ஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே!”

10 Aug 2018

“ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே!”
—————————–
இயற்கை வளங்களைச் சூறையாடும் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி வட்டாரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழித்தது மட்டும் பயங்கரவாதம் அல்ல! நிலம், நீர், காற்று, கடல் என அனைத்து வளங்களையும் சீரழித்த வேதாந்தாவின் கொடுஞ் செயல்களுக்கு அரசு வழி வகுத்ததும் பயங்கரவாதமே ஆகும்!

இப்பயங்கரவாதச் செயலைத் தொடர, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதியளித்தாலும் அது பயங்கரவாதச் செயலுக்கு ஒப்பாகும்!

“மே 22 ” அன்று நடைபெற்றப் போராட்டத்தில், காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலில் ஏற்பட்ட
14 பேர் உயிரிழப்புக்குப் பிறகு “மே 28” அன்று ஸ்டெர்லைட் ஆலையின் வாயிலுக்கு(கேட்டுக்கு) பூட்டுப் போட்டு சீல் வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது!

“ஸ்டெர்லைட்டை அப்புறப்படுத்து; தூத்துக்குடியைத் துப்புரவுப்படுத்து” என்ற முழக்கத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் முன் வைத்தது.ஆனால், மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு என மாவட்ட ஆட்சியர் வழியாக, அரசு அறிவித்து ஆலையினுள் சேமிக்கப்பட்டிருந்த கந்தக அமிலம் போன்ற சில பொருள்களை மட்டும் அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டது.

ஆனால், ஆலை மூடலுக்கான தமிழக அரசின் அரசாணை என்பது வலுவானதாக இல்லையென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எடுத்துரைத்தும், தவறைச் சுட்டிக் காட்டியப் பிறகும் தமிழக அரசு மெத்தனமாக இருக்கிறது. தற்போதுள்ள அரசாணையே போதும் என….. சட்டமன்றத்தின் மூலம் ஆலை மூடலுக்கான கொள்கை முடிவு எடுக்காமல் இருக்கிறது.

இந்தச் சூழலில் தான், ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கான அரசாணையை எதிர்த்து டெல்லியில் இருக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடுத்தது. ஆனால், தமிழக அரசோ ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனைத்து உரிமங்களையும் ரத்து செய்யாமல் ஆலையை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகளையே உருவாக்கின.

இத்தகையப் பின்னணியில் தான், மீண்டும் ஆலையை திறப்போம் என ஸ்டெர்லைட் நிர்வாகம், 28-7-2018 அன்று மீண்டும் திமிராகப் பேட்டியளித்தது!

1998 ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தப் போதும், 2010 ஆம் ஆண்டில் அதே நீதிமன்றம் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தீர்ப்பளித்தப் போதும், அன்றைய மத்திய – மாநில ஆட்சிப் பொறுப்புகளில் இருந்த காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளே…. மூடப்பட்ட ஆலையை மீண்டும் மீண்டும் திறப்பதற்கு
வழிவகுத்தன.

தற்போது, மோடியின் அரசும் அதன் எடுபிடி… எடப்பாடி அரசும் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தாவிடம் மண்டியிட்டுள்ளன!

2010 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தப் போது…. அவ்வழக்கின் தீர்ப்பில், சுற்றுச்சூழலைச் சீரழித்த குற்றங்களுக்காக 100 கோடி ரூபாய் தண்டத்தொகையை(அபராதம்) மட்டும் உச்ச(அ) நீதிமன்றம் விதித்தது…

ஆலையை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்பை வழங்கியது என்பதை நாம் அறிவோம்!

அதுபோல, தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கும் வேதாந்தா (ஸ்டெர்லைட்) நிர்வாகம் ஆலைக்குள் நுழைந்து, பராமரிப்புப் பணியை செய்வதற்கு பசுமைத் தீர்ப்பாயம் மூலம் அனுமதியளிக்க “காவிப் பயங்கரவாத அரசு” வழிவகுத்துள்ளது.

எனவே, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் போது, மக்கள் பெருந்திரளாக போராட்டத்திற்கு வருவதைத் தடுக்கவே, “கார்ப்பரேட் அடிமை அரசும்” ( தமிழக அரசு) பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து, பலரை காவல்துறை மூலம் கொடுமைபடுத்தியதோடு, மக்களுக்கு உளவியல் ரீதியான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

* கடந்த 22 ஆண்டுகளாக தூத்துக்குடி வட்டாரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழித்து எண்ணற்ற மக்களைக் கொன்றொழித்த வேதாந்தா நிறுவனத்திற்குத் துணைநிற்கும் சமூக விரோதிகளை எச்சரிப்போம்!

* ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வழிவகுக்கும் நீதிமன்ற நடவடிக்கையைக் கண்டிப்போம்!

* அரசப் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் கிளர்ந்தெழுவோம்!

*காவி- கார்ப்பரேட் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடுவோம்!

* ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமானால், அடுத்தப் போராட்டம் “ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டமே” என உரக்கப் பேசுவோம்!

* ஸ்டெர்லைட் டை அப்புறப்படுத்தும் வரை…
சுற்றுச்சூழலைச் சீரழித்த அனில் சந்தீப் அகர்வால் கைது செய்யப்படும் வரை…
வேதாந்தா நிறுவனச் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் வரை… போராளிகள் 14 பேரை கொடுரமாகக் கொன்ற கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை… அறவழிப் போராட்டத்தை முன்னெடுப்போம்!

* போராட்டக் களத்தில் உயிர்நீத்தப் போராளிகளின் இலட்சியத்தை நிறைவேற்றுவோம்!

“பத்துத்தடவை பாடை வராது
பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா!
செத்துமடிதல் ஒரே ஒருமுறைதான் …
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா! -“பாவலர் காசி ஆனந்தன்”
—————————–
பி.மி. தமிழ்மாந்தன்,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், தூத்துக்குடி
10-8-2018 பேச: 9597705172
—————————–

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW