முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு அணையவில்லை!

19 May 2018

முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு அணையவில்லை.

காலத்தால் நின்றெழும் பெருவெடிப்பாய்

         நீதியின் வாசலைத் திறக்கும்!

2019 –  பத்தாம் ஆண்டில்  பன்னாட்டுப் புலனாய்வை உறுதிசெய்வோம்  பொதுவாக்கெடுப்புக்கு வழிசமைப்போம்!

2009 ஆண்டு மே 16,17,18 ஆகிய நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட்தோடு சிங்களப் பேரினவாதம் நடத்திய இன அழிப்புப் போர் முடிந்தது. பின்னர் சுமார் 3 இலட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். முப்பது ஆண்டு காலமாக நடந்து வந்த ஆயுத போராட்டம் மிகவும் துயரகமான தோல்வியைத் தழுவியது. சிங்கள பெளத்தப் பேரினவாத அரசு எதிரும்புதிருமான அரசுகளையும் உள்நாட்டு ஆற்றல்களையும் தனது நட்பு சக்தியாக சேர்த்துக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்துவதில் அரசியல்ரீதியான வெற்றிக் கண்டு, அதன்வழி இராணுவ ரீதியான வெற்றியை ஈட்டியது.

ஆயினும் முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்று உணர்த்தும் வகையில் வன்னியில் அடைக்கப்பட்ட போர்முனை உலகெங்கும் பல்வேறு இடங்களில் திறந்துவிடப்பட்டது. 2009 ஆம் ஆண்டு இலங்கை மீது பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்ட அதே ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை மீது பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விவாதம் நடக்கும் அளவுக்கு தமிழ் மக்களின் போராட்டம் வளர்ந்துள்ளது.

2013 இல் தமிழகத்தில் நடந்த மாணவர் போராட்டம், இனப்படுகொலை செய்த இனக்கொலை இலங்கை மீது பன்னாட்டுப் புலனாய்வு, அரசியல் தீர்வுக்குப் பொதுவாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை இல்லங்கள்தோறும் எடுத்துச் சென்றது. இதன் அழுதத்தால், தமிழக சட்டமன்றத்தில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இந்திய அரசோ இத்தீர்மானங்களை எள்ளளவும் பொருட்படுத்தவில்லை. தமிழீழ இனப்படுகொலையைக்கூட அங்கீகரிக்கவில்லை!

இராசபக்சேவை தேர்தலில் தோற்கடித்து முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த சிறிசேனா-ரணில் கூட்டணி அரசோ ’நல்லரசாங்கம்’ என்ற முகமூடியுடன் சிங்களப் பேரினவாதத்தின் இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக்கும் பயணத்தை முன்னெடுத்து வருகின்றது. சிங்கள மக்களோ போர் நாயகன் இராசபக்சேவை ஆதரிப்பதை நோக்கி நகர்கின்றனர். அண்மைய உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இராசபக்சேவின் மீள் எழுச்சியை காட்டிநிற்கின்றன. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற தமிழ் தலைமைகளோ மக்களின் அரசியல் வேட்கைகளையும் நீதி உணர்ச்சியையும் துயரங்களையும் வெளிப்படுத்தாது இலங்கை அரசுடனான சமரசப் பாதையைத் தழுவி நிற்கின்றனர்!

இலங்கை அரசின் அரசதந்திரமும் உலக மேலாதிக்க அரசுகளின் தன்னல நிலைப்பாடுகளும் நகர்வுகளும் இலங்கை அரசைப் பன்னாட்டு அரங்கில் பாதுகாத்து வருகின்றது. பன்னாட்டு அரங்கில் மென்மேலும் அவகாசத்தைப் பெறுவதன் மூலம் தமிழீழத்தில் திட்டமிட்ட கட்டமைப்புரீதியான இன அழிப்பை நடத்திவருகிறது இலங்கை அரசு.

இனக்கொலைக்கு துணைப்போன இந்திய அரசோ இந்த ஒன்பது ஆண்டுகளில் சிங்களப் பேரினவாதத்தை சர்வதேச அரங்கில் பாதுகாத்து நிற்கின்றது. மறைந்த முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்திக்குப் பிறகு இலங்கைக்குப் பயணம் போன பிரதமராய் மோடி அறியப்படுகிறார். அதுவும் இந்த நான்காண்டுகளில் இரண்டு முறை இலங்கைக்கு சென்று, உலக அரங்கில் இந்தியாவின் நண்பன் இலங்கை என்ற அங்கீகாரத்தை மீளுறுதி செய்துள்ளார். இந்துப் பெரும்பான்மைவாதமும் பெளத்தப் பேரினவாதமும் என இந்திய சிங்களக் கூட்டணி ஒரு ரசவாத தன்மையைப் பெற்றிருக்கிறது. ’ ஏற்கெனவே ஈழத் தமிழர்களுக்கு இழைத்த தீமைகள் போதாதென இந்தியாவில் உள்ள இந்துத்துவ சக்திகளின் பின்புலத்தில் ஈழத்திலும் சிவ சேனா போன்ற அமைப்புகள் கட்டப்படுவது தமிழீழத் தேசியத்தையே பலவீனப்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.

இலங்கை அரசை உள்ளும்புறமும் தனிமைப்படுத்துவதே இன்றைய உத்தி. அதற்குத்தான் இலங்கையைப் புறக்கணிப்போம் என்ற முழக்கத்தை ஏந்தினோம். அந்த புறக்கணிப்புப் போராட்டத்தில் முதன்மையானது அரசியல் புறக்கணிப்பே. அதாவது லைகா நிறுவனத் தயாரிப்பில் வெளியான ’கத்தி’ திரைப்படத்தை எதிர்ப்பதைவிட மோடியின் இலங்கைப் பயணங்கள், இலங்கை ஆட்சியாளர்களின் இந்திய பயணங்கள், அரசுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் இராணுவ பொருளாதார ஒப்பந்தங்கள் ஆகியவற்றை எதிர்த்து அம்பலபடுத்துவதுதான் முக்கியமானதாகும்.  அதன்வழி இந்திய – சிங்கள அரசுகளின் கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்ற கடமை தமிழ்நாட்டிற்கு இருக்கிறது.

வல்லாதிக்க அரசுகளின் காய் நகர்த்தல், சமரச தலைமைகள், இந்தியாவின் விரிவாதிக்க நிழல், சிங்களப் பேரினவாதத்தின் திட்டமிட்ட இனவழிப்பு என இத்தனைக்கும் இடையிலும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழ் மக்கள் மெல்ல எழுவதைக் கண்டு வருகிறோம். காணாமற் ஆக்கப்பட்டோரை மீட்கக் கோரும் போராட்டம், கேப்பாப்புலவு போன்ற நிலமீட்புப் போராட்டங்கள் என தமிழ் மக்கள் உறுதியுடன் போராடத் தொடங்கியுள்ளனர். காலப் பொருத்தமான வடிவத்தைக் கையிலெடுத்து உலகத்தின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான நீதிக்கான நெடும்பயணத்தில் ஒன்பதாம் ஆண்டின் முடிவில் நின்று கொண்டிருக்கிறோம். “Genocide can be compensated only by seccession” இனப்படுகொலைக்குப் பரிகாரம் என்பது பிரிந்து சென்று தனியரசு அமைப்பதுதான்.  இதுதான் இறுதி தீர்வு. அதே நேரத்தில், அதற்குமுன் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான கோரிக்கைகள் உள்ளன. இப்போது நமது கடமையெல்லாம் உடனடி கோரிக்கைகளையும் நீண்ட காலக் கோரிக்கைகளையும் இணைத்து செல்வதுதான். தமிழீழ தாயகம்தான் போராட்டத்தின் முதன்மை களம். தமிழ்நாடும் புலம்பெயர் நாடுகளும் போராட்டத்திற்கான பின்தளம்தான் என்ற புரிதலுடன் முன்னேற வேண்டியுள்ளது.

உடனடி கோரிக்கைகள்:

 1. அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
 2. காணாமற் ஆக்கப்பட்டோர் நிலை குறித்து பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும்.
 3. போரில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு, அங்ககீனமாக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
 4. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதால் ஈழத்தில் துணையை இழந்த, ஆதரவற்றப் பெண்கள் சுமார் 90,000 பேர் உள்ளனர். உழைப்பில் ஈடுபடக் கூடிய குடும்ப தலைமை கொல்லப்பட்ட நிலையில், அக்குடும்பங்கள் கடும் பொருளாதார நெடுக்கடியில் உள்ளன. அத்தகைய குடும்பங்கள் வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமான மாதாந்திர நிவாரணம் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும்.
 5. உறவுகளை இழந்து வாடும் தமிழ் மக்கள் பெரும் உளவியல் அழுத்தத்துடன் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்களாக, நடைபிணங்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களை மன அழுத்தத்தில் இருந்து மீட்டு, ஆற்றுப்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 6. எந்த இராணுவம் வகைதொகையின்றி தமிழ் மக்களைக் கொன்று குவித்ததோ எந்த இராணுவம் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்ததோ எந்த இராணுவம் மரணத்தின் உருவமாய்  தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால்வரை விரட்டிசென்றதோ அந்த இராணுவத்தின் பிடியில்தான் தமிழ் மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இராணுவ ஆக்கிரமிப்பு என்பதற்கு அப்பால் திட்டமிட்ட சிங்கள மயமாக்கலுக்கும் தமிழர் வளங்களை சூறையாடுவதற்கும் இராணுவமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
  1. இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் தனியார் குடியிருப்பு நிலங்கள், விவசாய நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, இராணுவம் ஆக்கிரத்திருக்கும் பொது நிறுவனங்கள், சமுதாய மையங்கள், பள்ளிக்கூடங்கள், கோயில் நிலங்கள் ஆகியவற்றில் இருந்து இராணுவம் வெளியேறுவதோடு அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
  2. இராணுவம், போலீஸ் மற்றும் உளவுப் பிரிவினரும் அவர்தம் குடும்பங்களும் தமிழர் பகுதியில் வர்த்தகம் செய்தல், கடை நடத்துதல், விவசாய உற்பத்தியில் ஈடுபடுதல் என பல்வேறு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அரசினது மற்றும் அதன் நிர்வாக இயந்திரத்தின் ஆதரவு இவர்களுக்கு இருப்பதால் இவர்களுடன் போட்டிப்போட்டு தமிழ்மக்கள் தொழில் நடத்த முடியாது. இவ்வகையில் மேற்படி தொழில்களில் இருந்து தமிழர்கள் மறைமுகமாக வெளியேற்றப்படுவது நடந்துவருகிறது. தமிழர் பகுதியில் சிங்கள இராணுவம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  3. தமிழர்களின் வளமான காட்டுப் பகுதிகள் மற்றும் வளமான கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள இராணுவம் அங்கிருந்து வெளியேற்றப்படுவதோடு மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் செயல்பாட்டிற்கும் வழிசெய்ய வேண்டும்.
  4. தமிழர் பகுதிகளை சிங்களமயமாக்கும் நோக்கில் இராணுவக் குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து குடியேற்றி வருகிறது இலங்கை அரசு. சிங்களர்களுக்கு வீடு கட்டுதலும் குடியேற்றங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  5. வெற்றிக் கொள்ளப்படும் பிரதேசங்களில் வாழ்வோர் தோற்கடிக்கப்பட்டவர்களாக நடத்தப்படுவதோடு அங்குள்ள மூல வளங்களும் உழைப்பும் சூறையாடப்படுவதும் நடக்கிறது. ஏனெனில் ஒரு போரின் வெற்றி என்பதே மூலவளங்களைச் சூறையாடுவதற்கு இருக்கும் தடைகள் நீக்கப்படுவதில்தான் அடங்கியிருக்கிறது. இலங்கை அரசு காலானியாதிக்க பாணியில் தமிழர் பகுதிகளில் இருக்கும் மூல வளங்களைச் சுறையாடி வருகிறது. குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் காட்டு மரங்கள் வெட்டப்பட்டு தெற்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. வடக்கில் அதிகமாக உள்ள மிக உறுதியான கருங்கற்கள் பிரம்மாண்டமான அளவில் தெற்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதை சிங்கள வர்த்தகர்களும் சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்களும் அரசின் ஒத்துழைப்புடன் செய்து வருகின்றனர். இது தமிழீழப் பகுதியின் இயற்கை சூழலை வெகுவாக பாதிப்படையச் செய்கின்றது. இதன்விளைவு, அப்பகுதிகள் எல்லாம் மனிதன் வாழத் தகுதியற்றப் பகுதியாவதில் போய் முடியும். மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு இடம்பெயர்வது நடக்கும். மூலவளங்களை சூறையாடுதல் என்பதோடு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த முடியாத பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதன் மூலம் திட்டமிட்ட கட்டமைப்பு ரீதியான இன அழிப்பை முழுமையாக்குவதற்கும் இது உதவுகின்றது. எனவே, தமிழர் தாயகப் பகுதியில் இருக்கும் மூல வளங்கள் குறிப்பாக காட்டு மரங்கள், கருங்கற்கள் சூறையாடப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
 7. நியாய உணர்ச்சிக் கொண்டார், பொதுநல உணர்வு கொண்டோர், மக்களை நேசிப்போர், அறச் சிந்தனையுடையோர் போன்ற ஒரு சமூகத்தின் முன்னணி ஆற்றல்கள் எண்ணற்ற அளவிலபோரில் கொல்லப்பட்டுவிட்டனர். சமூக அரசியல் தலைமை கொடுக்கக் கூடிய, காத்திரமான உள்ளடக்கம் கொண்டோர் அரிதாகியிருக்கும் நிலையில் திட்டமிட்ட வகையில் தமிழ்ப் பகுதியில் நடத்தப்பட்டு வரும் சிங்களமயமாக்கல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். குறிப்பாக, தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசு நிறுவ்னங்களில் உள்ள உயர் அதிகாரிகள், நிர்வாகிகள் சிங்களர்களாக நியமிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
 8. கடந்த 2017 மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இன்னும் இரண்டு ஆண்டு காலத்திற்குள் இலங்கை அரசு மீது எழுந்துள்ள சர்வதேச விதிமீறல் பற்றிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய ஓர் விசாரணையை மேற்கொள்ளும் மனத்திட்பம்(Political Will) இலங்கை அரசுக்கு இல்லாத நிலையில் ஐ.நா.ம.உ மன்றத்தில் ஒப்புக்கொண்ட எந்த விசயத்திலும் சிறு முன்னேற்றம்கூட இல்லை. அதை இவ்வாண்டு(2018) மார்ச் மாதம் நடந்த  ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அல் ராத் உசைன் இலங்கை குறித்து கொடுத்த அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார். அடுத்த ஆண்டு 2019 மார்ச் மாதத்தோடு இலங்கைக்கு கொடுத்த கால அவகாசம் முடிவுக்கு வருகிறது. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை மீதான இனக்கொலை குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.ம.உ. மன்றால் பொது சபைக்கு பரிந்துரை செய்யப்பட வைப்பதே அடுத்தக் கட்டமாகும்.  உலகெங்கும் உள்ள தமிழர்கள் உறுதியுடன் நின்று பன்னாட்டுப் புலனாய்வுக்கு வலியுறுத்துவதன் மூலம் இதை மெய்ப்படச் செய்யவேண்டும். குறிப்பாக, இந்தியா இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.ம.உ. மன்றத்தில் செயல்படாமல் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டினுடையதாகும்.
 9. புதிய யாப்பின் மூலம் அரசியல் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த இலங்கை அரசு முயலும். இதை முறியடித்து பொதுவாக்கெடுப்பின் வழி தமிழ் மக்களின் விருப்பங்களை அறிய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்க வேண்டும். இந்திய ஆளும் வர்க்க ஊடகங்களும், ஆளும் வர்க்க கட்சிகளும் 13 ஆவது சட்டத்திருத்தம், ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம உரிமை என்றெல்லாம் வாய்ஜாலம் பேசி இந்திய அரசின் ‘பெரியண்ணன்’ வேலைக்கு முட்டுக் கொடுக்கும். இதை தமிழக மக்கள் முறியடித்தாக வேண்டும்.

’சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற இராணுவ சித்தாந்தத்தின்  வழி உலகை கட்டிப் போட்டுள்ள இன்றைய ஏகாதிபத்திய உலக ஒழுங்கில், மக்களின் போராட்ட நியாயங்களைத் தவிர்க்க முடியாத வகையில் நிறுவி, அரசியல் வெற்றி ஈட்டுவதற்கான பாதையை நடைமுறைக்கூடாக கண்டடைவதே ஒடுக்கப்பட்ட தேசங்களிலுள்ள விடுதலை இயக்கங்களின் முகாமையான சவாலாக இருக்கிறது. இந்த கேள்வி தமிழீழ தாயகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் அடுத்தக் கட்டப் போராட்ட நகர்வுகளிலும் முன்னிற்கிறது.

தந்தை செல்வநாயகம் தலைமையிலான சத்தியாகிரகப் போராட்ட நாட்கள், அவர் நாடாளுமன்றப் பதவி துறந்து தமிழ் மக்களின் வேட்கையை உயர்த்திப் பிடித்த நாட்கள், வட்டுக்கோட்டைப் பிரகடனமும் அதை மக்களின் அரசியலாணையாக தேர்தலில் மாற்றிய நாட்கள், ஆயுதப் போராட்டத்தின் தொடக்க நாட்கள், இந்திய அமைதிப் படை போனபொழுது தண்ணீர்கூட அருந்தாத திலீபனின் உண்ணாநிலைப் போராட்ட நாட்கள், அதை தொடர்ந்த மக்கள் எழுச்சியின் நாட்கள், ஓயாத அலைகளாய் எழுந்த படை நடவடிக்கை நாட்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூலம் விடுதலை அரசியலை நகர்த்திய நாட்கள் என காலத்திற்கேற்ற வடிவங்களை, உத்திகளைக் கையாண்ட பட்டறிவு ஈழத் தமிழர்களுக்கு உண்டு. பொருத்தமான போராட்ட வடிவங்களைக் காவிச் செல்வதில் பிழைவிட்ட பொழுது, வரலாறு தந்த இரத்தம்தோயந்த படிப்பினைகளையும் பெற்றவர்கள் ஈழத்தமிழர்கள்.  மக்கள் திரள் போராட்டத்தை வளர்த்தெடுத்து முற்காட்டானதொரு பாதையைப் படைக்க வேண்டிய கடமையை வரலாறு தாயத்தில் உள்ள தமிழ்மக்கள் மீது சுமத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு இன்னும் அணையவில்லை. காலத்தால் நின்று பெருவெடிப்பாய் எழும்.. பேரரசுகளின் மணி முடிகளை முட்டும். நீதியின் வாசலைத் திறக்கும். புரையோடிப் போயுள்ள சிங்களப் பேரினவாதம் என்னும் புற்றுநோயைத் தீய்க்கும்; இந்திய விரிவாதிக்கத்தின் கொடுங்கரங்களை எரிக்கும்; இவைமட்டுமல்ல, இன்று தமிழீழத்திலும் தமிழ்நாட்டிலும் புரையோடிப் போயிருக்கின்ற, பணம், பட்டம், பதவி, புகழுக்காக எதிரியின் காலடியில் மக்களின் உரிமைகளைப் பலியிடும் அற்பத்தனமான பிழைப்புவாத, சமரச அரசியலையும் சேர்த்தே அது பொசுக்கும்.

எந்த அநீதியான உலக ஒழுங்கு நமது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற வேறுபாடின்றி வகைதொகையாக தமிழ் மக்களின் இரத்தம் குடித்து ஊழிப் பேரலைக்குள் தமிழ் இனத்தை நிறுத்தியதோ அந்த உலக ஒழுங்கை மாற்றியமைக்கும்வரை முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு தமிழர் நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கும்.

 தமிழீழ விடுதலை மானுட விடுதலையின் பகுதி.

   உலகத் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

 

தோழமையுடன்

செந்தில்,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழகம்

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW