ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை; தூத்துக்குடி மக்கள் போராட்டத்தின் முதல் கட்ட வெற்றி!

29 May 2018
– தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை:
   
       கார்ப்பரேட்களுக்கான ஆட்சியில் 13 பேர்களுக்கு மேல் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உருவாக்கப்பட்ட சூழலில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஆணையாக அறிவிப்பது இதுதான் முதல் தடவை.
      காவல்துறையினரின் ஐந்து தடைகளைத் தாண்டி, கண்ணீர்ப் புகை வீச்சுகளைத் தாண்டி பல பத்தாயிரக்கணக்கான மக்கள் ஆட்சியாளர் அலுவலகம் நோக்கி அணிதிரண்டனர். பொதுமக்களை, பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சட்டமன்றத்தில் அறிக்கை வாசிக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி. தூத்துக்குடியில் 22ஆம் தேதி வந்தவரெல்லாம் பொதுமக்களில்லாமல் வேறு யார்? ஆலை மூடலை அறிவித்த கையோடு, துப்பாக்கிச் சூடு நடத்தியதை நியாயப்படுத்தி அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
   1996 முதல் போராடி வந்த தூத்துக்குடி மக்களின் போராட்டங்களின் விளைவாக ஏற்கெனவே ஆலை மூடப்பட்டது. கார்ப்பரேட் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்று மீண்டும் ஆலையைத் திறந்தது. கடந்த முறை போலவே இம்முறையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் செல்வது நிச்சயம். உலகத்தின் பலநாடுகளில் வேதாந்தா குழுமத்தின் கொடுஞ்சுரண்டலுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.    ஒடுக்குமுறையை, துப்பாக்கிச்சூட்டை சந்தித்து வருகிறார்கள்.
   ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் இன்னும் முடியவில்லை. துப்பாக்கிச்சூட்டின் அனலை நெஞ்சிலேந்தி தூதத்துக்குடி மக்களுக்குத் துணையாக, தூத்ததுக்குடியிலிருந்து நிரந்தரமாக ஸ்டெர்லைட்டை விரட்டியடிக்கும் வரை தோள் கொடுப்போம்! ஸ்டெர்லை ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் மீண்டும் எழுச்சியுடன் போராடத் தயாரிப்பிலிருப்போம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போராடும் மக்களுக்கு, இயக்கங்களுக்கு விடப்பட்டிருக்கும் சவால். தமிழகமெங்கும் மக்கள் இயக்கத்தினரை கைது செய்து தூத்துக்குடி வழக்கில் இணைக்கும் செயலைக் கண்டிக்கிறோம். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,  மக்கள் அதிகாரம் அமைப்பினர்  உள்ளிட்ட கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யக் குரல் எழுப்புவோம்.
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW