கார்ப்ரேட் எடுபிடி அரசின் அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்!
தூத்துக்குடி மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற அரசு என சட்டமன்றத்தில் அறிக்கை வாசிக்கிற முதல்வர் ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்குகளை பதியச் செய்கிறார். ஈபிஎஸ்சும் ஒபிஎஸ்சும் பதவி,அதிகாரப் சண்டை சச்சரவில் இரண்டுபட்டாலும்,போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவிவிட்டனர் என்ற ஒரே வசனத்தை பேசுவதில் ஒன்றுபடுகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டம் முதலாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள திரள் எழுச்சி போராட்டம் வரையிலும் எங்கெல்லாம் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி தீவிரமாக வெளிப்படுகிறதோ,எங்கெல்லாம் அரசு தனது கோர அடக்குமுறையால் சமூகத்திடம் அம்பலப்பட்டு நிற்கிறதோ,அப்போதெல்லாம் தனது ஒடுக்குமுறைக்கு நியாயம் கற்பிக்கிற முயற்சியாக “மக்கள் திரள் எழுச்சிப் போராட்டத்தை” “சமூக விரோதிகளின் சூழ்ச்சியாக” சிறுமைப்படுத்துகிற பிரச்சாரத்தை தீவிரமாக முன்னேடுக்கிறது.அதற்கு முட்டுக் கொடுக்கிற வகையிலே,”சமூக விரோதி பிம்பத்திற்கு” எண்ணிக்கை காட்டுவதற்கும், உருவம் வழங்குவதற்கும் பல்வேறு அரசியல் கட்சி/இயக்கத்தை சேர்ந்தவர்களை மீதான சட்ட விரோத கைது நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.அவை வருமாறு,
மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த பல தோழர்கள் (கோட்டையின், கண்ணன், சுரேஷ், அழகர்சாமி,கல்யாணகுமார், மாணிக்கம்,மோகன், சரவணன், முருகன் ) சட்டவிரோதமான வகையில் நள்ளிரவில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ளனர். புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த எட்டு தோழர்களை சட்ட விரோதமாக நள்ளிரவில் கைது செய்து இரவு முழுவதும் அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் தோழர் இடும்பாவனம் கார்த்திக் மீது ஆள் தூக்கி குண்டாஸ் சட்ட போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வியனரசு கைது செய்யபப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தோழர் பண்ரூட்டி வேல்முருகன் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவை போக பல்வேறு சட்ட விரோத கைதுகள் தமிழகம் எங்கும் தொடர்ந்து வருகிறது.ஸ்டெர்லைட் -முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக மக்கள் கிளிர்ந்தெழுந்தால்,ஆளும்வர்க்கம் எத்தகைய வெறியாட்டத்தில் ஈடுபடும்,ஒடுக்குமுறையில் ஈடுபடும் என்பதற்கு தூத்துக்குடி எழுச்சி சமகால உதாரணமாக உள்ளது. கார்ப்பரேட் ஊடங்களின் துணையுடன் அரசு தனது கருத்துநிலை ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிறது.
தாராளமய காலகட்டத்தில் மூலதனத்திற்கு எதிரான போராட்டங்கள் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு பண்பில் வெடிப்புற வெளிப்படுவதின் குவிமையமாக தமிழகம் மாறியதை சற்று கலவரத்துடன் ஆளும்வர்க்கம் நோக்கத் தொடங்கியதன் வெளிப்பாடாக தமிழக அரசின் காட்டுமிராண்டித்தன துப்பாக்கிச் சூடும் அதைத் தொடர்ந்து கைது நடவடிக்கையும் அமைகிறது. அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் இயக்கங்களும் அணிதிரள்வோம்.
- அருண் நெடுஞ்சழியன்