அசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்

12 Sep 2019

அசாமிலுள்ள வெளிநாட்டினர் ‘கரையான்கள்’ அவர்கள் வங்க கடலில் தூக்கி எறிவதற்கு தகுதியானவர்கள் என பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூறினார். ஆனால் தற்போது ஆகஸ்ட் 30 இல் வெளியிடப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) இறுதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டபின் அது குறித்து அமித்ஷா முதலில் வாய்திறக்கவில்லை. அது ஏன் என்பதை பின்னர் பார்ப்போம். 19 இலட்சம் மக்கள் இந்தியர்கள் இல்லை என இறுதி வரைவு பட்டியலில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் கதி என்ன ஆகும் ? இதில் பா.ஜ.க வின் திட்டம் என்ன? இந்த தேசிய குடியுரிமை பதிவேடு (NRC)  இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதன் காரனம் என்ன? அதற்கு முன் முதலில் அசாமின் தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) பற்றி தெரிந்துகொள்ளலாம்..

அசாமில் தான் முதன்முதலில் 1951ஆம் ஆண்டு தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) ஆரம்பிக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு தான் சுதந்திர இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1947 இந்திய –பாகிஸ்தான் பிரிவினையின் போது அப்போது பாகிஸ்தான் வசமிருந்த கிழக்குவங்காளம் (தற்போது பங்களாதேஷ்) பகுதியில் இருந்து ஏராளாமான மக்கள் அசாம் நோக்கி வந்தனர்.  அதன்படி அசாம் மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரினால் வங்காள தேசம் உருவான பின்னர் அங்கிருந்து இந்துக்களும், இஸ்லாமியர்களும் அசாமில் குடியேறினர். அதன் பின்னர் 1967 இல் அந்நியரை வெளியேற்று என்ற முழக்கத்துடன் உருவான AASU எனப்படும் அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்பு மற்றும் அனைத்து அசாம் கன பரிஷத் (AAGSP) செய்த தொடர் பிரச்சாரம் மற்றும் 1979-85 ஆண்டு வரை நடந்த போராட்டங்கள், கலவரங்கள் விளைவாக 1985 ஆம் ஆண்டு பிரதமர் இராஜீவ் காந்தி முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தப்படி ’அந்நியரை வெளியேற்றுவது’ என ஒப்பந்தம் போடப்பட்டது. 1997இல் தேர்தல் ஆணையம் 3,70,000 மக்களை சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் (D voters) என அறிவித்தது. அதன்படி அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. தற்போது 1,43,227 சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.

2013 உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) கணக்கெடுக்கப்பட்டு 1971 மார்ச் 25 க்கு பின்ன்ர் குடியேறியவர்கள் பட்டியல் வெளியிடபட்டது. குடியுரிமைக்கு சான்றாக பொதுமக்கள் சமர்பிக்க வேண்டியவை – 1951ஆம் ஆண்டு  தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) உள்ள பெயர், அல்லது 1971 வரை உள்ள ஏதேனும் ஒரு வாக்காளர் பட்டியலில் பெயர், அல்லது 1971க்கு முன் வழங்கப்பட்ட மற்ற 12 வகையான ஆவணங்கள் காட்டப்படவேண்டும்.

டிசம்பர் 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் பட்டியலில் 1,90,000 பெயர்கள் இடம் பெற்றிருந்தன., ஜூலை 2018 இல் வெளியிடப்பட்ட இரண்டாம் பட்டியலில் 40 லட்சம் மக்கள் இடம் பெற்றுருந்தனர் , 31 ஆகஸ்டு 2019 இல் வெளியிடப்பட்ட  இறுதி பட்டியலில் 19,06,657 பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மூன்று கோடியே முப்பது  இலட்சம் மக்கள் தொகையில்  (3,30,276, 61)  6 சதவீதம் (19 இலட்சம்) மக்கள் அந்நியர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் முதல் முறை 21 இலட்சம் மக்கள் தவறாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக யாரும் தண்டிக்கப்படவில்லை.  இதுவரை இதற்காக 1200 கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. 62,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஏறத்தாழ 66 மில்லியன் தரவுகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.

இதில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளான துப்ரி, சல்மாரா, தெற்கு சல்மாரா மற்றும் கரிம்கஞ் போன்ற பகுதிகளில் 7% மக்கள் மட்டுமே இந்தியர் அல்லாதவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் அதிகம் வசிக்கும்  எல்லை பகுதியில் கச்சார் பகுதியில் 12.91 % மக்கள் இந்தியர் அல்லாதவர்கள் என கூறப்பட்டுள்ளது. தற்பொது இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் தான் அமித்ஷா வாய்மூடி இருந்து வந்தார். ஒருவழியாக 7 ஆம் தேதி அன்று அசாமுக்கு சென்றிருந்த அமித் ஷா சட்டவிரோதமாக குடியேறிய ஒவ்வொருவரையும் நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் என்று சொல்லியுள்ளார்.

ஆனால், அசாம் பா.ஜ.க வினரும் , அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்பும் இந்த வரைவு அறிக்கையை ஏற்கவில்லை. பெரும்பாலான இஸ்லாமியர்கள் இதில் நீக்கப்படுவார்கள் அதை வைத்து தனது இந்துத்துவா அரசியலை செய்யலாம் என எண்ணிய பா.ஜ.க வுக்கு இது ஒரு மரண அடி.  அசாம் நிதி அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் மக்கள் கணக்கெடுக்கப்பட வேண்டும் எனவும் பெரும்பாலானோர் போலி சான்றிதழ்களைக் கொடுத்துள்ளார்கள் என கூறியுள்ளார். ஏற்கனவே அரசு மீண்டும் கணக்கெடுக்கப்பு நடத்தவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தற்போது இந்த கணக்கெடுப்பு அவர்களின் இந்து வாக்கு வங்கிக்கு ஆபத்தாக இருப்பதால் மேல்முறையீடு செய்யப்போவதாக சொல்கின்றனர். முழுக்க உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்ற இந்த கணக்கெடுக்கப்பை நிராகரிக்கும் பா.ஜ.க அரசியலை உச்சநீதிமன்றம் ஏற்குமா? என்பதை வைத்து அதன் நம்பகதன்மையை உறுதி செய்துகொள்ளலாம்.

இந்த வரைவு அறிக்கையில் நீக்கப்பட்ட 19 இலட்சம் மக்கள் 120 நாட்களுக்குள் ‘வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில்’ மேல்முறையீடு செய்யலாம். அதன்பின்னர் உயர்நீதிமன்றத்திலும் , உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த எண்ணிக்கை மேலும் கூட குறையலாம்.

சமீபத்தில் ஏற்பட்ட அசாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தாம் ”குடிமகன்” எனும் அடையாளத்தை நிருபிக்க உள்ள ஆதாரங்களைப்  பறிகொடுத்துவிட்டனர். இந்த கணக்கெடுப்பில் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீட்டில் குடியுரிமை கணவனுக்கு உண்டு, மனைவிக்கு இல்லை, ஒரே வீட்டில் சகோதரிக்கு உண்டு, சகோதரனுக்கு இல்லை, பிள்ளைகளுக்கு உண்டு, பெற்றோருக்கு இல்லை. இந்திய இராணுவத்தில் கார்கில் போரில் வேலை பார்த்த கர்னலுக்கு குடியுரிமை இல்லை எனப் பல்வேறு குளறுபடிகளும் நடந்துள்ளது. ஷ்ரெயா பேகம் என்பவர் தன் பெயர் இந்தியரல்லாதோர் பட்டியலில் இருந்ததால் கிணற்றில் குதித்தார். மேலும் பலர் மனநலம் பாதித்தது போல் ஆகினர்.

2015 இல் இருந்து இதுவரை 46,000 பேர் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2000 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள்னர். 44,000 பேர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குடியுரிமை அற்றவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களை அந்நாடு ஏற்றுகொண்டால் மட்டுமே அவர்களை நாடு கடத்த முடியும். பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் ஹசன் நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளவர்கள் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் அல்ல எனக் கூறியுள்ளார். இந்த வரைவு அறிக்கைப் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் கார்டியன், நியூயார்க் டைம்ஸ், அல் ஜசீரா போன்ற பல பத்திரிக்கை, தொலைகாட்சிகள் இந்தியா இரண்டு மில்லியன் மக்களின் குடியுரிமையைப் பறித்துவிட்டதாக செய்தி வெளியிட்டன. இதன்பின் பங்களாதேஷ் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ’தேசிய குடியுரிமை பதிவேடு’ என்பது இந்தியாவின் உள்விவகாரம் எனகூறியுள்ளார்.

இவ்வாறு குடியுரிமை அற்றவர்கள் என பட்டியிலப்பட்டோர் கால வரையறையின்றி தடுப்புக் காவலில் வைக்கப்படுவர். உச்சநீமன்றம் 3 ஆண்டுகாலம் வைத்திருந்து பின் விடுதலை செய்யலாம் என கூறியும் அதை ஏற்க அரசு மறுத்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக மகாராஷ்டிரத்தில் தடுப்புக் காவல் முகாம் அமைக்கப்பட்டது. இப்போது 6 முகாம்கள் உள்ளன. மேலும் 10 இடங்களில் கட்ட திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு காலவரையறையின்றி தடுப்புக் காவலில் வைக்காமல் வேறு வகையில் அவர்களை உரிமையற்றவர்கள் ஆக்கலாம்.  அதாவது அவர்களுக்கு வாக்குரிமையைப் பறிக்கலாம், அரசின் சலுகைகளை  நீக்கலாம், அகதி என வகைப்படுத்தலாம், வேலை அனுமதி (work permit)கொடுக்கலாம், பிணையில் விடுதலை செய்யலாம் அல்லது அவர்களின் கால்களில் காப்பு அணிந்து அடையாளப்படுத்தலாம் என பல்வேறு ஆலோசனைகளை நீதிமன்றங்கள் முன்வைத்த  அரசு அதிகாரிகள்,காவல் துறையினர்  ஆலோசனைகளை அரசு செவிமடுக்கவில்லை..

அசாமை அடுத்து மேற்குவங்காளத்தில் இதை நடைமுறைப்படுத்த பா.ஜ.க அரசு முடிவு செய்துள்ளது..பின்னர் நாடு முழுவதும் இதை செய்ய இருக்கிறார்களாம். இதன் பிண்ணனி என்னவென்றால் நாடு முழுவதும் இஸ்லாமியர்களையும், மற்ற சிறுபான்மையினரையும் பதற்றத்தில் வைப்பது தான். அதன் மூலம் இந்த்துத்வா வெறியை மேலும் வளர்த்தெடுப்பது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காஷ்மீர், தேசிய குடியுரிமை பதிவேடு என திசைதிருப்பி அவர்களின் அரசியலை நிலை நிறுத்துவது. இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை ஏற்ப்டுத்தி மக்களைப் பிளவுபடுத்துவது தான் நீண்டகாலத்திட்டம். ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிளவுபடுத்தி (Divide & Rule) அரசியல் செய்தது, ஆளும் பாசிச பா.ஜ.க வோ மக்களை திசைதிருப்பி (Distract & Rule) ஆட்சி செய்கிறது

 

– கார்த்திகேயன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW