ராகுல்காந்தி பதவி பறிப்பு! பாசிச நெருக்கடி தீவிரமடைகிறது! – தோழர் பாலன்

31 Mar 2023

2019 ஆம் ஆண்டு கோலாரில் ராகுல் காந்தி பேசிய உரைக்காக இப்போது தண்டனை வழங்கப்பட்டு அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இது பாசிச நெருக்கடி தீவிரமடைந்திருப்பதை ஐயத்திற்கு இடமின்றி காட்டிநிற்கிறது. மோடி அரசு மென்மேலும் இதே திசையில் பயணிக்கப்ப் போகிறது. பாசிசத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க சனநாயக ஆற்றல்கள் அணியமாக வேண்டும். கடந்த செப்டம்பரில் கன்னியாகுமரி முதல் காசுமீர் வரையிலான ’இந்திய ஒற்றுமை’ நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். சுமார் 4080 கி.மீ நடைபயணம் சனவரி 30 அன்று காசுமீரில் நிறைவடைந்தது. இது நாடு தழுவிய அளவில் கவனம் பெற்றது. மார்ச் 5 ஆம் நாளில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையில், ”இந்திய சனநாயகம் தாக்கப்படுகிறது. நாடாளுமன்றம், சுதந்திர ஊடகம், நீதித்துறை என சனநாயகத்திற்கு தேவையான நிறுவனக் கட்டமைப்புகள் அனைத்தும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இந்திய சனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது ” என்று பேசினார். 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் பற்றிய பிபிசி ஆவணப்படமும் அதானியின் முறைகேடுகள் பற்றிய ஹிண்டர்பர்க் அறிக்கையும் வெளிவந்திருந்த பின்னணியில், இலண்டனில் ராகுல் காந்தி ஆற்றிய உரை பன்னாட்டளவில் கவனம்பெற்றது.கடந்த பிப்ரவரி 7 அன்று அதானிக்கும் மோடிக்குமான உறவைக் கேள்விக்குள்ளாக்கி ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பேசினார். ”மோடியின் இஸ்ரேல் பயணத்திற்குப் பின்பு அதானிக்கு பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தங்கள் கிடைத்தன. மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்திற்குப் பின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒரு பில்லியன் டாலர் கடனை அதானிக்கு வழங்கியது. மோடியின் வங்கதேசப் பயணத்திற்குப் பின் அதானிக்கு 15000 மெகா வாட் மின்னாக்கத்திற்கான ஒப்பந்தம் கிடைத்தது. 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறிலங்காவின் மின்சார வாரியத்தின் தலைவர் எம்.எம்.சி. பெர்ணாண்டோ, ” இந்திய தலைமையமைச்சர் மோடி காற்றாலை மின்னாக்கத் திட்டத்தை அதானிக்கு கொடுக்குமாறு தனக்கு அழுத்தம் கொடுப்பதாக அதிபர் இராசபக்சே தன்னிடம் சொன்னார்” என்று வெளிப்படுத்தினார். இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையல்ல, அதானி தனது வணிகத்தைப் பெருக்குவதற்கான வெளியுறவுக் கொள்கை. அதானி உலகப் பணக்காரர் வரிசையில் 609 ஆவது இடத்தில் இருந்து 3 ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளார். அதானி சுமார் 9 துறைகளில் ஏகபோக சக்தியாக வளர்ந்துள்ளார். தமக்கு முன்அனுபவம் இல்லாத விமானம், பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் திட்டங்களைப் பெறுகிறார். இவையாவும் மோடியின் அரவணைப்புடனேயே அவருக்கு கிடைக்கின்றன. தேசியப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சனைப் பற்றி மோடி வாய்திறக்க வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களின் போது எத்தனை முறை மோடியும் அதானியும் ஒன்றாகப் பயணித்தனர், எத்தனை முறை மோடி முன்னே செல்ல அதானி பின்னால் சென்று இணைந்து கொண்டார், எத்தனை முறை மோடியின் பயணம் முடிந்தவுடனேயே அதானி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார், எத்தனை முறை மோடியின் பயணத்தை தொடர்ந்து அதானிக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்தன. எவ்வளவு பணம் பாசகவுக்கு அதானி கொடுத்திருக்கிறார் ஆகியவற்றிற்கு மோடி பதிலளிக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி பேசினார். இத்தகையதோர் சூழமைவில்தான் மார்ச் 23 அன்று குஜராத்தில் உள்ள சூரத் மாவட்ட கீழமை நீதிமன்றம் அவதூறு வழக்கொன்றில் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் கோலார் மாவட்டத்தில் நடந்த பேரணி ஒன்றில் பேசும் போது ‘ஏன் எல்லா திருடர்களும் அது நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடியானாலும் தங்கள் பெயரில் மோடியைக் கொண்டிருக்கிறார்கள்’ என்று பேசினார். இது மோடி என்ற பட்டத்தை தன் பெயரில் கொண்டிருப்பவர்கள் மீதான அவதூறு என்ற குற்றச்சாட்டின் பெயரில் குஜராத்தை சேர்ந்த முன்னாள் பாசக அமைச்சரும் இப்போதைய எம்.எல்.ஏ.வுமான பூர்னேசு மோடி என்பவர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அரசமைப்பு சட்ட உறுப்பு 499, 500 இன் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. புகார்தாரரான பூர்னேஷ் மோடி கடந்த 2022 ஆம் ஆண்டு இவ்வழக்கிற்கான போதிய சான்றுகள் இல்லை என்பதால் இவ்வழக்கின் மீதான விசாரணைக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தடை கோரிப் பெற்றிருந்தார். பிப்ரவரி 7 ஆம் நாள் அதானிக்கும் மோடிக்கும் இடையிலான நட்புப் பற்றி விளக்கம் கொடுக்குமாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். பிப்ரவரி 16 ஆம் நாள் மேற்படி வழக்கில் விசாரணைக்கு தடை கோரியிருந்த தனது முறையீட்டை பூர்னேசு மோடி திரும்பப்பெறுகிறார். கீழமை நீதிமன்றத்தில் நீதிபதி மாற்றப்படுகிறார். பிப்ரவரி 27 ஆம் நாள் வழக்கு விசாரணை தொடங்குகிறது. மார்ச் 17 ஆம் நாளோடு விசாரணை முடிந்து அடுத்த ஒரு வாரத்தில் மார்ச் 23 அன்று இரண்டாண்டு சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. காலனிய கால சட்டம் ஒன்றைப் பயன்படுத்தியே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 499 இன் படி யாருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதோ அவர்கள் தான் புகார் கொடுக்க முடியுமே ஒழிய இந்த பிரச்சனையில் பூர்னேசு மோடி புகார் கொடுக்க முடியாது. மேலும் முதல் முறை இத்தகைய குற்றத்தை செய்தவருக்கு குறைந்தபட்ச தண்டனை அதாவது 15,000 ரூ தண்டம் வழங்குவதுதான் இந்நாள்வரை இருந்துவரும் நீதிமன்ற நடைமுறை. ஆனால், அதிகபட்ச தண்டனையாக இரண்டாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது சூரத் கீழமை நீதிமன்றம். மார்ச் 23 ஆம் நாள் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளான மார்ச் 24 அன்றே நாடாளுமன்ற செயலகம் உறுப்பு 103 ஐ பயன்படுத்தி இரண்டாண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்ற ஒருவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்துவிட்டது. அதற்கு அடுத்த நாளே, வயநாடு தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாசகவுக்கு எதிரான அணிசேர்க்கை உருவாகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் பாசக வினையாற்றுகிறது. அமலாக்கத் துறை, வருவாய்த் துறை, சிபிஐ ஆகியவற்றைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. ஒரே நேரத்தில், இராஷ்டிரிய ஜனதாதளத்தின் தலைவர் லாலுவின் மகன் தேஜஸ்வி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரின் மகள் கவிதா, தில்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா எனப் பலரும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளில் அலைக்கழிக்கப்படுவதும் சிறைப்படுத்தப்படுவதும் நடந்து வருகின்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நின்று பாசகவுக்கு சவால்விட்டு விடக்கூடாது என்று மோடி – அமித் ஷா கூட்டணி கருதுகிறது. காங்கிரசு கட்சி, குறிப்பாக ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்கக்கூடிய அனைத்திந்திய அளவிலான மையமாக உருவாகிவிடக் கூடாது என்று கருதுகிறது பாசக. அப்படியொரு மையமாக உருப்பெற்றுவிட்டால் அதைக் கையாள்வது கடினம் என்று பாசக கருதுகிறது. காங்கிரசு பலவீனமான நிலையில் நீடித்தால் மாநில கட்சிகளை இலகுவில் கையாண்டுவிட முடியும் என்று பாசக கருதுகிறது. ராகுல் காந்தி பதவிப் பறிப்பு நடவடிக்கையை நாடாளுமன்ற சனநாயக நிறுவனங்கள் மீதான தாக்குதலாகப் பார்க்க வேண்டியுள்ளது. தன்னை எதிர்த்து நிற்கும் ஆளும்வகுப்பினரையே சகித்துக் கொள்ளாது என்பது , பாசிசத்தின் பண்புக் கூறுகளில் ஒன்றாகும். அது தனது தாக்குதலை ஆளும்வகுப்பின் மீதும் நடத்தக் கூடியது. அனைத்திந்தியக் கட்சியான காங்கிரசின் மீது தனது தாக்குதலை தொடுப்பதன் மூலம் பாசிச நெருக்கடி தீவிரப்பட்டு வருவதை வெளிக்காட்டியுள்ளது பாசக. நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் அதானி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். மறுபுறம் அதானி பற்றிய பேச்சையே எடுக்காமல், எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல், ராகுல்காந்தி இந்திய நாட்டைப் பற்றி வெளிநாட்டில் பேசி இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிட்டார், அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாசகவினர் கூச்சலிட்டனர். ராகுல் காந்தியின் இலண்டன் பேச்சை இந்தியாவுக்கு எதிரானப் பேச்சாக சித்திரித்தனர்.”நீதிபதிகள் பணியமர்த்தலில் பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கொன்றில், ஒன்றிய அரசு நீதிபதிகள் பணியமர்த்தலில் தலையிட்டு கொலிஜியத்துடன் மல்லுக்கட்டும் போக்கை விமர்சித்துப் பேசிய முன்னாள் நீதிபதிகளை இந்தியாவுக்கு எதிரான கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் நாட்டுக்கு எதிராகப் பேசுபவர்கள் தப்பமுடியாது, அதற்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும் என்றும் கடந்த மார்ச் 18 அன்று ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜு மிரட்டும் தொனியில் பேசினார். அதேபோல் கடந்த சனவரியில் தில்லி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இரண்டு நீதிபதிகளைப் பணி உயர்த்துவதை ஏற்க மறுத்து ஒன்றிய அரசு பட்டியலைத் திருப்பி அனுப்பியபோது ஒன்றிய அரசு சுட்டிக் காட்டிய ஐ.பி., ரா வின் காரணங்களை ஏற்க மறுத்து அப்பெயர்களை மீண்டும் அனுப்பியது கொலிஜீயம். ஐ.பி., ரா வின் குறிப்புகளை பொதுவெளியில் வெளிப்படையாக பதிவிட்டது மிகுந்தக் கவலைக்குரியது என்று சொல்லி கொலிஜீயத்தை உளவு அமைப்புகளுக்கு எதிராக திருப்பிவிட்டு, உளவு அமைப்புகள் நாட்டுக்கு உழைப்பவர்கள் என்று சொல்லி கொலிஜீயம் தமது பரிந்துரைகளில் உறுதியாக இருப்பதையே தேசத்திற்கு எதிரானதாக சித்திரிக்க முயன்றார் சட்ட அமைச்சர் கிரண் ரிஜு.இவ்வரசை விமர்சிப்பவர்களைத் தேசத்திற்கு எதிரானவர்களாகக் காட்டி அவர்களைத் தனிமைப்படுத்த முயல்கிறது பாசக. எதிர்க்கட்சிகளாகட்டும், நீதித்துறையாகட்டும் எவரையும் விட்டுவைக்காமல் தேச விரோதிகளாக முத்திரைக் குத்தி தனது தாக்குதலை அன்றாடம் தீவிரப்படுத்தி வருகிறது பாசக அரசு. 2024 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்க நெருங்க இந்த போக்கு மென்மேலும் தீவிரப்படும். எதிர்க்கட்சிகளை மிரட்டி உருட்டி சிதறடிப்பது, நாடாளுமன்ற சனநாயக நிறுவனங்களை முழுக்க்கட்டுப்பாட்டில் எடுப்பது, எதிர்ப்புக் குரல் அனைத்தையும் தேசத்திற்கு எதிரானதாக திருப்பிவிடுவது, அதானியைப் பாதுகாப்பது ஆகியவை தொடரத்தான் போகிறது. எனவே, ராகுல் காந்தியின் பதவி பறிப்பு நடவடிக்கை என்பது பாசிசத்தின் நெருக்கடி மென்மேலும் தீவிரமடைந்து வருவதைக் காட்டுகிறது. இதைக் கருத்தில் கொண்டு அடுத்தஅடுத்த தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு சனநாயக ஆற்றல்கள் அணியமாக வேண்டும். நாட்டின் முதன்மை எதிரியாக எழுந்து நின்று, தாக்குதலை நடத்திவரும் காவி-கார்ப்பரேட் பாசிச அபாயத்திற்கு எதிராக அணிதிரள வேண்டும், பாசிச பாசகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான இயக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW