தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள்! உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு! கண்டனம்

11 May 2019

 

மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கார்ப்பரேட் அடிமை அரசு

நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான ஈகியர் முதலாமாண்டு நினைவு நாள்!

 

 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் வீரவணக்க நாள் நடத்த பேரா ஃபாத்திமா பாபு அவர்களுக்கு
காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

 

 

250 பேர் மட்டுமே கலந்து கொள்ள அரங்கக் கூட்டத்திற்கு அனுமதி. கடந்த ஆண்டு இதே போல் சிபிஐ (எம்), கூட்டமைப்பு சார்பில் விடுதலைச்சிறுத்தைகள் உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெற்று அஞ்சலிக்கூட்டம் நடத்தினர். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் கூடியவர்களைக் கணக்கிட்டு சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிந்தது.

 

 

கடந்த ஆண்டில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பி.மி.தமிழ்மாந்தன் அனுமதி கோரிய வழக்கில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி, அதுவும் கலந்து கொள்பவர் அனைவரும் காவல்துறையிடம் தாங்கள் கலந்து கொள்ளக் கடிதம் கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

 

 

நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலும் அதே காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளரே, அதிகாரிகளே நீடித்தனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட தோழர் அண்டோ ஹிலரி தேர்தல் அலுவலகம் முன்பு துப்பாக்கிச் சூட்டில் பலியான ஈகியர் படங்களுடன்னே வீரவணக்கம் செலுத்தி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை காவல்துறையால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டது. பரப்புரை வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஈகியர் படங்களுக்கும் காவல்துறை மிரட்டலால் கழட்டப்பட்டது. அச்சக முத்திரை அச்சிடப்படவில்லை எனக் காரணம் காட்டி கணிணி கைப்பற்றப்பட்டு, அச்சக உரிமையாளர் காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்டு அவரிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டது . ஸ்டெர்லைட் எதிர்ப்பு எனும் வாசகங்கள் அச்சிட்டுக் கொடுக்கக் கூடாது என அச்சகத்தினர் வாய்மொழி உத்தரவு மூலம் மிரட்டப்பட்டனர். தேர்தல் பார்வையாளர் மாவட்டக் காவல்துறையின் கட்டற்ற அதிகாரத்திற்குத் துணை போனார்.

ஸ்டெர்லைட் வேதாந்தாவின் கார்ப்பரேட் அதிகாரமே கொடி கட்டிப் பறந்தது.

 

 

தற்போது முதலாமாண்டு நினைவு நாள் அனுமதிகள் தூத்துக்குடியில் மட்டுமல்ல, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் காவல்துறையால் மறுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்திலாவது அனுமதி பெறலாமென்றால் நிபந்தனைகள் வினோதமாக உள்ளது. கார்ப்பரேட் அடிமை அரசால் 15 பேர் படுகொலையான முதலாமாண்டு நினைவு நாளில்கூட நீமன்றமும் அச்சுறுத்தும் வகையில் 250 பேர் மட்டும் அரங்கில் நடத்த அனுமதி அளித்து சனநாய உரிமைகளை கேலிக்குரியதாக்கியுள்ளது.

 

 

பலியான 15 பேரின் நினைவுகளை நெஞ்சிலேந்துவோம். கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் காவடி தூக்கும் எடப்பாடி, ஓபிஎஸ் அரசின், உயர்நீதிமன்றத்தின் சர்வாதிகாரச் செயலுக்கு எதிராகக் கண்டனக் குரலெழுப்புவோம். தூத்துக்குடி மட்டுமல்ல, தமிழ்நாடே ஆர்.எஸ்.எஸ் மோடியின் கார்ப்பரேட்  நலனுக்குச் சேவையாற்றுகிறது.

 

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே  அவரவர் சார்ந்த இயக்கம் சார்பில் மே 22 அன்று துப்பாக்கிச் சூட்டில் பலியான ஈகியர் 15 பேர் படங்களுக்கு  மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவீர்!

 

 

தோழமையுடன்,

மீ.த.பாண்டியன், தலைவர்,

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

பேச: 94431 84051

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW