அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்

25 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை)

மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட நடுவண் ஆட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் வலிமையாக மாறி நிற்கும் ஓர் அவலம் – அரசியலில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது பாரதிய சனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உருவான நிலை என்று சுருக்கிப் பார்த்துவிட முடியாது. காங்கிரசு ஆட்சி காலத்திலும் இந்த ‘அதிகார ஆக்கிரமிப்புகள்’ நடந்தன. ஆனால் பாரதிய சனதா கட்சியின் ஆட்சியில் இது தீவிரம் பெற்று ‘ஆளுநரின் அதிகார ஆக்கிரமிப்புகள்’ ஒரு நிலைத்த அரசியல் நடவடிக்கைகளாகிவிட்டன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையே நடக்கும் அதிகாரப் போட்டி, தமிழ்நாட்டில் வேறு புதிய வடிவத்தில் எழுந்து நிற்கிறது. இறையாண்மையுள்ள ஒரு மாநில அரசு தனக்கு மக்கள் வழங்கியிருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகளை தானாகவே முன் வந்து ஆளுநரின் கால்களில் வெட்கப்படாமல் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரின்  அதிகார அத்துமீறல்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தான் போராடுகின்றன. போராடினால் 7 ஆண்டு சிறை என்கிறது – ஆளுநர் மாளிகை அறிவிப்பு. தமிழ்நாடு அரசோ, ஆளுநர் அறிவிப்புக்கு பச்சைக் கொடி காட்டுகிறது. ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்குத் தரவேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குக்கூட அனுப்பி வைக்காமல், கிடப்பில் போட்டாலும் அதைத் தட்டிக் கேட்க தயாராக இல்லை தமிழக அரசு. சி.பி.எஸ்.இ. நீட் தேர்வுக்கான ‘தமிழ் வினாத்தாளில்’ 49 தவறுகள்.

இந்த ஆண்டு தமிழ் வழியில் தேர்வு எழுதிய தமிழ்நாட்டைச் சார்ந்த 24,720 பேரில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 460 பேர் மட்டுமே. மதுரை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் தொடர்ந்த வழக்கால் தமிழ் வழியில் தேர்வு எழுதியவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்க 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு கிடைத்துள்ளது. நியாயமாக தமிழக அரசு தொடர்ந்திருக்க வேண்டிய வழக்கு இது. இப்போது ‘சி.பி.எஸ்.இ.’ மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் போன நிலையிலும் தன்னையும் ஒரு மனுதாரராக தமிழ்நாடு அரசு இணைத்துக் கொள்ள முன்வராமல் சமூக நீதி மாநிலமான தமிழ் நாட்டையே நடுவண் ஆட்சிக்கு அடிமையாக்கி விட்டார்கள். எதிர்பார்த்ததுபோல் சி.பி.எஸ்.இ. உச்சநீதிமன்றத்தில் தடையும் வாங்கி மதுரை நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவிட்டது.

இந்தப் பின்னணியில் டெல்லி யூனியன் பிரதேசத்தில் நடக்கும் ஆம் ஆத்மி’ அரசு ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிராக உறுதியுடன் களமிறங்கியது. இப்போது ஆளுநர் அதிகாரத்துக்கு கடிவாளம் போடும் தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் வழியாகப் பெற்றிருக்கிறது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த ஜூலை 4, 2015இல் உச்சநீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு கூட்டாட்சி தத்துவம் என்ற கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. (தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னுடைய சார்பிலும், நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் சார்பிலும் தீர்ப்பு எழுதியிருக்கிறார். நீதிபதிகள் டி.ஒய்.சந்திர சூட் மற்றும் அசோக் பூஷன் இணைந்து தனியாக தீர்ப்பு எழுதினார்கள். அனைவரது தீர்ப்பின் மய்யக் கருத்தும் ஒரே குரலை பேசியிருக்கின்றன)

உச்சநீதிமன்றம் ஒருமித்துத் தீர்ப்பாகக் கூறியிருப்பது என்ன? ஒன்று – டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்துக்கான தலைவர் முதலமைச்சரே தவிர, ஆளுநர் அல்ல. இரண்டு – அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் டெல்லி சட்டசபைக்கு உண்டு. அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளை ஏற்றுத்தான் ஆளுநர் செயல்பட வேண்டும். மூன்றாவது – குடியரசுத் தலைவரிடம் ஆளுநர், அனைத்து அமைச்சரவை முடிவுகளுக்கும் விளக்கம் கேட்கக் கூடாது. தவிர்க்க வியலாத சூழ்நிலையில் கருத்து மாறுபாடுகள் நியாயமானவையாக இருந்தால் மட்டுமே அப்படி விளக்கம் கேட்க முடியும். கடைசி வாய்ப்பாக மட்டுமே ஆளுநர் இந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும்; குடியரசுத் தலைவர் கருத்தை அப்படியே செயல்படுத்த வேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டு. நான்காவதாக – அமைச்சரவை எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஆளுநர் ஒப்புதல் பெற்றாக வேண்டும்  என்ற அவசியமில்லை. முடிவுகளை ஆளுநரின் பார்வைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு அமைச்சரவைக்கு உண்டு.

– இவை தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.

டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு தனித் தகுதி உண்டு. சட்டமன்றம், அமைச்சரவை உள்ளிட்ட சிறப்புத் தகுதிகளை சட்ட ரீதியாகப் பெற்றுள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்தமான் நிக்கோபர், இலட்சத் தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டய்யூ, சண்டிகார் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு சட்டமன்றங்கள் கிடையாது. நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் (பிரிவு 239ஏ) சட்டசபை அதிகாரங்கள் வழங்கப்பட்ட யூனியன் பிரதேசம் இரண்டாவது வகை. புதுச்சேரி மாநிலம் இந்தப் பிரிவின் கீழ் வருகிறது. நாடாளுமன்ற சட்டத்தை பயன்படுத்தாமல் அரசியல் சட்டத்தையே திருத்தி, அதன் வழியாக சட்டசபை மற்றும் அமைச்சரவை அதிகாரம் பெறுவது மூன்றாது வகை. டெல்லி யூனியன் பிரதேசம் இந்த சிறப்புப் பிரிவின் கீழ் வருகிறது. (1991இல் சட்டத்தில் 69ஆவது திருத்தத்தின் வழியாக டெல்லி யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது) இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை டெல்லி யூனியன் பிரதேசத்தோடு ஒப்பிட முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். டெல்லி யூனியன் பிரதேச குடிமக்களின் ஜனநாயக, சமூக, அரசியல் அதிகாரங்களை உறுதி செய்வதற்காகவே டெல்லி யூனியனுக்கு சிறப்புத் தகுதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதே வழக்கில் 2016 ஆகஸ்ட் 4 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக டெல்லிக்கு சிறப்புத் தகுதி வழங்கப்பட்டிருந்தாலும் அதை ஒரு யூனியன் பிரதேசமாகவே கருத வேண்டும் என்றும், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. ஆளுநருக்கு தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்பட அதிகாரம் உண்டு என்றும் தீர்ப்பளித்தது. வேறு வழியின்றி உச்சநீதிமன்றம் போகும் நிலைக்கு ஆம் ஆத்மி தள்ளப்பட்டது.

சொல்லப்போனால் ஆம் ஆத்மிக்கும் நடுவண் அரசுக்குமிடையிலான மோதல் – மன்மோகன் சிங் பிரதமராக இருந்த அய்க்கிய முன்னணி ஆட்சிலேயே தொடங்கிவிட்டது. 2014ஆம் ஆண்டு மெஜாரிட்டி பலமின்றி வெளியிலிருந்து காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராகப் பதவியேற்ற கெஜ்ரிவால், ரிலையன்ஸ் குழும நிறுவனர் அம்பானி, மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி மற்றும் முரளி தியோரா மீது இலஞ்ச ஒழிப்புத் துறை வழியாக ஊழல் வழக்குப் பதிவு செய்தார். எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசின் உடன்பாடுடன் நடந்த ஊழலுக்கு எதிரான வழக்கு அது. இந்த வழக்கை இரத்து செய்ய வேண்டும் என்றும், டெல்லி மாநில ஊழல் ஒழிப்புத் துறைக்கு மத்திய  அரசு ஊழியர்கள் மீது வழக்குத் தொடர உரிமை இல்லை என்றும் அன்றைய அய்க்கிய முன்னணி ஆட்சி நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தது.

அம்பானியின் மீது கை வைத்தால் மோடி ஆட்சி மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சியும் சும்மா விடாது. மோடியின் தேசிய சனநாயக முன்னணி பதவிக்கு வந்தவுடன் இன்னும் ஒரு அடி மேலே சென்று மத்திய அரசு ஊழியர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக டெல்லி ஊழல் ஒழிப்புத் துறைக்கு இருந்த வழக்குப் போடும் உரிமையையே பறித்து தாக்கீது வெளியிட்டது. இதற்குப் பிறகு 2015ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் முழு மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. கெஜ்ரிவால் முதல்வரானார். மோடி ஆட்சி தாக்கீதை எதிர்த்து நீதிமன்றம் போனார். அப்போது டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி மாநில அரசின் இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு இருந்த அதிகாரத்தைப் பறித்து மோடி ஆட்சி வெளியிட்ட அறிவிப்பு ‘சந்தேகத்துக்கு’ வழி வகுக்கிறது என்று கூறியதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில ஆட்சியின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். மக்கள் அளித்த தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்று மே 25, 2015இல் தீர்ப்பளித்தது.

மோடி ஆட்சி விடவில்லை; அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கைக் கொண்டு வந்தால் அதைப் பதிவு செய்ய  காவல் நிலையங்களுக்கு உரிமை கிடையாது என்று அறிவித்தது (டெல்லி மாநில அரசுக்கு காவல்துறை, பொது ஒழுங்கு, நிலம் குறித்த உரிமைகளில் அதிகாரம் கிடையாது. எனவே காவல்துறை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது) அதைத் தொடர்ந்து டெல்லி மாநில அரசுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தையும் ஆளுநருக்கு வழங்கியது மோடி ஆட்சி. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இலஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரியை ஆளுநரே நியமித்தார். அதிகாரிகளை மாற்றம் செய்யும் உரிகைளும் நியமிக்கும் உரிமைகளும் மாநில ஆட்சியிடமிருந்து பறிக்கப்பட்ட நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றம் போனார் கெஜ்ரிவால். இந்த வழக்கில் 2016இல் டெல்லி உயர்நீதிமன்றம் ஆளுநருக்கே அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு இல்லை என்று 2015இல் வழங்கிய தீர்ப்பை அப்படியே புரட்டிப் போட்டது. தீர்ப்பு ஆளுநருக்கு சாதகமாக வந்தது.

டெல்லி மாநில அரசின் நிர்வாகத்தை ஆளுநர் முடக்கினார். அதிகாரிகள், முதல்வர் உத்தரவை ஏற்று செயல்பட மறுத்தனர். தலைமைச் செயலாளராக இருந்த அன்ஷீ பிரகாஷ், மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கினார். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து முதல்வர் தன்னை உடல் ரீதியாகத் தாக்குவதற்கு சதித் திட்டம் தீட்டியதாக புகார் கூறினார். ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே நேரில் கொண்டு போய் சேர்க்கும் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத் திட்டங்களை முடக்குவதற்காகவே இத்தகைய பொய்ப் புகார்கள் உருவாக்கப்படுகின்றன என்று கூறிய ஆம் ஆத்மி கட்சியினர் பிறகு ஆளுநர் மாளிகையிலேயே 24 மணி நேரமும் ‘அமரும்’ முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். இறுதியில் உச்சநீதிமன்றம் மாநிலத்தின் உரிமைக் கதவுகளைத் திறந்து விடும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சி விசுவாசிகளை ஆளுநர்களாக நியமித்து ஆளுநர் அதிகாரத்தை அரசியல் நலனுக்கேற்ப முறைகேடாகவே பயன்படுத்துவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் கருநாடகாவில் மெஜாரிட்டி பலம் இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து முதலமைச்சராக பதவி உறுதிமொழியும் ஏற்க வைத்து அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகி ஓடினார்.

மோடி ஆட்சிக்கு வந்த உடனேயே 2015ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தில் அரசியல் சித்து விளையாட்டைத் தொடங்கினார்கள். அங்கே ஆளுநராக வந்த ஜெ.பி. ராஜ்கோல்வா சட்டமன்ற கூட்டத்  தொடர் நடக்கும்  தேதியை அவரே முன்கூட்டியே அறிவித்து சட்டசபையைக் கூட்டச் செய்து  தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரசு ஆட்சியை மெஜாரிட்டி இல்லை என்று டிஸ்மிஸ் செய்தார். காங்கிரசிலிருந்து அதிருப்தியாளர்களை இழுத்து ஒரு பொம்மை ஆட்சியை ஆளுநர் உருவாக்கினார்.

உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆளுநர் முடிவை நீக்கம் செய்தது. “ஒரு ஆளுநர் தனது சொந்த விருப்பத்துக்காக சட்டமன்றத்தைக் கூட்டுவது, ஆளுநரின் வேலையல்ல. சட்டமன்ற செயல்பாடுகளில் குறுக்கிடுவதாகும்” என்று கூறியது உச்சநீதிமன்ற அமர்வு. தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் இந்த ஜனநாயக விரோத மீறல்களை அம்மாநில ஆளுநர் அரங்கேற்றியபோது உச்சநீதிமன்றம் தலையிட்டு தவறைத் திருத்தியது. ஹரிஷ்ராவத் தலைமையில் நடந்த காங்கிரசு ஆட்சிக்கு எதிராக 69 காங்கிரசு சட்டசபை உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் மாநில ஆளுநர் கே.கே. பவுல் – ஆட்சியை ‘டிஸ்மிஸ்’ செய்தார். சட்டமன்றத்துக்குள் ஆட்சியின் மெஜாரிட்டி எண்ணிக்கையை நிரூபிக்க வாய்ப்பு தராமல் ஆட்சியை கலைத்தது தவறு என்றது உச்சநீதிமன்றம். 2017ஆம் ஆண்டு கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் ஆளுநர் பா.ச.க.வின் ஏஜெண்டுகளாக மாறி காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை கட்சியாக தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியை நிறுவிட தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தினர். 2017இல் பீகாரிலும் இதுதான் நடந்தது. ஆளுநராக இருந்த ஆர்.எஸ்.எஸ்.காரரான கேசரிநாத் திரிபாதி, தனிப்பெரும்பான்மை கொண்டிருந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. அய்க்கிய ஜனதாதளத்தின் தலைவராக இருந்த நித்திஷ்குமார், லல்லு பிரசாத்தின் இராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தினார். திடீரென்று லல்லு கட்சியின் உறவைத் துண்டித்துக் கொண்டு பா.ச.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் வந்தபோது ஆளுநர் அரசியல் கட்சிக்காரர் போலவே செயல்பட்டார். ஆளுநர்கள் தங்களின் ‘கைப்பாவையாக’ செயல்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக மோடி பிரதமரானவுடன் நான்கு ஆளுநர்கள் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டனர். எம்.கே. நாராயணன் (மே. வங்கம்), அஷ்வனிகுமார் (நாகாலாந்து), பி.எல். ஜோஷி (உ.பி.). சேகர் தத்தா (சத்தீஸ்கர்) ஆகியோர் அந்த ஆளுநர்கள். குஜராத் ஆளுநர் கம்லா பெனிவார் – அங்கிருந்து மிசோராம் மாநிலத்துக்கு தூக்கியடிக்கப்பட்டு, பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் கிரேன்பேடி, டெல்லி மாநிலத்துக்கான தேர்தலில் பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு படுதோல்வியை சந்தித்தவர். இப்போது புதுச்சேரியின் ‘நியமன முதல்வராக’ செயல்பட்டு வருகிறார். ஆட்சியின் அன்றாடப் பணிகளில் குறுக்கிட்டு, அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு போடுவதும் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்துவதும் அவரது வாடிக்கையாகிவிட்டது. இது ஆளுநரின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று மாநில முதல்வர் நாராயணசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியும் முதல்வர் கடிதத்தைக் குப்பைக் கூடையில் வீசிவிட்டார் மோடி. கடந்த மே 8, 2018 அன்று புதுவை முதலமைச்சர் அரசாணை ஒன்றைப் பிறப்பித்தார். ஆளுநர்அல்லது ஆளுநர் அலுவலகம் வழியாக அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரோடு கலந்து பேசி அவர்களின்  ஒப்புதலைப் பெற்ற பிறகே செயல்படுத்த வேண்டும் என்று அந்த ஆணை கூறுகிறது.

இப்போது டில்லி யூனியன்  பிரதேச வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு புதுவை முதல்வர் நாராயணசாமி, கிரேன் பேடிக்கு எழுதிய கடிதம் கடுமையாக எச்சரிக்கிறது.

“உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகாவது உங்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டு உங்கள் தவறுகளை சரி செய்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது, சட்டத்துக்குப் புறம்பாக தன்னிச்சையாக அதிகாரிகளை அழைத்து உத்தரவுகளைப் பிறப்பிப்பது போன்ற உங்களது செயல்பாடுகள் தொடருமேயானால் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர வேண்டிய நிலை உருவாகும்” என்று கடுமையாக எச்சரிக்கிறது அந்தக் கடிதம். “உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வே தீர்ப்பளித்துள்ளதால்   இந்தத் தீர்ப்பு டெல்லி மாநில ஆட்சிக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரின் அதிகாரங்களை வரையறுத்துள்ள தீர்ப்பாகும்” என்று வாதிடுகிறார், புதுவை முதல்வர் நாராயணசாமி.

தமிழக அரசுக்கோ இத்தகைய அரசியல் நிகழ்வுகள், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து எல்லாம் அவர்கள் பார்வைக்குகூட சென்றிருக்குமா என்பது தெரியவில்லை. இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்று அமித்ஷா பேசினால்கூட “அப்படி எல்லாம் அவர் பேசியிருக்க மாட்டார், அவர் இந்திப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்தவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் மொழி பெயர்த்திருப்பார்கள்” என்று விளக்கம் கூறும் பரிதாப நிலையில்தான் தமிழக அரசுஅடிபணிந்து கிடக்கிறது.

ஆளுநர்கள் ஆளும் கட்சிகளின் பிரதிநிதிகளாகவே செயல்படுவது ‘சுதந்திரம்’ பெற்ற காலத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது மத்தியிலும் மாநிலங்களிலும் காங்கிரசு கட்சிகளின் ஆட்சிகளே நடந்ததால் முரண்பாடுகளுக்கு வாய்ப்புகள் இல்லை; எனவே பிரச்சினைகள் எழவில்லை; அவ்வளவுதான்.

1970களிலும் 1980களிலும் இந்திராவுக்கு எதிராக செயல்பட்ட மாநில அரசுகளை ஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திராகாந்தி கலைத்தார். மொரார்ஜி தலைமையில் ஜனதா அமைச்சரவை பதவி ஏற்ற 1977ஆம் ஆண்டிலும் காங்கிரசு கட்சி ஆட்சி செய்த மாநிலங்களை ஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கலைத்து, அதே தவறைச் செய்தார்கள்.

உலகத்திலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவை கேரளாவில் ஈ.எம்.எஸ். நம்பூதிபாத் தலைமையில் 1957இல் ஏப்.5ஆம் தேதி அமைந்தது. போதிய மெஜாரிட்டி எண்ணிக்கை இல்லாத நிலையில் அய்ந்து சுயேச்சை உறுப்பினர் ஆதரவுடன் அமைக்கப்பட்ட அமைச்சரவையை இரண்டே ஆண்டுகளில் 1959, ஜூன் 31இல் அன்றைய நேரு ஆட்சி டிஸ்மிஸ் செய்தது. அந்த அமைச்சரவை கொண்டு வந்த நில சீர்த்திருத்தம் மற்றும் கல்வி மசோதாவுக்கு மதவாதிகளிடையே எழுந்த எதிர்ப்பு இதற்குக் காரணமாகக் காட்டப்பட்டது. இந்தியாவில் ‘356’ ஆவது விதியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஜனநாயகப் படுகொலையைத் தொடங்கி வைத்தது நேருதான். அவருக்கு இந்த விபரீத ஆலோசனையைக் கூறியவர் அன்றைய காங்கிரஸ் தலைவராக இருந்த அவரது மகள் இந்திரா காந்தி.

இந்தியாவில் ஒரே கட்சி ஆட்சி என்ற நிலை மாறி, மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சிக்கு வரத் தொடங்கின. அடுத்தக்கட்டமாக கூட்டணி ஆட்சிகளின் ‘யுகம்’ மத்தியிலும் மாநிலங்களிலும் தொடங்கியது. இப்போது ஆளுநர் பதவியும் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் முக்கியத்துவமும் அதிகரித்து விட்டன.

ஆளுநர் பதவி குறித்து அரசியல் நிர்ணய சபையிலேயே கடும் விவாதங்கள் நடந்தன. அந்த விவாதங்களைப் படித்தால், மாநிலங்களைக் கண்காணிக்கக்கூடிய மத்திய அரசின் ஒற்றர்களாக செயல்படுவதற்கே ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டது என்ற முடிவுக்கு வந்து விடலாம். அரசியல் சட்ட உருவாக்கத்திற்கான நகல் வரைவுக் குழு, ஆளுநர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தனது வரைவில் குறிப்பிட்டிருந்தது. இது குறித்து நடந்த விவாதத்தில் இந்த நடைமுறை இரண்டு முதலமைச்சர்களை உருவாக்குவதாகிவிடும் என்று கூறி இந்த முடிவு புறந்தள்ளப்பட்டது. கவர்னர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் ஒன்றைத் தயாரித்து சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று பட்டியலிலிருந்து ஒருவரை தேர்வு செய்ய குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்பது இரண்டாவது ஆலோசனையாக முன் வைக்கப்பட்டது. இந்த முறையினால் மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்றவர்தான் ஆளுநராக வர முடியும். பிறகு மாநில அரசும் ஆளுநரும் கைகோர்த்து செயல்படுவார்கள் என்பதால் இந்த ஆலோசனையும் புறந்தள்ளப்பட்டது. ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் பிரிந்து செல்லும் வாய்ப்புகள் உருவாகிவிடலாம் என்ற அச்சமும் அதைத் தடுப்பதற்கான வலிமையான சட்டப் பிரிவுகளை உருவாக்கிட வேண்டும் என்ற துடிப்புமே அரசியல் நிர்ணய சபையில் காங்கிரசு தலைவர்களின் உளவியலாக இருந்தது. அந்த உணர்வுகளே அரசியல் சட்ட உருவாக்கத்துக்கு அடிநாதமாக இருந்தன. மாநிலத்து மக்களுக்கு நெருக்கமான ஒருவரை ஆளுநராக வரவிடக்கூடாது என்பதில் நேரு மிகவும் உறுதியாக இருந்தார். ஆளுநர் அந்த மாநிலத்துக்கு தொடர்பில்லாதவர்களாக வேறு மாநிலங்களிலிருந்து நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நேரு வலியுறுத்தினார். 1949 மே 31 அன்று நிர்ணய சபையில் நேரு இவ்வாறு கூறினார்.

“ஆளுநர்கள் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாக இருந்தால் மாகாணப் பிரிவினை உணர்ச்சிகளும், குறுகிய மாகாண உணர்வுகளும் (Narrow Provincial Way of thinking) ஊக்கப்படுத்திவிடும்” என்றார்.

மற்றொரு உறுப்பினரான பி.எஸ். தேஷ்முக் வெளிப்படையாகவே கேட்டார்:

“முதல்வரும், ஆளுநரும் எல்லா பிரச்சினையிலும் ஒன்றுபட்டு நின்று, மத்திய அரசை எதிர்ப்பதிலும் அவர்கள் ஒன்றுபட்டு நின்றால், பிறகு என்ன செய்ய முடியும்? மத்திய அரசின் ஆணைகளையும் கட்டளைகளையும் மாநில அரசு செயல்படுத்த மறுத்தால் என்ன செய்வது? மத்திய அரசு மாநில அரசு மீது படை எடுத்துச் செல்லுமா?” என்று கேட்டார்.  இறுதியாக ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவராகவே இருப்பார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான திருத்தத்தை இறுதியாகக் கொண்டு வந்தவர் பிரஜேஸ்வர் பிரசாத்.  “மத்திய அரசின் அதிகாரம் அனைத்து மாகாணங்களிலும் நிலை நாட்டப்பட்டாக வேண்டும். இது அவசியமானது” என்பது தீர்மானத்துக்கு அவர் கூறிய காரணம்.

பிரிட்டிஷ் இந்தியாவில் 1935ஆம் ஆண்டு இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் ‘மாகாண ஆட்சி’களைக் கண்காணிக்க ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தங்கு தடையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவின் ‘சுதந்திரத்துக்கு’ப் பிறகும் அறுக்க முடியாத அடிமைச் சங்கிலியாக ஆளுநர் பதவி தொடருகிறது. ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் குறைத்து அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்று சட்டம் அவர்களுக்கான அதிகாரங்களைக் கட்டுப்படுத்தினாலும் ஆளுநர்கள் தங்கள் ‘உசிதம்போல்’ செயல்படக் கூடிய அதிகாரங்களை (Discretionary Powers) சட்டம் வழங்கியிருக்கிறது. அந்த அதிகாரங்கள் எவை என்ற வரையறைகளும் சட்டத்தில் தெளிவாக்கப்படவில்லை. இப்போது ‘உசிதம்’ போல் என்பது தான் சார்ந்துள்ள கட்சித் தலைமையின் ‘உசிதம்போல்’ செயல்படுதல் என்ற நிலைக்கு வந்து விட்டது.

ஆளுநர் மாளிகை ஆடம்பரங்களில் வீண் செலவுகளில் கொழுத்துப் போய் கிடக்கின்றன. நேருவின் சகோதரியாகிய விஜயலட்சுமி பண்டிட், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக சிறிது காலம் பணியாற்றி, பிறகு பதவியைத் துறந்தார். “ஆளுநர் பதவிக்குக் கிடைக்கிற அதிக ஊதியமும், வசதிகளுமே ஒருவரை அப்பதவிக்குத் தூண்டுகின்றன. ஆளுநர் பதவி பயனற்றது. அரசமைப்புச் சட்டத்திலிருந்தே ஆளுநர் பதவியை அகற்றி விடவேண்டும்” என்று பதவி விலகியதற்குப் பிறகு அவர் துணிந்து கூறினார்.

‘ஆட்டுக்குத் தாடி தேவை இல்லை; அதுபோல் ஆளுநர் பதவியும் நாட்டுக்குத் தேவை இல்லை’ என்பதே தொடக்கக்கால தி.மு.க.வின் கொள்கையாகவும் இருந்தது.

மத்திய மாநில அரசுகளின் உரிமைகள் மறுபரிசீலனைக்குள்ளாக்கப்பட வேண்டிய சூழல் இப்போது உருவாகிவிட்டது. இது குறித்து ஆராய ஏற்கனவே பல ஆணையங்கள் நியமிக்கப்பட்டன. ஆந்திராவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலிருந்த முதல்வர் என்.டி.ராமாராவ் வெளிநாடு சிகிச்சைக்குச் சென்ற காலத்தில் அவரது கட்சியிலிருந்து சில துரோகிகளைப் பிடித்து அன்றைய பிரதமர் இந்திரா, ‘தெலுங்கு தேச’க் கட்சி ஆட்சியைக் கவிழ்த்து, ‘பாஸ்கர் ராவ்’ என்ற துரோகியை ஆளுரைப் பயன்படுத்தி முதல்வராக்கினார். ஆந்திராவே கொந்தளித்தது. மக்கள் எழுச்சிக்கு அடி பணிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட இந்திரா காந்தி மீண்டும் என்.டி. ராமராவை முதல்வராக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இது மக்கள் சக்தி நிகழ்த்திய வரலாற்றுச் சாதனையாகும். மக்கள் எதிர்ப்பை திசை திருப்ப சர்க்காரியா ஆணையத்தையும் உடனே இந்திரா நியமித்தார். மாநில உரிமைகளை வலியுறுத்திய அந்த ஆணையத்தின் பரிந்துரை அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

மாநிலக் கட்சிகள் மக்கள் செல்வாக்கைப் பெற்று வளர்ந்து வருகின்றன. தேசியக் கட்சிகள்  ‘இந்தியாவின் தேசிய முரண்பாடுகளில்’ தங்களை நிலைப்படுத்திக் கொள்ள முடியாமல் சிதறிக் கொண்டிருக்கின்றன. அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட சூழலில் இருந்த இந்திய தேசியத்தின் அடையாளம், இப்போது மாநிலங்களின் தன்னாட்சி  அடையாளமாக உருத்திரட்சிப் பெற்று வருகிறது. சர்க்காரியா ஆணையம் மட்டுமல்ல; மத்திய மாநில உறவுகளை மறு பரிசீலனைக்கு உட்படுத்த நிர்வாக சீர்திருத்த ஆணையம் (1966), அரசியல் சட்ட செயல்பாடுகளை மறு ஆய்வுக்குள்ளாக்கும் தேசிய ஆணையம் (2000), புஞ்சி ஆணையம் (2007) என்று பல்வேறு ஆணையங்கள் நியமிக்கப்பட்டு மாநிலங்களின் உரிமைகளுக்கான பரிந்துரைகளை வழங்கியிருக்கின்றன.

மாநில சுயாட்சி முழக்கத்தை முன் வைத்த தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய டாக்டர் பி.வி. இராசமன்னார் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்றது. அதனடிப்படையில் 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் தமிழ்நாடு சட்டசபையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார், அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி.

“இராஜமன்னார் குழு பரிந்துரைகள் மீது தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துரைகளை மத்திய அரசு ஏற்று, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை முடிவு செய்கிறது” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1974இல் கூட்டாட்சிக்கும் சுயாட்சிக்கும் குரல் கொடுத்த அதே தமிழக சட்டப் பேரவை இப்போது ஒற்றையாட்சிக்கு வாழ்த்துப் பா பாடிக் கொண்டிருப்பது நகை முரண்!

மாநிலங்களின் தனித்துவங்கள்  அழிக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் ஒற்றை ஆட்சி என்ற பார்ப்பனிய இந்துத்துவ படுகுழிக்குள் தமிழினம் புதைக்கப்பட்டும் வருகிறது.

மத்தியில் ஏற்படும் ஆட்சி மாற்றங்களில் இதற்கான தீர்வுகள் நிச்சயமாக இல்லை. அன்னிய இந்திய பார்ப்பனிய எதிர்ப்புக் களங்களை நோக்கி மக்களைத் திரட்டுவதே இதற்கான விடியலை உருவாக்கும்.

 

ஆதாரங்கள் :

  • Frontline
  • Economic and Political Weekly
  • மாநில சுயாட்சி – முரசொலி மாறன்
  • மலர்க மாநில சுயாட்சி – கு.ச. ஆனந்தன்
  • ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW