எடப்பாடி அரசே தூத்துக்குடி கைது நடவடிக்கைகளை உடனே நிறுத்து!

21 Jun 2018

– தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர். வாஞ்சிநாதன் தூத்துக்குடி போராட்ட வழக்கில் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். 1996 தொடங்கி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நடந்து வருகிறது. மே 22 வரை நடந்த 99 நாட்கள் பல்வேறு கிராமங்கள், பகுதியில் தன்னெழுச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், வணிகர் சங்கப் பேரவை, வீராங்கனை பெண்கள் அமைப்பு, மக்கள் அதிகாரம், பு.இ.மு, சிபிஐ, சிபிஐ-எம் நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள் இப் போராட்டங்களில் முன் நின்றிருக்கிறார்கள்.

மே22 அன்று தூத்துக்குடி மாநகரம் முழுவதும் மக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். கார்ப்பரேட், அரசு, காவல்துறையின் திட்டமிட்ட சதி 3 பெண்கள் உட்பட 13 பேருக்கு மேல் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில், தடியடியில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பு.இ.மு. தோழர் தமிழரசன், மக்கள் அதிகாரம் தோழர் மதுரை ஆரியபட்டி செயராமன் இருவரும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர். இந்திய, தமிழக அமைச்சர்கள் போராட்டக்களத்தில் தீவிரவாதிகள் நுழைந்து விட்டனர் எனக் கூக்குரலிட்டு மக்கள் அதிகாரம் தோழர்களை தமிழ்நாடெங்கும் தேடிக் கைது செய்து வருகின்றனர். 6 மக்கள் அதிகாரம் தோழர்கள் தேசிய  பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர்.

மக்கள் அதிகாரம் தோழமை அமைப்பான மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநிலச் செயலாளரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தூத்துக்குடி அமைப்பாளரான வழக்கறிஞர் அரிராகவன் இருவரையும் மே22 வன்முறைகளின் மூளையாகச் செயல்பட்டவர்கள் என முன்பிணை வழக்கில் குற்றம் சாட்டியுள்ளது. உயர்நீதிமன்றம் இருவருக்கும் முன்பிணை மறுத்துள்ளது. தூத்துக்குடி மக்கள் முன்னெடுத்த நோயற்ற வாழ்வுரிமைக்கான, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான, கார்ப்பரேட் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வலியுறுத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்தும் குற்றச்சாட்டாகும்.

சட்டப்பூர்வமாக இயங்கும் மக்கள் அதிகாரம் மற்றும் தோழமை அமைப்புகளை தீவிரவாதிகள் என முத்திரை குத்திக் கைது செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. போராட்டத்தில் முன்நின்ற போராளிகளை, போராட்டத்தில் கலந்து கொண்ட பகுதிகளின் இளைஞர்களை நூற்றுக்கணக்கில் கைது செய்வது தொடர்வதானது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும். தொடர் கைதுகளை எடப்பாடி அரசின் காவல்துறை கைவிட வேண்டும். தொழிற்சாலை பராமரிப்புக்காக ஊழியர்களை, மின்சாரத்தை அனுமதிக்கக் கோருவது தூத்துக்குடி மக்களை மீண்டும் அச்சப்படுத்தும் செயலாகும். ஸ்டெர்லைட் தொழிற்சாலையை தூத்துக்குடியிலிருந்து அப்புறப்படுத்துவது அரசு செய்ய வேண்டிய உடனடிக் கடமையாகும். காவல்துறைஆட்சியின் கீழுள்ள தூத்துக்குடி மக்களின் அமைதியும், அச்சமற்ற வாழ்க்கையும் பெற கைது – சிறை என காவல்துறையால் அலைக்கழிக்கப்படுவதும் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டின் இயக்கங்களின் செயல்பாடுகளைக் கோருகிறது.

ஓங்கிக் குரலெழுப்புவோம்! காவல்துறையே! கைது செய்வதை நிறுத்து! வழக்குககளைத் திரும்பப் பெறு!

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW