தில்லி சுல்தான்களுக்கு சேவகம் செய்யும் தமிழக அடிமை ஆட்சியாளர்களின் போலீஸ் இராஜ்ஜியம்!

22 Oct 2019

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கிறதா? அல்லது பா.ச.க. ஆட்சி நடக்கிறதா? என்று கேட்கும் அளவுக்கு நடுவண் பாசக அரசின் கைப்பாவையாக தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதில் நடுவண் மற்றும் தமிழக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தும் இயக்கங்களின் செயல்பாட்டை முடக்குவதற்கு பல்வேறு உத்திகளைக் கடைப்பிடித்து வருகிறது தமிழக அரசு.

அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பேசிய உரைகளுக்காக பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசியல் முன்னணிகளை வழக்கு, பிணை, நிபந்தனை என நீதிமன்றத்திற்கும் காவல் நிலையத்திற்கும் அலையவிடுவதும் உள்ளூருக்குள் முடக்குவதும் நடந்து வருகின்றது. காவல்துறையில் அனுமதிப் பெற்று நடத்தப்படும் கூட்டங்களில் பேசியதற்காகக்கூட வழக்கு பதிவு செய்வது இப்போது வாடிக்கையாகி உள்ளது.  இந்த ஒரு மாதக் காலத்திற்குள் அடுத்தடுத்து இரு வழக்குகள் தமிழ்த்தேச மக்கள் முன்னனியின் தலைவர் மீ.த.பாண்டியன் மீது போடப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஒராண்டுக்கு முன்பு அரங்கக் கூட்டத்தில் பேசியதற்காகவும் மற்றொன்று காவல்துறையில் அனுமதிப் பெற்று நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசியதற்காகவும் போடப்பட்டதாகும்.  அதுபோலவே, தஞ்சையில் தமிழ்த்தேச மக்கள் முன்னனித் தோழர்கள் அருண்சோரி, பிரபாகரன் உள்ளிட்டோர் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த பல்வேறு உரிமைப் போராட்டங்களுக்காகப் போடப்பட்ட பல்வேறு வழக்குகளுக்கும் இப்போது சம்மன் கொடுத்து ஆஜராக சொல்கிறது காவல்துறை. மேலும் அண்மையில் நடந்த நிகழ்வுகளுக்காகவும் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.

இன்னொருபுறம் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்குகளுக்கும் சம்மன் கொடுப்பது நடந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, ஈழ இன அழிப்புப் போர் நடந்து கொண்டிருந்த பொழுது 2009 ஏப்ரல், மே மாதங்களில் காங்கிரசு எதிர்ப்பு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது அரசியல் முன்னணிகள் மீது போடப்பட்ட வழக்குகளுக்காக  சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு பெரும்பாலும் அனுமதி மறுப்பது கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து வருகிறது. அதிகபட்சமாக மக்களுக்கு தொடர்பற்ற ஒதுக்குப்புறமான இடங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்றத்தை அணுகினால் நீதிமன்றமும் கருத்துரிமைப் பறிப்புக்கு துணைபோகிறது. அரங்கக் கூட்டங்கள், சிறு புத்தக நிலையங்களில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு காவல்துறையிடம் அனுமதி பெறவேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், அரங்க உரிமையாளரை மிரட்டுவதன் மூலம் அதுபோன்ற கூட்டங்களுக்கு அரங்கமே கிடைக்காத நிலையைக் காவல்துறை ஏற்படுத்துகிறது. அரங்க உரிமையாளரே காவல்துறை அனுமதி இருந்தால்தான் அரங்கத்தை வாடகைக்கு கொடுக்க முடியும் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரங்கக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி தரக் கோரி நீதிமன்றத்தை அணுக வேண்டி வருகிறது. அரங்கக் கூட்டம் நடத்துவதற்கு எதற்காக காவல்துறையின் அனுமதிப் பெற  வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்க வேண்டிய நீதிமன்றமோ இந்த வழக்குகளை எடுத்துக்கொண்டு அவற்றை நிலுவையில் வைப்பதன்மூலம் காலதாமதமாக்கி காவல்துறையின் நோக்கங்களை வெற்றியடையச் செய்கிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு உள்ளிட்ட இயற்கைவளக் காப்பு கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பதும் நீதிமன்றமும் அந்த வழக்குகளை இழுத்தடித்து நீர்த்துப் போகச் செய்வதும் நடந்துவருகிறது.

ஒருவழியாக அரங்கத்திலும் சரி பொதுவெளியிலும் சரி கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளை முற்றாக அடைப்பதன் மூலம் கருத்துரிமையைப் பறித்து மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லாமல் செய்துவிடுகிறது அரசு. தமிழ்நாட்டை கிட்டத்தட்ட ஒரு போலீஸ் மாநிலமாக மாற்றுவதில் இப்போதைய ஆட்சியாளர்களும் சரி முந்தைய ஆட்சியாளர்களும் சரி வெற்றிக் கண்டுள்ளனர். இந்த போலீஸ் இராஜ்ஜியத்திற்குத்தான் ’அமைதிப் பூங்கா’ என்று மறுபெயர் வைத்து அகமகிழ்கின்றனர்.

சொல்லப்போனால், ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் வடகிழக்கு மாநிலங்கள், காசுமீர், ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களிலும் தில்லி போன்ற அதிகபட்ச பாதுகாப்புக் கெடுபிடிகள் கொண்ட மாநிலங்களிலும்கூட  தமிழ்நாட்டில் நிலவும் அளவுக்கான கருத்துரிமை, பேச்சுரிமை மறுப்பு இருப்பதில்லை. தமிழ்நாட்டில் தான் தொட்டதற்கெல்லாம் காவல்துறை அனுமதி, எதற்கெடுத்தாலும் அனுமதி மறுப்பு என்று தமிழ்நாடின் அரசியல் செயற்களம் வெகுகாலமாகவே படிப்படியாக சுருக்கப்பட்டு வந்துள்ளது. மோடி-அமித் ஷா தலைமையிலான சிறுகும்பலாட்சியின் பாசிச அரசக் கட்டமைப்புக்கு சேவை செய்யும் வகையில் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் அடிமைக் கும்பல் மாநிலத்தையே முழுக் கண்காணிப்பில் வைத்திருக்கும் சனநாயக விரோத சர்வாதிகார நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற மக்கள்திரள் போராட்டங்கள் காவல்துறையால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டதையும் வன்முறைப் போராட்டங்கள் என திசை திருப்பப்பட்டதையும் அதன் பெயரால் காவல்துறையால் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதையும் கண்டோம். இதுபோன்ற தருணங்களின் சிவில் உரிமை, மனித உரிமைகள் போன்ற எந்த எந்த விதிமுறைகளும் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகின்றது. தேச துரோகம், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல், நாட்டுக்கு எதிராகப் போர் தொடுத்தல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்கு தொடுத்து சிறையிலடைப்பது, தீவைத்தல், வண்டி, வாகனங்களை உடைத்தல் போன்றவற்றில் காவல்துறையோ அல்லது காவல்துறை ஏவிவிடும் கூலிபடையோ ஈடுபடுவது, தடியடி, கண்ணீர் புகை, துப்பாகிச்சூடு நடத்துவது என அடுக்குஅடுக்கான ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகின்றன. தனிநபர் ஆணையம் ஒன்றை அமைத்து ஆண்டுக்கணக்கில் விசாரணை என்ற பெயரில் காலத்தைக் க்டத்தி மக்களின் நினைவடுக்குகளில் இருந்து ஒடுக்குமுறையின் சுவடுகளை அழித்துவிடுகிரார்கள். ஆயினும் நீதிமன்றங்களும் இதுபோன்ற அத்துமீறல்களின்போது காவல்துறையின் மீது எவ்வித கடும்நடவடிக்கையும் எடுப்பதில்லை. அரசின் நோக்கங்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறது நீதிமன்றம.

அண்மைக்காலமாக இஸ்லாமியர்கள் மீதான காவல்துறை ஒடுக்குமுறை கேள்விகேட்பாரற்று நடந்துவருகின்றது. இஸ்லாமியர்கள் மீது ஏவி விடப்படும் வேட்டை நாய்ப் போல் தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ) நடுவண் அரசால் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்குள் கோவை, திருச்சி, தஞ்சை என பல்வேறு மாவட்டங்களிலும் இஸ்லாமிய இளைஞர்களைக் குறிவைத்து என்.ஐ.ஏ. வின் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இளைஞர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் போடுவது, விசாரணை என்ற பெயரில் பிற மாநிலங்களுக்கு கடத்தி செல்வது என சமூக வெளியில் பேசப்படாமல் சத்தமின்றி இவை நடந்துவருகின்றன. அதேபோல, தமிழ்த்தேசிய ஆற்றல்கள் மீதும் தொடர்ச்சியான அடக்குமுறையை தமிழக அரசு நிகழ்த்தி வருகிறது. அவ்வகையில், தமிழ்த்தேசிய ஆற்றல்களான தோழர்கள் திருச்செல்வம், காளை, சான்மார்டின், கவியரசு, கார்த்திக் ஆகியோர் ஐந்து ஆண்டுகளாக பிணையின்றி சிறையில் வாடுகின்றனர். மக்கள் பணியில், பகுதிப் போராட்டங்களில் ஈடுபடுகின்ற வெகுசன ஊழியர்களையும் வெகுசன அமைப்புகளையும் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதற்காக ’மாவோயிஸ்ட்கள்’ என்று பீதியூட்டி, ஊபா சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் போடுவதையும் அரசு செய்துவருகிறது. இதன் மூலம் மக்களிடம் இருந்து எழுந்துவரும் போராட்டங்களை சிதறடிப்பதில் அரசு முனைப்புக் காட்டுகிறது. இத்தனைக்கும் தமிழகத்தில் தீவிரமானப் போராட்டங்கள் எதுவும் நடந்துகொண்டிருக்கவில்லை. முழுக்கமுழுக்க சட்டப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் காவல்துறை அனுமதி பெற்றும் நடத்தப்படும் அல்லது நடத்தமுயலும் போராட்டங்கள் தான். அப்படி இருக்கின்றபோதும் அவற்றிற்கெல்லாம் அனுமதி மறுப்பு, வழக்கு, கைது என்பதன் மூலம் தமிழகத்தைப் ’போலீஸ் மாநிலமாக’ மாற்றிவிட்டது தமிழக அரசு. இதன்மூலம் அரசமைப்புச் சட்டம் அடிப்படை உரிமைகள் என்ற பட்டியலின்கீழ் வரையறுத்துள்ள பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவற்றை வெளிப்படையாகவே மீறி வருகின்றது மோடி-எடப்பாடி கூட்டணி.

இவை தேர்தலுக்கு அப்பாற்பட்ட மாற்று அரசியலை முன்வைக்கும் இயக்க ஆற்றல்களோடு முடிந்துவிடவில்லை. ஒருகட்டத்தில், தி இந்து குழுமம் ‘அறிஞர் அண்ணா’ பற்றிய நூலொன்றின் வெளியீட்டு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அந்த நிகழ்வுக்கு அரங்கம் கொடுத்தவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியது தமிழக அரசு. இத்தனைக்கும் இதில் திமுகவைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் உரையாற்றவிருந்தனர்! திமுக தலைவரை அழைத்துப் போராட்ட முன்னெடுப்பைக் கைவிடுமாறு ஆளுநரே பேசுகிறார். ‘மோடியே திரும்பிப் போ’ என்ற முழக்கத்துடன் நடுவண் அரசை அம்பலப்படுத்தக் கூடிய போராட்டங்களை நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மீது வழக்கு, கைது ஆகிய ஒடுக்குமுறைகளை நிகழ்த்தி  முந்தையப் போராட்ட வடிவங்களில் இருந்து பின்வாங்கச் செய்துள்ளது.

அரசாட்சியில் இருப்பவர்கள் இயக்கங்கள் மீது ஓங்கிஓங்கி அடிப்பதன் மூலம் ஆட்சியின் மீதான அதிருப்தியையோ அல்லது ஆட்சியாளர்களுக்கு எதிரானப் போராட்டத்தையோ கட்டுப்படுத்திவிடலாம் என்று எண்ணுகின்றனர். மக்களுடையப் பிரச்சனைகளைத் தீர்க்காமல் ஒடுக்குமுறைகளின் மூலமாக மட்டுமே நிலைமையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று கருதுகிறது அரசு. ஆனால், கருத்துரிமை, பேச்சுரிமை, சட்டப்பூர்வமான அரசியல் நடவடிக்கைகள் முற்றாக தடுக்கப்படும் நிலை தொடர்ந்தால் போராட்டம் வேறு வடிவங்கள் எடுக்கும் என்று வரலாறு பலமுறை மெய்ப்பித்துள்ளது.

மோடி-அமித் ஷா தலைமையிலான காவி-கார்ப்பரேட் சர்வாதிகார அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கும் இந்துத்துவ தேசியத்திற்கான அரசியல் பண்பாட்டுத் திணிப்புகளுக்கும் எதிராக மக்களிடம் கடும் வெறுப்பு உருப்பெற்றுள்ளது. மக்களுடைய எதிர்வினைகளை மட்டுப்படுத்தும் போலீஸ் ஒடுக்குமுறைகளின் வழியாக இந்த வெறுப்பை மாற்றிவிட முடியாது. மக்கள் கிளர்ந்தெழுந்து வீதிக்குவரும்போது இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதுபோல் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த ஆட்சியாளர்கள் விரும்பக்கூடிய எல்லைகளைத் தாண்டியே அப்போராட்டங்கள் எழும். அப்போது இந்த ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். எனவே, காவல்துறை ஒடுக்குமுறையைத் தமிழக அரசு கைவிட வேண்டும். மிக மோசமான ஜனநாயகம் என்று அறியப்படும் நாடுகளில்கூட இதுபோல் பேச்சு, எழுத்து, கூட்டம் கூடும் உரிமைகளை மறுக்கும் நிலைமை கிடையாது. எனவே, அரசு எந்த அளவுக்கு தமிழ்நாட்டைப் போலீஸ் மாநிலமாக மாற்றுகிறதோ அந்த அளவுக்கு மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழும், மக்களிடம் இருந்து கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தமிழக மக்களின் ஒட்டுமொத்த நலனையும் காவு கொடுத்துவிட்டு தில்லி சுல்தான்களின் முழு அடிமையாக மாறிப்போன இந்த ஆட்சியாளர்கள் மக்களால் அடியோடு வீழ்த்தப்படுவார்கள்.

நீதிமன்றம் அரசின் நோக்கங்களுக்கு சேவை செய்யும் நிறுவனம் அல்ல, மாறாக அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியதாகும். அரசின் அடக்குமுறைக்கு துணைபோகும் நீதிபதிகள் ஓர் உண்மையைக் காணத் தவறுகின்றனர். ஆட்சியாளர்களின் அடக்குமுறை மக்களுடன் நின்றுவிடப் போவதில்லை. அது நீதித்துறையின் கழுத்தையும் நெரிக்கின்றது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சியாளர்கள் நீதிபதிகளைப் பந்தாடிய போது நீதித்துறையைப் பாதுகாப்பதற்கு மக்கள்தான் வீதியில் இறங்கி பாதுகாக்கப் போராடினர். ஏன் இந்தியாவில்கூட செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் லோகுர் ஆகிய நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்நாட்டின் சனநாயகத்தைப் பாதுகாத்திடுங்கள் என்று மக்களிடம்தான் முறையிட நேர்ந்தது. இன்று காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்திற்கு எதிரானப் போராட்டத்தில் தமது பங்கை ஆற்றவேண்டிய கடமை நீதிபதிகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் உண்டு.

தில்லி சுல்தான்களுக்கு சேவகம் செய்யும் தமிழக அடிமை ஆட்சியாளர்களின் போலீஸ் இராஜ்ஜியத்தை முறியடிக்க மக்கள் அணியமாக வேண்டும்.

 

பாலன்,

பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னனி

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW