”சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். ஆகஸ்ட் – 30 அனைத்துலக காணாமற் ஆக்கப்பட்டோர் நாளில் ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் ஐ.நா.வுக்கு கோரிக்கை 

31 Aug 2019

ஆகஸ்ட் – 30 காணாமற் போனோர் நாளை முன்னிட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில்  ஈழத்தில் வலிந்து காணாமலடிக்கப்பட்ட ஈழத் தமிழருக்கு நீதிக்கோரி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஐநா. பொதுச் செயலருக்கும் ஐநா மனித உரிமை ஆணையருக்கும் விண்ணப்ப மடல் கொடுக்கப்பட்டது.

 

இந்த விண்ணப்ப மடலை வழங்கிய குழுவில் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் கண்ணன், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தடயவியல் நிபுணரும் மருத்துவருமான தோழர் சேவியர், பேராசிரியர் பேச்சிமுத்து   ஆகியோர் பங்குபெற்றனர். யுனிசெப் அலுவலக அதிகாரியிடம் சிறிலங்கா அரசப் படையால் காணாமலடிக்கப்பட்ட இருபதாயிரத்தாயிரத்திற்கும் மேலான தமிழர்களின் நிலை என்ன என்பது போர் முடிந்து பத்தாண்டுகள் ஆகியும் தெரியவில்லை. காணாமலடிக்கப்பட்டவர்கள் நிரம்பிய நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. போர் முடிந்த நிலையில் சரணடைந்தவர்களும் குழந்தைகளும் கூட காணாமலடிக்கப்பட்டுள்ளனர்.  ஐ.நா. அறிக்கைகளில்   போர்க்குற்றங்களும் மானிட விரோத குற்றங்களும் செய்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ள 58 ஆவது படைப்பிரிவின் தலைவர் சவேந்திர சில்வாவுக்கு சிறிலங்கா அரசு படைத்தலைவராகப் பதவி உயர்வு கொடுத்துள்ளது. இது பற்றி ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிசேல் பச்செலட் அவர்களும் கவலை தெரிவித்துள்ளார். கண் துடைப்புக்காக காணாமற்போனோர் அலுவலகங்களைத் திறந்து வைத்து உலகை ஏமாற்றிவருகிறது சிறிலங்கா. மேற்படி கருத்துகள் யுனிசெப் அலுவலக அதிகாரியிடம் எடுத்துச் சொல்லப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதியில் இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் தாயகப் பகுதிக்கு நேரில் சென்று வந்த மருத்துவர் சேவியர் அவர்கள் காணாமலடிக்கப்பட்டவர்களின் உறவுகளின் துயரத்தை எடுத்துச் சொன்னார். ”ஒரு தாய் தனது முதல் இரண்டு பிள்ளைகளைப் போரில் இழந்துள்ளார். அது பற்றி குறிப்பிடும்போது அவர் கலங்கவில்லை. ஆனால், தனது மூன்றாவது பிள்ளைத் தன் கண் முன்னே இராணுவத்திடம் சரணடைந்து காணாமலடிக்கப்பட்டோர் பட்டியலில் இருப்பவர் என்று சொல்லும் போதே கடகடவென கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.” என்று ஓர் எளிய எடுத்துக்காட்டின் மூலம் காணாமலடிக்கப்பட்டோரின் உறவுகளின் துயரத்தை எடுத்துச் சொன்னார்.

 

இனியும் காலந் தாழ்த்தாது சிறிலங்கா அரசைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்பு நிறுத்த வேண்டும் அல்லது சிறிலங்காவுக்கு என்று சிறப்பப் புலனாய்வுத் தீர்ப்பாயம் அமைத்து புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் இக்கோரிக்கையை மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழக சட்டப்பேரவையும் இலங்கையின் வடக்கு மாகாணசபையும் ஒரு தீர்மானமாக நிறைவேற்றியுள்ளன என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

 

யுனிசெப் அலுவலக அதிகாரி விண்ணப்ப மடல்களைப் பெற்றுக் கொண்டு ஐ.நா.வின் இந்திய அலுவலகத்திற்கு முன் அனுப்புவதாக கூறினார்.

 

இந்த செய்திக் குறிப்புடன் விண்ணப்ப மடல்களின் ஆங்கில, தமிழ் வடிவத்தையும் புகைப்படத்தையும் இணைப்பில் காண்க. இச்செய்தியைத் தஙக்ள் ஊடகத்தில் வெளியிட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

தோழமையுடன்

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பிற்காக

செந்தில்

99419 31499

 

ஐநா மனித உரிமை ஆணையரிடம் கொடுக்கப்பட்ட  விண்ணப்ப மடல் கீழ்வருமாறு…

=======================================================================

  30.8.2019

தோழர் கொளத்தூர் மணி

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பிற்காக

 

ஐநா பொதுச் செயலருக்கும்,

ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும். 

ஆகஸ்ட் 30 ஆம் நாளில் வலுக்கட்டாயக் காணாமலடிக்கப்பட்டவர்களை உலகம் நினைவுகூர்வது போலவே, தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள், இலங்கையில் காணாமலாக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் நிலையை ஐ.நா.வின் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவில் எழுப்புமாறு வலுக்கட்டாயக் காணாமலடித்தலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில்(ICPPED) கைசாத்திட்டுள்ள நாடுகளை வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் பத்தாயிரக்கணக்கானத் தமிழர்கள் இறுதிப்  போரின் போதும் அதற்குப் முன்பும் பின்பும் வலுகட்டாயக் காணாமலடித்தலுக்கு ஆளானதோடு இறுதிப்போர் முடிந்து பத்து ஆண்டுகளாகியும் அவர்களின் நிலை வெளிப்படாமலும் கண்டறியப்படாமலும் உள்ளது. ஐ.நா. கணக்குப்படி, உலகிலேயே காணாமலடிக்கப்பட்டோரை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதில் எண்ணற்ற குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் போரின் கடைசி நாட்களில் சிறிலங்கா அரசப்படைகளிடம் சரணடைந்த குடும்பங்களோடு இருந்தவர்கள். தங்களுடைய பாதுகாப்புக்கு உறுதியளித்ததை நம்பி போரின் முடிவில் தாமாக முன்வந்து சிறிலங்கா அரசப் படைகளின் கைகளில் தம்மை ஒப்படைத்துக் கொண்ட எண்ணற்ற குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட  தமிழர்கள் இதில் அடங்குவர்.

சிறிலங்காவில் உள்ள தமிழ்த்தேசமும் அதன் புலம்பெயர்மக்களும் இந்தியாவில் உள்ள தமிழ் மக்களாகிய நாங்களும் கிட்டத்தட்ட சிங்களர்களை மட்டுமே கொண்ட சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கடைசியாக கண்ட எண்ணற்ற தமிழர்கள் வலுகட்டாயமாக காணாமலாக்கப்பட்டதன் நீண்டகால விளைவுகளால் தொடர்ந்து துன்பத்தில் இருக்கிறோம். தங்களுடைய விருப்பத்திற்கு உரியவர்களுக்கு என்னநேர்ந்தது என்பதை அறிவதிலுள்ள நிலையற்றத் தன்மையாலும் அவர்களுக்கு முறையாக இறுதி அஞ்சலி செலுத்த முடியாமலும் அவர்களோடு தொடர்புடைய சட்ட சிக்கல்களைத் தீர்க்க முடியாமலும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் தொடர்ந்து துன்பத்தில் உள்ளனர்.

காணாமலடித்தலுக்கு எதிரான ஒப்பந்தத்தை சிறிலங்கா 2016 மே மாதம் ஏற்புறுதி செய்த போது, சிறிலங்காவில் வலுக்கட்டாயக் காணாமலடித்தலைச் செய்தவர்கள், ஆணையிட்டவர்கள், செய்யச் சொன்னவர்கள், அல்லது அதில் உடந்தையாக இருந்தவர்கள் மீது குற்றப் பொறுப்பு சுமத்த தனக்குள்ள சட்டக் கடமையை ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்த நாள் வரை அப்படிச் செய்ய சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் எவ்வித முயற்சியும் இல்லை. காணாமலடித்தலுக்கு எதிரான ஒப்பந்தத்தின் 32ஆம் உறுப்பின் படி, ஒப்பந்த மீறல்கள் என்று குற்றஞ்சாட்டி பிற அரசுத் தரப்புகளிடமிருந்து கடிதம் பெற வலுக்கட்டாயக் காணாமலடித்தலுக்கு எதிரான குழுவுக்குள்ள தகுதியை சிறிலங்கா அறிந்தேற்றது. நாளது வரை எந்த அரசுத் தரப்பும் சிறிலங்காவின் ஒப்பந்த மீறலைக் கருதிப் பார்க்கும்படி இக்குழுவை வெளிப்படையாகக் கேட்கவில்லை.

இலங்கை அரசாங்கம் சர்வதேச விதிகளின் கீழான கடமைகளையும் சரி தானே முன்வந்து இணைஉபயம்(co-sponsor) செய்த, முற்றாக நடைமுறைப்படுத்துவதாக ஐ.நா. விடம் உறுதியளித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 30/1, 34/1 மற்றும் 40/L.1 தீர்மானங்களின் கீழான கடமைகளையும் சரி நிறைவேற்றத் தவறிவிட்டது. இவைமட்டுமின்றி, சிறிலங்கா அரசாங்கம் ஏராளமான உறுதிமொழிகளை அளித்திருந்தும் அரசப்படையாள் ஒருவரைக்கூட நீதியின் முன்பு நிறுத்தவில்லை. நேர்மாறாக, சிறிலங்காவில் போர் நடந்த போது பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதிலும் காணாமற்செய்யப்படுவதிலும் வகித்த பங்கிற்காகப் போர்க்குற்றவாளி என்று பல ஐநா அறிக்கைகளும் குறிப்பிட்டுச் சொல்லும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை சிறிலங்கா இராணுவத்தின் புதிய படைத் தலைவராக அமர்த்தியிருக்கின்றது சிறிலங்கா அரசு. 2009 மே மாதம் மேஜர் ஜெனரல் சில்வாவின் 58ஆம் படைப் பிரிவின் கையில் சிறிலங்கா இராணுவம் என்னவெல்லாம் செய்தது என்பதை ஐநா அறிக்கைகள் விவரமாகக் கூறியுள்ளன. போர்க் குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் நிகழ்ந்தன. போர்க் குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் நிகழ்ந்தன. தமிழினவழிப்பை நிகழ்த்துவதில் முதன்மைப் பங்கு வகித்தவர்களில் ஒருவர் மேஜர் ஜெனரல் சில்வா. 2011ஆம் ஆண்டு நியூ யார்க்கில் ஒரு போர்க்குற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர். அரசதந்திர விலக்குப் பெற்றவர் என்ற அடிப்படையில் மட்டுமே இவ்வழக்கு தள்ளுபடி ஆயிற்று. இந்தக் குற்றச்சாட்டுகளால்தான் ஐநா அமைதிக் காப்புக் குழு ஒன்றிலிருந்தும் சில்வா அகற்றப்பட்டார். சில்வாவை படைத் தலைவராக அமர்த்தியிருப்பது குறித்து ஐ.நா.மனித உரிமைகளுக்கான ஆணையர் மிசேல் பச்செலட் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

2009 மே மாதத்தில் போரின் முடிவில் சரணடைந்தவர்களின் பட்டியல் இன்று வரை வெளியிடப்படவில்லை.  தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே 2016 சனவரி 15 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், “ போரின்முடிவில் 2009 மேமாதத்தில் சிறிலங்கா அரசப்படைகளிடம் சரணடைந்த அனைவரும் உயிரோடில்லை” என்று சொன்னார். இந்நாள்வரை, தன்னுடைய வாய்மொழியை ஒட்டி எழும்,  சரணடைந்தவர்கள் கொல்லப்படுவதற்கு யார் பொறுப்பு?, அவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள், அவர்களுடைய இறந்த உடல்கள் எங்கே? உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் தர மறுக்கிறார்.

ஆயுதமோதலின்போதும் அதற்கு முன்பும் பின்பும் சிறிலங்கா அரசாங்கம் வலுக்கட்டாயக் காணாமலடித்தலை தமிழ்த்தேசத்திற்கு எதிரான இனப்படுகொலையின் திட்டமிடப்பட்ட கருவியாக கையாண்டுள்ளது.

நன்கு அறியப்பட்ட வெள்ளைவேன் கடத்தல்கள் தமிழர்களுக்கும் மாற்றுகருத்துக் கொண்ட சில சிங்களர்களுக்கும்கூட எதிரான அடக்குமுறைக் கருவியாக மாறிப்போனது. காணாமலடிக்கப்பட்ட தமிழ்மக்களோடு சேர்த்து ஆயுதமோதலின் முடிவில் சரணடைந்த பெரும்பாலான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களின் நிலையும் தெரியாமலே இருக்கிறது. 2015 நவம்பர் மாதம் சிறிலங்காவுக்குச் சென்று பார்வையிட்ட பின் வலுக்கட்டாயக் காணாமற்போதல் பற்றிய ஐநா செயற்குழு கூறியது போல், நடப்பில் செயற்குழுவின் பார்வையிலுள்ள காணாமற்போதல் நேர்வுகளின் தொகையில் சிறிலங்கா இரண்டாமிடம் வகிக்கிறது.  .

சிறிலங்கா 2016 அக்டோபரிலும் 2017 மார்ச்சிலும் 2019 மார்ச்சிலும் மனித உரிமை மன்றத்தில் “காணாமல் போனோர் அலுவலகம் அமைத்துள்ளோம், இது ஒரு சாதனை” என்று கூறியது ஏமாற்றுப் பேச்சே. தமிழ்ச் சமுதாயத்திடமிருந்து உருப்படியான உள்ளீடு ஏதுமில்லாமலும் மனித உரிமை மன்றத்தின் 30/1 தீர்மானம் (A/HRC/30/L.29) கோரியவாறு பன்னாட்டு வல்லுநர்களின் பங்கேற்பு ஏதுமில்லாமலும் காணாமல் போனோர் அலுவலகம் அமைத்திருப்பது சர்வதேசச் சமுதாயத்தை ஏமாற்ற சிறிலங்கா மேற்கொண்டுள்ள வஞ்சக முயற்சியே ஆகும். 2015 இல் நல்லரசாங்கம், மீளிணக்கம் என்ற முழக்கங்களுடன்  ஆட்சிக்கு வந்த சிறிசேனா-ரணில் அரசு ஈழத் தமிழர்களுக்கு நீதியையோ அரசியல் தீர்வையோ வழங்குவதில் நூறு விழுக்காடு தோல்வி கண்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த கூட்டணி முறிந்தது மட்டுமின்றி அதிபர் சிறிசேனா பொறுப்புக்கூறல் பொருட்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்பதை விரும்பவில்லை என்பது 2019 மார்ச்சு மாதத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டது.

காணாமற்போனோர் அலுவலகத்தில் ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு வல்லுநர்களை சேர்க்க வேண்டும் என்ற தொடர்ச்சியான வேண்டுகோள் இலங்கை அரசால் மறுக்கப்பட்டன. கடந்த செப்டம்பரில் காணாமற்போனோருக்கான அலுவலகம் கொடுத்த இடைக்கால அறிக்கையின் பரிந்துரையின்படி காணாமலடிக்கப்பட்டமைக்கு காரணமான அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்யும் பரிந்துரையைக் கூட சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தவில்லை. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமலடிக்கப்பட்டிருக்கும் நிலையில்  காணாமற்போனோருக்கான முதல் அலுவலகத்தை கடந்த மார்ச்சு மாதம் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னிலங்கையின் முனையில் உள்ள மாத்தறையில் தொடங்கியது சிறிலங்கா. அதன் பின்னர் கிழக்குப் பகுதியில் உள்ள மன்னாரில் ஓர் அலுவலகம் தொடங்கப்பட்டது. வலுக்கட்டாயமாக காணாமலடிக்கப்பட்டோரை நினைவு கூறும் நாளான ஆகஸ்ட் 30 ஐ கருத்தில் கொண்டே ஐநாவுக்கு கணக்கு காட்டும் நோக்கில் ஆகஸ்ட் 24 அன்று மூன்றாவது அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் அமைத்திருக்கிறது சிறிலங்கா.

காணாமல் போனவர்களின் பாதிப்புற்ற குடும்பத்தினர் உள்நாட்டுச் சட்டத்தின் படி உண்மையான ஈடுபெறும் வாய்ப்பை மறுப்பது மட்டுமல்லாமல், வலுக்கட்டாயக் காணாமலடித்தலுக்கு எதிரான ஒப்பந்தத்தின் 31ஆம் உறுப்பில் கண்டவாறு இந்தக் குடும்பத்தினரிடமிருந்து நேராக முறையீடுகள் பெற வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய ஐநா குழுவுக்குள்ள தகுதியையும் சிறிலங்கா அரசாங்கம் அறிந்தேற்கவில்லை.

உள்நாட்டு வழிமுறையோ பன்னாட்டு வழிமுறையோ எதற்கும் இடமில்லை என்ற நிலையில், காணாமல் போனவர்களின் தாய்மார்களும் மனைவிமார்களும் கிளிநொச்சியிலும் பிற மையங்களிலும்  மாதக்கணக்கில்  தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தி வருகிறார்கள். எங்கள் குடும்பத்தினரை விடுதலை செய்க! அல்லது அவர்களுக்கு என்ன நேரிட்டது என்ற உண்மையை அறிய நம்பகமான புலனாய்வு செய்க! என்பதே அவர்கள் கோரிக்கை. அமைதியான முறையில் நடைபெறும் இந்தப் போராட்டங்கள் அரசின் வன்முறைக்கு இலக்காகியுள்ளன. மேலும் இப்போராட்டங்களுக்கு தலைமை தாங்கக் கூடிய முன்னணித் தலைவர்கள் சிறிலங்கா அரசப் படைகளின் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். காணாமலடிக்கப்பட்டோருக்கு நீதி கோரிப் போராடுவோர் தாமும் காணாமலடிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

இந்தப் பெண்களும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அனைவரும் ஆண்டுக் கணக்கில் செய்வதறியாமல் திகைத்துப் போய் வாழ்ந்து வருகின்றனர். காணாமலடிக்கப்பட்டோருக்காக காத்திருப்பவர்களில் 40 பேர் தமது உறவுகளின் நிலை என்னவென்று தெரியாதவர்களாக இறந்தும் போய்விட்டனர். வாரிசுரிமையாகச் சொத்தில் பங்கு பெற முடியவில்லை. உரிமைப் பட்டயம் வைத்துக் கொள்ளவோ உதவி கோரி விண்ணப்பிக்கவோ முடியவில்லை. காணாமல் போனவர்களுக்குப் பொறுப்புக் கூறவோ, அர்ஜெந்தினா, போஸ்னியா, எர்சகோபினா, சிலே, பெரு போன்ற நாடுகளின் அரசுகள் வழங்கியிருப்பது போல் “வலுக்கட்டாயக் காணாமலடித்தலால் இல்லாது போனவர்” என்பது போன்ற பொருத்தமான சட்டத் தகுநிலை வழங்கவோ அரசாங்கம் தவறி விட்டதே காரணம்.

மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு, காணாமல் போனவர்களின் பாதிப்புற்ற குடும்பத்தினருடன் தோழமை கொண்டு கீழே ஒப்பமிட்டுள்ள நாங்கள்:

  • இனியும் காலந்தாழ்த்தாமல் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது சிறிலங்கா குறித்து பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயம் அமைத்து அதன் கீழோ சிறிலங்காவில் வலுக்கட்டாயமாக காணாமலடிக்கப்பட்டோர் குறித்தப் புலனாய்வை நடத்துமாறு வலுக்கட்டாயக் காணாமலடித்தல் தொடர்பான குழுவில் உள்ள அரசுகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையை வலியுறுத்த வேண்டும்.
  • “வலுக்கட்டாயக் காணாமலடித்தலால்இல்லாமற்போதல்” என்ற சிறப்புச் சட்டத் தகுநிலை ஒன்றைத் தோற்றுவிக்கும் படி சர்வதேச சமுதாயம் சிறிலங்காவுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.
  • சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிப் படையினரின் பட்டியலை வெளியிடும் படிசர்வதேச சமுதாயம் சிறிலங்காவுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.
  • சிறைக் காவல் மையங்கள் அனைத்தையும் பன்னாட்டு நோக்கர்களும் சர்வதேச சமுதாய உறுப்பினர்களும் தடையின்றிப் பார்வையிட சிறிலங்கா அனுமதிக்கக் கோருகிறோம்.
  • வலுக்கட்டாயக் காணாமலடித்தல் தொடர்பான குழுவிடம் பாதிப்புற்றவர்கள் நேராக முறையீடுகள் தாக்கல் செய்ய அனுமதிக்கும் வகையில் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் ஒப்பந்தத்தின் 31ஆம் உறுப்பையொட்டிப் பிரகடனம் செய்யும்படி சர்வதேச சமுதாயம் சிறிலங்காவுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.
  • காணாமல் போனவர்கள் அலுவலகத்தில் பன்னாட்டு வல்லுநர்களைச் சேர்த்துக் கொள்ளும்படிசர்வதேச சமுதாயம் சிறிலங்காவுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.
  • அரசாங்கத்தால் சிறை வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலார் “அநேகமாக இறந்து விட்டார்கள்” என்று திரு ரணில் விக்கிரமசிங்கா 2016 சனவரி மாதம் கூறியதைப் புலனாய்வு செய்யும்படி சர்வதேச சமுதாயம் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவைக் கேட்குமாறு வலியுறுத்துகிறோம்.
  • வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டுள்ள அரசுகள் உறுப்பு 32இல் வழிவகை செய்யப்பட்டுள்ள கடப்பாடுகளை சிறிலங்கா நிறைவேற்றத் தவறியிருப்பதைக் கருதிப் பார்க்கும்படி சர்வதேச சமுதாயம் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவைக் கேட்குமாறு வலியுறுத்துகிறோம்.

சிறிலங்கா அரசு பொறுப்புக்கூறலுக்காகப் பெற்றுவரும் காலநீட்டிப்புகளை எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களையும் கட்டமைப்புரீதியான இன அழிப்பு செய்வதற்கே பயன்படுத்தி வருகிறது சிறிலங்கா அரசு. இனியும் காலம் தாழ்த்தாமல் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வது  ஐ.நா. மனித உரிமை ஆணையம் மற்றும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW