அத்திப் பூவே மகளே அனிதா!
அத்திப் பூவே மகளே அனிதா
ஒத்தப் பூவா பூத்த தாயி
மெத்தப் படிச்சு வந்த தாயி
சத்தமா சட்டமும் நீ பேச கோர்ட்டு நாட்டு போன தாயி
செத்த பயலுக ஏமாத்துச்சுன்னு
செத்துத் தான் போன தாயி
கல்லும் கரைஞ்சு போகும் கண்ணுமணி ஒன்ன பாத்தா
நெல்லும் பூத்துப்போகும் நெறஞ்ச நெஞ்சு பூரிச்சுப்போகும்
புல்லுருவி மகராசன் போட்ட நாடகத்துல
நல்ல தாயி ஒன் உசுர பறிச்சதென்ன
ஆசை ஆசையாய் பெத்த மகன்
ஆளாகி வந்துடும்னு
காட்ட விட்டு கழனிய விட்டு கட்டுன வீட்டயும் சேர்த்து விட்டு
கண்ணு முழிச்சு படிக்கவச்சு கூட இருந்த சாமி
எர்ணாகுளம் போகணும்னு கெடச்ச ரயில்ல நின்னுகிட்டு
சக்கரைக் கட்டி டாக்டராகி சக்கரை நோய தீக்குமுண்டு
உண்ணாம உறங்காம உமிரு கூட எறங்காம
நீட்டை எழுத உள்ள விட்டுட்டு
நீட்டி நிமிந்து படுத்த மனுசன்
எந்திரிக்கவே இல்லயப்பா
எங்க சாமி ஏன் மகள்னு கேட்ட சொல்லு தீருமுன்னே
எங்க சாமி எங்கப்பன்னு கேக்குதப்பா பச்சப் பிஞ்சு
காசா கேட்டோம் பணமா கேட்டோம்
காடா கேட்டோம் மலையா கேட்டோம்
படிக்கத் தான இடம் கேட்டோம்
இல்லாத சாமியா கண்ண தொறக்கப் போகுது
கோட்டச் சாமி கோர்ட்டுச் சாமி எதிரா திரும்புது
நாட்டுச் சாமி என் சனமே
நாயம் ஒன்னு இல்லயா
உசுரக் கொடுத்து போன சாமிக
உணர்வ உசுப்பி போகலயா
எந்திரிங்க எந்திரிங்க
சுடுகாடா போகுமுன்ன எந்திரிங்க எந்திரிங்க
– ரபீக் ராஜா