கொரோனா – மார்ச் 22,மாலை 5 மணி – கைகளைத் தட்டிக்கொண்டே கோரிக்கைகளையும் முழங்குவோம்! அரசின் கேளாத செவிகள் கேட்கட்டும்!

21 Mar 2020

கொரோனாவுக்கு எதிரானப் போரில் பிரதமர் மோடி, மார்ச் 22 ஞாயிறு காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் ஊரடங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கூடவே, இந்த நெருக்கடியான நேரத்தில் இன்றியமையாப் பணிகளை இடைவிடாமல் செய்தபடி கொரோனாவுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையில் பாதுகாவலர்களாக நின்று கொண்டிருப்போருக்கு நன்றி செலுத்தும் வண்ணம் கைகளைத் தட்டுமாறு கோரியுள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், விமான சேவைப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகவியலாளர்கள், ரயில்வே பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டுக்கு வந்து பொருட்களைத் தருவோர் என எல்லோரையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவருடைய நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி, அனில் அகர்வால் போன்ற கார்ப்பரேட்களை கொஞ்சம் மறந்துவிட்டு இந்தப் பணியாளர்களை அவர் நினைவு கூர்வது என்பது ஓர் அரிதான தருணம்தான். அதற்கு ஒரு தொற்றுப் நோய்ப் பரப்பும் கொரோனா போன்ற வைரஸின் இந்திய வருகை தேவைப் படுகிறது. எது எப்படியோ, அவர்களைப் பற்றி சிந்திக்க சொன்னதற்கு மோடிக்கு நன்றி சொல்லுவோம்.

இந்த எல்லாப் பிரிவினரும் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக இந்த அரசிடம் மன்றாடி நின்ற நாட்களை நாம் நினைவுப் படுத்திக் கொள்வோம். மோடிக்கும் நினைவுப் படுத்துவோம். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பாடுபடும் இவர்களில் பெரும்பகுதியினர் ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள். கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் அவர்களின் இன்றியமையாத் தொண்டை அறிந்தேற்று நிரந்தரமாக்குவதுதான் அரசும் நாமும் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான நன்றியாக இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் தூய்மைப் பணியாளர்கள் தம்மை நிரந்தரமாக்கக் கோரியும் தமது ஊதியத்தை உயர்த்தக் கோரியும் போராடி வருவதை நாமெல்லோரும் கண்டு வருகிறோம். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதே அவர்களுக்கு செலுத்தும் உண்மையான நன்றி.

ஈராண்டுகளுக்கு முன்பு சுமார் ஐயாயிரம் செவிலியர்கள் தம்மை நிரந்தரமாக்கக் கோரி டி.எம்.எஸ். வளாகத்தில் இரவுபகல் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வளாகத்தில் இருந்த கழிவறையைக் கூட மூடி கைக்குழந்தைகளோடு போராடிக் கொண்டிருந்த செவிலியர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கி வெறுங்கையோடு அனுப்பியது இதே எடப்பாடி அரசு. அந்த செவிலியர்கள்தான் இந்தக் கட்டான நேரத்தில் கொரோனாவோடு போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எழுப்பிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான நன்றி.

போதிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்து கொண்டிருக்கும் மருத்துவர்களைப் பாதுகாப்பதற்கு தேவையான சுவாசக் கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை உடனடியாக கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். இந்த மருத்துவர்கள் தான் கடந்த அக்டோபரில் ஊதிய உயர்வும் பணி உயர்வும் போதிய மருத்துவ இடங்களை நிரப்பவும் உயர்படிப்பில் இட ஒதுக்கீடும் கோரிப் போராடினார்கள். அப்போது அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அரசு இப்போதாவது அதை நிறைவேற்ற முன்வருவதுதான் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன்.

போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் பென்சன் பணத்திற்காகவும் ஊதிய நிர்ணயத்திற்காகவும் போராடி ஒவ்வொருமுறையும் தமிழக அரசால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள். இந்நேரத்தில் மக்களுக்காகப் பேருந்துகளை ஓட்டிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு சொல்லும் நன்றி என்பது அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான்.

இரயில்வே துறையைத் தனியார்மயமாக்குவதைக் கைவிடுவதுதான் அந்த துறையைச் சேர்ந்தப் பணியாளர்களுக்கு சொல்லும் உண்மையான நன்றி.

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின் மூலம்  காப்பீட்டுக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி ஆட்டோ ஒட்டுநர்களை வயிற்றில் அடித்த இதே மத்திய அரசு, அதை திரும்பப் பெறுவதுதான் அவர்களுக்கு செய்யும் உண்மையான நன்றிக் கடன். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பன்மடங்கு குறைந்திருக்கும் வேளையில் அதற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதுதான் இந்த தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டிய உண்மையான கைத்தட்டல். அது மோடியின் கைகளிலேயே இருக்கிறது.

இவர்களைப் போலவே ஊடகவியலாளர்கள், காவல்துறையினர் ஆகியோரும் இந்த அரசிடம் தமது கோரிக்கைகளுக்காக தெருவில் நின்ற நாட்களை எண்ணிப் பாருங்கள். அதை நிறைவேற்ற வலியுறுத்துவது நமது கடமை அல்லவா?

எனவே, நாளை மாலை நமது  கைத்தட்டல் என்பது இன்றியமையாப் பணியில் இருக்கும் இந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசுக்கு உணர்த்தும் ஓசையாக இருப்பதுதான் உண்மையான நன்றிக் கடனாகும்.

கருவேப்பிலையைப் பயன்படுத்துவது போல் மழை வெள்ளம், புயல் காற்று, தொற்று நோய்க் காலங்களில் இவர்களின் உழைப்பைப் பயன்படுத்திவிட்டு அவர்களை கைவிடுவதுதான் இதுநாள் வரை அரசுகள் அவர்களுக்கு செலுத்திய நன்றி. ஆனால், ஒருமுறைக்கூட அவர்கள் மக்களை கைவிட்டதில்லை. இப்போதும் நாம் கைதட்டினாலும் தட்டாவிட்டாலும் அவர்கள் நமக்காகப் பாடுபடத்தான் போகிறார்கள். ஆனால், அவர்களுக்கு நன்றி சொல்ல நாம் முனையும் இவ்வேளையில் அவர்களுக்காக கேட்க வேண்டியது இதைதான். அவர்களின் பங்களிப்பைப் போற்றி நிரந்தரப் பணியாளர்களாக்கி, நியாயமான ஊதியம் வழங்கி, அவர்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

நல்லாசிகளால் வயிறு நிரம்பாது, நன்றி வார்த்தைகளால் மட்டும் மனங் குளிராது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே நன்றியாகும் என்பதை மத்திய மாநில அரசுகளின் கேளாத செவிகள் கேட்கும்படி தட்டுவோம் கைகளை!

 

– செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW