பொருளாதார நிவாரண உதவியை மத்திய அரசு செய்ய மறுப்பதேன்?

25 Apr 2020

நாற்பது நாள் ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. ஆனால் இதுவரை பொருளாதார நிவாரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.8  விழுக்காடு மட்டுமே மோடி அரசு அறிவித்துள்ளது. அதாவது சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய். இரண்டாவது சுற்று அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என நிதியமைச்சர்  கூறி ஒரு வாரம்  ஆகப் போகிறது. ஒன்றும் நடந்த பாடில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் முதலாக நாட்டின் பொருளாதார அறிஞர்கள் வரைக்கும் நாட்டின் ஏழை மக்களுக்கு உதவிடுகிற வகையிலான பொருளாதார நிவாரணங்களை அரசு உடனடியாக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்து ஓய்ந்துவிட்டனர்.

ரேஷனுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், கையிருப்பில் உள்ள உணவு தானியத்தை இலவசமாக வழங்கவேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கரடியாய் கத்தி பார்த்தார்கள். ஆனால் மோடி அரசிடம் இருந்து இதுவரை எந்தவித ஆக்கப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

ஏழை எளிய மக்கள் தங்களது நுகர்வை நினைத்து பார்க்க இயலாத அளவில் சுருக்கிக் கொண்டு தற்போதைய கேடு காலத்தில் உயிர்ப்பித்துக் கொண்டுள்ளனர். சில தன்னார்வு அமைப்புகள் தவிர வேறெந்த உதவிகளும் இவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. உயிர்வாழ வேண்டும் என்ற மானுட இயல்பூக்கத்தின் மட்டுமே இந்திய ஏழை மக்கள் இந்த ஊரடங்கில் வாழ்ந்துவருகின்றனர் என்பதே கசப்பான உண்மை.

இவ்வளவு கடினமான சூழலில், மக்களுக்கு உதவிட அரசு ஏன் பயப்படுகிறது? அல்லது தயங்குகிறது? மத்திய அரசிடம் நிதி இல்லையா? என்ற கேள்விகள் நம்முன்னே எழுகிறது.

உண்மை என்னவென்றால் இது வரை இல்லாத அளவிற்கு இந்திய அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பில் உள்ளது. சுமார் அரை டிரில்லியன் டாலர் (சுமார் 37 லட்சம் கோடி ரூபாய்) அளவிற்கு உள்ளது.

 

ஆனால் மத்திய அரசோ பட்ஜெட்டில் அறிவித்துள்ள சில செலவீனங்களை மட்டுமே இந்த பேரிடர் காலத்தில் பயன்படுத்துகிறதே தவிர பெரும் நிதி செலவீனங்களை மக்களின் துயர் துடைக்க இதுவரை பயன்படுத்தவில்லை. இதற்கான பதிலை நிதி ஆயோக்கின் முன்னாள் தலைவர்  அரவித் பனகாரியா மற்றும் மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் சன்யால் ஆகியோரின் அண்மைக்கால சில கருத்துக்களிலிருந்து பெறலாம்.

பொருளாதார நிவாரணம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது, மாறாக “அளவான நடவடிக்கைகள்” மட்டுமே எடுக்கவேண்டுமென  அரவிந்த் பனகாரியா, பொருளாதார நிவாரணம் குறித்து கருத்து கூறியுள்ளார்.

பிற நாடுகள் போல ஊரடங்கிற்கு முன்பாக பல மில்லியன் டாலர்களை பொருளாதார நிவாரணமாக இந்தியா அறிவிக்கவில்லை. இந்நாடுகள் பெரிய அறிவிப்புகள் மூலமாக இப்பணத்தை வீணடிக்கின்றன. மாறாக இந்தியாவோ ஊரடங்கை  அறிவித்து பின்னர் அளவான நடவடிக்கைகள் மூலமாக பொருளாதாரத்தை காப்பாற்றுகிறோம். இந்தியாவின் இந்த முயற்சியை  வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கிறது என மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் சன்யால் கருத்து தெரிவித்துள்ளார்.

அளவான நடவடிக்கைகள்” மூலமாக “முதலீட்டாளர்களை ஈர்ப்பது” என்பதன் பொருளானது உலகமய கொள்கையின் கோரப் பிடியில் சிக்கியுள்ள இந்தியா, நிதி மூலதன சக்திகளை காத்திட தனது  நாட்டு மக்களை நட்டாற்றில் விடுகிறது என்பதே  அர்த்தமாகும்.

அரசைப்பொறுத்த வரையிலும் மக்களுக்கு உதவுவது என்பது அரசுக்கு எதிர்பாராத செலவீனாகும். ஒரு வேலை தனது இருப்பில் இருந்து மக்களுக்கு உதவுவதன் பொருட்டு சில லட்சம் கோடிகளை செலவு செய்தால் அரசின் செலவு அதிகரிக்கும். இதனால் அரசின் வருவாய்க்கும் செலவுக்குமான நிதி பட்ஜெட்டில் நிதிப்பாற்றக்குறை அதிகரிக்கும். சரி அதனால் என்ன பிரச்சனை?

இது குறித்து அண்மையில் மார்க்சிய பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் பீப்பிள்ஸ் டெமாக்ரசியில், அருமையான ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனது தமிழ் மொழியாக்கத்தின்(ஆர்.எஸ்.செண்பகம்) மேற்கோளை இங்கு தருகிறேன்

நிதிப்பற்றாக்குறையை விரிவாக்கிவிட்டால், சந்தையின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்து தரம் நிர்ணயிக்கும் முகமைகள் இந்தியாவின் தரத்தினை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறும் அளவிற்கு உயர்த்துவதற்கு பதிலாக தரக்குறைவு செய்துவிடும் என்பதேயாகும்

இதனால், மேலும் ரூபாயின் மதிப்பு குறைந்து போகும், அதன் தொடர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு எழுகிறது.”என்கிறார்.

ஆக, இந்திய சந்தையின் நம்பகத்தன்மையை காத்திட மத்திய அரசு தனது செலவீனத்தை கட்டுப்படுத்துகிறது. செலவு செய்ய மறுக்கிறது. நிதிப் பற்றாக்குறையை விரிவாக்காமல், காக்க நினைக்கிறது. இதன் மூலமாக பெரும் நிதி மூலதன முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள முயல்கிறது. இந்திய சூறையாடும் முதலாளிகள் மற்றும்  பன்னாட்டு நிதி மூலதன கும்பலின் நலனுக்காக தனது கஜானாவில் இருந்து ஏழை மக்களுக்கு செலவு செய்ய மறுக்கிறது. மீண்டும் பிரபாத்தை மேற்கோள் காட்டுவோம்.

தற்போதைய இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலாவது, இந்துத்துவா அரசாங்கமாகவே இருந்தாலும் கூட, இந்த (நிவாரண) நடவடிக்கையை எடுப்பதில் தாமதிக்கக்கூடாது. ஆனால், சர்வதேச நிதி மூலதனம் வைத்திருக்கும் பிடி அத்தகையது.

அரசாங்கத்தின் கழுத்தை நெரிக்கும் அளவிற்கான கிடுக்கிப்பிடியை அது வைத்துள்ளது. இதன் காரணமாக, அரசாங்கத்தால் இந்தக் கட்டுப்பாடு குறித்து சிந்திக்கக் கூட முடியவில்லை. இதற்காக மக்களின் நலன்களை அது காவு கொடுக்கிறது”

இந்தியப் பொருளாதாரம் உலகமயக் கொள்கையை அடிப்படையாக கொண்டது. சுமார் முப்பது ஆண்டுகளாக இந்திய பொருளாதாரத்தை உலகமயக் கொள்கையே தீர்மானிக்கிறது. உலகயமயக் கொள்கையானது இயற்கையாகவே முரண்பாடு கொண்டது. உலகமயத்தால் ஏழைகள் மேலும் ஏழை ஆவதும் பணக்காரர்கள் மேலும் பணக்கார்கள் ஆவதும் தவிர்க்க முடியாதவை. உலகமயத்தின் அடிப்படை, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, வெளிநாட்டு முதலீடுகள் இல்லை என்றால் இந்தியப் பொருளாதாரம் திவால் ஆகிவிடும் என்பதை விளக்கத் தேவையில்லை.

வெளிநாட்டு நிதி மூலதன கும்பல் இந்தியாவின் ஏழைகளை முன்னேற்றிட முதலீடு செய்வதில்லை. மாறாக தங்களது லாபத்தை பெருக்கவே முதலீடு செய்கிறார்கள். இந்தியாவின் ஜ்டிபி வளர்ச்சியால்  ஏழைகளின் வறுமை ஒழியவில்லை, சுகாதாரம் மேம்படவில்லை.

இந்தியாவின் அளவான நடவடிக்கைகளுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குமான தொடர்பை  மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் இணைத்துப் பேசுவதன் பொருள் இதுதான்.

நாம் பெரும் சூதாட்டக் காரர்களிடம் மாட்டிக் கொண்டோம். நமது இயற்கை வளம், உழைப்பு ஆகியவை இங்கு நிதி மூலதனக் கும்பலிடம் பணயம் வைக்கப்பட்டுள்ளது. இதுதான் யதார்த்தம்.

மாநில அரசுகள் இந்த சூழ்நிலையில்  என்ன செய்ய முடியும்? கொரோனா நிவாரண நிதியாக 16,000  கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கவேண்டுமென மத்திய அரசிற்கு கடிதம் எழுதி முதல்வர் ஓய்ந்து விட்டார். எதிர்கட்சிகள் ஏன் கேட்டுப் பெறவில்லை என அங்கலாய்க்கிறார். எதிர்கட்சிகள் தாமாக  நிவாரணம் வழங்குவதில் மூழ்கிவிட்டன. அரசியல் கோரிக்கையை எழுப்பாமல் தன்னார்வ நிறுவனமாகிவிட்டது.

மாநில வரி அதிகாரத்தை ஜி.எஸ்.எடி என்ற பெயரில் மத்திய அரசு பிடிங்கிக் கொண்டுவிட்டது. மாநில அரசுகளின்  பங்கையும் இன்னும் தராமல் மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதை ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் போராடி பெற இயலவில்லை. இதுவரை சாராயக் கடைகள் மூலமாக வந்த வருவாயும்  தற்போது இல்லை. ஆகவே பெயருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதை தவிர தமிழக அரசின் கஜானாவில் நிதி இல்லை.

மத்திய அரசோ நிதி மூலதன கும்பலின் சேவகனாக உள்ளது. மாநில அரசோ  மத்திய அரசின் தயவை நம்பி உள்ளது. மக்களோ காசு பணம் இன்றி வீட்டில் முடங்கி உள்ளனர். இதுதான் இன்றைய எதார்த்தம்.

ஒருபக்கம் நிதி மூலதன கும்பல், அவர்களுக்கு ஆதரவான மத்திய அரசாங்கம் மற்றொரு பக்கம் ஏழை எளிய மக்கள் என்ற இரு முகமாக சமூகம் பிளவுற்றுள்ளது. இனியும் வளர்ச்சி வீத எண்களைக் காட்டியும், வருங்கால வல்லரசு எனக் கூறியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நிதி மூலதன கும்பலுக்கும் மக்களுக்குமான முரண்பாடும் பிளவும் போராட்டமும் தவிர்க்க முடியாதது

 

அருண் நெடுஞ்சழியன்

ஆதாரம்:

https://www.businesstoday.in/current/economy-politics/coronavirus-india-must-focus-on-measured-approach-for-stimulus-package-says-panagariya/story/401415.html

https://www.businesstoday.in/current/economy-politics/slow-and-low-pace-of-foreign-invesments-in-india/story/379968.html

https://www.thehindu.com/business/Economy/coronavirus-lockdown-most-sectors-will-be-open-by-may-3-says-principal-economic-adviser-sanjeev-sanyal/article31410421.ece

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW