காந்தியைக் கொன்றவர்களே கெளரியையும் கொன்றார்கள்..

17 Jun 2018

(2017 இல் காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்த கட்டுரையைன் முழுமையான மூல வடிவம் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய அறுவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் ராம் சேனா அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தான் கொன்றதற்கு வாக்குமூலம் வழங்கி இருக்கும் நிலையில் கட்டுரை மீள் பதிவு செய்யப்படுகிறது)

காந்தியைத் துளைத்த தோட்டாக்கள் இன்னும் ஓயவில்லை. இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 2017,செப்டம்பர் 5 ஆம் நாள் மாலை 7:30 மணியளவில் பெங்களூருவில் உள்ள இராஜேஸ்வரி நகரில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இம்முறை 55 வயது கொண்ட பெண் பத்திரிக்கையாளரும் செயற்பாட்டாளருமான கெளரி பலிபீடத்தில் ஏற்றப்பட்டிருந்தார். கர்நாடகாவில் இது இரண்டாவது உயிர்.

2015 ஆகஸ்ட் 30 அன்று வட கர்நாடகாவில் தார்வட் என்ற இடத்தில் காலை 8:40 மணியளவில் எம்.எம். கல்புர்கி(77) சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் ஒரு பகுத்தறிவுவாதி, வரலாற்று ஆய்வாளர். லிங்காயத்துகள் இந்து மதத்தின் பகுதியல்ல என்பதை நிறுவும் வரலாற்று நூலை எழுதியவர். 2015 பிப்ரவரி 16 அன்று பகுத்தறிவுவாதியும் இடதுசாரி சிந்தனையாளருமான கோவிந்த் பன்சாரே (81) மகாராஷ்டிராவில் உள்ள கோகல்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சிவாஜி யார்? என்ற தலைப்பில் ஒரு  வரலாற்று நூலை எழுதியவர். 2013 ஆகஸ்ட் 20 அன்று பகுத்தறிவாளரும் மருத்துவருமான நரேந்திர தபோல்கர்(52) சுட்டுக் கொல்லப்பட்டார். தபோல்கர் முதல் கெளரி வரை இவர்கள் எல்லோரையும் சுடுவதற்கு பயன்படுத்தப்பட்டது ஒரே துப்பாக்கித் தான். அது 7.65 மி.மி. நாட்டுத் துப்பாக்கியாகும்!

 

யார் கொன்றார்கள்? என்பதை காவல்துறை கண்டறிய வேண்டும். பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பதைப் புலனாய்வுத் துறை கண்டறிய வேண்டும். கெளரி கொல்லப்பட்டப் பின் யார் அதை கொண்டாடினார்கள்? என்பதை மட்டும் நம்மால் உறுதியாக சொல்ல முடியும். ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் கெளரியின் முடிவைக் கொண்டாடினார்கள். ”ஒரு நாய் ஒரு நாயைப் போலவே கொல்லப்பட்டது. அவள் பெற வேண்டியதைப் பெற்றுவிட்டாள்” என்று டிவிட்டரிலும் முகநூலிலும் எழுதி மகிழ்ந்தார்கள். ”ஆர்.எஸ்.எஸ். காரர்களின் மரணத்தை கெளரி கொண்டாடாமல் இருந்திருந்தால் அவர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்” என்று வெளிப்படையாகவே டி.என்.யுவராஜ் என்ற பா.ச.க. தலைவர் கருத்துச் சொன்னார். இந்துத்துவ சக்திகளை எதிர்ப்பதில் தனது துணிவுக்கும் அச்சமின்மைக்கும் பெயர் போனவர் கெளரி. சங் பரிவார் முகாம்களில் இருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். ஸின் அச்சுறுத்தல் பட்டியலில் இருப்பவர்களில் தான் நான்காவது இடத்தில் இருப்பதாக அவர் அறிந்திருந்தார். கொலை மிரட்டல்கள் எம்மை மெளனிக்க முடியாது என்று சொல்லியிருந்தார். உடன் இருப்பவர்களின் வலியுறுத்தலால்தான் அவர் தனது வீட்டில் சி.சி.டி.வி. கேமராப் பொருத்தினார். அந்த கேமராக்களில் இப்போது அவரது கொலை பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் நடந்தேறிய கொலைகளின் புலனாய்வின் படி கொலைக்குப் பின்னணியில் இருப்பது சனாதன சன்ஸ்தி என்ற சங் பரிவார் அமைப்பு என்பது தெரிய வந்துள்ளது. அதன் துணை அமைப்பான இந்து ஜன்ஜகிரதி சமிதிக்கு தொடர்பிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இவ்வமைப்புகள் தமக்கும் இக்கொலைகளுக்கும் தொடர்பில்லை என்று மறுக்கின்றன.

 

கெளரி ஏன் குறிவைக்கப்பட்டார்? கெளரியின் தந்தை லங்கேஷ் ஒரு பத்திரிக்கையாளர். அவர் லோகியா இயக்கப் பின்னணி கொண்டவர், பகுத்தறிவாளர். லங்கேஷ் என்ற பெயரில் கன்னடப் பத்திரிக்கை நடத்தியவர். 1970 களில் நடந்த எமர்ஜென்சி எதிர்ப்பு ஜனநாயகப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். அவரது மகளான கெளரியும் பத்திரிக்கையாளராகவும் செயற்பாட்டாளராகவும் தனது வாழ்வை அமைத்துக் கொண்டார். 1980 களில் இருந்து கர்நாடகாவில் சமூக அரசியல் செயற்பாட்டு வெளியில் இயங்கிவருபவர். தன் தந்தையின் மறைவுக்குப்பின் அவரது பத்திரிக்கையை எடுத்து நடத்தமுயன்றார். தனது சகோதரர் அதற்கு இசைய மறுத்ததால் கெளரி லங்கேஷ் என்ற பெயரில் கன்னடப் பத்திரிக்கை நடத்தினார். கன்னடம், ஆங்கிலம் இரண்டிலும் எழுதக்கூடியவர். தலித் மக்கள், பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர் என விளிம்புநிலை மக்களின் போராட்டங்களில் தோளோடு தோளாக நின்றவர். இவர்களுக்கிடையிலான ஐக்கியத்தை உணர்வுபூர்வமாக விரும்பியவர். பா.ச.க. அரசுக்கு எதிரானப் போராட்ட முகங்களாக வந்துள்ள புதிய இளைஞர்களான கண்ணையா குமார், ஜிக்னேஷ் மேவானி போன்றவர்களைத் தனது வளர்ப்பு மகன்களாக கருதி அன்புப் பாராட்டும் பண்பு கொண்டவர். நியாயவுணர்ச்சியும் குழந்தைத்தனமும் நிரம்பியவர் என்பதை அவரது தோற்றமும் எழுத்துகளும் நமக்கு காட்டுகின்றன. தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக நின்றவர், தமிழீழ விடுதலையை ஆதரித்தவர். காவிரிச் சிக்கலில் தமிழர்களின் உரிமையை மறுக்கக்கூடாதென்று நிலையெடுத்த கன்னடர். மாவோயிஸ்ட் போராளிகளில் சிலரை மைய நீரோட்ட அரசியலுக்கு கொண்டு வருவதில் கர்நாடக அரசுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையிலான அனுசரணையாளராக செயல்பட்டவர். இந்த காரணத்திற்காக மாவோயிட்கள் தான் அவரை கொலை செய்திருக்கக் கூடும் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் திசை திருப்பிவிடப் பார்த்தார்கள். ஆனால், கெளரிக்கு வீரவணக்கம் செலுத்தி, அவரது கொலையைக் கண்டித்ததுடன், அடையாளப் போராட்டங்களாக இல்லாமல் அதற்கெதிராக வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தை நடத்த வீதியில் இறங்குமாறு மாவோயிஸ்ட் கட்சி அறைகூவல்விட்டது.

 

ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு ஆத்திரம் ஊட்டிய விசயம் என்ன? என்பது இன்னும் துல்லியப்பட வில்லை. குஜராத்தில் நடந்த இஸ்லாமியப் படுகொலைகளில் மோடி மற்றும் அமித் ஷாவின் பங்கை அம்பலப்படுத்தும் வகையில் ரானா ஆயூப்பால் எழுதப்பட்ட ’குஜராத் ஆவணங்கள்’ என்ற நூலை 2016 இல் கன்னடத்தில் மொழிபெயர்த்து கொண்டு வந்தார் கெளரி. கெளரி ஒரு லிங்காயத். கர்நாடகாவில் உள்ள லிங்காயத் என்ற சாதி, உண்மையில் சாதி எதிர்ப்பு இயக்கமாக தோன்றி ஒரு சாதியாக பரிணமித்தது. கல்புர்கியின் வரலாற்று நூல் கிளப்பிய புயலில் இருந்து லிங்காயத்துகள் இந்து மதத்தின் பகுதியல்ல, லிங்காயத் என்பதை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை லிங்காயத்துகளின் மக்கள் திரள் கோரிக்கையாக வளர்ந்து நிற்கிறது. லிங்காயத் தனி மதமாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் கர்நாடகாவில் இந்துத்துவ அரசியலின் வளர்ச்சிக்கு அதுவொரு தடைக்கல்லாக அமையும். ஆர்.எஸ்.எஸ். முகாம் லிங்காயத்துகளின் இக்கோரிக்கையை ஏற்கவில்லை. அண்மையில் ஜூலை மாதத்தில் விஜயபுரி பல்கலைக்கழகத்திற்கு அக்கமாதேவி பல்கலைக்கழகம் எனப் பெயர்மாற்றம் செய்யும் விழாவில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா லிங்காயத்துகளின் தனி மதத்தினர் என்ற கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தார். சித்தராமையா இந்நிலைப்பாட்டிற்கு வந்ததில் கெளரியின் பங்குண்டு என்று கருதப்படுகின்றது. கெளரி விவசாயிகள், பழங்குடிகள், பெண்கள், தலித்துகள் என ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்காகப் போராடியவர். எப்போதும் ஒடுக்கப்பட்டோருக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்தி வந்தார்.

 

கெளரியின் கடைசி கட்டுரை “in the age of false news” ” பொய் செய்திகளின் யுகத்தில்” என்ற தலைப்பிலானது. ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ முகாம் எப்படி பொய்யை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக இருக்கிறது என விளக்குகிறார். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளின் உண்மைத்தன்மையை அறியாமல் பரப்பக் கூடாது என்று சக தோழர்களுக்கு வேண்டுகோள்விடுக்கிறார். நிதின் கட்கரி, பியூஸ் கோயல் போன்றோரின் பொய்ப் பரப்புரைகளை சான்றுகளோடு எடுத்துக்காட்டுகிறார்.

 

கெளரியின் கொலையை ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் ஆணையர் அல் ராத் ஹுசைன் கண்டித்துள்ளார். ஆனால், இந்தியாவின் பிரதமரோ மெளனம் காக்கிறார். அதனினும் கொடுமை என்னவென்றால் கெளரியின் படுகொலையைக் கண்டு அக மகிழ்ந்து டிவிட்டர் இடுகைப் போட்டவர்கள் பலரையும் மோடி பின் தொடர்பவராக இருக்கிறார். இது போன்றவர்களை இந்நாட்டின் பிரதமராய் இருக்கும் மோடி பின் தொடரக் கூடாதென்ற குரல்கள் எழுந்தபோது, மோடி எவரையும் பின் தொடர்வதை நிறுத்திக் கொண்டவர் இல்லை, கருத்துச் சுதந்திரத்தின் மீது பற்று கொண்டவர் என்று பா.ச.க. அதிகாரப்பூர்வமாக அறிக்கை தந்தது. மோடி குஜராத்தின் முதல்வராய் இருந்த போது முகமது அலி ஜின்னா குறித்து ஜஸ்வந்த் சிங் எழுதிய நூலைத் தடைசெய்தார். காந்தியின் போராட்டங்கள் (Great Soul: Mahatma Gandhi and his struggle with India) குறித்து ஜோசப் லெலிவெல்டு எழுதிய நூலை தடை செய்தார். டிவிட்டரில் தன்னைத் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து, பாலியல் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு பா.ச.க. வில் உயரிய பதவிகள் பரிசாக வழங்கப்படும்( டஜ்வாடர் பாகா குறித்து) என்று பதிவிட்ட ஜுவாலா குருநாத் என்ற பெண்ணின் டிவிட்டர் பக்கத்தை விலக்கி வைத்தார். எனவே, கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதால் மோடி, கெளரியின் கொலையைக் கொண்டாடும் டிவிட்டர் பதிவாளர்களிடம் இருந்து விலகி இருக்க மறுக்கிறார் என்று சொல்வது  பச்சைப் பொய்.

 

இந்தியா பன்மைத்துவம் நிரம்பிய சமூகம். அதன் வரலாற்று வழியில் நேரெதிரானவை அக்கம் பக்கமாகவும் ஒன்றில் ஒன்று ஊடுருவியும் கலந்தும் முரண்பட்டும் இருக்கும் ஒரு சமூக யதார்த்தம் கொண்டது. அதற்கு காரணம், அதன் புவியியல் அமைப்பும்கூட. இருபுறம் திறந்து கிடக்கும் கடலும், கைபர் கால்வாயும் தொடர்ச்சியான படையெடுப்புகளுக்கும் ஊடுருவல்களுக்கும் வழிவகுத்தது.  இது இப்பிராந்தியத்தின் சமூக இயல்பைக் கட்டமைத்தது. எடுத்துக்காட்டாக சீன வரலாற்றில் இப்படியான  இடப்பெயர்வு, ஊடுறுவல், ஒன்று கலத்தல், படையெடுப்புகள் போன்றவை ஒப்பீட்டளவில் இல்லை. இந்தியாவின் இயல்புக்கு மாறாக ஒற்றைத் தன்மை கொண்டதாக இதை மாற்றியமைக்க முயல்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங் பரிவார் கும்பல்.

நேரு காங்கிரசுக்குள் பரந்த ஜனநாயகத்தை நிறுவத்தவறினார்; அதை தன் குடும்பத் தலைமையின் கீழ் நிலை நிறுத்தினார் இன்றைய பா.ச.க. எழுச்சிக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. ஒரு குடும்பத் தலைமையைச் சார்ந்திருந்த காங்கிரசு கிட்டத்தட்ட பத்தாண்டு காலத்திற்குள் அந்த குடும்பத்தில் இருந்து காங்கிரசுக்கு தலைமைக் கொடுத்துக் கொண்டிருந்த மூன்று பேரை இழந்தது. அதாவது, சஞ்சய் காந்தி, இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி ஆகிய மூவரும் ஒரு பத்தாண்டுகளுக்குள் கொல்லப்பட்டனர் அல்லது எதிர்பாராத இறப்புக்கு ஆளாயினர். இது கடந்த கால் நூற்றாண்டு கால இந்திய அரசியலின் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு காரணியாக அமைந்துள்ளது.

 

புதிய தாராளவாத, உலகமயக் கொள்கையின் அடுத்தக் கட்டப் பாய்ச்சலை முன்னகர்த்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தது காங்கிரசு. காங்கிரசின் பொருளாதார தோல்வியும் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியும் பா.ச.க. வின் எழுச்சிக்கு பட்டுக் கம்பளம் விரித்தது. துல்லியமான பொருளில் புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வியே காங்கிரசின் தோல்வியாகவும் பா.ச.க.வின் எழுச்சியாகவும் இந்திய அரசியலில் உருப்பெற்றுள்ளது.  காங்கிரசின் அரை நூற்றாண்டு கால ஆட்சியே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுத்தது  என்று பா.ச.க. கட்டமைத்தது. காங்கிரசின் போலி மதசார்பின்மையைப் பா.ச.க.  அம்பலப்படுத்தியது. வளர்ச்சியின்மை, வேலையின்மை, வறுமை, சர்வதேச அரங்கில் இந்தியாவின் தோல்வி ஆகிய அனைத்திற்கும் காரணம் காங்கிரசு என்றும் சமூக அளவில் முஸ்லிம்கள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி வெகு மக்களிடம் இதை உருவேற்றினர். முஸ்லிம்களை தமது உடனடி எதிரியாக முன் வைத்தனர். முஸ்லிம்களின் வாக்கு தமக்கு தேவையில்லை என்று பகிரங்கமாக அறிவித்தனர். பாகிஸ்தான் எதிர்ப்புடன் இணைந்த இஸ்லாமிய எதிர்ப்பு, கிறுத்துவ எதிர்ப்பு ஆகியவை இந்துக்களின் உடனடி அணி திரட்சிக்கு தேவையானவையாகவும் நீண்ட கால அர்த்தத்தில் கம்யூனிஸ்ட்கள் தமது எதிரி என கட்டமைத்து முன்னேறி வருகின்றனர். தாம் முன் வைப்பவற்றை வெகுசன தன்மையில் வெளிப்படுத்துவதிலும் இந்து பெருமைவாதம், மேன்மைவாதத்திற்குள்ளாக மக்களைக் கவர்ந்திழுப்பதும் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை மக்களின் கண்களுக்கு உருவகப்படுத்திக் காட்டுவதிலும் இந்துத்துவ சக்திகள் வெற்றிக் கண்டுள்ளன.

 

1930 ஆம் ஆண்டுகளின் பொருளாதார பெருமந்தத்தின் பின்னணியிலேயே இத்தாலியில் பாசிசம் உருப்பெற்றது. முசோலினி பாசிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். பாசிசம் என்ற இத்தாலி சொல்லின் பொருள் உதிரியான கம்புகளை இறுக்கிக் கட்டுவதாகும். அவர்கள் கம்யூனிஸ்ட்களை தமது எதிரியெனப் பிரகடனப்படுத்தினர். அவர்கள் சீருடையணிந்த கட்சி ஊழியர்களை உருவாக்கினார்கள். கம்புகளை வைத்துத்தான் அவர்கள் பயிற்சி எடுத்தார்கள். ஆட்சிக்கு வரும்வரை கம்யூனிஸ்ட்களைக் கம்பால் அடித்துத் தாக்கினர். ஆட்சிக்கு வந்தப் பிறகு கம்யூனிஸ்ட்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். முசோலினி அடையாளம் காட்டியப் பாதையில் இட்லர் வேகமாக நடைபோட்டு இறுக்கமான, நேர்த்தியான, அழகான இராணுவக் கட்டமைப்புக்குள்ளால் இதை வளர்ந்தெடுத்தார். முசோலினியின் தத்துவத்தை இட்லர் நிறுவனமயப் படுத்தினார். “ஆயுதம் ஏந்திய தீர்க்கதரிசிகள் உலகை வென்றுள்ளார்கள். ஆயுதமற்ற தீர்க்கதரிசிகள் அழிக்கப்பட்டார்கள்” என்பது முசோலினியின் வரிகளாகும். கொல்பவன் வெல்வான் என்பதே முசோலியின் தத்துவம்.

ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கூட்டத்தினர் ஆட்சியில் இருப்பதும் அவர்களின் துப்பாக்கிக் கலாச்சாரமும் முசோலினியின் நாட்களை நினைவுக் கொண்டு வருகின்றன. மிக முக்கியமான கேள்வி – கெளரியின் கொலை எந்த வகைப்பட்டது? பத்திரிக்கைச் சுதந்திரத்தை மட்டுப் படுத்தும் ஒன்றெனக் கொள்ளலாமா? கெளரி ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் பத்திரிக்கைச் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதுதான். ஆனால், இது போன்ற செயல்கள் இந்தியாவிற்கு புதிதா? பத்திரிக்கை சுதந்திரத்தில் உலகளவில் இந்தியா 126 ஆவது இடத்தில் இருக்கிறது! ஹரியானா சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங்கை 2002 ஆம் ஆண்டு அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ராமசந்திரா சத்திரபதி சில வாரங்களில் கொல்லப்பட்டார். அசாமில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் 30 ற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுரங்க மாஃபியாவுக்கு எதிராக எழுதிய நான்கு பத்திரிக்கையாளர்கள் ஜார்கண்டில் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரில் இருக்கும் அரசப் படைகளுக்கு எதிராக எழுதிய பத்திரிக்கையாளர் மாலினி சுப்பிரமணியம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். மத்தியப் பிரதேசத்தின் வியாபம் ஊழல் அம்பலமானதில் இருந்து நடந்துவரும் தொடர் கொலைகளை நாடே அறியும். இதுவரை 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ஒருவரும் கொல்லப்பட்டார். எனவே, பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான கொலையாக கெளரியின் கொலையைப் பார்ப்பது கொலையின் உண்மையான பரிமாணத்தைக் காணத் தவறுவதாகும்.

கெளரியின் கொலை இந்தியாவில் நடந்துவரும் ஒரு தத்துவார்த்தப் போரின்(ideological war) பகுதியாகும். ஒரு கருத்தை தத்துவார்த்த வகைப்படுத்தி அதை மக்களிடம் எடுத்துச் சென்று நடைமுறையாக்கும் பொழுது அது நிலைப்பெற்று பண்பாடாகிறது. ஆர்.எஸ்.எஸ். தாம் முன் வைக்கும் கருத்துக்கு எதிரான கருத்தியலை இப்படியான துப்பாக்கிச் சூடுகள் மூலம் இல்லாதொழிக்கப் பார்க்கிறது. அதன் மூலம், கெளரியைக் கொல்வது மட்டும் நோக்கமல்ல மற்றவர்களிடம் ஓர் அச்சத்தை விதைப்பதுமாகும். ஆனால், அது அச்சத்தை மட்டும் விதைப்பதில்லை. இன்னொரு சாராரிடம் விடாப்பிடியான பற்றுறுதியையும் விதைக்கிறது.

 

2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை அரசால் இன அழிப்புப் போர் நடத்தப்பட்ட பொழுது, இலங்கை அரசை அம்பலத்திக் கொண்டிருந்த சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்தா விக்ரம்சிங்கே சுட்டுக் கொல்லப்பட்டார். தான் இப்படியாக கொல்லப்படுவேன் என்பதை அவரும் முன்பே அறிந்திருந்தார். அவர் மரணத்திற்கு முன்பே எழுதிய கடைசி கடிதத்தின் வரிகள் இவை.

“ நாம் ஏன் இதை செய்கிறோம்? நான் அடிக்கடி வியப்பதுண்டு. நானும் ஒரு சராசரி கணவன், மூன்று அழகிய குழந்தைகளின் தகப்பன். என்னுடைய தொழில்களாகிய சட்டம் மற்றும் பத்திரிக்கைத் துறையைத் தாண்டி எனக்கும் பொறுப்புகளும் கடமைகளும் உண்டு. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திக் கொள்வது வெகுமதியானதா? இல்லை, உயிரைப் பணயம் வைத்து இதை செய்ய வேண்டியதில்லை என்று பலரும் என்னிடம் சொல்வதுண்டு. இதைவிட பாதுகாப்பான மற்றும் சிறப்பான வாழ்க்கை வழங்கக்கூடிய வழக்கறிஞர் தொழிலுக்கு திரும்பிவிடுமாறு என்னுடைய நண்பர்கள் ஆலோசனை வழங்குவதுண்டு. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகளிலும் உள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிறர் என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்துள்ளனர். இன்னும் ஒருபடி மேலே சென்று நான் விரும்பும் துறைகளில் என்னை அமைச்சராக்குவதாகக்கூட என்னிடம் பல நேரங்களில் சொல்லியுள்ளனர். இலங்கையில் பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை அறிந்த வெளிநாட்டு அரச தூதர்கள், இலங்கையை விட்டு பாதுகாப்பாக வெளியேறி நான் விரும்பும் நாட்டில் குடியேற வழிவகை செய்வதாக என்னிடம் சொல்லியுள்ளனர்.

 

“எனக்கு ஏராளமான தெரிவுகள் இருந்தன. தெரிவுகள் இல்லாமல் மட்டும் நான் தடுமாறியதே இல்லை.

..ஆனால், உயர் அரசு அலுவலகம், புகழ், ஆதாயம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான குரல்களுக்கெல்லாம் மேலானதாக ஒரு குரல் இருக்கிறது. அது மனசாட்சியின் குரல்.

..என்னுடைய படுகொலை என்பது சுதந்திரத்தின் தோல்வியாகப் பார்க்கப்படாது என்று நான் நம்புகிறேன். மாறாக விடாப்பிடியான முயற்சிகளைக் கொண்டிருப்பவர்களுக்கு அது ஊக்கமளிக்கும்” என்று லசந்தா எழுதுகிறார்.”

 

அது உண்மைதான் கல்புர்கி, பன்சாரே, தபோல்கரின் கொலைகளைப் போலவே கெளரியின் கொலையும் ஒரு சாராருக்கு அச்சத்தையும் இன்னொரு சாராருக்குப் பற்றுறுதியைக் கூட்டியுள்ளது. இந்த தத்துவார்த்தப் போரில் நெஞ்சை நிமிர்த்தியபடி தோட்டாகளை எதிர்நோக்கி இந்தியாவெங்கும் எண்ணற்றோர் உள்ளனர். அதை வெளிப்படுத்தும் வகையில் தான், கடந்த அக்டோபர் 2 அன்று காந்தி சிலைகளின் முன்பு கூடுவது என இந்திய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள “கெளரியின் கொலைக்கு எதிரான மன்றம்” அழைப்புக் கொடுத்திருந்தது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் சக்திகளும் இணைந்து, ”காந்தியைக் கொன்றவர்கள்தான் கெளரியையும் கொன்றார்கள்” என்ற முழக்கத்துடன் மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் கூடினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி இருந்தபோது முழக்கங்களை எழுப்பக்கூடாது என காவல்துறை இடைமறித்தது. பின்னர் கூடியருந்தவர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்களை காவி பயங்கர சக்திகள் ஒருபுறம் சுட்டுக் கொன்று கொண்டிருக்க, இன்னொருபுறம் காவல்துறையினரோ எழுத்தாளர்கள், பத்திரிக்கைகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரையும் காந்தி சிலைக்கு நூறடி தூரத்தில் வைத்து கைது செய்தது. அதில்  பேராசிரியர் வீ. அரசு, மங்கை, அரசியல் செயற்பாட்டாளர் கீதா, பேராசிரியர் கல்பனா, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மாற்றுக் கருத்துக் கொண்டோரைக் கொல்வதற்கான உரிமையை எடுத்துக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். ஆனால், இவர்கள்தான் கொன்றார்கள் என சொல்வதற்கு இருக்கும் உரிமையைக் கூட ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான அரசு மறுக்கிறது.

 

அன்று நாடெங்கும் பல்வேறு இடங்களிலும், காந்தியையும் கெளரியையும் கொன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களே என அம்பலப்படுத்தி காந்தி சிலைகள் முன்பு நூற்றுக்கணக்கில் கூடினர். கெளரியைக் கொல்வதன் மூலம் அவர்கள் சொல்ல விரும்பிய செய்திக்கு அன்று கூடியவர்களின் பதில் –  “தோட்டாக்களுக்கு அஞ்சாத நெஞ்சங்கள் எத்தனை எத்தனை என்பதே நாக்பூர் நாதுராம்களே தெரிந்து கொள்ளுங்கள்” என்பது தான்.

 

செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW