ரஜினியின் முகமூடி கிழிந்தது…ரஜினியின் முகம் கார்பரேட் முகம்!

01 Jun 2018

ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டாலும் தன்னுடைய அரசியல் பொருளாதாரக் கொள்கை என்னவென்று வெளிப்படையாக சொல்லாமல் இருந்தார். ஆன்மீக அரசியல் என்று சொன்னார். சட்டமன்ற தேர்தல் வரும்வரை யாரும் எதுவும் பேச வேண்டாம் என தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு சொல்லி இருந்தார். பூத் கமிட்டி அமைக்கும் வேலையைப் பாருங்கள் என்று அறிவுறுத்தியிருந்தார். அவரை பா.ச.க. இயக்குகிறது, பா.ச.க. வோடு கூட்டணி வைப்பார் என்று கருத்துகள் உலாவின. அவர் அதை மறுத்து வந்தார். ரஜினி கோடிகளில் புரள்பவர்; ஓய்வெடுக்க இமயமலைக்குப் போய்வரும் வசதி படைத்தவர். உயர் சிகிச்சைக்கு சிங்கப்பூருக்கும் அமெரிக்காவும் போகக் கூடியர். அவரது வாழ்க்கையும் சொத்தும் சுகமும் அவரது சிந்தனை எல்லையை தீர்மானிக்கும். எனவே, அவரது அரசியல் கொள்கைகள் என்னவாக இருக்க முடியும் என்ற மதிப்பீடு அரசியல் முன்னணிகளுக்கு இருப்பினும் வெகுமக்களுக்கு ரஜினி புதிய நம்பிக்கையாகத் தான் இருந்துவந்தார். ரஜினி என்ற ஸ்டார் அந்தஸ்து பெற்ற கதாநாயக முகத்துக்குப் பின்னால் உள்ள அரசியல் பொருளாதார கொள்கைகள் புலப்படாமல் இருந்துவந்தன. அந்த புதிருக்கு அவரே விடை தந்துவிட்டார்.

மே 30 அன்று தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில் அவரது அரசியல் பொருளாதார கொள்கைகள் பளிச்சிடுகின்றன.

  1. சீருடை அணிந்த காவலரைத் தாக்கினால் தன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்று சொன்னார். சீருடை அணிந்த காவலர் வெறுங்கையாய் இருந்த மக்களைச் சுட்டுக் கொன்றதைக் கண்டு அவர் கொதிக்கவில்லை. அந்தக் காவலர்களைக் கண்டுபிடித்து வழக்கு தொடுக்க வேண்டும். கொலை வழக்குப் பதிய வேண்டும். பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்றெல்லாம் அவர் சொல்லவில்லை. மாறாக போராட்டத்தில் இருந்த சமூக விரோதிகளை சி.சி.டி.வி. கேமரா படங்களின் வழி அடையாளம் கண்டு செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என்று கொந்தளித்துவிட்டார். ஜெயல்லிதாவைப் போல் சமூக விரோதிகளை, விஷமிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று சொன்னார்.  காவல்துறையின் சட்ட விரோதக் காவலில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை. சாவுக் கணக்கு முழுமையடையவில்லை. ஓவ்வொரு நாளும் காவல்துறை வீடு வீடாகப் புகுந்து மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்கு பதிந்துள்ளது. தினம் தினம் கைதுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் இந்த அரசு செய்தது பத்தாது என்றும் மேலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என்றும் ஒருவர் சொல்வாரானால் அரசியல் சனநாயகம் பற்றி அவர் கொள்கை என்ன என்பதை விளக்கத் தேவையில்லை. மக்களின் பிணங்களின் மீது ஏறி நின்றபடி ‘இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கச் சொல்வதுதான் பாசிசத்தின் குரலாகும். காவல்துறை சட்டங்கள், மனித உரிமை விழுமியங்கள், அரசமைப்பு சட்ட உரிமைகள் பற்றியெல்லாம் அவருக்கு அறிவில்லை என்பதைவிட அக்கறையில்லை என்பதைச் சொல்லி சென்றுள்ளார்.
  2. நேற்றுவரை அவர் ஒரு சினிமா நடிகர். இன்று அரசியல்வாதி. நாளை ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறோம் என்ற தன்னுணர்வோடு அரசு, அரசின் அடக்குமுறை இயந்திரமான காவல்துறையினருக்கு எதிரான மக்களின் கோபம் அவருக்கு சகிக்க முடியாததாக இருக்கிறது. இதில் மிகத் தெளிவாகவே, இந்த அரசும் அரசு இயந்திரமும் அமைப்பும்(system) பாதிப்புக்கும் உள்ளாகிவிடக் கூடாது என்பதே அவரது அடிப்படை அரசியல் என்று உணர்த்தியுள்ளார்.
  3. மிக முக்கியமாக, எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடினால் எப்படி முதலீடுகள் வரும், வேலை வாய்ப்புகள் பெருகும், ஏற்கெனவே விவசாயம் அழிந்துவிட்டது என்று முதலீடுகளுக்காக கண்ணீரும் வேலையற்ற இளைஞர்களுக்காக முதலைக் கண்ணீரும் வடித்துள்ளார். ஆன்மீக அரசியல் என்று தனது அரசியலைச் சொல்கிறார். காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் ரஜினியைக் கொண்டு மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று பேசுகிறார். காந்தி அன்னிய துணிகளைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றார். துணித் தேவையில் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கைராட்டையைக் கொண்டு உற்பத்தி செய்ய சொன்னார். அன்னிய முதலீடு வந்தால் தான் வேலை வாய்ப்பு என்ற இன்றைய உலகமயக் கொள்கையையே ரஜின் சொல்கிறார். அன்னிய துணிகளைப் பகிஷ்கரிப்போம் என்று சொல்லி சுதந்திரம் பெற்ற நாட்டில் அன்னிய முதலீடு வராவிட்டால் வாழ வழியில்லாமல் போய்விடும் என்று சொல்லும் ரஜினியைக் காந்திய மக்கள் இயக்கத்தவர்கள் ஆதரித்து நிற்கின்றனர். காந்தி ஆன்மீகம் பற்றி பேசினார், அகிம்சையை தனது போராட்ட வழி என்றார், ஆனால் பொருளாதாரத்தைப் பொருத்தவரை சுதேசிப் பொருளாதாரம் என்றார். ஆனால், ரஜினி அன்னிய முதலீடு சார்ந்த வளர்ச்சியைத்தான் பேசுகிறார். ரஜினியின் வழி காந்திய வழியும் அல்ல, ஊர் ஊராய் சென்று ’மேக் இன் இந்தியா, மே இன் இந்தியா” என்று நாட்டைக் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கும் மோடியின் பொருளியல் வழிதான் ரஜினியின் அரசியல் வழி.
  4. தான் பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்பதையே தனது சிறப்புத் தகுதியாக சொல்கிறார் ரஜினி. சம கால பிழைப்புவாத, கொள்ளைக்கார அரசியலின் அவலத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைக்கிறார். ஆனால், பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வராமல், மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் எவனும் போயஸ் காட்டனில் வீட்டை வைத்துக் கொண்டு, திறந்த வாகனத்தில் பவனி வந்தபடி, கோடிகளில் புரண்டு கொண்டு அரசியல் செய்ததில்லை. இந்நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் உடுத்த உடையின்றி இருப்பதால் தான் மேலாடை அணியப் போவதில்லை என்று முடிவெடுத்து அரைநிர்வாணமாக தன் அரசியல் வாழ்க்கையை நடத்தினார். பெரும்பணக்காரர் பெரியார் தன் சொத்துகள் அனைத்தையும் இயக்கத்திற்கு செலவு செய்து மக்களுக்காக வாழ்நாள் தொண்டாற்றினார். ”பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்டேன், மேலும் அடுத்தஅடுத்தப் படங்களும் தயாராகிக் கொண்டிருக்கிறது. வயது 68 ஆகிவிட்டது. போதும் போதும் என வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட்டேன். இனி அரசியலுக்கு வந்து போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கொள்கை, கோட்பாடு எதுவுமின்றி நேரடியாக முதல்வராக முடிசூடிக் கொள்ளப் போகிறேன்” என்று ரஜினி சொல்கிறார். இதைதான் ரஜினியை ஆதரிக்கக் கோரும் ரஜினி ரசிகர்கள் அப்பாவியாக நம்மிடம் சொல்கிறார்கள். அரசியல் என்பது சினிமா கதாநாயகர்களின் அந்திமக் காலத்தைக் கழிக்கும் முதியோர் இல்லமா? அல்லது ஆன்மீக மடமா? என்றுதான் புரியவில்லை. இவர்களின் கண்களுக்குத்தான் போராடுபவர்கள் சமூக விரோதிகளாகத் தெரிகிறது.
  5. விவசாயம் அழிந்துவிட்டதெனவே எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தால் எப்படி வேலை வாய்ப்புகள் வரும் என்கிறார். விவசாயம் தானாக அழிந்துவிட்டதா? கார்ப்பரேட் சார்பு அரசின் கொள்கைகளுக்கும் விவசாயிகள் தூக்கில் ஏற்றப்படுவதற்கும் தொடர்பு இல்லையா? அழிக்கப்பட்ட விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதில்லை அவர் கவலை. கார்பரேட்டுகளின் ’கருணைமிக்க’ முதலீடுகள் வராமல் போய்விடுமே என்பதுதான் அவர் கவலை.

மொத்தத்தில் ரஜினியின் பொருளாதாரக் கொள்கை என்பது விவசாயத்தைப் பலியிட்டு பன்னாட்டு மூலதனப் பெருக்கத்தில் சிதறும் சிறுதளிகளை நம்பி நாட்டின் பொருளாதாரக் கட்டமைக்கும் கொள்கையாகும். அது, காந்தியின் வழியல்ல, காந்தியைக் கொன்றவர்களின் வழி. அது காங்கிரசின் வழியில்லையா? என்று கேட்கலாம். காங்கிரசினது பொருளியல் வழியும் அதுதான். தமக்கென சொந்தப் பொருளியல் கொள்கை எதுவும் வைத்துக் கொள்ளாத மாநிலக் கட்சிகள் ( தி.மு.க., அ.தி.மு.க.) ஆகியவற்றின் வழியும் அதுதான்.

ஆனால் அரசியல் வழி என்பது தாராளவாத ஜனநாயக வழிகூட இல்லை. மக்களின் போராட்டங்களை வெறுப்பாய்ப் பார்க்கும்வழி. துப்பாக்கி முனையில் மக்களை அடக்கியாள நினைக்கும்வழி, எதிர்த்து கேள்விக் கேட்பவர்களை சமூக விரோதி, விசமி என முத்திரையிட்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வழி. அதுதான் பாசிச வழி. அவர் சொல்வதில் ஓருண்மை இருக்கிறது. மக்கள் போராட்டங்களை மூர்க்கமாக ஒடுக்குவதற்கு எம்.ஜி.ஆர். போன்ற ஒருவர் ஆளும்வர்க்கத்திற்கு தேவைப்பட்டார். பின் அந்த இடத்தை ஜெயலலிதா இட்டு நிரப்பினார். இப்போது ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை இட்டு நிரப்ப ரஜினி வந்திருக்கிறார்.

அரசியலுக்கு கொள்கை, கோட்பாடு தேவையில்லை. பிரபலமாக இருந்தால் மட்டும் போதும். ஊழல் எதிர்ப்பைப் பேசிக் கொண்டு எந்த இசங்களும் தனக்கு இல்லை என்று சொல்வது ஒரு வாடிக்கையாக இன்று ஆகியுள்ளது. கருப்பு, சிவப்பு, நீலம் என்று எந்தெந்த வண்ணங்களுக்குள்ளும் சிக்காமல் இருந்தால் எல்லோரது ஆதரவையும் பெற்றுவிடலாம் என்றொரு கணிப்பில் இருந்து இதை பேசுகின்றனர். அப்படி பேசுவர்களின் அரசியல் என்பது ஏற்கெனவே நாட்டில் செல்வாக்கு செலுத்துகின்ற ஆளும் வர்க்கத்தின் அரசியல்தான் என ரஜினியும் மெய்பித்துக் காட்டியுள்ளார்.

ரஜினி – புதிய மொந்தையில் பழைய கள். கள்ளில் மயங்கிக் கிடக்கும் பழைய தமிழகம் இது இல்லை என்பதைத் தூத்துக்குடி மருத்துவமனையில் ரஜினியைப் பார்த்து ‘யாரு நீங்க?’ என்று இளைஞர் கேட்டதிலிருந்து யாருக்குப் புரிந்ததோ இல்லையோ ரஜினிக்குப் புரிந்திருக்க வேண்டும். தமிழகம் இன்னும் நிறைய அதிர்ச்சிகளை அவருக்கு வைத்திருக்கிறது. கண்ணா! இது ட்ரெய்லர் தான். மெயின் பிக்சர் இனிமேல் தான் இருக்கு.

 

  • செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW