மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே? – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு!

28 Oct 2020

செய்தி அறிக்கை

கடந்த ஜுலை 23 அன்று கடலுக்குச் சென்று, காணாமல் போயிருந்த சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேர், 53 நாட்களுக்குப்பின், கடந்த 13.9.2020 அன்று மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 9 மீனவர்களை மியான்மர் கடற்படை, இந்திய கடற்படையிடம் ஒப்படைத்திருக்கிறது. பாபு(42) என்ற ஒருவர் மட்டும் கடந்த செப் 21.9.2020 அன்று காணாமல் போனதாக அதிர்ச்சியான தகவல் வந்தது. விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணான தகவல் கிடைக்கிறது. பாபு காணாமல்போன செப் 21 அன்று இரவு 7 மணியளவில் துறைமுக அலுவலர்கள் இருவர் வந்து, படகை சரி செய்ய இருவர் வரச்சொல்லி அழைத்து அனுப்பியிருக்கிறார்கள். அவ்வாறு சென்றவர்கள்தான் பாபுவும் படகு ஓட்டுநர் ரகுவும். பாபு கீழே இறங்கி படகை சரிசெய்ததாக சொல்கிறார்கள். படகு நின்றிருந்த இடம் ஆற்றுப்பகுதி, கடலும் நீரோட்டமும் சந்திக்கும் சிக்கலான இடம் என்றும் சொல்கிறார்கள். அந்த இடத்தில் தண்ணீரில் சிக்கி பாபு அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடற்படை கட்டுப்பாட்டில் இருந்தவர் எவ்வாறு காணாமல் போக முடியும்? இரவு நேரத்தில் ஆபத்தான இடத்தில் இறங்க ஏன் அனுமதித்தார்கள்? என்கிற கேள்வி எழுகிறது.

தற்போது, மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது. அதில், “மியான்மரின், சிட்வி துறைமுகம் அருகே, கலடன் ஆற்றுப்பகுதியில்“ பாபு என்பவர், செப் 21 அன்று, படகை நங்கூரமிட கடலுக்குள் இறங்கினார். அப்பொழுது நங்கூரத்தின் கயிறு விசிறியில் மாட்டிக்கொண்டது. அதனை எடுத்துவிடும் முயற்சியில் பாபு இறங்கினார். அதற்குப்பிறகு அவர் காணவில்லை. நாங்கள் செப் 21 முதல் அக்டோபர் 23 வரை தேடியும் பாபு கிடைக்கவில்லை. கடலோரத்தில் உள்ள காவல்நிலையத்திற்கும் தகவல் சொல்லி தேடினோம். இன்றுவரை கிடைக்கவில்லை (Non Traceable)“ என்கிற கடிதம் அனுப்பியுள்ளது.

53 நாட்கள் கடலில் தத்தளித்து கிடந்து இருந்தும் உயிர் பிழைத்தவர்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தப்பின் இப்படி காணாமல் போனதற்கு இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டாமா? மீனவர்கள் மீட்கப்பட்ட உடனேயே அவர்களை தமிழகம் கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தால் இத்தகைய அசம்பாவிதம் நடக்காமல் தடுத்திருக்க முடியும். இப்பொழுது பாதிக்கப்பட்டு தவித்துவரும் பாபுவின் மனைவி, பிள்ளைகளை யார் பாதுகாப்பது? அவர்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன வழி என்பதை தமிழக அரசு உறுதியளிக்க வேண்டுமல்லவா?

பாபுவின் குடும்ப நிலை

திருவொற்றியூர் குப்பம், திருச்சினாங்குப்பம், ஆல் இந்திய ரேடியோ குடியிருப்பில் வசித்துவருபவர் பாபு(42) மனைவி உஷா(35). இவர்களுக்கு ஒரு மகள் (9ஆம் வகுப்பு), ஒரு மகன் (11ஆம் வகுப்பு) இருக்கிறார்கள். பாபு மீனவர். பாபுவும் உஷாவும் சாதி மாறி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாபு கடலுக்குச்சென்றால்தான் குடும்பத்திற்கு வாழ்வாதாரம். அதைவைத்துதான் பிள்ளைகளைப் படிக்கவைத்து குடும்பத்தை நடத்திவந்தார்கள். கொரோனா ஊரடங்கு சூழலில் கடலுக்குச்செல்ல தடையிருந்த நேரத்தில் வருமானம் இன்றி மீனவ மக்கள் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்த சூழலில்தான் சிறிது காலம் பாபு, பிரிண்டிங் கடையில் வேலை பார்த்துவந்திருக்கிறார். அதிலும் வருமானம் சரிபட்டுவராத காரணத்தால் கடலுக்குச் சென்று கொஞ்சம் சம்பாதித்து வருவோம் என்று சென்றிருக்கிறார்கள். மற்ற சிலரும் இதே நிலையில்தான் சென்றிருக்கிறார்கள். கொரோனா பெருந்தொற்றில் மத்திய அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரம் இழந்தவர்கள்தான் இப்படி உயிரைப் பணயம் வைத்து கடலுக்குச் செல்ல நேர்ந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். மாறாக கடலுக்குள் சிக்கியுள்ள மீனவர்கள்மீதே குறிப்பாக பாபு மீதே பழிபோடுவது அரசின் பொறுப்பற்றத்தனமல்லவா?

இந்நிலையில், பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மற்றும் தமிழ் மக்கள் உரிமைக் கூட்டியக்கத்திலுள்ள உறுப்பு அமைப்புகளான தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம், தென்னிந்திய மீனவர் நலச்சங்கம், புரட்சிகர தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் இணைந்து காசிமேடு மீன்பிடித்துறைமுகம் உதவி இயக்குநர் திரு. வேலன் அவர்களை செவ்வாய் அன்று (27.10.2020) மதியம் சந்தித்து கோரிக்கையை முன்வைத்தோம்.

கோரிக்கைகள்

  • இந்தியக் கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த பாபு காணாமல் போனதற்கும் இதுவரை கண்டுபிடிக்காததற்கும் இந்திய, தமிழக அரசே பொறுப்பேற்றிடு!
  • செப் 21 அன்று காணாமல் போன பாபு (42), கிட்டத்தட்ட 36 நாட்களாகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முயற்சிகளை இந்தியத் தூதரகம் விசாரித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
  • காணாமல் போன மீனவர் பாபு-உஷா (35) குடும்பத்திற்கு இரண்டு மாதமாக கொடுக்கவேண்டிய நிவாரணத் தொகை ( நாளொன்றுக்கு 250ரூ ) ரூ.15,000 நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
  • பாபுவின் மனைவி உஷா வேலை, வருமானமின்றி இரண்டு பிள்ளைகளை வைத்து சிரமப்பட்டு குடும்பத்தை நடத்திவரும்நிலையில் அவருக்கு உடனடியாக அரசு பணி வழங்க வேண்டும்.

 

-ரமணி

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கம்

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW