“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை ?

12 Aug 2018

மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு தொடங்கிய அடக்குமுறை படலம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மே 22 அன்று 12 பேர் கொல்லப்பட்டனர். மே 23 அன்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூடுகளில் உயிரிழந்தவர்கள் மட்டுமின்றி பலர் கை, கால்களை இழந்து வாழ்நாள் துயருக்கு ஆளாகியுள்ளனர்.  மே 22,23,24 ஆகிய நாட்களில் போராடிய மக்களை கிராமம், கிராமமாகச் சென்று  வகைதொகையின்றி கைது செய்து அடித்து உதைத்து சிறையில் அடைத்தது  காவல்துறை. பின்னர் சில நாட்களில் அவர்கள் பிணையில் வந்ததோடு ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான அடக்குமுறை தணிந்துவிட்டதா? என்றால் அதுவும் இல்லை. அடுத்த சுற்று கைதுப் படலம் தொடங்கியது. கிராமம், கிராமமாகச் சென்று எண்ணற்ற வழக்குகளில் ஆண்களைக்  கைதுசெய்து சிறையிலடைத்தது அரசு. கிராமங்களில் மக்கள் இரவு நேரங்களில் விழித்துக்கிடந்து காக்கிகளின் வருகையை எண்ணி அஞ்சிக் கொண்டிருந்தனர். வேதாந்தா குழுமத்திற்கு எதிராக வீரஞ்செறிந்தப் போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்மத்தோடு பழிவாங்கிக் கொண்டிருக்கிறது அரசு.

 

தூத்துக்குடியோடு அரசின் கொடுங்கரங்கள் நின்றுவிட வில்லை!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்  தோழர் தி.வேல்முருகன்  மே  25 வாக்கில் தூத்துக்குடி விமான நிலையத்தில்  கைது செய்யப்பட்டதில் இருந்தே அரசின் அணுகுமுறை மாறியது தெரியத் தொடங்கிவிட்டது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள்,   மக்கள் அதிகாரம் தோழர்கள், வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன், மக்கள்மன்றம் ஒருங்கிணைப்பாளர் மகேஷ் மற்றும் தோழர்கள்,  தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தோழர் வெற்றித்தமிழன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் செரீஃப், நடிகர் மன்சூரலிகான், சூழலியல் செயற்பாட்டாள் பியூஷ், மாணவ செயற்பாட்டாளர் வளர்மதி, இயக்குநர் வ.கெளதமன், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் வசீகரன், சி.பி.ஐ.(எம்) தோழர்கள், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் என  நேற்று வரை  கைது செய்யப்பட்டோர்  பட்டியல் நீள்கிறது. இதில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் மீது தேசப் பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது.  சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைக்கு எதிராகப் பேசினாலே ’கைது’ என்ற அளவுக்கு கருத்துரிமையைப் பறிப்பதில் அரசு வெற்றி கண்டுள்ளது.

 

வெறும் 105 எம்.எல்.ஏ. க்களை வைத்துள்ள பலவீனமான அரசு இம்மாநிலத்தில்  இத்தனையையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. 89 எம்.எல்.ஏ. க்களை வைத்துள்ள எதிர்க்கட்சியோ செயலற்று நிற்கிறது. அடையாளமாக சட்டசபை புறக்கணிப்பு, வெளிநடப்பு என்பதோடு நிறுத்திக்கொண்டது. அது மட்டுமல்ல.  ”தமிழகத்தில் பயங்கரவாதிகள் பெருகிவிட்டனர்”  என மத்திய அமைச்சர்  பொன். இராதாகிருஷ்ணனின் கருத்தையே வழிமொழிந்தார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் போக எஞ்சியிருப்பதில் ஒரு பிரிவினர்   தேர்தலில் பங்குபெறும் பெரிய கட்சிகள். இக்கட்சிகளும் சூழலை முறியடிக்க முனைப்புடன் செயல்படவில்லை. தேர்தலில் பங்கு பெறாத இயக்கங்கள் அல்லது இன்னும் மைய நீரோட்டக் கட்சிகளாக மாறாதவைகள் மீதே   அடக்குமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  தி.மு.க., தவிர்த்தப் பிற பெரிய கட்சிகள் அடக்குமுறை எதிர்ப்புக்கு தலைமை கொடுத்து சூழலை எதிர்கொள்ள முன்வரவில்லை.  சிறு இயக்கங்கள்( fringe elements)  என்று சொல்லப்படும் அமைப்புகள் இப்படி அரசால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை அந்தப் பெரிய கட்சிகள் விரும்புகின்றனவோ என்ற ஐயம்  எழுகின்றது.  ’இயக்கங்களின் ஊடுருவல்’ என்று ஆளும்வர்க்கம் செய்துவரும் பரப்புரைக்கு இது வலுசேர்த்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அடக்குமுறையை எதிர்கொண்டு வரும் அமைப்புகள் செய்து வருவது என்ன? இந்த இரண்டரை மாத கால ’கைது, சிறை, பிணை’ படலத்தில் கடைசியாக தோழர் திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.  அறியப்பட்ட நபர்கள் கைது செய்யப்படும்போது அதை எதிர்த்துக் குரல் எழுப்புவதோடு நாம் கடந்துபோய் விடுகிறோம். சல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் நடத்தப்பட்ட அரச வன்முறை தொடங்கி தூத்துக்குடி அரச வன்முறை வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைக்குவரை நீதி கிடைக்கவில்லை. இந்நிலையிலேயே, அரச அடக்குமுறைக்கான காரணங்களை, அதன் பொதுவான தன்மையை  மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டியது இன்றியமையாததாகிறது.

 

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அல்ல தமிழ்நாட்டில் இருந்தபடி அயனாவரத்தில்  துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துப்  பேசியிருந்தாலும் தூத்துக்குடி சென்று மக்களுக்கு ஆறுதல் கூற முயன்றிருந்தாலும்கூட கைது செய்யப்பட்டிருப்பார்.  இப்படியான கைதுகள் பலவற்றையும் இந்த இரண்டரை மாதத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மொத்தத்தில் அரசு இப்படி கைது செய்து சிறையிலடைக்கும் அணுகுமுறையை மேற்கொள்ள காரணம் என்ன? என்பதைத் தான் புரிந்துகொண்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

 

அடக்குமுறையின் வடிவம் என்ன?

தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலுக்கு வெளியே போராட்ட அரசியல் வளர்ந்து வருகிறது. பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் தன்னெழுச்சியாகப் போராடுகின்றனர். அதற்கு ஆதரவாக நகர்ப்புறம் சார்ந்த நடுத்தர வர்க்கப் பிரிவினர் போராட்டக் களத்தில் இணைந்துள்ளனர். இந்த கவனிக்கத்தக்க மாற்றம் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.

இப்படியானப் போராட்ட அரசியல் மக்கள் முகாமின் போராட்ட வலிமையாக அரசை அச்சுறுத்தும் அளவுக்கு வளர்த்துவிட்டதா? என்றால் அதுவும் உண்மை இல்லை. ஆனால், அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக பொதுக்கருத்தை உருவாக்கும் அளவுக்கு இவ்வரசியல் வளர்ந்துள்ளது.  அரசின் கொள்கைகளை வரவேற்றுக் கொண்டிருந்த மக்கள் அதை எதிர்த்து கேள்வி எழுப்புவதும், தடுத்து நிறுத்தப் போராடுவதுமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசின் பொருளியல் கொள்கை மற்றும் அதன் நடைமுறை பற்றி  மக்களிடையே தனக்கு இருந்த கருத்தியல் மேலாண்மையை அரசு இழந்துள்ளது. இதை மீண்டும் பழையபடி சீர் செய்வதற்கு இத்தகைய ஓர் அடக்குமுறை அதற்கு தேவைப்படுகிறது. அடக்குமுறை வடிவம் எப்படி உள்ளது? ஆள் கடத்தல், இயக்கங்களுக்கு தடை, காணாமல் அடிக்கப்படுதல், அடித்து உதைத்து சித்திரவதை செய்தல், இயக்க அலுவலகங்களை முடக்கிப் பூட்டுதல், இயக்கங்களின் தலைவர்களைத் தேடித்தேடி கைதுச் செய்தல், ’ஜெலட்டின் குச்சிகள், வெடிகுண்டுகளோடு சிக்கினார்கள்’ என்று பரப்புரை மேற்கொள்ளுதல், சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் பலரையும் கைது செய்தல், பல மாதங்களுக்குப் பிணை மறுத்து சிறையில் வைத்தல் போன்றவை எல்லாம் அடக்குமுறை  வடிவங்கள் தான். அவையெல்லாம் இப்போதைக்கு நடக்கவில்லை.  அடுத்தஅடுத்த சுற்றுப் போராட்ட வளர்ச்சியில் அடக்குமுறையின் தன்மையும் தீவிரம் பெற்றுவரும்.  இன்றைக்கு நடப்பது வேறு? அது என்ன?

 

  1. அனுமதியின்றி நடத்தப்படும் ஒன்றுகூடல், சாலை மறியல், இரயில் மறியல், முற்றுகை ஆகிய போராட்டங்களுக்கு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பது. பொது சொத்துக்கு சேதம் இல்லாத போதும் சிறையிலடைப்பதை ஒரு வழக்கமாக கடைபிடிப்பது. எனவே, சிறை செல்லும் அளவுக்கு தத்துவார்த்த பலமும் அமைப்பு வலிமையும் ஒருங்கே வாய்க்கப் பெறாத இயக்கங்களை அனுமதியோடுதான் எதையும் செய்தாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுவது

 

  1. அனுமதிகேட்டு காவல்துறையை அணுகினால் அனுமதி மறுப்பது. இவ்விடத்தில் அனுமதி பெறுவதற்காக எல்லா அமைப்புகளும் நீதிமன்றம் செல்ல இயலாது. பெரிய கட்சிகள் மற்றும் சிற்சில இயக்கங்கள்தான் அடுத்தக்கட்டமாக நீதிமன்றம் சென்று அனுமதி பெற முடியும்.அதற்கான வழக்கறிஞர் மற்றும் பொருளாதார துணை வேண்டுமாகையால். சிறு இயக்கங்கள் பெருமளவு வடிகட்டப்பட்டு விடும்.

 

  1. முகநூல் பதிவுகள், தொலைக்காட்சிப் பேட்டிகள், மக்களை நேரடியாக சந்திப்பது, துண்டறிக்கை விநியோகம் செய்வது என எல்லாவகை மக்கள் தொடர்பு வழிகளையும் சட்ட விரோதம் என்று சொல்லி மக்களிடம் இருந்து இயக்கங்களைத் தனிமைப்படுத்துவது.

 

  1. இதில் கைது செய்யப்படுபவர்கள் எல்லோருக்கும் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் பிணை கிடைத்துவிடுகிறது. உயர்நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்டு உச்சநீதிமன்றம் வரை செல்லும் தேவை யாருக்கும் எழவில்லை. எனவே, நீண்ட நாளைக்கு சிறையில் அடைப்பது என்பதைவிட ஒரு சில நாட்கள் சிறையில் அடைப்பதால் ஒருவித அச்சவுணர்வை ஏற்படுத்தி புதிதாக அரசியலுக்கு வந்துள்ளவர்களை மீண்டும் பழைய இடத்திற்கு நகரச் செய்வது. மக்களை ஆதரவற்றவர்களாகக் களத்தில் நிறுத்துவது.

 

இதுதான் இப்போது அரசு எடுத்திருக்கும் அடக்குமுறை வடிவமாகும். அரசு என்னும் இரக்கமற்ற அடக்குமுறை எந்திரந்தின் கோர வடிவத்தின் நிழல் போன்றதுதான் இது. வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக கருத்தை உருவாக்க கூடிய இயக்க ஆற்றல்களுக்கு வாய்ப்பூட்டுப் போடுவது, மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவது, எதிர்ப்பு வளர்ந்துவிடாமல் முளையிலேயே கிள்ளும் அணுகுமுறையாக இதை கையில் எடுத்துள்ளது.  அதன் ஒரு பகுதிதான்,  இந்த இரண்டரை மாதங்களில் பல ஆற்றல்மிகு தனிநபர் செயற்பாட்டாளர்களும் இயக்கத் தலைமைகளும்  கைது செய்யப்பட்டதாகும்.

சேலம் – சென்னை எட்டுவழிச் சாலையின்  அவசியம், ஸ்டெர்லைட்டின் தேவைப் பற்றி தங்கு தடையின்றி மக்களிடம் கருத்துகளை எடுத்துச் செல்லுதல், வளர்ச்சித் திட்டங்கள் இல்லாமல் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்று மிரட்டுதல் போன்ற பரப்புரைகள் வேகமாக நடந்துவருகிறது. இன்னொரு பக்கம் இதை கேள்விக்குள்ளாக்குவோரின் வாயை அடைத்துள்ளது அரசு. இதன்மூலம் உலகமய, தாராளமய, தனியார்மயப் பொருளியல் கொள்கைகள் குறித்து அரசு மக்களிடம் செலுத்தி வந்த செல்வாக்கை மீள்கட்டமைப்பதாகும்.

 

இந்நேரத்தில் நாம் செய்ய வேண்டியவை குறித்த சில முன்வைப்புகள்.

 

  1. துண்டுதுண்டாக பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து வந்த கடந்தகால செயல்பாட்டு முறைக்கு மாறாக அரசின் வளர்ச்சிக் கொள்கையின் கார்ப்பரேட் சார்பு பற்றிய உரையாடலை நடத்தும் வழிவகைகளைக் கண்டறிய வேண்டியுள்ளது. கூடவே, அரசின் வர்க்க சார்பு, அடக்குமுறை தன்மை ஆகியவற்றை மக்களிடம் அம்பலப்படுத்தி இந்த அரசு, அரசமைப்பு குறித்து இருக்கும் நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

 

  1. இந்த அடக்குமுறைக் கட்டத்தின் முதல் இலக்கு புதிதாக அரசியல் களத்திற்கு வந்துள்ள நடுத்தர வர்க்க இளைஞர்களை மிரட்டி உருட்டி ‘தன் பெண்டு, தன் பிள்ளை , தன் குடும்பம்” என வாழும்படி வீட்டுக்குள் முடக்குவதாகும். எனவே, ஏற்கெனவே அமைப்புகளை நோக்கி வந்தவர்களை மேலும் அரசியல்படுத்தி இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு களத்தில் நிற்க வேண்டும். தமிழ்நாடு தன்னுடைய சொந்த போராட்ட வரலாற்றில் இதைவிட பெரிய அடக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளது. ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அசராமல் போராட்டக் களத்தில் ’நாட்-அவுட்’ பேட்ஸ்மேனாக இருக்கும் முன்னோடித் தலைவர்கள் பலர் உண்டு. தோழர்கள் நல்லக்கண்ணு, தியாகு, கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன், பொழிலன், பாலன் உள்ளிட்டப் பலர் இன்றும் காலூன்றி களத்தில் நிற்பதுவே நமக்குள்ள முன்மாதிரிகளாகும்.இப்படி உறுதிகுன்றாமல் நிற்பதற்கு தத்துவமே அடிப்படையாகும். தத்துவத்தில் ஊன்றி நின்று அதன் துணையுடன் வரலாற்றின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால்  சூறைக் காற்றாலும் பெரும்புயலாலும்கூட ஒருவரை அசைத்துவிட முடியாது.!  300 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்ட தோழர் முகிலன், தனக்கு கிடைத்த சில மணித்துளி இடைவெளியில் அடக்குமுறைக்கு எதிராக ஊடகத்தில் முழங்கவில்லையா? சிறை அவர் போர்க்குணத்தை சின்னாபின்னமாக்கிவிட்டதா என்ன? இந்த தருணத்தில் நமக்கு எடுத்துக்காட்டாக அருந்தியாகத்திற்கு சொந்தக்காரரான தோழர் முகிலன் மதுரை சிறையில் இருந்து கொண்டுதானே உள்ளார். .

 

  1. காவி-கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிரான பரந்த ஐக்கியத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவையுள்ளது.தனியொரு இயக்கத்தின் மீதான அடக்குமுறையாக ஆளும்வர்க்கம் இதை தொடுக்கவில்லை. எனவே,தனியொரு இயக்கமாக இதை எதிர்கொண்டு முன்னகர முடியாது. கூட்டாய் நின்றுதான் இதை சந்திக்க முடியும்.  அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபட்ட செயல்பாடுகளுக்காக முன்னெடுக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களில்கூட இயக்கங்களின் பங்கேற்பு ஊக்கமுடன் இல்லை.  இக்காலப்பகுதியில் எடுக்கப்பட்ட ஓரிரு முயற்சிகளும் குறிப்பிடத்தகுந்த செயல்வடிவம் பெறவில்லை. இதற்கு மாறாக ஒன்றுபட்ட முயற்சிகள் குறித்து சிந்தித்து செயல்பட வேண்டியுள்ளது.

 

ஸ்டெர்லைட் ஆலை மூடல்கூட அரசின் நாடகம்தான். வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தனது பரப்புரை எந்திரத்தை கட்டவிழ்த்துள்ளது. வேதாந்தா குழுமத்தின் இலாப வெறிக்கு ஸ்டெர்லைட் ஆலைத் திறப்பது சமரசம் செய்ய முடியாத ஒன்றாக இருக்கிறது. மக்களைப் பொருத்தவரை ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டியது  வாழ்வா? சாவா? பிரச்சனையாகும். இன்னொரு சுற்றுப் போராட்டம் காத்திருக்கிறது. இத்தனை அடக்குமுறைக்குப் பிறகும் தூத்துக்குடி மக்கள் துணிவுடன் எதிர்கொள்வர் என்பதில் ஐயமில்லை. அந்நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடக் கோரி தமிழகம் தழுவிய அளவில் ஆதரவைக் கட்டியெழுப்ப வேண்டிய கடமை நம்முன் இருக்கிறது.

எனவே, கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மக்களை சந்திக்கும் உரிமை, பரப்புரை செய்யும் உரிமை, போராடும் உரிமை, போராட்டங்களுக்கு மக்களை அணி திரட்டும் உரிமை, மக்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை, அரசமைப்பு சட்ட உரிமைகளை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த அடக்குமுறைக்கு எதிராய் ஒன்றுபட்டு நிற்போம்! அரசு குறித்த அனைத்தளாவிய உண்மைகளைக் இந்த குறிப்பான தருணத்தின் வழியாக விளக்கிடுவோம்! கருத்தியல் மேலாண்மையைத் தக்கவைத்து போராட்ட வலிமைக்கான சமூக அடித்தளத்தை வளர்க்கத் திட்டமிடுவோம்!

 

அடக்குமுறை செய்திட முடியும் – கொள்கை

அழிக்குமுறை எவ்வாறு முடியும்?

ஒடுக்கு சிறை காட்டுதல் முடியும் – உணர்

வொடுக்குதல் எவ்வாறு முடியும்?

– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

 

செந்தில், ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழகம்

tsk.irtt@gmail.com

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW