புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டம் அன்னவாசலில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் கள ஆய்வு

03 Jan 2023

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் 31 -12- 2022 ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் மாவட்ட அமைப்பாளர் தோழர் வை.சி.கலைச்செல்வன் தலைமையில் கள ஆய்வு செய்தனர்.

21ம் நூற்றாண்டில் உலகெங்கும் நடந்திராத வன்கொடுமை புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் (இறையூர் ) என்ற சிற்றூரில் ஆதிதிராவிட பறையர் சாதியைச் சேர்ந்த 30 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த சிற்றூரில் வாழுகின்றவர்கள் அனைவரும் விவசாயக் கூலிகளாக இருக்கிறார்கள். எப்படியும் முன்னேற வேண்டும் என்று தங்களின் உழைப்பால் மிகவும் கஷ்டப்பட்டு தங்களின் பிள்ளைகளைப் படிக்க வைத்துள்ளார்கள். இதனால் சமூகத்தில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையில் அந்த ஊரில் ஒரு காவல்துறை ஊழியர், ஒரு எல்லைப் பாதுகாப்பு படை வீரர், ஒரு ராணுவ வீரர், ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒரு ஆசிரியர், சமீபத்தில் நடந்த தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் குரூப்பு 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஒரு மாணவி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், இளங்கலை பட்டதாரிகள் ஆசிரியர்கள், உருவாகியுள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த 26-12-2022ஆம் தேதி அந்த கிராமத்தில் பூமித்திரன் வயது 3 என்ற சிறுவனுக்கு வாந்தி பேதி வந்ததால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின் தொடர்ந்து, கோபிகா வயது 8, தீபிகா வயது 2, யாசிகா வயது ஒன்றரை, பூர்வ ஷாமிலி வயது 8, ஆகிய குழந்தைகளுக்கு தொடர்ந்து வாந்தி பேதி வந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தைகள் குடிக்கும் தண்ணீரில்தான் ஏதோ நடந்துள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவர்கள் அறிவுரை கூறியதும் வேங்கை வயல் பறையர் சாதி பகுதிக்கு மட்டும் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்தபோது அதில் ஒரு பொட்டலம் கிடந்துள்ளது. அது என்னவென்று பார்த்தபோது அது மனித மலம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு. கவிதா ராமு அவர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்உயர்திரு. வந்திதா பாண்டே அவர்களும் தலையீடு செய்து வேங்கை வயல் கிராமத்திற்கு சென்று பார்வையிட்ட போது அந்த ஊரில் இன்னும் ஏராளமான வன்கொடுமை நிகழ்வுகள் சாதியத் தீண்டாமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை அறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.

அங்குள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் கோவிலில் வேங்கை வாசல் கிராமப் பறையர் சாதி மக்கள் நுழைந்து சாமி கும்பிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அந்த கிராமத்தில் உள்ள தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை இருப்பது தெரிய வந்தது. இந்த வன்கொடுமைநிகழ்வுக்கும் சாதிய தீண்டாமைக்கும் முடிவு கட்டும் விதமாக நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டது.
இதில் மேலும் வேதனை என்னவென்றால் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பறையர் சாதி மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய போது அந்த ஊரில் வசிக்கும் பெண்மணி சாமியாடுவது போல் நடித்து மாவட்ட ஆட்சித் தலைவரையும், பறை சாதி மக்களையும் இழிவாகப் பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த ஊரில் டீக்கடை வைத்து பறையர் சாதி மக்களுக்கு இரட்டைக் குவளை முறைத் தீண்டாமையை நடைமுறையில் பின்பற்றி வந்த மாணிக்கம் என்பவர் மீது வன்கொடுமைத் தடைச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சுற்றுவட்டாரப் பகுதிக்கு விஷயம் காட்டுத் தீ போல பரவியது.

மாவட்ட அளவிலான அரசு அதிகாரிகள், காவல்துறையினர், வேங்கை வயலில் முகாமிட்டுள்ளனர். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் குழு குழுவாக சென்று தீண்டாமைக்கு எதிராகத் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

அதையொட்டி 31- 12 -2022-ம் தேதி தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினினிஸ்ட் -மாவோ சிந்தனை) யின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர்
வைசி.கலைச்செல்வன்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கரம்பக்குடி தாலுகா அமைப்பாளர்
பி. எஸ்.கவியரசன், கந்தர்வகோட்டை தாலுகா அமைப்பாளர்
தோழர் க.அம்பிகாபதி, ஆலங்குடி தாலுகா அமைப்பாளர் தோழர். பி. எஸ். எம். உதயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர்
தோழர் இரா. தாமரைச்செல்வன்,
சோ கலியமூர்த்தி, பாக்கியராஜ், ஆகிய தோழர்கள் வேங்கை வயல் சென்று கள ஆய்வு செய்து மக்களைச் சந்தித்து சாதியத் தீண்டாமையை அகற்ற நாம் என்ன செய்ய வேண்டும் எவ்வாறு இந்த அசிங்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அந்தப் பகுதி மக்களின் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டி கவனம் குவிக்கப்பட்டது. வேங்கை வயல் மக்கள் வாழும் தெருவிற்கு சாலை அமைக்க வேண்டும், அந்த மக்களின் வீடுகள் நல்ல நிலையில் கட்டித்தர வேண்டும், புதிதாக நீர்த்தேக்கத் தொட்டியை கட்டித் தர வேண்டும், அந்த நீர்த்தேக்கதொட்டி அனைத்து சாதிக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் தனியாக நீர்த்தேக்கத் தொட்டி தரக்கூடாது!ஊரையே ஏமாற்றும் விதமாக இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை அகற்றிவிட்டு பயன்படும் வகையில் வீட்டிற்கு ஒரு கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும்.
மலம் கழிவு கலந்த தண்ணீரை பருகிய குழந்தைகள் என்ற இழிவவைப்போக்கும் விதமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை அரசாங்கமே தத்தெடுத்து அரசு முன்மாதிரி பள்ளிகளில் படிக்க வைத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் வீசிய மிருகங்களைக் கண்டுபிடித்து கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு அடுத்ததாக தமிழ்நாடு போலீஸ் மட்டும்தான் தலைசிறந்த போலீசாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்று வரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையிலேயே காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது ஆளும் கட்சி – எதிர்க்கட்சி இவர்களின் கட்சிப் போர்வையில் குற்றவாளிகள் மறைந்திருக்கிறார்களா? குற்றவாளிகளைக் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வேங்கை வயல் மக்களிடம் கலந்து பேசிய போது வேங்கை வயல் மக்கள் மிகுந்த உற்சாகமடைந்தார்கள். விலங்கினங்களில் 2000 ஆண்டுகள் தன் குணாதிசயத்தை மாற்றிக் கொள்ளாத விலங்கு பூனை இனம் மட்டும்தான்.
இந்த விலங்கு கூட மலம் கழித்தால் தான் கழிக்கும் மலத்தை மற்ற உயிரினங்கள் பார்த்து விடக்கூடாது முகர்ந்து விடக்கூடாது என்று கருதி தான் கழித்த மலத்தை மண்ணைப் போட்டு மூடி வைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஐந்தறிவு கொண்ட விலங்கு கூட இப்படி நாகரீகம் கருதும் காலத்தில் ஆறறிவு கொண்ட மனிதன் குடிக்கும் தண்ணீரில் மனித மலத்தை கலந்து உள்ளார்கள் என்றால் இவர்களை என்னவென்று கருதுவது.

21ம் நூற்றாண்டில் இப்படி ஒரு அவலம், அசிங்கம், வன்கொடுமை, வக்கிர புத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்தேறி உள்ளது. வேங்கை வயல் ஆதிதிராவிட பறையர் மக்களிடம் நாம் கள ஆய்வு கொண்ட போது இன்னும் ஏராளமான விஷயங்களை அடுக்கி கொண்டே போனார்கள். இந்த அசிங்கத்தைக் கண்டிக்க பல்வேறு அரசியல் கட்சிகள், போராடும் அமைப்புகள் களம் கண்டு வேங்கை வயல் மக்களின் அவலங்களை வெளியில் கொண்டு வரும் நிலையில் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு அதுவும் சமூக நீதிக்கான ஆட்சி என்று தன்னை பறைசாற்றிக்கொண்டு ஆட்சி செய்து வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஈன்றெடுத்த இரண்டு அமைச்சர்கள் அதுவும்
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களும், சுற்றுப்புற சூழல் துறை அமைச்சர் சிவ. மெய்யநாதன் அவர்களும் பாதிக்கப்பட்ட வேங்கை வயல் மக்களைச் சந்தித்து இன்று வரை ஆறுதல்கள் கூட சொல்ல முன்வரவில்லை என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆழமாக சிந்திக்கத் தக்கது. கல்யாணம், காதணி விழா, தேர் திருவிழா, புதுமனை புகுவிழா, டீக்கடை திறப்பு விழா இப்படி எல்லாவற்றிலும் கலந்து கொண்டு விளம்பரம் தேடி வரும் மேற்படி அமைச்சர் பெருமக்கள் இந்த வன்கொடுமை நடந்த கிராமத்திற்கு செல்லவில்லை என்பது சமூக நீதி பேசும் திமுகவை வியந்து பார்க்க வைக்கிறது. ஆனாலும் காரணம் புரிகிறது ! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன கொடுமை நேர்ந்தாலும் அவர்களை நேரில் சென்று பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தேர்தல் நேரத்தில் எடுபிடி புரோக்கர்கள் மாவட்ட, வட்ட, ஒன்றிய,நகர கிளைக் கழக செயலாளர்களின் மூலம் பணம் பரிவர்த்தனை செய்து தாழ்த்தப்பட்ட உழைக்கும்மக்களின் ஓட்டுக்களை பொறுக்கி விடலாம் என்ற மமதைதான். இது போன்ற வன் செயல்களை நேரில் பார்க்கச் சென்றால் பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்க வெறி கொண்ட தீண்டாமைக் கொடுமையை இன்னும் கடைபிடிக்கின்ற மேல் சாதி உடன்பிறப்புகளின் மனம் கோணலாகிவிடும், அவர்களிடம் ஓட்டுப் பெற முடியாது என்ற அச்சம்தான் என்று நம்மால் யோசிக்க முடிகிறது.

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் சார்பில் வேங்கை வயல் கிராம உழைக்கின்ற பறையர் சாதி மக்களிடம் பகிர்ந்து கொண்டது என்னவென்றால் அந்த ஊரில் உள்ள பொதுக் கோவிலான அருள்மிகு அய்யனார் கோவில் காலையில் மாலையில் திறக்க வேண்டும். ஆராதனை நடைபெற வேண்டும். அந்த ஆராதனையில் வேங்கை வயல் பறையர் சாதி மக்கள் பங்கெடுக்க வேண்டும்!அதேபோல் தேநீர் கடை திறக்கப்பட வேண்டும்! தேநீர் கடைகளில் இரட்டைகுவளை முறை தடுத்தாக வேண்டும்! ஒழிக்கப்பட வேண்டும்!
சமத்துவம் வளர வேண்டும்! என்பதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோரிக்கையாக கொடுத்துள்ளோம்.

தொடர்ந்து களப்பணியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்- மாவோ சிந்தனை) புதுக்கோட்டை மாவட்டம்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW