ஏன் இந்தியாவின் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை தவறான தோற்றத்தை ஏற்படுத்துகிறது ?

26 Mar 2020

நாம் தவறான தொற்று எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையோ  பரிசோதனை விவரங்களில் மட்டுமே உள்ளது

மார்ச் 23 ஆம் தேதி அளவில், இந்தியாவில் 415 பேர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு 9 கொரோனா தொற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது. அதில் ஒருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

ஆந்திரா 6 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளையும், தெலங்கானா 30 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளையும் பதிவு செய்துள்ளன.

கேரளாவில் இதன் எண்ணிக்கை 95 ஆகவும், கர்நாடகத்தில் மார்ச் 22 ஆம் தேதி அளவில் 26 ஆகவும் இருந்தது.

இம்மாநிலங்கள் ஒவ்வொன்றிலும், உண்மையில், நாடு முழுவதிலும் பதிவாகியுள்ள உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை தவறான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

ஏன்?

ஏனெனில், அவை உண்மை நிலவரத்தை தெரிவிப்பதில்லை. வைரஸ் பரிசோதனையின் போதாமையே அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதுவரையிலான பரிசோதனைகள்

மார்ச் 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின்(ICMR) செய்தி அறிக்கையின்படி, இந்தியா இதுவரை 18,383 மாதிரிகளை பரிசோதித்துள்ளது.

பரிசோதனைகளைப் பொறுத்தவரையில், மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மிகவும் சொற்பமானதாகத் தோன்றினாலும், தென் இந்திய மாநில அரசுகள்கூட இவ்விடயத்தில் பெரிய முன்னேற்றம் எதையும் காட்டவில்லை.

தென்னிந்திய மாநிலங்கள் பரிசோதித்துள்ள மாதிரிகளின் எண்ணிக்கை கீழ் குறிப்பிட்டுள்ள அட்டவணையில் உள்ளது.

இந்தியா போதிய அளவு பரிசோதனைகளை மேற்கொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, இந்தியா பரிசோதனைகளை அதிகப்படுத்துவதற்கான திறன் மேம்படுத்தப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா தெரிவித்தார்.

”நாங்கள் இதுவரை 15,000 முதல் 17,000 மக்களைப் பரிசோதித்துள்ளோம்.” எனக்கூறிய மருத்துவர் பார்கவா, ”தினம் பத்தாயிரம் பேரை பரிசோதிக்கும் அளவு வசதிகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படியென்றால், வாரத்திற்கு 60,000 முதல் 70,000 பேர் வரை பரிசோதனை செய்ய முடியும்.” ,எனக் கூறினார்.

அதன் பின்னர் மருத்துவர் பார்கவா, இந்தியாவின் பரிசோதனை வசதிகளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகளின் பரிசோதனை வசதிகளுடன் ஒப்பிட்டார்.

”ஃப்ரான்ஸில், வாரம் 10,000 பேர் பரிசோதிக்கப்படுகிறார்கள், இங்கிலாந்தில், 16,000 பேர் ஒரு வாரத்தில் பரிசோதிக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில், வாரம் 26,000 பரிசோதிக்கப்படுகிறார்கள். ஜெர்மனியில், வாரம் 42,000 பேர் பரிசோதிக்கப்படுகிறார்கள். இத்தாலியில், வாரம் 52,000 பேர் பரிசோதிக்கப்படுகிறார்கள். மேலும், தென் கொரியாவில், வாரம் 80,000 பேர் பரிசோதிக்கப்படுகிறார்கள்”, என அவர் தெரிவித்தார்.

எண்ணிக்கைகளின் அடிப்படையில் மட்டும் பார்த்தால், இந்தியாவின் நடவடிக்கைகள் நம்பிக்கையூட்டும் விதமாக அமையும். ஆனால், இவ்வாறு ஒப்பிடுவது, ஆப்பிள் பழங்களை ஆரஞ்சுப் பழங்களுடன் ஒப்பிடுவதைப் போன்றதாகும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் மக்கள் தொகையைக் கணக்கிலெடுத்தோமெனில், இந்தியா பின் தங்கி இருப்பது மட்டுமல்ல, இந்நாடுகளின் *ஒட்டுமொத்த மக்கள் தொகையைவிடவும்* இரண்டு மடங்கு அதிக மக்கள் தொகையை இந்தியா கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது

உண்மையில், இங்கிலாந்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை கர்நாடக மாநிலத்துடன் ஒப்பிடத்தக்கது. தென் கொரியாவின் மக்கள் தொகையை அந்திரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியும்.

ஃப்ரான்ஸின் ஒட்டுமொத்த மக்கள் தொகையானது கிட்டத்தட்ட தமிழ்நாடு என்ற மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஒப்பானதாகும். தமிழ்நாடு ஃப்ரான்ஸ் ஒவ்வொரு வாரமும் மேற்கொள்ளும் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு மிகவும் குறைவாகவே பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறது.

நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நிரூபிக்க தமிழ்நாடு ஒன்றின் செயல்பாடுகளை மட்டும் விரிவாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் முதலில், கொரோனா வைரசுக்கான பரிசோதனைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

தி லீட்(the lede) நாளிதழ், கொவிட்-19 பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள, சென்னை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் கேப்ஸ்டோன் கிளினிக்கில் ஆலோசகராக பணியாற்றிவரும் தொற்று நோய்களுக்கான நிபுணர் மருத்துவர் வி. இராமசுப்பிரமணியனைத் தொடர்பு கொண்டது.

”அந்த வைரஸை கண்டுபிடிப்பதற்கு மூன்று விதமான பரிசோதனைகள் உள்ளன”, எனக் கூறினார் மருத்துவர் இராமசுப்பிரமணியன். ”முதலாவது, பி.சி.ஆர் பரிசோதனையின் மூலமாக அந்த வைரஸின் மரபணுவை நேரடியாக அடையாளம் காணுவது. பி.சி.ஆர் என்பதற்கு பாலிமெரேசிக் சங்கிலி நிகழ்வு (polymerase chain reaction) என்று பொருள். இப்பரிசோதனைக்கான மாதிரிகள் மூச்சுக்குழாயிலிருந்து எடுக்கப்படும் (esopharyngeal or a nasal swab). முதல் நாளிலிருந்தே, இப்பரிசோதனையின் மூலம் தொற்றை உறுதி செய்யமுடியும்.” எனக் கூறினார்.

மருத்துவரைப் பொறுத்தவரை இதுதான் மிகவும் துல்லியமான பரிசோதனை. “இரண்டாவது பரிசோதனை எதிர்ச்செனி பரிசோதனை(antigen test). இப்பரிசோதனையில், நீங்கள் நேரடியாக வைரஸைத் தேடாமல், *அதனை அடையாளம் காட்டும்* எதிர்ச்செனிகளைத் தேடுவீர்கள். இப்பரிசோதனை, தொற்றின் இரண்டாவது நாளிலிருந்து உபயோகப்படும்.” என விவரித்தார்.

மூன்றாவது பரிசோதனை, இரத்தப் பரிசோதனை என பொதுவாக அறியப்பட்ட செரோலோஜிக்கல் பரிசோதனை என்றார் மருத்துவர். “இப்பரிசோதனை எதிர்ப்பொருள் பரிசோதனை என அழைக்கப்படுகிறது. ஏனெனில், நோய் தொற்றை எதிர்க்கும் உடல் அதீத அளவில் எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்யும். இப்பரிசோதனை, நோய் தொற்று ஏற்பட்டு 5 முதல் 7 நாட்கள்வரை உபயோகமாக இருக்கும்”, என்றார்.

பிரத்யேகமாக 10 மாதிரிகளை பரிசோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டாலொழிய, வழக்கமாக பரிசோதனைக் கருவிகள் ஒரு மாதிரியை மட்டுமே கையாளும். ”அடிப்படையில் மரபணுப் பொருட்களான ப்ரைமர்கள் மற்றும் ப்ரோப்கள் இக்கருவிகள் உண்டு. ப்ரைமர் எதிர்நிகழ்வினை தொடங்கிவைக்கும். ப்ரோப் வைரஸின் மரபணுவுடன் தன்னை இணைத்துக் கொள்ளும். ஒவ்வொரு வைரஸுக்கும் தனித்துவமான மரபணு வரிசை உள்ளதால் பரிசோதனைகளும் ஒவ்வொரு வைரஸுக்கும் ப்ரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும். கொவிட்-19 மரபணுவுடன் பொருந்துகிற ஆர்.என்.ஏ இழையினை (R.N.A strand) ப்ரோப் கொண்டிருக்கும். ரீஏஜெண்ட்டுகள் எனப்படும் பொருட்கள் எதிர்நிகழ்வு ஏற்படுவதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கப் பயன்படும்.”, என விவரித்தார்.

மாதிரிகள் எடுப்பதில் இரண்டு முறைகள் உள்ளதாகவும் அவர் விவரித்தார். ஒன்று ஸ்கிரீனிங் முறை, இரண்டாவது கன்ஃபர்மேட்ரி அஸ்ஸே எனப்படும் எதிர்ப்பொருள்களை தேடும் முறை.

ஸ்கிரீனிங் முறை துல்லியம் குறைவானதாக இருந்தாலும்,  உணர்திறன் அதிகமானதாக உள்ளது. “இது வேறு சில வைரஸ்களையும் அடையாளப்படுத்தும். ஆனால், கன்ஃப்ர்மேட்ரி அஸ்ஸே முறை கொவிட்-19 வைரஸுக்கான துல்லியமான பரிசோதனை”, எனக் கூறினார்.

ஒவ்வொரு பரிசோதனைக்கும் எவ்வளவு நேரம் எடுக்கும் எனக் கேட்டபோது, பரிசோதனை முடிவுகள் 4 முதல் 6 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் எனக் கூறினார்.

தமிழ்நாடு: ஒரு ஆய்வு

தி லீட் தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் பீலா இராஜேஷிடம், பரிசோதனைக் கருவிகள், ப்ரைமர்கள், ப்ரோப்கள் மற்றும் ரீஏஜெண்ட்டுகள் இருப்பைப் பற்றி அறிய தொடர்பு கொண்டது.

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவர் அனுப்பிய செய்தியில், ”எங்களிடம் 500 மாதிரிகளை சோதனை செய்ய கருவிகள் உள்ளன. ஸ்கிரீனிங் மற்றும் கன்ஃபர்மேட்ரி அஸ்ஸே ஆகியவற்றைச் செய்ய எங்களிடம் ப்ரைமர்கள் மற்றும் ப்ரோப்கள் உள்ளன. 500 மாதிரிகளை ஸ்கிரீனிங் செய்வதற்கு எங்களிடம் ரீஏஜெண்ட்டுகள் உள்ளன. 300 மாதிரிகளை கன்ஃபர்மேட்ரி அஸ்ஸே முறையில் ஸ்கிரீன் செய்ய எங்களிடம் ரீஏஜெண்டுகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் எங்களால் 60 மாதிரிகளைப் பரிசோதிக்க முடியும். கே.ஐ.பி.எம்மில் எங்களால் ஸ்கிரீனிங் மற்றும் கன்ஃபர்மேட்ரி அஸ்ஸே முறை பரிசோதனைகளைச் செய்ய முடியும். தேனி, திருவாரூர் மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிகள் கன்ஃபர்மேட்ரி அஸ்ஸே பரிசோதனைகளைச் செய்ய முடியும்.”, எனத் தெரிவித்தார்.

கே.ஐ.பி.எம் என்பது சென்னையிலுள்ள தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சிக்கான கிங் நிலையம் ஆகும்.

தினம் 60 மாதிரிகள் என்பது வாரம் 420 மாதிரிகள் ஆகும். கிட்டத்தட்ட அதே அளவு மக்கள் தொகை கொண்ட ப்ரான்ஸ் நாடு மேற்கொள்ளும் வாரம் 10,000 சோதனைகளில் இது வெறும் 4.2% ஆகும்.

ப்ரான்ஸின் நோய் தொற்று எண்ணிக்கை 16,000 தாண்டிவிட்ட நிலையில், தமிழகத்தில் இன்னும் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருப்பத்தில் வியப்பேதுமில்லை.

இந்தியாவும் அதன் மாநிலங்களும், உலக சுகாதார அமைப்பான (WHO) வாதிட்டு வருவதைப் போல, அதிக பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை என்பதே உண்மை. கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரெயேசூஸ், ஜெனிவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “அனைத்து நாடுகளுக்கும் எங்களிடம் தெரிவிப்பதற்கு ஒரு எளிய செய்தி தான் உள்ளது – பரிசோதியுங்கள், பரிசோதியுங்கள், பரிசோதியுங்கள். அனைத்து நாடுகளும் சந்தேகப்படும்படியான நபர்கள் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். தங்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் யாராலும் இந்தத் தொற்றை எதிர்த்துப் போரிட முடியாது” எனக் கூறினார்.

தமிழ்நாட்டில் மட்டுமாவது, பிரான்ஸ்  அளவுக்கு எட்ட வேண்டுமெனில், நாம் 24 மடங்கு அதிகமாக சோதனை செய்ய வேண்டும். அதுவும் கூட போதாமல் போகலாம்.

”உண்மைதான். நாம் ஒரு மோசமான நிலையில் இருக்கிறோம்.”, என்றார் இந்த வைரஸுக்கு எதிரான போரின் திட்டமிடலில் அங்கம் வகிக்கும் ஒரு மூத்த அதிகாரி. “ஆனால், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் இந்தியா போன்ற நாடுகளில் அமல்படுத்தவே முடியாது. நம்மால் இப்போது செய்ய முடிந்த ஒரே வேலை, இந்த வைரஸ் நமது கிராமபுறங்களுக்குப் பரவாமல் தடுப்பது தான். தற்போது, இந்த வைரஸ் நகரங்களில் தான் இருக்கிறது. சமூக தனிப்படுத்தல் மிகுந்த கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு எல்லா கிராமங்களிலும் உள்ள மூலை முடுக்குகளுக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும். இதுதான் நம்முன் இருக்கும் ஒரே வழி”, எனக் கூறினார்.

ஆனால், பதில்கள் கேட்டு தொக்கி நிற்கும் கேள்விகள் ஏராளம்.

தி.லீட் தொடர்ந்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி, உண்மையான தீர்வைக் கண்டறியும்.

https://www.thelede.in/tamil-nadu/2020/03/23/why-indias-covid-19-numbers-are-misleading

 

தமிழில்: பாலாஜி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW