2014  மோடி அலை உருவாக்கமும் அதன் இன்றைய எதார்த்தமும்….

05 Apr 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 1

 கடந்த 2014 தேர்தலில் இந்திய கார்ப்பரேட் இயக்குனர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (முதல் முறையாக ஒன்றுசேர்ந்து!),நரேந்திர மோடியை ஒரே அரசியல் தலைவராகப் பிரதிநிதித்துவம் செய்தார்கள்.இதில் குஜராத் மாநில கார்ப்பரேட் இயக்குனர்களின் லாபி முதன்மையானது. சுமார் பதினைந்து ஆண்டுகாலமாக குஜராத்  முதல்வராக இருந்த நரேந்திர மோடி, சூறையாடும் முதலாளித்துவ சக்திகளுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தவர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குஜராத் முதலாளித்துவ சக்திகளுக்கு நிதி உதவியோடு பல்வேறு உதவிகளை மேற்கொண்டவர். இதற்கு பிரதிபலனாக கார்ப்பரேட் ஊடகத்தின் வெறித்தனமான பிரச்சார உத்தியின் துணையுடன், குஜராத்  இன அழிப்பு நாயகன்,ஒட்டுமொத்த இந்தியாவிற்கான வளர்ச்சியின் நாயகனாக உருவகப்படுத்தப்பட்டார். குஜராத்  மாநிலத்தை முதலாளித்துவ சக்திகளுக்கு கொள்ளையடிக்க கொடுத்த அனுபவத்தால் இந்திய முதலாளிகளின் மனங்கவர்ந்த அரசியல் தலைவராக  மோடி பரிணமித்தார்.

2008 இல் இருந்து நீண்டு சென்றுகொண்டிருக்கும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை பூமிப் பந்தெங்கும் வலதுசாரி தேசியவாதத்தின் எழுச்சிக்கும் மக்கள்திரள் போராட்ட அலைகளுக்கும் என இரு நேரெதிர் நிகழ்ச்சிப் போக்குகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை உலகமய நிதிமூலதன சக்திகளின் தேவை என்பது ஒரே சந்தை, ஒரே தேசம், ஒற்றையாட்சி என்பதாகும். பல்வேறு தேசிய இனங்கள், மாநில உரிமை, என எல்லாம் புறந்தள்ளப்பட்டு மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி, ஒற்றை சாளர முறையின் வழியாக பெரும்மூலதனக் குவிப்புக்கும் மாபெரும் சந்தைக்கும் வட்டமிடும் வல்லூறுகள் அவை. இந்த வல்லூறுகளுக்கு விருந்து படைப்பதற்கு ஏற்ப இந்தியாவை வடிவமைக்கும் கொள்கை முழக்கத்தை ஏற்கெனவே தன்னகத்தே கொண்டிருப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அந்த முழக்கம்தான் இந்து, இந்தி, இந்துராஷ்டிரம்! ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேசம். இந்த புள்ளியில் காவியும் கார்ப்பரேட்டும் இரண்டற ஒன்று கலக்கின்றன. ஆகவே, மோடி காலத்தில் மிகப்பெரும் பொருளாதார ஆதாயம் அடைந்து வருகிற இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிதி மூலதன சக்திகளுக்கும், ஆர் எஸ் எஸ்-பா.ச.க.வின் சித்தாந்த வகுப்புவாத அரசியல் குறித்த எந்த முரண்பாடும் இருக்கவில்லை.

காங்கிரசு ஆட்சியின் மீதான மக்களின் பத்தாண்டு கால அதிருப்தி,  இந்திய முதலாளிகளின் ஒருமித்த ஆதரவு, நடுத்தர வர்க்கத்தின் புதிய நம்பிக்கையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது, கார்ப்பரேட் ஊடக பிம்ப உருவாக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே ஆர்.எஸ்.எஸ்-பா.ச.க. ஆளுங்கட்சியாக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தது.

பெரும் வகுப்புவாத கலவரமும் முதலாளித்துவ சேவையும் இணைந்த ஆட்சியை  வழங்கிய குஜராத் முதல்வர்,  இந்தியப் பிரதமராக ஒட்டுமொத்த நாட்டையும் குஜராத் பாணியிலான ஆட்சியாக மாற்ற முனைகிறார். இத்தாலி சர்வாதிகாரி முசோலினியின் சொற்களில் சொல்வதென்றால் அரசாட்சியையும் கார்ப்பரேட்டையும் இணைப்பது என்ற கொள்கையின் இந்திய பதிப்பை மோடி மேற்கொண்டு  வருகிறார்.

இந்திய சூறையாடும் முதலாளிகளும் பன்னாட்டு நிதி முதலைகளும் நரேந்திர மோடியைப் பிரதமராக்க பிரச்சாரம் செய்தது முதலாக ஆட்சியில் அமரப் பாடுபட்டதன் ரகசியம் இதுதான்.

ஆர் எஸ் எஸ் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்பின் அரசியல் முன்னணியான,பாரதிய ஜனதா கட்சி,  கடந்த 2014 ஆம் ஆண்டில் மத்தியில்  ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் தொட்டு,மதச் சிறுபான்மையினர்,ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்,பெண்கள்  மற்றும் உழைக்கும் மக்களின் மீதான  தாக்குதல்கள் நாடெங்கிலும் தீவிரமாகி வருகின்றன. ஆர் எஸ் எஸ் – பா.ச.க.வின்  சித்தாந்த நடைமுறை அரசியலானது, பாராளுமன்ற நீதிமன்றத்திற்கு  வெளியே தனது ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைப் படையால் மதச் சிறுபான்மையினர்  மீதும் தலித் மக்கள் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது. 2014-17 ஆண்டுகளில் மட்டுமே 24 இஸ்லாமியர்கள் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக ஜூன் 2017 ரூடர்ஸ்(reutors)பத்திரிக்கை தெரிவிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் ஆகட்டும் அல்லது அண்மையில் நடந்து முடிந்த குஜராத், கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலாகட்டும், ஓர்  இஸ்லாமியரைக் கூட தனது வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு பா.ச.க. தயாராக இல்லை.

மோடி அமித்ஷாவின் கும்பலாட்சியில்  ஒருபுறம், நாட்டு மக்களின் வரிப்பணத்தையும் மூலதனத்தையும் சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடிக்கிற கார்ப்பரேட் கொள்ளையர்களான  நீர்வ மோடி,விஜய் மல்லையா போன்றோர்களும்  மேலும் மேலும் பணக்காரர்களாகின்றனர். இவர்களுக்கு உழைத்தே தேய்ந்து போன சொத்தற்ற உழைக்கும் வர்க்கம், மென்மேலும் ஏழைகளாகின்றனர். \மறுபுறம் ஒட்டுமொத்த நாட்டையே தனது இந்துத்துவ சித்தாந்தத்திற்கு இசைவாக்க பலப்பிரயோகம் செய்து வருகின்றனர்.அதில் நீதிமன்றமும் விதிவிலக்கல்ல! நீதித்துறை என்ற இந்த நிறுவனத்தைப் பாதுகாக்கத் தவறினால் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் போய்விடும்’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் மக்களிடத்தில் முறையிடுவது இதற்கு முன் இந்திய அரசியல் உலகம் கண்டிராத நிகழ்வு.

மோடி – அமித்ஷாவின் கும்பலாட்சியானது நாடாளுமன்றத்தை வெறும் சப்தம் எழுப்புகிற அவையாக மாற்றியது, உச்ச நீதிமன்ற நீதிபதியை குனிய வைத்து நீதிமன்றத்தின் முதுகில் ஏறியது. தேர்தல் ஆணையத்தையும்,மத்திய புலனாய்வு அமைப்பையும் தனது கட்சியின் கிளையாக்கியது. மத்திய ரிசர்வ்  வங்கி,தேசிய புள்ளியில் துறை, மருத்துவ ஆணையம் போன்ற தாராளிய ஜனநாயக நிறுவனங்கள் மீதான முன்னேறித் தாக்கும் போரை நடத்திவருகிறது. அதற்கேற்ப நாட்டின் நிர்வாக அமைப்பை  மையப் படுத்திக்கொண்டது. மாநில உரிமைகளை நசுக்கியது.கட்டுப்படாத மாநில அரசை சிபிஐ மூலமாகவும் ஆளுநர்கள் மூலமாக மிரட்டி குழப்பம் விளைவித்தது.

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே சந்தை, ஒரே கட்சி, ஒற்றையாட்சி என்ற திசையில் நாட்டை இழுத்துச் செல்லும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.கவை. எதிர்ப்பதென்பது இந்துத்துவ அல்லது காவி எதிர்ப்பு மட்டுமல்ல. கார்ப்பரேட் எதிர்ப்பையும் உள்ளடக்கியதுதான். எனவே, பா.ச.க. எதிர்ப்பின் கார்ப்பரேட் எதிர்ப்பு அம்சத்தையும் இணைத்து அரசியல் வெளியில் கருத்துகளைக் கொண்டு சென்று மாற்று அரசியல் களத்திற்கு கருத்தியல் தளத்தில் வலுசேர்ப்பபதே இக்குறு பிரச்சார நூலின்  நோக்கமாகும்.

 

பாலன்,

பொதுச் செயலாளர்  

தமிழ்த் தேச மக்கள் முன்னணி

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW