காவிரி – எடப்பாடி அரசே, செய்தக்க செய்யாமையானுங் கெடும்!  – செந்தில்

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை)

காவிரி கரை புரண்டோடுவதை தமிழகம் காண்கிறது. தென்மேற்கு பருவ மழை கொட்டித் தீர்த்ததால் கபினி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் நிரம்பிவிட்டன. வெள்ள நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

ஜூன் 1 ஆம் நாள் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன் இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். நிரந்தர மற்றும் முழுநேரப் பொறுப்பாகவன்றி தற்காலிக மற்றும் கூடுதல் பொறுப்பாக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி தனது உறுப்பினர்களை உடனே அறிவித்துவிட காலத்தை இழுத்தடித்து ஜூன் இறுதியில்தான் கர்நாடக அரசு இவ்விரு அமைப்புகளுக்கும் தனது உறுப்பினர் இருவரின் பெயர்களை அறிவித்தது.

மேலாண்மை ஆணையம் ஜூலை 02 அன்று தனது முதல் கூட்டத்தைக் கூட்டி ஜூலை மாதத்திற்கான 31.25 டி.எம்.சி. யைத் திறந்துவிட வேண்டும் என்று சொல்லி முடித்துக் கொண்டது.  அதற்குப் பிறகு, ஜூலை 05 அன்று கூடிய ஒழுங்காற்றுக் குழு இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி பேசவில்லை  கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் ஆவியாகப் போகும் நீரின் அளவு, நீர் வரத்து, இருப்பு ஆகியவைக் குறித்தப் புள்ளி விவரங்களை நான்கு மாநிலங்களிடம் கேட்டு படிவங்களைக் கொடுத்து முடித்துக்கொண்டது. கர்நாடகம்(4), கேரளா(1), தமிழ்நாட்டில்(3) உள்ள 8 அணைகளில் ஆய்வு மேற்கொண்டு இந்த அடிப்படை விவரங்களைத் திரட்ட வேண்டியது ஒழுங்காற்றுக் குழுவின் வேலையாகும். இவ்விவகாரத்தில் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட நலன்களைக் கொண்ட இம்மாநிலங்களிடம் இருந்து விவரங்களைக் கேட்டுப் பெறுதல் சரியாக இருக்குமா? முழுநேர உறுப்பினர்களைக் கொண்டு முதன்மைப் பொறுப்பாக தமது பணிகளைக் மேற்கொள்ளக் கூடிய அமைப்புகளாக மேலாண்மை ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயல்பட வேண்டும்.

கர்நாடக முதல்வர் குமாரசாமியும் தமிழக முதல்வர் பழனிச்சாமியும் அணைகளைத் திறப்பது தொடர்பாக முடிவெடுத்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு எதற்கு இவ்விரு அமைப்புகளும்? இத்தனை ஆண்டுகாலம் தமிழ்நாடு போராடியது எதற்காக? வெள்ள நீர் வரும்பொழுதே இப்பணியை செய்ய இவ்விரு அமைப்புகளும் முன்வரவில்லை என்றால் பற்றாக்குறை காலங்களில் அணைகளைத் திறந்துமூடும் பணியைக் கையிலெடுக்க முடியுமா? இவ்விரு அமைப்புகளின் வழியாக அணைகளில் தண்ணீர் திறந்துவிடும் பணியை செய்ய வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்த வேண்டிய தருணமிது.

வடிநிலப்பகுதியில் இல்லாத பெங்களூருவுக்கு காவிரி தண்ணீரைத் திருப்பிவிட அனுமதித்தது போல கேரளாவிலும் கோழிக்கோட்டுக்கு தண்ணீர் வழங்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி காவிரி வழக்கில் மேல்முறையீடு செய்திருந்தது கேரளம். ஆனால், உச்சநீதிமன்றம் இம்முறையீட்டைத் தள்ளுபடி செய்துவிட்டது. கர்நாடகவோ நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்கக் கூடாதெனவும் ஆணையத்தின் அதிகாரம் தொடர்பாக சில அம்சங்களில் தங்களுக்கு உடன்பாடில்லை எனவும் காரணம் சொல்லி வழக்கறிஞர் பால் நாரிமன் மூலமாக அரசமைப்பு ஆயத்தை அணுகப்போவதாக அறிவித்துவிட்டது. மேகதாட்டு அணைக் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. ஒருபுறம் உருவாக்கப்பட்ட இவ்விரு அமைப்புகளும் உரிய வகையில் செயல்பட வில்லை இன்னொருபுறம் இதை மேலும் வலுவற்றதாக ஆக்கும் முயற்சியைக் கர்நாடகம் தொடங்கிவிட்டது. இவ்விரு அமைப்புகளும் அமைக்கப்பட்டதன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் 2 கோடி ரூ செலவில் மேட்டூரில் நினைவுத் தூணும் பூங்காவும் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார் தமிழக முதல்வர்.

காவிரி இந்தியாவுக்கு சொந்தமென நான்கு மாநிலங்களுக்கு இருக்கும் உரிமையை மறுத்தது, நிலத்தடி நீரைக் காரணம்காட்டி தமிழகத்திற்கு உரிய நீரின் அளவைக் குறைத்தது உள்ளிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் தீமைகளுக்கு எதிராக தமிழக அரசு அரசமைப்பு ஆயத்தை அணுக வேண்டும் என தமிழகத்தின் மாற்று அரசியல் களத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டுவரும் நிலையில் வெற்றி விழாக் கொண்டாட்டங்களில் தம்பட்டம் அடித்துவருகிறது தமிழக அரசு. ஓர் அரசு செய்யக்கூடாததை செய்தாலும் சரி,  செய்ய வேண்டியதை செய்யத் தவறினாலும் சரி அது நாட்டுக்கு தீமைப் பயக்கும் என்ற வள்ளுவனின் வாய்மொழியை நினைவில் கொள்ளவேண்டும் எடப்பாடி அரசு.

எடப்பாடி அவர்களே, மேட்டூரில் கட்டப்படும் நினைவுத் தூணையும் தண்ணீரற்ற மேட்டூர் அணையையும் வருங்காலத்தில் பார்க்கும் பொழுது அதிலுள்ள உங்கள் பெயர் கேலிச்சிரிப்புடன் வாசிக்கப்படும்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW