கொரோனா ஆட்கொல்லியல்ல, பயங்கொள்ளலாகாது! – என் அனுபவ பகிர்வு

30 Jun 2020

இத்தகைய ஓர் அனுபவப் பகிர்வு கொரோனா கிருமித் தொற்று குறித்து நிலவும் அச்சத்தைப் போக்கவும் கிருமித் தொற்றிய நேரத்தில் நாம் எத்தகைய தவறை செய்கிறோம் என்பதை அறிந்துகொள்ளவும் உதவும் என்ற நோக்கத்தில் எழுதப்படுகின்றது. நான் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகி அரசின் பராமரிப்பு மையம் ஒன்றில் தங்கி இருந்து பின்னர் வீட்டில் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, ஜுன் 28 ஆம் தேதியோடு வீட்டுத் தனிமைப்படுத்தலும் நிறைவடைந்துள்ளது.

ஜூன் 01:

மே 31 இரவு எப்போதும் போலவே உறங்கச் சென்றேன். ஆனால், ஜூன் 01 அன்று காலையில் எழும்போதே (8 மணி அளவில்) உடம்பு சரியில்லை. காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது படுக்கையிலேயே புரண்டுபுரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். சுமார் 12 மணி அளவில் ’ஆம் நமக்கு காய்ச்சல் அடிக்கிறது’ என்பது தெளிவானது.

தனியார் பரிசோதனை மையத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவரின் பரிந்துரையும் கொரோனா நோய் அறிகுறியும் இருக்க வேண்டும். எனவே, என்னுடைய தம்பி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிந்துரை படிவத்தைப் பெற்று வந்துவிட்டான். இருந்தாலும் இன்றே செல்வதா?, தனியாரிடம் பரிசோதிப்பதா? அல்லது ஓமாந்தூரார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாமா? என்று ஒருவிதமானக் குழப்பம் இருந்தது.

சிறுசிறு உடல் நோவுகள் என்றால் நான் சென்று மருத்துவ சேவை பெறும் மருத்துவத் தோழரிடம் ஆலோசனைக் கேட்ட பொழுது சில மாத்திரைகளின் பெயர்களைச் சொல்லி, ”அவற்றை மூன்று நாட்களுக்கு சாப்பிடுங்கள். காய்ச்சல் நீடித்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்” என்றார். அந்த மருந்துகளை வாங்கியதோடு அந்த நாள் முடிந்துவிட்டது. அன்றைய தினம் காய்ச்சல், உடம்பு வலி, அசதி ஆகியவை இருந்தன. படுக்கையில் இருந்து எழ முடியாத அளவுக்கு ஓய்வு நாடியது உடல். வெண்ணீர் வைப்பது, கபசுர குடிநீர், உப்புப் போட்டு வாய்க் கொப்பளிக்க வெண்ணீர், உணவுக்கு கஞ்சி, தோசை ஆகிய அனைத்து வேலையையும் தம்பி செய்துகொண்டிருந்தான்.

ஜூன் 02:

ஆயுஷ்(AYUSH) என்று அழைக்கப்படும் பாரம்பரிய மருத்துவத்திற்கான இந்திய அரசின் அமைச்சகம் மார்ச் மாதத்தில் கொரொனா கிருமித் தொற்று ஏற்படாமல் தடுக்க (phophylatic) ’ஆர்செனிக் ஆல்பம் 30’ என்ற மருந்தை உட்கொள்ளுமாறு பரிந்துரைத்தது. அம்மருந்தை மாதமொருமுறை 3 நாட்கள் தொடர்ச்சியாக காலையில் வெறும் வயிற்றில் 4 உருண்டைகள் சாப்பிடலாம் என்று சொல்லியிருந்தது. ஏப்ரல், மே மாதங்களில் அந்தப் பரிந்துரைப்படி நானும் என் தம்பியும் அதை சாப்பிட்டிந்தோம். இன்றைக்கு காலை எழுந்தவுடன் ஹோமியோ மருத்துவம் தெரிந்த தோழர் ஒருவரை அழைத்து ”எனக்கு காய்ச்சல் அடிக்கிறது, இப்போதும் நான் ஆர்செனிக் ஆல்பம் மாத்திரையை சாப்பிடலாமா?” என்று கேட்டேன். அவர் அறிகுறிகளை எல்லாம் கேட்டுவிட்டு, ”ஆர்செனிக் ஆல்பம் வேண்டாம், வேறொரு மாத்திரையைச் சொல்லி உங்களிடம் அது இருந்தால் நான்கு ஐந்து மணிநேர இடைவெளியில் இன்றைக்கு மூன்றுமுறை சாப்பிடுங்கள்” என்றார். என்னிடம் அது இருந்தது. இன்றைக்கு மூன்றுமுறை அதையும் சாப்பிட்டேன்.

நாங்கள் குடியிருக்கும் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் எங்கிருக்கிறது என்று விசாரிக்குமாறு தம்பியிடம் சொன்னேன். ஏனென்றால், உடம்பு சரியில்லை என்றால் அருகில் இருக்கும் தனியார் கிளினிக்குக்கு சென்று சிகிச்சைப் பெறுவதுதான் வழக்கம். பல ஆண்டுகள் இப்பகுதியில் இருந்தாலும் ஆரம்ப சுகாதார நிலையம் எங்கிருக்கிறது என்று தெரியாததற்கு இதுதான் காரணம். நாடு தழுவிய அளவிலும் புறநோயாளிக்கான சிகிச்சை 82% தனியாரிடமே பெறப்படுகின்றது.

சுமார் 12 மணி போல் அந்த இடத்தைக் கண்டுபிடித்து விசாரிக்கும் பொழுது ‘டாக்டர் கிளம்பி விட்டார். நாளைக்கு வரவும்’ என்று சொல்லிவிட்டனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றுகூட உள்ளது.

எப்படியோ, ஜுன் 02 ஆம் தேதியும் பரிசோதனை செய்யாமல் கடந்துவிட்டது.

ஜூன் 03:

இன்று காலை எனக்கு காய்ச்சல் இல்லை. சளி மட்டும் இருந்தது. 11 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றோம். அந்நேரம் சுமார் பத்து தாய்மார்கள் கைக்குழந்தையுடன் அங்கே இருந்தனர். காய்ச்சல் இல்லை என்பதால் சளிக்கு மட்டும் ’அமாக்சிலின்’ மாத்திரை கொடுத்து உப்பு தண்ணீர் போட்டு வாய்க் கொப்பளிக்குமாறு ஆலோசனை தந்தார் மருத்துவர். ’ஓ.ஆர்.எஸ்.’ பவுடர் பாக்கெட் இரண்டும் கொடுத்தார்கள். மருத்துவர் அக்கறையோடு பேசியதாகவே நான் உணர்ந்தேன். நாளைக்கு வந்து என்னைப் பார்க்கவும் என்று சொல்லிவிட்டார்.

பொதுவாக கொரோனா காய்ச்சல் என்பது இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் நீடிப்பதில்லை, பத்து நாட்கள் வரை சுவை தெரியாமல், வாசனை தெரியாமல் இருக்கிறது, சளி, தலைவலி இருக்கிறது. ஆனால், காய்ச்சல் ஓரிரு நாட்களில் கூட சரியாகிவிடுகின்றது. எனவே, இப்போது பெருந்தொற்று தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் காய்ச்சல் அல்லது சளி அல்லது தலைவலி அல்லது உடம்பு வலி என்ற வகையில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்வது என்ற கொள்கை இருக்க வேண்டும். ஆசு நிலைய மருத்துவர் இன்றைக்கே என்னை பரிசோதனை செய்ய அனுப்பும் வகையில் அரசின் கொள்கை இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

ஜூன் 03 ஆம் தேதி முழுக்க எனக்கு காய்ச்சல் இல்லை.

ஜூன் 04:

என்னுடைய தம்பிக்கு காய்ச்சல் அடிக்கத் தொடங்கிவிட்டது. என் தம்பி படுக்கையில் இருந்து எழ முடியாமல் இருந்தான். வெண்ணீர் வைப்பது, கஞ்சி தயார் செய்வது, கபசுர குடிநீர், உப்பு தண்ணீர் போட்டு கொப்பளிக்க வெண்ணீர் வைப்பது, கஞ்சி என எல்லா வேலைகளையும் செய்யும் அளவுக்கு என்னுடைய உடல் ஈடுகொடுத்தது. அதாவது கிட்டத்தட்ட காய்ச்சல், உடல் அசதி ஆகியவற்றில் இருந்து நான் மீண்டுவிட்டேன். அன்றைய தினம் எனக்கு காய்ச்சல் வந்து மூன்று நாட்கள் நிறைவடைந்து நான்காவது நாள்.

காய்ச்சல் அடிக்கத் தொடங்கியவுடன் ’ஆமாம், காய்ச்சல் தான்’ என்று முடிவுக்கு வருவதற்கே நமக்கு அரை நாள் ஆகிவிடுகிறது. அன்றைக்கு காலையிலேயே ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதை தவறவிட்டுவிட்டோம்.

மருத்துவ தோழரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை சொன்னேன். ”காய்ச்சல் தம்பிக்கும் தொற்றிவிட்டது என்றால் அது பரவும் தன்மையைப் பார்க்கும்பொழுது கொரோனாவாகத்தான் இருக்க வேண்டும். சரி, நீங்கள் சாப்பிட்ட மாத்திரைகளையே அவரையும் சாப்பிடச் சொல்லுங்கள்” என்றார்.

ஜூன் 05:

ஆரம்ப சுகாதார நிலையம் சென்றோம். ”காய்ச்சல் முகாம் நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவர் அங்கே இருக்கிறார். இடம் – வடபழனி காவல் நிலையத்திற்கு பின்புறம்” என்று செவிலியர் வழிசொல்லி அனுப்பினார்.

காய்ச்சல் முகாமுக்கு சென்றோம். எங்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கானப் படிவங்களை நிரப்பித் தந்து, விருகம்பாக்கம் அரசு மாதிரி சேகரிப்பு மையத்திற்கு( Govt Collection Centre) சென்று சளி மாதிரி கொடுக்குமாறு சொன்னார் மருத்துவர்.

தம்பிக்கு காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்த நிலையில், பைக்கில் அலைவது சிரமமாக இருந்தது. ”பரிசோதனை – கொரோனா என்று மாட்டிவிட்டுவிடுவப் போலிருக்கிறதே” என்று தம்பி என்னிடம் கடுப்பாகச் சொன்னான். விருகம்பாக்கத்தில் உள்ள மாதிரி சேகரிப்பு மையத்திற்கு சென்றோம். வாயிலில் ஓர் அரசுப் பணியாளர் நின்று கொண்டிருந்தார். ”பரிசோதனைக்கு மாதிரி கொடுத்தவுடன் சமுதாயக் கூடத்தில் தனிமைப்படுத்திவிடுவோம்.(quarantine) இரண்டு நாட்களில் முடிவு தெரியும். ‘பாசிட்டிவ்’ வந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ‘நெகட்டிவ்’ வந்தால் வீட்டுக்குப் போய்விடலாம். இதற்கெல்லாம் தயார் என்றால் உள்ளே வரவும்” என்றார். நாங்கள் அதற்கு தயாராக அங்கே செல்லவில்லை. “சமுதாயக் கூடத்தில்  ஒவ்வொருவருக்கும் தனி கழிப்பறை, தனியறை கொடுப்பீர்களா? கிருமித் தொற்று இருப்பவரிடம் இருந்து இல்லாதவர்களுக்கு பரவிவிட்டால் என்ன செய்வது?” என்று கேட்டோம். அவர் தெளிவாக பதில் சொல்லவில்லை. ’நாங்கள் சளி மாதிரி கொடுக்கவில்லை’ என்று சொல்லிவிட்டோம். ’மருந்து மாத்திரை வாங்கிவிட்டீர்களா?’ என்று ‘அக்கறை’ உடன் கேட்டுவிட்டு எங்களை அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டார் அந்த அலுவலர். அரசின் கொள்கை முடிவுகளை அமலாக்குவதில் மேலிருந்து கீழ்வரை எல்லா பணியாளர்களிடமும் தெளிவு இல்லையென்றால் என்ன ஆகும் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு.

உண்மையில் நாங்கள் பின்வாங்காமல் அன்றைக்கே பரிசோதனைக்கு என்று சளி மாதிரியைக் கொடுத்திருக்க வேண்டும், தவறு செய்துவிட்டோம்.

ஜூன் 06:

எதுவும் செய்யாமல் வீட்டில் கழிந்தது. தம்பிக்கு காய்ச்சல் தொடர்ந்து கொண்டிருந்தது. அன்றோடு தம்பிக்கு காய்ச்சல் வந்து மூன்றாவது நாள்.

ஜூன் 07:

தம்பிக்கு காய்ச்சல் வந்ததிலிருந்து  நான்காவது நாள் தொடங்கும் போதும் காய்ச்சல் விடவில்லை. அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை. திங்கட் கிழமை அன்று ஆரம்ப சுகாதார மையம் சென்று பின்னர் அங்கிருந்து அரசு மாதிரி சேகரிப்பு மையத்திற்கு சென்று பரிசோதனை செய்தால் எப்படியும் முடிவு தெரிய புதன் ஆகிவிடும். அதுவரை, காய்ச்சல் தொடர்ந்தால் என்ன மருந்து கொடுப்பது? என்று வேறு பதற்றம் ஏற்பட்டது. தனியாரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வோம் என்று முடிவுசெய்து கீழ்பாக்கத்தில் இருக்கும் ‘ஹை டெக்’ லேப்பில் காய்ச்சல் முகாமில் கொடுத்த படிவத்தைக் காண்பித்து தம்பிக்கு கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிக் கொடுத்துவிட்டோம்.

ஜூன் 08:

இன்று காலை தம்பிக்கு காய்ச்சல் இல்லை. ஆனால், உடல் அசதி, கை,கால் வலி, தலை வலி இருந்தது.  மதியம் 1:30 மணி அளவில் ஆன் லைனில் ஆய்வு முடிவு தெரிந்துவிட்டது. ‘ பாசிட்டிவ்’. கீழ்ப்பாக்கத்தில் உள்ள  பரிசோதனை மையத்திற்கு சென்று ஆய்வறிக்கை வாங்கிக் கொண்டு வரும்வழியில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றேன். ”என் தம்பிக்கு கோவிட் பாசிட்டிவ், இங்கே அழைத்து வரலாமா?” என்று கொரோனா வார்டில் விசாரித்தேன். ’அழைத்து வாருங்கள்’ என்று அங்கிருந்த செவிலியர் ஒருவர் சொன்னார். ”இங்கே அழைத்து வந்தால் அறிகுறி இல்லை என்று வேறெங்காவது கேர் செண்டருக்கு அனுப்பிவிடுவீர்களா?” என்று கேட்டேன். ”இல்லை, இல்லை பிளாக்கில் தான் போடுவோம்” என்றார்.

எங்களுக்கு இரண்டு தெரிவு இருந்தது. ஒன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை செல்வது அல்லது மற்றொன்று சாலிகிராமத்தில் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் அரசின் சித்த மருத்துவ பராமரிப்பு மையம் இருந்தது. “சாலிகிராமத்தில் சேர்த்து விடுவோம், அருகில் இருக்கிறது” என்று தோழர்கள் சொன்னார்கள். உண்மையில் கொரோனா சிகிச்சையைப் பொருத்தவரை இடம் அருகில் இருக்கிறதா? இல்லையா? என்பது பொருட்டே அல்ல. ஏனெனில் யாரும் உடன் இருந்து பார்த்துக் கொள்ள முடியாது. ஆயினும், ஒரு மனப் பழக்கத்தின் காரணமாக அதை ஒரு காரணியாக பரிசீலிப்பது நடந்தது.

எங்கள் தெருவில் இருக்கும் முக்கியப் பெண்மணி ஒருவரிடம் விசயத்தை சொல்லிவிட்டுத்தான் சாலிகிராமத்திற்குப் புறப்பட்டோம். தம்பியை அழைத்துக் கொண்டு சாலிகிராமத்திற்கு சென்று பராமரிப்பு மையத்தில் சேர்த்துவிட்டேன். ஒரு நோட் புக்கில் பெயர், முகவரியை எழுதிக் கொண்டு அங்கிருந்தவர் சேர்த்து கொண்டார்.  என்னென்ன அறிகுறிகள் உள்ளன, ஆக்ஸிஜன் அளவு, இரத்த அழுத்தம் ஆகியவை எவ்வளவு இருக்கிறது என்று பார்த்து எழுதி வைத்துக் கொள்ளவில்லை. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பரிசோதனை அடிப்படையில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மையம் அது. பொதுவெளியில் கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சையை அங்கீகரிக்கச் செய்வதற்கு போதிய ஆவனப்படுத்தல் தேவை என்ற கண்ணோட்டம் அவர்களிடம் இருக்கவில்லை.

நான் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் எங்கள் தெரு முழுவதும் எங்கள் வீட்டில் ’கொரோனா’ என்பது தெரிந்துவிட்டது.

 

ஜுன் 09:

நேற்று மாலை தம்பியை கொரோனா பராமரிப்பு மையத்தில் சேர்த்துவிட்டு வந்திருந்த நிலையில், இன்று காலையில் மாநகராட்சியில் இருந்து ஓர் இளைஞர் வந்தார். அவர் கொரோனா பணிகளுக்கு என்று தற்காலிகமாக வேலைக்கு எடுக்கப்பட்டவர். தனியார் பரிசோதனை மையத்தில் இருந்து மாநகராட்சிக்கு தகவல் அனுப்ப வேண்டும். அப்படி தகவல் பெறப்பட்டபின்தான் என் தம்பியையும் பின்னர் என்னையும் தொடர்பு கொள்வர். ஆனால், இவர் வந்ததோ நாங்கள் வசிக்கும் தெருவில் இருந்த யாரோ ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆகும். எனவே, ஸ்டிக்கர் ஒட்டுவது, மருந்து அடிப்பது போன்ற பணிகள் எதுவும் அன்றைக்கு நடக்கவில்லை.

எனக்கு லேசாக சளி இருந்தது. ”உங்களுக்கு பரிசோதனை வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி மாநகராட்சியில் இருந்து தொடர்பு கொண்டு பேசுவார்கள்” என்று சொல்லிவிட்டு அந்த இளைஞர் சென்றுவிட்டார். என் தம்பி ஜவஹர் பொறியியல் கல்லூரியில் உள்ள பராமரிப்பு மையத்தில் உள்ளார் என்று சொல்லிவிட்டேன்.

ஜூன் 10:

இன்றைக்கு காலையில்தான் என்னுடைய தம்பிக்கு மாநகராட்சியில் இருந்து முறையான அழைப்பு வந்தது. ஜூன் 8 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு தனியார் லேப்பில் உறுதிசெய்யப்பட்ட கிருமித் தொற்று விவரம் மாநகராட்சிக்கு வந்து நோயாளியை அணுகுவதற்கு சுமார் 45 மணி நேரம் ஆகிவிட்டது. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் வெறும் அரைமணி நேரத்தில் இச்செய்தியைப் பரிமாறிவிட முடியும். அதாவது 8 ஆம் தேதி மாலையே என்னுடைய தம்பியைத் தொடர்பு கொண்டு தனிமைப்படுத்தலைத் தொடங்கி இருக்க முடியும். அரசு ஒரு மென்பொருளை உருவாக்கி டிஜிட்டல்மயமாக்கினால் சுமார் 40 மணி நேர தாமத த்தைக் குறைக்க முடியும். இதற்கு பெரிய செலவும் ஆகப்போவதில்லை.

இன்னொருபுறம் காலை 8:30 மணிக்கு எல்லாம் நேற்று வீட்டுக்கு வந்த மாநகராட்சி இளைஞர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார். ”நான் ஆரம்ப சுகாதார மையத்தில் இருக்கிறேன். உடனே வர முடியுமா?” என்றார். நான் புறப்பட்டு சென்றேன். அங்கிருந்த மருத்துவரிடம் எனக்கு காய்ச்சல் இருப்பதாக சொல்லி இருப்பார் போல. ’எனக்கு காய்ச்சல் இருக்கிறதா?’ என்று பரிசோதித்து பார்த்தார்கள். காய்ச்சல் இல்லை. முகக்கவசம் போட்டிருந்த போதும்  அங்கிருந்த செவிலியர் என்னை அடையாளம் கண்டுவிட்டார். ”ஏற்கெனவே நீங்கள் வந்திருந்தீர்கள். இரண்டுபேர் வந்தீங்க. உங்கள டெஸ்ட் எடுக்கச் சொன்னோமே, இன்னும் கொடுக்கலையா?” என்றார் கோபமாக. ’இல்லைங்க, ஒருத்தருக்கு டெஸ்ட் பண்ணிட்டோம். எனக்கு இன்னும் பண்ணலை’ என்றேன். நீங்கள் உடனே சென்று மாதிரியைக் கொடுத்துவிட்டு செவிலியருக்கு தொலைபேசியில் அழைத்து உறுதிபடுத்துமாறு மருத்துவர் சொன்னார். பொதுவாக , அறிகுறியில்லை என்றால் அரசு தரப்பில் பரிசோதனை செய்வதில்லை. ஆனால், மாநகராட்சிப் பணியாளரின் தனி ஆர்வமோ அல்லது எங்கள் தெருவில் யாரோ ஒருவர் இதன் பொருட்டு கொடுத்த அழுத்தமோ எனக்கு பரிசோதனை செய்வதற்கு காரணமாக இருக்க வேண்டும்.

எது எப்படியோ, விருகம்பாக்கம் சென்று சளி மாதிரியைக் கொடுத்தேன். அங்கிருந்த அரசுப் பணியாளர் சமுதாயக் கூடத்தில்  தங்க வேண்டும் என்றார். அதே நேரத்தில் நடுத்தர வயது பெண்கள், குழந்தைகள் சளி மாதிரியைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டனர். எங்களைப் போன்ற சில இளைஞர்களை நிறுத்தி வைத்து எங்களை சமுதாயக் கூடம் அனுப்ப முயன்றுக் கொண்டிருந்தார் அவர். ஆனால், அவரால் வாகனத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. ”ஆம்புலன்ஸ் இல்லை. சரி, போங்க” என்று இயலாமை கலந்த சலிப்போடு எங்களை அனுப்பிவிட்டார். வீட்டுக்கு வந்துவிட்டேன்.

ஜூன் 11: ”எனக்கும் கொரோனா பரிசோதனை செய்து இங்கிருந்து என்னை அனுப்பியாக வேண்டும்” என்று எங்கள் தெருவில் சிலர் விரும்பினர். மாநகராட்சி ஊழியரிடம் தொடர்பு கொண்டு, ”அவர் வெளியில் வருகிறார்” என்று என்மீது புகார் சொல்லிவிட்டனர். பிறகு அவர் வந்து என்னை எச்சரித்தார். ”நான் வெளியில் செல்லவில்லை. எங்கள் வீட்டு வாசலில் தான் நின்றேன், நேற்று பரிசோதனைக்கு மாதிரி கொடுப்பதற்காக சென்றிருந்தேன்” என்றேன். என்னையும் புகார் அளித்தவரையும் சமாளித்துவிட்டு மாநகராட்சி பணியாளர்கள் சென்றனர் .உண்மையில் அவர்கள் பாடுதான் அந்நேரத்தில் மிகவும் கடினமானதாக எனக்குப் பட்டது.

ஜூன் 12: எனக்கு வடபழனி காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. IS என்று சொல்லப்படும் உளவுப் பிரிவு காவலர் பேசினார். உங்களுக்கு ’பாசிட்டிவ்’ வந்திருக்கிறது என்றார். தொடர்பறிதல்(contact tracing) அவரது பொறுப்பாகும்!

பின்னர் ஒரு 11 மணி அளவில் மாநகராட்சியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.  ”லயோலா கல்லூரி சென்று வர வேண்டும். வீட்டில் தயாராக இருங்கள். உங்களை அழைத்துச் செல்ல வருவார்கள்” என்றார் ஒருவர்.

சுமார் 11:30 மணி அளவில் இருவர் வீட்டுக்கு வந்தனர். அநேகமாக அதில் ஒருவர் நலவாழ்வு அலுவலராக (Sanitary Inspector) இருக்க வேண்டும். ”உங்க பைக்கில் வடபழனி  கார்ப்பரேசன் பள்ளிக்கு வந்துவிடுகிறீர்களா? என்றார். “நான் வண்டியில் வந்தால் வண்டியை எங்கே நிறுத்துவது? லயோலா கல்லூரியில் இருந்து என்னை எங்காவது அனுப்பினார்கள் என்றால்?” என்று கேட்டேன். ’சரி, நடந்து வந்திருங்க’ என்று சொல்லிவிட்டு போய்விட்டனர்.

இரண்டு செட் துணிகள். பிரஷ், சோப், சேம்ப், மின்னேற்றி, கொஞ்சம் நொறுக்கு தீனிகள் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். வீட்டில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் இருக்கும். மாநகராட்சிப் பள்ளிக்கு நடந்து சென்றேன். கொஞ்சம் நேரம் அங்கே காத்திருந்தேன். ஒரு சிறிய பொட்டலத்தில் கட்டிச்சோறு கொடுத்தார் நலவாழ்வு அலுவலர். ”அங்கே ரொம்ப லேட் ஆகும். அங்கே போய் சாப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டார். ”நீங்கள் மசூதிக்கு அருகில் வந்துவிடுங்கள்” என்று அழைத்துச் சென்றார் இன்னொரு அலுவலர். ஒரு மினி பஸ் வந்தது. வண்டியில் இருந்தவர்களின் கையில் ஒரு படிவம் இருந்தது. அது எனக்கு கொடுக்கப்படவில்லை என்று மாநகராட்சி அலுவலரிடம் கேட்டேன். அவர் உடனே மாநகராட்சிப் பள்ளிக்கு சென்று அந்தப் படிவத்தை நிரப்பி கொண்டு வந்தார். படிவம் கீழே:

 

‘இதில் வீட்டில் தனிமைப்படுத்த பரிந்துரைக்கிறேன்’ ( Suitalbe for Home Isolation – Yes, No) என்று நலவாழ்வு அலுவலர் எழுதியிருந்தார்.

லயோலா கல்லூரிக்கு சென்றது மினி பஸ். அங்கே எங்களை வரவேற்று எங்களிடம் இருக்கும் படிவத்தைப் பெற்றுக் கொள்ள மாநகராட்சி அலுவலர் ஒருவர் இருந்தார். அவர் படிவங்களைப் பெற்று மருத்துவப் பணியாளர் குழுவிடம் கொடுத்துவிட்டார். கூடவே, சாப்பிடுவதற்கு ஒரு பொட்டலத்தையும் கொடுத்தார்.

லயோலா கல்லூரி ஒரு screening centre முதற்கட்ட பரிசோதனை மையம்.

இங்கே இரத்த பரிசோதனை, காய்ச்சல் பரிசோதனை, ஆக்ஸிஜன் அளவுப் பரிசோதனை, எக்ஸ்ரே படம் ஆகியவற்றை ஆய்வு செய்து சிகிச்சை தேவைப்படுபவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவது, தனிமைப்படுத்தல் மட்டும் தேவை என்பவர்களைப் பராமரிப்பு மையத்திற்கு அனுப்புவது, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வாய்ப்பிருப்பவர்களை அறிகுறி எதுவும் இல்லை என்றால் வீட்டுக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்படும். இது மிகச் சிறந்த தொடக்க நிலை ஆய்வு. ஒவ்வொருக்கும் எக்ஸ்ரே எடுப்பதன் மூலம் நுரையீரல் பாதிப்பு இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ளப்படுகிறது. இப்படி செய்வது பாராட்டுக்குரியது.

மேற்படி பரிசோதனையாவும் அங்கே எனக்கு செய்யப்பட்டன. பொதுவாக இங்கே வரக்கூடியவர்கள் எப்படியாவது வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களை மருத்துவமனைக்கோ அல்லது பராமரிப்பு மையத்திற்கோ அனுப்புவதற்கு மருத்துவர்கள் ஒரு பெரிய விளக்கத்தையே கொடுக்க வேண்டியுள்ளது. வசதி படைத்தோர், சிபாரிசு செய்யும் அளவுக்கு செல்வாக்கான தொடர்பு கொண்டோர் என ஒரு பகுதியினர் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு அனுமதி பெற்றுவிடுகின்றனர். சாதாரண நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் ஏழை எளியோர் அறிகுறி எதுவும் இல்லாத பட்சத்தில் பராமரிப்பு மையத்திற்கு அனுப்ப ப்படுகின்றனர். ”உங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று சொல்லிவிட்டு லயோலா கல்லூரியில் தங்க வேண்டும்” என்று என்னிடம் சொன்னார் மருத்துவர்.

அங்கிருந்து வெளியே வந்தால், ”லயோலா கல்லூரியில் இடம் இல்லை, புளியந்தோப்பு செல்ல வேண்டும்” என்றார் மாநகராட்சி அலுவலர்.

கிட்டத்தட்ட லயோலா கல்லூரியில் மட்டும் சுமார் 4 – 5 மணி நேரம் இருக்க வேண்டி வந்தது. ஆனால், அங்கே நோயாளிகள் சிறுநீர் கழிப்பதற்கு ஒரு கழிவறையைக்கூட ஒதுக்கவில்லை. மாநகராட்சி அலுவலர்,  தான் போக்குவரத்துக்கு மட்டும்தான் பொறுப்பு என்று சொல்லிவிட்டார். பெரும்பாலானோர் குறிப்பாக பெண்கள், முதியவர்கள்  மிகுந்த அவதியுற்றனர். வீட்டில் இருந்து தங்கள் அன்புக்குரியவர்களை மாநகராட்சி அலுவலரை நம்பி மக்கள் அனுப்பிவைக்கிறார்கள். ஆனால், இரத்தமும் சதையுமான மனிதர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்ற பொறுப்புணர்வு அங்கிருந்த நபரிடம் இல்லை என்றே நான் சொல்வேன்.

லயோலா கல்லூரியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் எல்லோரும் மிகுந்த அக்கறையோடும் பொறுமையோடும் நடந்து கொண்டனர். மேலும் அன்றாடம் குறைந்தது நூறு பேரையாவது அவர்கள் முதற்கட்ட பரிசோதனை செய்கின்றனர். வைரஸ் தொற்றியவர்களுடன் அதிக நேரம் நெருக்கமாக செலவழிக்கக் கூடிய இடம் இது.  அங்கு பணி செய்யும் செவிலியர்கள், டெக்னீசியன்களைப் பொருத்தவரை 7 நாள் பணி, 3 நாள் தனிமைப்படுத்தல் என்பது அவர்களுடன் பேசும் போது தெரியவந்தது.

ஒருவழியாக, நாங்கள் ஒன்பது பேர் மினி பஸ்ஸில் புளியந்தோப்பு நோக்கி அழைத்து செல்லப்பட்டோம். இப்போது, நாங்கள் மினிபஸ் ஒட்டுநரின் பொறுப்பில் இருந்தோம். எங்களை உரிய இடத்திற்கு  கொண்டு சென்று படிவங்களைக் கொடுத்து அட்மிசனை உறுதி செய்வது ஓட்டுநரின் பொறுப்பு. பந்து அவர் கைக்கு மாறிவிட்டது.

புளியந்தோப்பு கே.பி. பார்க்கிற்கு வண்டி சென்றது. மாலை 6:30 மணி இருக்கும்.

 

ஜூன் 12:

மாலை சுமார் 7:30 மணி அளவில் எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு நாங்கள் உள்ளே சென்றோம். எங்களுக்கு உடல் வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு சரியாக இருக்கிறதா? என்று ஒருமுறை பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அதாவது, உண்மையிலேயே இவரை பராமரிப்பு மையத்தில் வைத்து கவனிக்க வேண்டுமா? அல்லது மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டுமா? என்று மீண்டுமொருமுறை உறுதிசெய்து கொண்டனர்.

மூன்று மாத்திரைகள் பொதுவாக கொடுக்கப்படுகின்றன. ஜின்க் மாத்திரை, வைட்டமின் சி மற்றும் இன்னொரு மாத்திரை. கூடுதலாக, துணி துவைக்கும் சோப், கை கழுவும் சோப், சீப்பு, தேங்காய் எண்ணெய், பிரஷ், பேஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டன.

 

கே.பி. பார்க்கில் A,B,C பிளாக்குகள் கோவிட் பராமரிப்பு மையங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது குடிசை மாற்று வாரியக் குடியிருப்பாகும். மக்களுக்கு இன்னும் வீடு ஒதுக்கப்பட வில்லை.

ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு அறைகள் உண்டு. ஒவ்வொரு அறையிலும் ஒரு படுக்கையைப் போட்டு அதில் ஒரு நோயாளியை தங்க வைக்கின்றனர். எனவே, ஒரு வீட்டில் இருவர் இருப்பர். இந்த இருவருக்கும் சேர்த்து ஒரு கழிப்பறை, ஒரு குளியலறை.

நோயாளிகள் லிப்ட்டில்தான் மேலும் கீழும் செல்ல முடியும். படிக்கட்டுகளுக்கான வழி அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் படிக்கட்டுகள் வழியாக மருத்துவர்கள், செவிலியர்கள்தான் வருவார்கள். ஒரு பிளாக்கில் உள்ள தளங்களுக்குள் ஒரு நோயாளி சென்றுவர முடியும். யாருடனும் பேசிப் பழக முடியும். ஒவ்வொரு பிளாக்கும் ஒரு சதுரம் போல் இருக்கிறது. சதுரத்தின் ஒரு பக்கத்தில் பெண்கள் தங்க வைக்கப்படுகின்றனர். பெண்கள் பாதுகாப்பாக தங்கியிருக்க முடியும். பிளாக்குக்கு வெளியே யாரும் செல்ல முடியாது.

உணவைப் பொருத்தவரை குறையொன்றும் இல்லை. வெண்ணீர் கிடைப்பதில்லை. வாய்ப்பிருப்போர் தங்கள் வீட்டில் இருந்து வெண்ணீர் காய்ச்சும் மின்சார நீர் சூடேற்றி (kettle)  கொண்டுவரச் சொல்லி பயன்படுத்திக் கொள்கின்றனர்.

காலை மாலை இருவேளை கபசுர குடிநீர், இருவேளை தேநீர், மாலை ஒரு கப் பயிர் வகைகள், காலை 11 மணிக்கு ஒரு ஆரஞ்சு பழம், மூன்று வேளை தரமான, சுவையான உணவு. காலை உணவோடு ஒரு முட்டை, மதிய உணவோடு ஒரு வாழைப்பழம்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தேவைக்கு ஏற்ப அறைகள் கூட்டிப் பெருக்கப் படுகின்றன.

நாளொன்றுக்கு மூன்றுமுறை மருத்துவர்கள் ஒவ்வொரு தளமாக வந்து ஒலிபெருக்கியில் அழைப்பு விடுப்பார்கள்.

ஏதேனும் தொந்தரவு இருப்பவர்கள் அதை சொல்லி மருந்து மாத்திரை வாங்கிக் கொள்ளலாம். மூச்சு திணறல் பிரச்சனை வந்தால் ஓமாந்தூரார் மருத்துமனைக்கு அனுப்புவார்கள். இந்த பராமரிப்பு மையம் ஓமாந்தூரார் மருத்துவக் கல்லூரியின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, அங்கு வரக்கூடிய மருத்துவப் பணியாளர்கள் ஓமாந்தூரார் மருத்துவமனையில் இருந்து வருகின்றனர்.

ஒப்பந்தத் தொழிலாளர்களாக கொரோனா பணிகளுக்கு என்று வேலைக்கு எடுக்கப்பட்டவர்கள்தான் உணவு  கொண்டுவருகின்றனர். அவ்வப்போது இவர்கள் பாதுகாப்பு உடைகள் அணியாமலோ அல்லது ஏனோதானோ வென்று அணிந்தோ வருகின்றனர்.

போதிய விழிப்புணர்வு இல்லை. இதை அணிந்தால் வியர்க்கிறது என்று காரணம் சொல்கின்றனர். மேலும் இவர்களை வேலைக்கு எடுக்கும்போது வாரமொரு நாள் விடுப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இப்போது எந்த விடுப்பும் இன்றி இவர்கள் வேலை வாங்கப்படுகின்றனர். இவர்களின் பாதுகாப்பு குறித்து மாநகராட்சியோ அல்லது மருத்துவர்களோ கவலைக் கொள்வதில்லை.

பராமரிப்பு மையத்திற்கு வந்தவர்களுக்கு தாம் ஏன் இங்கே அழைத்து வரப்பட்டுள்ளோம்? தனக்குத் தான் அறிகுறிகள் இல்லையே, தான் எப்போது வீட்டுக்கு செல்ல முடியும்? என்பவை விளக்கிச் சொல்லப்படுவதில்லை. அவர்களின் உரிமைகள் என்ன, கடமைகள் என்ன என்பதும் சொல்லப்படுவதில்லை.

ஒவ்வொருமுறை மருத்துவர் வரும் போதும் ”எப்போது செல்ல முடியும்?” என்பதைக் கேட்டும் தமக்குள் பேசியும் ஒரு புரிதலுக்கு வருகின்றனர்.

கொரோனா ’நெகட்டிவ்’ என்று பரிசோதனை செய்யாமல் வீட்டுக்கு அனுப்பப் படுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

கொரோனா நோய்த் தொற்று என்று உறுதிசெய்யப்பட்டதில் இருந்து 17 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய நடைமுறை என்பது பராமரிப்பு மையத்தில் எத்தனை நாட்கள் இருக்கிறோம் என்று கணக்கிட்டு எஞ்சிய நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள தனிக் கழிப்பறை, தனியறை உள்ளிட்ட பல்வேறு கட்டுத்திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 90% பேருக்கு இந்தக் கட்டுத்திட்டங்கள் ஒத்துவராது, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பில்லை. கொரோனா ’பாசிட்டிவ்’ என்று வந்த அன்றே அவருக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறதா? என்பதை ஆராய்ந்து நலவாழ்வு ஆய்வாளர் ‘பரிந்துரைக்கிறேன் – ஆம், இல்லை’ என்று எழுதிவிடுகிறார். இனி, பராமரிப்பு மையத்திற்கு வந்த பிறகு, ”வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கிறேன்” என்பது நோயாளிகளின் தெரிவாக இருக்கக் கூடாது. குறைந்தது 5 நாட்கள் அங்கே இருப்பதை மருத்துவர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். பின்னர் விருப்பம் இருப்பவர்கள் வீட்டுக்குச் செல்லாம் என்று சொல்லி விடுவித்து விடுகின்றனர். அப்போது தனிமைப்படுத்துதல் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொள்கின்றனர். பின்னர் விடுவிப்புப் படிவத்தைக் கொடுக்கின்றனர்.

விடுவிப்பு படிவத்தில் பெரிதாக ’கொரோனா பாசிட்டிவ் என்று போட்டுவிடுகின்றனர். வீட்டுத் தனிமைப்படுத்தலில் என்ன செய்ய வேண்டுமென்று பெரிய பரிந்துரையே இருக்கிறது.

ஆனால், ’நெகட்டிவ்’ என்று பார்ப்பதற்காக ஏன் பரிசோதனை செய்யவில்லை?, எந்த நாளில் இருந்து வெளியில் நடமாடலாம்? போன்று நோயாளிகள் எதிர்ப்பார்க்கக்  கூடிய சில விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். ;நெகட்டிவ் என்று பரிசோதனை செய்தே ஆக வேண்டும் என்று எவரும் கட்டாயப்படுத்தக் கூடாது’ என்ற குறிப்புக்கூட இல்லை. இதுபோன்ற படிவங்களை வடிவமைப்போர் அடித்தட்டு மக்களின் இடத்தில்  தன்னை இருத்திக் கொண்டு எத்தகைய விவரங்களை மக்கள் எதிர்பார்ப்பர் என்று சிந்தித்து வடிவமைக்க வேண்டும்.

14 நாட்கள் சாலிகிராமத்தில் இருந்துவிட்டு என்னுடைய தம்பி ஜூன் 20 ஆம் நாளன்று வீட்டுக்கு வந்துவிட்டார். நான் ஜூன் 22 ஆம் நாளன்று வீட்டுக்கு வந்தேன். புளியந்தோப்பில் இருந்து அரசு வாகனத்தில் நம்மை அழைத்து வந்து வீட்டருகிலோ அல்லது அருகாமையில் உள்ள பேருந்து நிறுத்தத்திலோ சேர்த்துவிடுகின்றனர். இது மிகுந்த பாராட்டுக்குரியது.

வீட்டில் குழந்தை இருக்கிறது என்போர், வீட்டில் தனியாக இருக்கும் திருமணமாகாத ஆண்கள் அல்லது  குடும்பத்தோடு பராமரிப்பு மையம் வந்திருப்போர் என வெகுசிலர் மட்டுமே 17 நாட்கள் பராமரிப்பு மையத்தில் தங்கி இருக்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் 3 அல்லது 5 அல்லது 7 அல்லது 10 நாட்களில் அங்கிருந்து புறப்பட்டு விடுகின்றனர். இது மக்களின் விருப்பமாக இருக்கிறது. மாநகராட்சி, மருத்துவர்கள் என எல்லோரும் மக்களோடு சேர்ந்து கொண்டு 17 நாள் தனிமைப்படுத்தல் என்பதை மிகத் தளர்வாக நடைமுறைப்படுத்துகின்றனர். இந்தப் போக்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவாது.

ஜூன் 23:

மாநகராட்சியில் இருந்து அந்த இளைஞர் வந்து ஒரு துண்டறிக்கையைக் கொடுத்தார்.

அதில் இந்த மண்டலத்தின் துணைப் பொறியாளர் தொலைபேசி எண் மற்றும் தேவைப்படும் பொருட்களை ஆன் லைனில் வாங்குவதற்கு மளிகை கடைகள், மருந்து கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் ஆகியவற்றின் தொலைபேசி எண்கள் இருந்தன.

கெடுவாய்ப்பாக, எங்களுக்கு குடிதண்ணீர் கேன் போட்டுக்கொண்டிருந்த கடைக்காரர்  தண்ணீர் போட மறுத்துவிட்டார். வேறு ஒரு மளிகைக்கடைகாரர் உதவினார்.

ஜூன் 27:

ஜூன் 12 – ஜூன் 26 என்று தேதியிட்டு எங்கள் வீட்டில் ஓட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் மாநகராட்சிப் பணியாளரால் அகற்றப்பட்டது.

ஜூன் 28: ஒரு நாள் முன்பே வீட்டுக் கதவில் கட்டியிருந்த பேனரை அகற்றியிருக்க வேண்டும். ஆனால், காலதாமதாக இன்று அகற்றப்பட்டது.

மேற்படி பட்டறிவில் இருந்து,

மக்களுக்கு வேண்டுகோள்:

  1. காய்ச்சல் அல்லது சளி அல்லது தலைவலி அல்லது உடல்வலி அல்லது மூச்சுத் திணறல் அல்லது சுவை அறிய முடியாமை, வாசனை தெரியாமை ஆகிய அறிகுறிகளை மறைக்க கூடாது. வீட்டிலிருந்தே மருந்து சாப்பிடக் கூடாது. உடனடியாக கொரோனா பரிசோதனைக்கு செல்ல வேண்டும். அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வது அல்லது உதவி எண்: 1075/104 ஐ தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் நீங்கள் இருக்கும் மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை எண்ணைக் கொடுப்பார்கள். அந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் காய்ச்சல் முகாம் நடக்கும் இடம் அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் இடம் தங்களுக்கு சொல்லப்படும். அறிகுறிகள் தோன்றிய அன்றோ அல்லது இரண்டாவது நாளோ பரிசோதனைக்கு மாதிரி கொடுத்துவிட்டால் சிகிச்சையை விரைவாக தொடங்கிவிட முடியும். உயிரிழப்பைக் குறைப்பதில் இதுவொரு முக்கிய பங்காற்றும்.
  2. கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்கு தயங்க கூடாது.
  3. கொரோனா ’பாசிட்டிவ்’ என்று உறுதியானபின் அறிகுறி இல்லை என்றால் ’வீட்டிலேயே இருக்கிறேன்’ என்று அடம்பிடிக்கக் கூடாது. அறிகுறியில்லை என்றாலும் அரசு பராமரிப்பு மையத்தில் தங்க வேண்டும். மொத்தம் 17 நாட்கள் அங்கே தங்கியிருக்க வேண்டும். பாதியிலேயே ஓடி வரக்கூடாது.
  4. புளியந்தோப்பு பராமரிப்பு மையம் உணவு மற்றும் இருப்பிடத் தரத்தில் மிகச் சிறப்பாக இருந்தது. இதே அளவுக்கு தரமாக பிற பராமரிப்பு மையங்கள் இல்லை என்று அறிகிறேன். அதற்காக பராமரிப்பு மையங்களில் தங்குவதைத் தவிர்க்க வேண்டாம். அங்கே சென்று, விடுபடும் உரிமைகளைப் போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அரசுக்கு சில கோரிக்கைகள்:

  1. எல்லாப் பராமரிப்பு மையங்களிலும் வெண்ணீர் கொடுக்கப்பட வேண்டும்.
  2. பரிசோதனைக்கு மாதிரி கொடுத்தவுடன் சமுதாயக் கூடத்தில் தனிமைப்படுத்துவோம் என்று கொள்கையளவில் இருப்பதுகூட மக்களைப் பரிசோதனை செய்து கொள்ள முன்வரவிடாமல் தயங்கச் செய்கிறது. பரிசோதனை முடிவு தெரிய இரண்டு நாட்கள் ஆகின்றது. இந்த நேரத்தைக் குறைத்து ஒரு நாளாக ஆக்க வேண்டும். பரிசோதனை முடிவு வரும்வரை வீட்டிலேயே இருக்கும் நடைமுறையைக் கொள்கையாக அறிவித்து விடுவது நல்லது. சென்னை மாநகராட்சி இன்றைக்கு இதை அறிவித்துவிட்டது. பிற மாவட்டங்களும் இதை பின்பற்ற வேண்டும்.
  3. கொரோனா பாசிட்டிவ் என்று உறுதியானப் பின் வீட்டில் தனிமைப்படுத்தும் வாய்ப்புகள் நம்முடைய சமூகத்த மிக  குறைவு. பராமரிப்பு மையங்களில் தனிமைப்படுத்துவதே சிறந்தது. அதுவும் 17 நாட்கள் முழுமையாக அங்கே தங்குமாறு கட்டாயப்படுத்த வேண்டும். பராமரிப்பு மையங்களில் இருந்து செல்லும் ஏழை,எளியோர் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார இழப்பீட்டு நிதியாக குறைந்தது ரூ 2000, அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் கொடுத்து அனுப்ப வேண்டும். இது வாழ்வாதார இழப்பீடாக அமைகிறதோ இல்லையோ பரிசோதனை, தனிமைப்படுத்தல் ஆகியவற்றை ஒட்டி அரசு ஏற்படுத்திய களங்கப்படுத்தலுக்குப் பரிகாரமாக இது அமையும். பொது நலனுக்காக 17 நாட்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள முன்வரும் ஒருவருக்கு அரசு பாராட்டி வழங்கும் பரிசாக இது கொள்ளப்பட வேண்டும். ஒடிசா அரசு இதை கொள்கையாக அறிவித்துள்ளது.
  4. தமிழகம் முழுக்க அரசு ஏற்படுத்தியுள்ள பராமரிப்பு மையங்களை ஒரே தரத்தில் வைத்திருப்பதும் உணவைப் பொருத்தவரை நோயாளிகளுக்கு ஒரே மெனுவைக் கொடுப்பதும் அவசியம்.
  5. பராமரிப்பு மையத்திற்குள் செல்வதற்குமுன், ஒரு துண்டறிக்கையில் நோயின் அறிகுறி, பராமரிப்பு மையத்தில் இருப்பதன் நோக்கம், எப்போது விடுவிப்பு ஆகியவற்றை விலக்கி நோயாளியின் கையில் கொடுக்க வேண்டும். முழுமையாக 15 நிமிடம் எல்லாவற்றையும் விலக்கி நோயாளிகளின் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டும். ’யாவர்க்குமாம் ஒரு இன்சொல்’ – இது இந்த நடைமுறையில் மிகப்பெரிய வேறுபாட்டையும் நம்பிக்கையையும் உருவாக்கும்.
  6. மீண்டும் வீட்டுக்கு அனுப்பும் முன்பு பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ ஆகிவிட்டதா? என்று பார்க்க வேண்டும்.
  7. இப்படி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வருவோர் பராமரிப்பு மையத்தில் இருக்கும் நாட்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பினால், அவர்கள் ஒரு மாபெரும் பிரச்சாரப் படையாக செயல்படுவார்கள். அந்த கண்ணோட்டத்தில் பராமரிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பொன்னான நேரத்தை அரசு பயன்படுத்த வேண்டும். நலவாழ்வு தொடர்பான ஒரு கல்வியறிவு களமாக அதை பயன்படுத்த வேண்டும். இதுவொரு நீண்ட கால முதலீடாக அமையும்.
  8. உணவுப் பொருட்கள் கொடுப்பதற்கு தனியாக பத்து பேரைப் பயன்படுத்தி அவர்களைக் கிருமித்தொற்றுக்கு ஆளாக்குவதற்குப் பதிலாக, பராமரிப்பு மையத்தில் தங்கியிருப்பவர்களில் இருந்தே தன்னார்வலர்களைப் பொறிக்கி எடுத்து அந்த மையத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  9. கொரோனா கிருமி தொற்றி அதில் இருந்து மீண்டவர்களைத் தன்னார்வலர்களாக செயல்பட வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும். அறிவு, உழைப்பு என்ற வகையில் முதலில் நோய்வாய்ப்படும் மக்களை இச்சமூகத்தின் பாதுகாப்[பு கவசமாகவும் விழிப்புப்பெற்ற மனித வளமாகவும் பயன்படுத்தும் வழிவகைகளைப் படைப்பூக்கத்துடன் சிந்தித்து நடைமுறையாக்க வேண்டும்.

– செந்தில்

RELATED POST
4 comments
  1. *Tap to view👇👇*
    https://l.likee.video/v/OuQDf4வாழ்த்துக்கள்!!!!!!!
    தோழர் செந்திலின் அனுபவப் பகிர்வு ஒரு
    சிறப்பான வழிகாட்டல்; கொரானாவை ,
    சராசரியான நாம் அனைவரும் வெல்ல முடியும்
    என்ற ஒரு ஆழமான வழிகாட்டல்!!!!!

  2. தோழர் செந்தில் தன்னுடைய அனுபவங்களை மிகவும் நுணுக்கமாகவும் அனைவருக்கும் பயன்படும் வகையிலும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். அவர் பகிர்ந்து கொண்டுள்ள விவரங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆனால் எளிதில் கிடைக்காத விவரங்கள் ஆகும். நேரம் ஒதுக்கி தோழர் அவற்றைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. தோழர்கள் உடல்நலம் பெற்று வீடு திரும்பியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. மீண்டும் இந்த தொற்று நோய் வராமல் கவனத்தோடு தோழர்கள் இருக்க வேண்டும். நன்றி

  3. தோழர் செந்தில் தன்னுடைய அனுபவங்களை மிகவும் நுணுக்கமாகவும் அனைவருக்கும் பயன்படும் வகையிலும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். அவர் பகிர்ந்து கொண்டுள்ள விவரங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆனால் எளிதில் கிடைக்காத விவரங்கள் ஆகும். நேரம் ஒதுக்கி தோழர் அவற்றைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. தோழர்கள் உடல்நலம் பெற்று வீடு திரும்பியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. மீண்டும் இந்த தொற்று நோய் வராமல் கவனத்தோடு தோழர்கள் இருக்க வேண்டும். நன்றி

  4. பதிவு அரசியல் கண்னோடத்தில் இருக்கும் என்று எண்ணி ஏம்மாந்து விட்டேன். தோழரும் அவர் தம்பியும் நலமுடன் இருக்கும் செய்தி ஒன்று மட்டும் போதும், மகிழ.
    சக மனிதனை சந்தேகிபதையும் உளவு பார்க்கும் கலையை மிக நுணுக்கமாக எல்லோரேக்கும் கற்றுக் கொடுத்துள்ளார்.
    ஒரு கட்டத்தில் எல்லோரும் பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும் என அறிவிப்பார்கள், செலவுகள் தனிக்கையில் வராது, கொள்ளையோ கொள்ளைதான, நாமும் அரசை ஆதரிப்போம்.
    தனி நபரின் நடமாட்டம் அறிதல் மிக சுலபமாக்கபட்டுவிட்டது. கூட்டம், ஆர்பாட்டம் எதற்கும் வழி இல்லை. செயலி மூலம் நடைபெறும் சந்திப்புகளில் சாராம்சம், artificial intelligence மூலம் அவசரப்பட்டு உரிய இடத்திற்க்கு சென்றடைந்து விடுகிறது. அது ஒரு வணிக நிறுவனத்தின் திட்டமிடல் கூட்டமாக கூட இருக்கலாம்.
    ஒரு கட்டத்தில் நாமே உளவாளியாக வரும், அறியாமல் மறிவிடுவோம்.
    தோழர் இவைகளை எல்லாம் தொட்டு எழுதுவார் என நடித்தேன்.

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW