதரித்தாரா? 1962 இல் இருந்து பெரியார் மறையும் வரையான காலங்களில் ஏதாவதொரு இடத்தில் பெரியார் மாநில சுயாட்சியைத் தனது இலட்சியமாக சொல்லியதுண்டா? பிறகெப்படி பெரியாரின் தொடர்ச்சி அண்ணாவென்றும் அண்ணாவின் தொடர்ச்சி கலைஞரென்றும் கலைஞரின் தொடர்ச்சி ஸ்டாலின் என்றும் பேசுகிறார்கள்? பெரியார் யாரைக் ’கண்ணீர் துளிகள்’ என்று விமர்சித்தாரோ அவர்களைப் பெரியாரின் தொடர்ச்சியாக ஆசனம் தந்து அமரச் செய்வதல்லவா இது? புரட்சியின் இடத்தில் எதிர்ப்புரட்சி வீற்றிருக்கிறது என்பது போல!
சாதியை ஒழிப்பதை தன் இலட்சியம் என்றார் பெரியார். இந்திய அரசமைப்புக்குள் அது சாத்தியமில்லை என்று உறுதிபட அறிவித்தார். இந்திய சுதந்திர நாளைக் ’கருப்பு நாள்’ என்றார் பெரியார். அவருக்கு அப்போது வயது 70. 1957 இல் இந்திய அரசியல் சட்டத்தை கொளுத்தும் போராட்டத்தை அவர் நடத்தினார். அப்போது அவருக்கு வயது 79. அப்போது அவர் சிறைக்குப் போவதற்கு முன் 15-12-1957 அன்று விடுதலையில் எழுதிய தலையங்கத்தில் இருந்து…
“என் பிறவி காரணமாக என் இன அழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும் என் இன மக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும் தாய்நாடான தமிழ்நாட்டைப் பனியா-பார்ப்பனர்களின் அடிமைத் தளையிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழவைக்க வழிசெய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்.
அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்லுகிறேன், சென்று வருகிறேன்.”
பெரியார் இந்திய தேசியக் கொடியை எரிக்க அறிவிப்புக் கொடுத்தார். இந்திய வரைபடம் எரிக்கும் போராட்டத்திற்கு அழைப்புக் கொடுத்தார். அவருடைய கவலை தோய்ந்த வரிகள் இன்றைக்கும் யதார்த்தமாக இருக்கிறதே.
“இது கண் போன்ற பிரச்சினை – எவ்வளவு மோசமாக நடத்துகிறான்?
நம் நாட்டில் வசூல்செய்யும் பணத்தில் 60 கோடி ரூபாய் எடுத்துக்கொண்டு 8 கோடி நமக்குக் கொடுக்றான் – பிச்சை கொடுப்பது போல ! யார் கேட்பது? ஏன் என்றால் – ‘அதிகப்பிரசங்கி’ என்பானே என்று இவன் பயப்படுகிறான்! இங்கு சுரண்டிக் கொண்டுபோய் வடநாட்டுக்குத் தருகிறான்.
எலக்ஷனுக்கு தடவைக்கு 25 கோடி வசூல்செய்கிறான். முதலிலே சொன்னான் டாட்டா கம்பெனிக்காரன் என்னும் ஒரு கம்பெனி 10 இலட்சம் கொடுத்தான். ஒரு டைரக்டர் அதைக் கேட்டான். ஒரு கூட்டாளி, ‘அரசியல் கட்சிக்கு எதற்குப் பணம் கொடுப்பது?’ என்றான். ‘அட பைத்தியமே, நான் கம்பெனின் நலனை உத்தேசித்துத்தான் கொடுத்தேன்; இதை கொடுத்தால்தானே கோடி கோடியாகக் கொள்ளையடிக்கலாம்’ என்று பதில் சொல்லியிருக்கிறானே வடநாட்டான்.
வடநாட்டான் 2 பூனையை வைத்துக்கொண்டு கூட ஆண்டுவிடுவானே! இந்த காமராசர் போனால் வேறொரு ராசர் அவனுக்குக் கிடைக்கக்கூடும். இந்தக் கொடுமை ஒழிய வேண்டும்.
நம் நாடு தனியாகப் பிரிந்தே ஆக வேண்டும். ஒரு சுண்டைக்காய் ‘எகிப்து’ உலகத்தையே கலக்கிவிட்டதே! நம்மால் ஆள முடியாதா?” ….
ஆகவே, நாம் பெரிய இயக்கம் நடத்த வேண்டும்; ஆதரவு கட்டாயம் இருக்கும். எனக்குப் பிறகு என்ன நடக்குமோ என்ற கவலையாகத்தான் உள்ளது; பாதியிலாவது விட்டுவிட்டுப் போனால் கொள்கையை விற்றுத் தின்னத்தான் ஆள்வரும்.
ஆகவே, தயவுசெய்து சிந்தியுங்கள். காரியம் நடந்தே தீரவேண்டும். இந்தியா படம் கொளுத்த தயாராக வேண்டும்.” – (விடுதலை 1-12-1957)
தனக்குப் பின்னால் வருபவர்கள் கத்தி முனையில் இதை கேட்பார்கள் என்றும் பெரியார் சொன்னார்.
’சுதந்திரத் தமிழ்நாடு அடையாமல் சாதியை ஒழிக்க முடியாது’ என்று தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில் அவராற்றிய கடைசி உரையிலும்கூட பேசினார். இந்த கடைசி உரையின் போது பெரியார் எப்படி வயிற்று வலியால் துடித்தார் என பேராசிரியர் சுப.வீ. நெகிழ்வுடன் சொல்வார். ஆனால், அப்போது அவர் பேசியதென்ன? அதை சாத்தியப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை கவனமாகப் பேச மறுத்துவிடுவார். கந்த புராணத்தை நெக்குறுக பேசும் கிருபானந்த வாரியார் போல் பெரியாரைப் பற்றி பேசும் பட்டிமன்றப் பேச்சு போல் அவை ஆகிவிடுகின்றன.
தற்காப்பு நிலையில் இருந்து இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க அரை நூற்றாண்டுக்கும் மேலாக போராடி வருகிறோம். என்றாவது ஒருநாள் அதை பறித்துவிடலாம் என ஆளும் வர்க்கம் தருணம் பார்த்து வருகிறது. அரசு துறைகள் நாளுக்கு நாள் அருகிவரும் நிலையில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் இப்போது இருக்கும் இட ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப் பொறி போல் ஆகிவிடும். சட்டியை சுரண்டிவிட்டு அகப்பையைப் பெரிதாக கொடுத்த கதையாக இட ஒதுக்கீட்டு உரிமை போய்விடுவோ என்ற அச்சம் எழுகிறது. கார்ப்பரேட் வளர்ச்சிக் கொள்கையால் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களும் சூழலும் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. 5 இலட்சம் கோடி ரூபாய் கடன் சுமை மாநில அரசை அழுத்துகிறது. உலகமய எதிர்ப்பு இல்லாவிட்டால் வாய்ப்புகளையும் வளங்களையும் சமூக நீதியின் பாற்பட்டு பகிர்ந்தளிக்க முடியுமா? ஒற்றை இந்தியக் கட்டமைப்பில் இன்னும் எத்தனை காலத்திற்கு சமூக நீதியைப் பாதுகாக்க முடியும்?
இந்துத்துவத்தை உள்ளே நுழைய விடாமல் தடுப்போம் என நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், பாசக வோடு தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க.வும், தே.மு.தி.க., புதிய தமிழகமும் எனப் பலவும் இந்திய தேசியத்தின் பெயராலும் வளர்ச்சியின் பெயராலும் கூட்டணி வைப்பது நடந்ததே. இந்திய தேசியத்தையும் கார்ப்பரேட் வளர்ச்சிக் கொள்கையையும் எதிர்க்காமல் சமூக நீதி, இந்துத்துவ எதிர்ப்பு என்று பேசியவர்கள் எல்லாம் சறுக்கி விழுந்த வரலாறே தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகளின் வரலாறாகும்.
ஓட்டைப் படகுக்குள் திபுதிபுவென வரும் தண்ணீரை வாளியில் அள்ளி மூச்சிறைக்க வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். இன்னும் எத்தனை நாளைக்கு இதை செய்ய முடியும்? இன்னொரு ஓட்டை விழுந்தால் படகு முழ்குவதைத் தடுக்க முடியுமா?
பெரியாருக்குப் பின்னான சில ஆண்டுகளில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்டு 43 ஆண்டுகள் ஆகிவிட்டன. புதிதாக மாநில உரிமைகள் விவகாரத்தில் ஓரடி முன்னேற்றம் இருக்கிறதா? மாநில சுயாட்சி என்று சொன்னவர்கள் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தை வைத்து அந்தக் கோரிக்கையையாவது வளர்த்தெடுத்தார்களா? இல்லை. இதிலும் இழந்ததை மீட்பது அல்லது இருப்பதைப் பாதுகாப்பது என்றே காலந்தள்ளப்பட்டு வருகிறது.
இனி பெரியார் சிலையைக் கூட பாதுகாப்பதற்கு நாம் போராட வேண்டியிருக்கும் போல!
தற்காப்பு, பாதுகாப்பு என நம் வீட்டு வாயிலில் எத்தனை காலத்திற்கு வேல் கம்போடு நிற்கப் போகிறோம். இருப்பதைப் பாதுகாத்தால் போதும் என இப்படி காலம் தள்ளினால் இருப்பதைக்கூட பாதுகாக்க முடியுமா? பெரியாரின் இலட்சியங்களை நோக்கி முன்னேற வேண்டாமா?
சாவர்க்கரின் வழிவந்தவர்களோடு ஒப்பிடும் போது நாம் அடைந்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்வதற்கு அதிகம் இல்லை. சாவர்க்கரின் இந்துதேசம் என்ற கனவை நோக்கி அவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் சுதந்திர தமிழ்நாடு இலட்சியம் அவருக்குப் பின்னான காலத்தில் எங்கே தொலைந்தது என்று தேட வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.
தற்காப்பு நிலைக்குப் பதிலாக தாக்குதல் நிலைக்கு மாற வேண்டும். தமிழக அரசியல் களத்தில் குழப்பம் நிலவுகிறது. எதிர்காலத்திற்கான திசை வழியை அடையாளம் காட்ட வேண்டும். பெரியாரின் இலட்சியம் பகுத்தறிவு என்பதோடு சுருக்கிவிடாமல் சுதந்திரத் தமிழ்நாட்டின் வழிதான் சாதி ஒழிப்பும் பெண்விடுதலையும் தற்சார்பு பொருளாதாரமும் சாத்தியம் என்று முரசறைய வேண்டிய தருணமிது. இல்லையென்றால் புரட்சியின் இடத்தை எதிர்ப்புரட்சி நிரப்பிவிடும்!
பெரியார் விட்டுச் சென்ற இலட்சியங்கள், அவற்றைத் தோளில் சுமந்து செல்லும் அடுத்த தலைமுறைக்காக காத்திருக்கின்றன!
”உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்; மலத்தை மனமார முகருகிறோம்; மானமிழந்தோம்; பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம்; மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குதானா தமிழன் உயிர்வாழ வேண்டும் ? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி, நம் தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போக – வடநாட்டானுக்கும், தமிழரல்லாதவர்களுக்கும் நாம் படிக்கட்டு ஆகிவிட்டோம்.
இனியாவது ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்று ஆரவாரம் செய்யுங்கள்.
உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்.
நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்துகொண்டதோடல்லாது, அவன் நம் எஜமான் என்றால் – நமக்கு இதைவிட மானமற்ற தன்மை , இழிதன்மை வேறு என்ன சிந்தியுங்கள்!
புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச் சின்னாபின்னமாக்குங்கள்!
தமிழ்நாடு தமிழருக்கே! – (’விடுதலை’ – 3-12-1957)
சாவர்க்கரின் இந்துராஷ்டிரம் – பெரியாரின் சுதந்திரத் தமிழ்நாடு
யார் கனவு மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது?

- செந்தில், இளந்தமிழகம்