தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு இயக்கம் குழம்பியது எப்படி? – தோழர் செந்தில்

16 May 2023

முள்ளிவாய்க்கால் தமிழினத்தின் அழிவினதும் வீழ்ச்சியினதும் தோல்வியினதும் கையறு நிலையினதும் ஈகங்களதும் இரண்டகங்களதும் குறியீடாய் விளங்குகிறது. உருண்டோடிய இந்த 14 ஆண்டுகளில், தமிழ்நாட்டு ஈழ ஆதரவு இயக்கம் செயலற்று கிடக்கும் நிலைக்கு வந்துள்ளது.

நமத்துப் போய்க் கிடந்த ஈழ ஆதரவு இயக்கத்திற்கு முத்துக்குமார்கள் தம் உயிரை தீக்கிரையாக்கி சூடேற்றிவிட்ட பிறகும் ஏன் இந்த நிலை? 2009 இல் இருந்து தமிழ்நாட்டில் வெள்ளமென புறப்பட்ட ஈழ ஆதரவு இயக்கம் ஏன் இப்படி உருக்குலைந்தது?  

முள்ளிவாய்க்கால் அருவெறுக்கத்தக்க வகையில் வாக்கரசியலுக்கு பயன்படுத்தப்பட்டது. பிரபாகரன் என்று சொன்னால் ஆர்ப்பரிப்போருக்கு காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டம் பற்றியோ ஆதரவற்ற பெண்களின் நிலைப் பற்றியோ அரசியல் சிறைப்பட்டோர் விடுதலைப் பற்றியோ இனவழிப்புக்கு நீதிகோரும் போராட்டத்தின் திருப்பங்கள் பற்றியோ அகர வரிசை கூட தெரிந்திருக்கவில்லை. அவர்கள் காலத்தால் முள்ளிவாய்க்காலுக்கு முன்னான ஆயுத போராட்டப் பெருமிதங்களில் இருத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக முள்ளிவாய்க்காலில் சிதறிப்போன தமிழ் மக்களின் உடல்கள் கோபாலபுரத்து வாசலுக்கு கொண்டு வரப்பட்டு பதவி அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலையில் இருந்து சிங்கள பெளத்தப் பேரினவாத எதிர்ப்பும் நீதியின் மீது மாறாத பற்றும் இந்திய விரிவாதிக்கத்தின் மீதான எதிர்ப்பும் இனவழிப்பை வேடிக்கைப் பார்க்கும் உலக ஒழுங்கின் மீதான விமர்சனமும் உருவேற்றப்படுவதற்கு மாறாக திமுக எதிர்ப்பாகவும் கருணாநிதி எதிர்ப்பாகவும் தெலுங்கு எதிர்ப்பாகவும் ஈழ ஆதரவு இயக்கம் வக்கிரமடைந்து விட்டது.

ஈழ ஆதரவெனப் புறப்பட்ட இளைஞர் பட்டாளம் பதவி அரசியல் பீடத்தில் காயடிக்கப்பட்டது. கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்புக்கு எதிராக ஒரு குண்டூசியைக் கூட தூக்கி எறியவில்லை.இன்னொருபுறம் காங்கிரசு எதிர்ப்புக்கும் திமுக எதிர்ப்புக்குமான களமாக முள்ளிவாய்க்கால் அரசியலை அதிமுகவும் பாசகவும் அவ்வப்போது பேசின. மற்றொருபுறம், இனி ஈழ ஆதரவு அரசியலில் நமக்கு என்ன பங்கு கிடைக்கப் போகிறது? என்ற கவலையில் நெடுநாள் ஆதரவாளர்கள் விலகிக் கொண்டு வேடிக்கைப் பார்த்து வருகின்றனர்.இந்த சூழமைவில்தான், ஈழ அரசியல் பன்னாட்டு அரசியல் என்று சிலர் பாடம் எடுக்கத் தொடங்கியுள்ளனர். போராளிகள் பி எல் ஓவிடம் பயற்சிப் பெற்ற போதே, திம்புவில் பேச்சுவார்த்தை நடந்தபோதே அது பன்னாட்டுத் தன்மையைக் கொண்டிருந்தது. எனவே, பன்னாட்டுப் பல்லவியை சிலர் இப்போது தொடங்குவது ஏன்?ஈழப் பிரச்சனை ஒரு பன்னாட்டுப் பிரச்சனை. என்பதால் அதிகாரம் இல்லாத தமிழ்நாடோ/ தமிழ்நாட்டு அரசோ என்ன செய்துவிட முடியும்? 20 நாடுகள் சேர்ந்து புலிகளை அழிக்கப் புறப்பட்ட்ட போது, பாவம் இந்திய அரசு என்ன செய்ய் முடியும்? கருணாநிதி என்ன செய்ய முடியும்? என்று முடிப்பதற்குதான் பன்னாட்டு ராகம் பாடுகின்றனர்.திமுக மீது படிந்துள்ள முள்ளிவாய்க்கால் குருதி கறையைத் துடைப்பதற்கு இந்தக் கதையாடலைப் பயன்படுத்துகிறார்கள். இதுமட்டுமின்றி, இனி தமிழ்நாடு ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து பொறுப்புத் துறப்பதற்கும் இது பயன்பட்டுவருகிறது.முதல்வர் முக ஸ்டாலின் ஏதிலிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்து தன் சகோதரப் பாசத்தைக் காட்டிக் கொள்வதோடு முடித்துக் கொள்கிறார். இந்த இரண்டாண்டு கால ஆட்சியில் ஈழத் தமிழரின் அரசியல் உரிமை, நீதிக்கான போராட்டம், பெளத்தமயமாக்கல் தொடர்பில் திமுக அரசிடமிருந்து ஓரேயொரு அறிக்கை உண்டா?அழிவுகளுக்கு முழுமுதல் காரணம் பிரபாகரனே ஒழிய கருணாநிதியல்ல என்று கொச்சைப்படுத்துவதன் மூலம் பிரபாகரனின் பெயரால் கட்சி நடத்துவோரைத் தோற்கடிக்க திமுகவின் கொள்கை வகுப்பு அணி செயல்பட்டு வருகிறது. மேலும் ஈழம் என்பது முந்தைய காலச்சூழலில் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கை. இனி அது சாத்தியமில்லை, 13 ஆவது திருத்தம் தான் சரியென்றும் பேசி வருகின்றனர்.பன்னாட்டு நிலைமைகள் 1990க்கு முந்தையது போல் மாறியுள்ளது. அன்று அமெரிக்க – சோவியத் இரசியாவின் வல்லரசியப் போட்டி இந்தியப் பெருங்கடல் சுழியில் ஈழத் தமிழரையும் சிங்களரையும் இழுத்துவிட்டது. அது பண்டாரநாயக்கர்களையும் பிரபாகரன்களையும் மட்டுமின்றி இராஜீவ் காந்திகளையுங்கூட பலி கொண்டது. இப்போது அமெரிக்க – சீன வல்லரசியப் போட்டி இந்தியப் பெருங்கடல் சுழியில் எல்லோரையும் இழுத்துவிடப் போகிறது. இந்த வல்லரசியப் போட்டி அரசியலின் சக்கரங்கள் உக்ரனை, ஈழம், தாய்வான் என தன் பற்களைப் பதிக்கப் போகிறது.அன்று அமெரிக்க தலையீட்டின் பெயரால் இலங்கை தீவில் தலையிட்ட இந்தியா இனி சீனத் தலையீட்டின் பெயரால் தலையிடப் போகிறது. இந்திய அரசு தலையிடும் பட்சத்தில் எட்டு கோடி மக்கள் தொகையாலும் தனது அமைவிடம் சார்ந்து முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடும் இந்தியப் பெருங்கடல் சுழியில் இழுத்துவிடப் படுகிறது.

ஈழத் தமிழர் ஆதரவு என்பது பாலஸ்தீனியர்களுக்கு அரபுலகில் இருக்கும் ஆதரவையும் காசுமீரிகளுக்கு பாகிஸ்தானில் இருக்கும் ஆதரவையும் போன்றது. எனவே, புவிசார் ஆதிக்க அரசியல் போட்டி சிங்களரையும் ஈழத் தமிழரையும் உறங்க விடப் போவதில்லை. அந்த தூக்கங்கெடுக்கும் பெருந்தொற்று நோய் தமிழ்நாட்டுக்கும் பரவும். தமிழ்நாட்டு மக்கள் தூக்கமிழந்து போகும் போது கோட்டைக் கொத்தளங்களில் இருக்கும் கோமான்கள் முகத்தைத் திருப்பிக் கொள்ளமுடியாது. 2014 க்குப் பின் பாசக ஆட்சிக்கு வந்த பின்புலத்தில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் அரசியல் புத்துயிர் பெற்றது. இன்னொருபுறம் முள்ளிவாய்க்கால் பெருநெருப்பின் வெப்பத்தில் ஊதிவிடப்பட்ட திராவிட எதிர்ப்பின் பெயரிலான தெலுங்கு எதிர்ப்பு அரசியல். இவற்றுக்கு இடையே, பதவி அரசியலுக்கு வெளியில் இருக்கும் ஈழ ஆதரவுக் களமும் புதைக்குழியில் கால்பதிந்தது போல் ஆகிவிட்டது; சிதறியும் கொத்துகொத்தாய் பிரிந்தும் செயலற்றும் கிடக்கிறது. இந்த தேக்கத்தை உடைக்காமல் இனி ஓரடிக்கூட முன்னேற முடியாது.இந்த துயரங்களுக்கும் தவறுகளுக்கும் ஈழம், தமிழ்நாடு என இருதரப்பாரும் பொறுப்பேற்று எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கு சில அடிப்படைக் கண்னோட்டம் தேவை. அது பற்றிய சில புள்ளிகள்.பன்னாட்டுச் சமூகம் என்றால் அது அரசுகளைத் தவிர்த்து கிடையாது. இன்றைய உலகப்போக்கு அரசுகளால் நிர்ணயிக்கப்படுவது. அந்த அரசுகள் அந்தஅந்த நாட்டு மக்களால் வழிநடத்தப்படுகின்றன. ஈழத்தமிழரைப் பொறுத்தவரை பன்னாடு என்றால் அது இந்திய அரசுதான். இந்திய அரசைக் கட்டுப்படுத்தவல்லது தமிழ்நாட்டு மக்கள். ஆகவே, தமிழ்நாட்டு மக்களே ஈழத் தமிழரின் முதற்பெரும் பன்னாட்டுத் தோழமை. அது மட்டுமல்ல ஊழிகளைக் கடந்து நிற்கும் நிரந்தர தோழமையுமாகும்.தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு என்பது தலைவர்களை நம்பியிருக்கவில்லை; தமிழ்நாட்டு மக்களைத்தான் நம்பி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரபதிலிக்கக் கூடியதாக தலைவர்களும் அவர்தம் கட்சிகளும் உள்ளன.

தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு இயக்கத்தை இருபெரும் வகையாக பிரிக்கலாம். பதவி அரசியல் நலனுக்கு உட்பட்ட கட்சிகளின் வரம்புக்குட்பட்ட ஆதரவு நிலை. பதவி அரசியல் நலனைக் கடந்த பெரியாரிய, தமிழ்த்தேசிய, இடதுசாரி அமைப்புகளின் ஆதரவு நிலை. பின்னது எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளதோ அந்தளவுக்கு அது முன்னதின் ஆதரவு அளவை நிர்ணயிக்கும். இவ்விரண்டைப் பொறுத்தே இந்திய அரசின் மீது அழுத்தம் ஏற்படும்.தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு கொண்ட எவருடனும் எந்தக் கட்சியுடனும் உறவு கொள்ளும் இறைமை ஈழத் தமிழருக்கு உண்டு. அதாவது மாவோவியக் கட்சி தொடங்கி பாசக வரை எந்தக் கட்சியையும் ஈழ ஆதரவுக்காக அணுகுவது ஈழ அரசியல் ஆற்றல்களின் கடமையும் உரிமையும் ஆகும். தமிழ்நாட்டு அரசியல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் அரசியலாகவுள்ளது. தமிழ்நாட்டு கட்சிகள் இந்திய அரசியலில் அவ்வப்போது சில அமைச்சர் பதவிகளைப் பொறுக்கிக் கொள்வதைத் தாண்டி அதன் போக்கையும் கொள்கை திசை வழியையும் நிர்ணயிப்பதில் முனைப்புக் காட்டுவதில்லை. மறுவளமாக, ஈழத்தமிழர் பிரச்சனையில் சரியாக கடமையாற்ற தொடங்கினால் தமிழ்நாட்டுத் தலைவர்களும் கட்சிகளும் தமிழ்நாடும் பன்னாட்டு அளவிலும் இந்திய அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த சக்தியாக மாறமுடியும். ஈழத்தமிழர் பிரச்சனையை பதவிச் சண்டையில் இருந்து பிரித்தெடுத்து மெய்யான பொருளில் பன்னாட்டுப் பிரச்சனையாக, பாக் நீரிணை அரசியலாக தமிழ்நாடு கையாளத் தொடங்க வேண்டும். ஈழத்தின் விடுதலை அரசியலையும் தமிழ்நாட்டில் ஈழ ஆத்ரவு இயகக்த்தையும் நெறிப்படுத்த வேண்டிய நேரமிது. இவ்விரண்டு இடங்களிலும் கட்டளைத் தலைமையகங்களை கட்டியெழுப்பியாக வேண்டும். நாம் நம்மை தகுதியாக்கி எதிரிகளைக் கையாளவல்ல மையங்களை உருவாக்கினால் இந்த உலகை நாம் விரும்பும் திசையில் வெற்றிகொள்ள முடியும்.குறுக்குவழிகள் சூதாட்டம் போன்றது. தனிநபர்களின் மனமாற்றத்தில் தங்கியிருப்பது. இந்த விவகாரத்தில், குறுக்குவழிகளை நம்பி 14 ஆண்டுகள் ஓடிவிட்டன. நேர்வழி கடினமேயாயினும் சரியான திசையில் அடியெடுத்து வைத்து ஓரிரண்டு ஆண்டுகள் நடந்தாலே கும்மிருட்டுப் பாதையில் இருள் தெரியும். விடுதலைக்கு வழிசமைக்க முடியும்.

நன்றி உரிமை மின்னிதழ்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW