தமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்!

-தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்.
நேற்று இரவு திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்திவரும் தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் ரகுவை பாசக காவிக் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அண்மையில் பாசகவில் இணைந்துள்ளனர். அவர்கள் அவ்வப்போது தோழர் ரகுவின் அரசியல் நிலைப்பாடுகள், செயல்பாடுகள் மீது விவாதிப்பது உண்டு. நேற்று பாசகவைச் சேர்ந்த மூர்த்தி உள்ளிட்ட மூவர் குடிபோதையில் வாக்குவாதம் செய்யத் தொடங்கியுள்ளனர். தள்ளுவண்டியில் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் படங்கள் ஒட்டியிருப்பதைப் பார்த்து ‘அவனா நீ’ என்று தொடங்கி வம்பிழுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் அடிதடியிலும் இறங்கியுள்ளனர். கூடவே, தொலைபேசியில் வேறு சிலருக்கு அழைப்புக் கொடுத்து அவர்களும் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். இதற்குள் பிரியாணி கடையில் வேலை செய்யும் மற்றொருவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க காவலர் அங்கு வந்தனர். காவலர்களைக் கண்டவுடன் காவிக் கும்பல் தங்கள் வாகனத்தில் தப்பி சென்றனர்.
தாக்குதலில் ஈடுபட்ட பாஜக வை சேர்ந்த மூர்த்தி உள்ளிட்ட மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி இரவு 10.45 மணியளவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையத்தில் ஆட்கள் அதிகம் இல்லாத காரணத்தால் விசாரணைக்கு காலை 10 மணியளவில் வர சொல்லியுள்ளனர்.
“பாசக வை எதிர்த்து அரசியல் கள வேலைகளில் ஈடுபடக் கூடாது! குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடக் கூடாது. முகநூலில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் பற்றி பேசக் கூடாது, சொந்த வண்டிகளில் நேசிக்கும் தலைவர்களி ன் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர், லெனின், ஸ்டாலின், மாவோ, பிரபாகரன், சே, பகத்சிங் படங்கள் ஒட்டியிருக்கக் கூடாது. மீறினால் அடிதடி சண்டையில் ஈடுபடுவோம் ” என வன்முறையில் ஈடுபட முனைகின்றனர். திருச்சி திருவெறும்பூர் பகுதியில் பாஜக காலிகளின் அடிதடி பொறுக்கித்தனம், எச்சரிக்கைகள், கொலை மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றது.
இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பாசகவினர் மீது தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றால் தமிழகத்தை குஜராத்தாகவும் உத்தரபிரதேசமாகவும் மாற்றிவிடுவார்கள். அடிதடியில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரும் முயற்சிகளைத் தொடங்குவோம்.
தமிழ்நாட்டைக் கலவரக் காடாக மாற்றத் துடிக்கும் காவிக் கும்பலுக்கு எதிரானப் போராட்டத்தில் சனநாயக ஆற்றல்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். குறிப்பாக, திருவெறும்பூர் பகுதியில் உள்ள சனநாயக ஆற்றல்கள் இணைந்து நின்று காவிகளின் காலித்தனத்தைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
-பாலன்
பொதுச்செயலாளர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி