கடலில் இருந்து வந்த கஜாவை தடுக்க முடியாது! கார்ப்பரேட் கஜாக்களை?
’இந்த அரசு காபந்து பண்னாதுன்னு தெரியும் . இந்த இயற்கையும் இப்படி காபந்து பண்ணாம போயிருச்சே’ என்றாரொரு விவசாயி. என்றைக்கோ கார்ப்பரேட் அரசு தம்மை கைவிட்டு விட்டதென்பதால் இயற்கை கைவிட்டதென்பதுதான் அவர்களது ஆற்றாமை.
”நேற்றுவரை வேளான் நிலமும் தென்னையும் பலாவும் தேக்கும் மாவும் செழிக்கும் நிலமென்றிருந்தீர்கள். இப்போது எல்லாம் அழிந்து போய்விட்டது. இனி ஒ.என்.ஜி.சி. யும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனும் ஜெம் லேபரட்டரிஸ் லிமிடெட்டும் வேதாந்தாவும் அதானியும் ரிலையன்சும் வந்து நிலத்தை கொடுங்கள், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், சேல் கேஸ், பெட்ரோல், நிலக்கரி எடுக்கிறோம் என்று சொன்னால் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று ஒருவரிடம் கேட்டோம். அவர் இந்நாள் விவசாயியும் முன்னாள் தலைமை ஆசிரியரும் ஆவார். ஹைட்ரோகார்பன் எடுப்பெனும் பேரழிவுத் திட்டத்திற்கு எதிராக நிமிந்த நெடுவாசல் அவரது ஊர். அவர் அழுத்தம் திருத்தமாக சொன்னார்: ”இந்த கஜாவால் ஒரு தலைமுறைக்கு இழப்பு. அந்த திட்டங்களால் தலைமுறை தலைமுறைக்கு இழப்பு. மண்ணுக்கு மேலிருந்த மரம், செடி, கொடிகளை சரித்து வீழ்த்தியது கஜா. ஆனால், கார்ப்பரேட் கஜாக்களோ மண்ணையும் மண்ணுக்குள் இருப்பதையும் குதறி எடுத்துப் போகக் கூடியவை. எனவே, எத்தனைமுறை வந்தாலும் சரி கார்ப்பரேட் கஜாக்களுக்கு நெடுவாசல் உள்ளே விடாத வாசல்தான்!” என்றார்.
இயற்கை பேரிடர்களையும் போர்களையும் கார்ப்பரேட்டுகள் முதலீட்டுக்கான வாய்ப்பாக கருதுவதுண்டு. மக்களின் துன்பம், துயரத்தைக் கூட தமக்கு சாதகமாக எப்படி மாற்றிக் கொள்ள முடியும் என்று சிந்திப்பர். அதுதான் காவிரிப் படுகையில் துயர்துடைப்புப் பணிகளில் நடக்கிறது.
தான் காலடி எடுத்து வைத்த இடமெல்லாம் மக்கள் குருதி சிந்தப்படுவதே வாடிக்கையாய் கொண்டது வேதாந்தா குழுமம். ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியாவின் மக்கள் வேதாந்தாவிற்கு எதிரானப் போராட்டத்தில் குருதி சிந்தினர். தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மக்கள் வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியதால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆய்வுக்கு என்று அமைத்தக் குழுவில் தமிழர்கள் இடம்பெறக் கூடாதென ஸ்டெர்லைட் வாதிட்டது. ’ஆமென், ஆமென்’ என செவிசாய்த்தது தீர்ப்பாயம். அனில் அகர்வாலின் ஆலைத் தீமைகள் பற்றி ஆய்வு செய்ய அருண் அகர்வால் வருவாராம். ஆனால், தமிழன் எவனும் அதில் இருந்துவிடக் கூடாதாம். வந்தவனோ தமிழக அரசு ஆலையை மூடியதை குறை கூறி அறிக்கை வைப்பானாம்! மக்கள் சிந்திய குருதி காயும் முன்னே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டுவிடும் போல! தூத்துக்குடியை நாசம் செய்த வேதாந்தா காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்குமாம்! கார்ப்பரேட் களியாட்டம் போடுவதற்காக நம் மண்ணை தாரை வார்த்துவிட்டோமா நாம்?
வேளாண் மண்டலத்தைப் பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து ரிலையன்சுக்கு அழைப்புக் கொடுக்கிறது அரசு. ஏற்கெனவே ஒ.என்.ஜி.சி. வட்டமிடும் கழுகுபோல் காவிரிப் படுகையைப் பாழ்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. சாத்தான் வேதம் ஓதியது போல் பேரழிவுத் திட்டங்களுக்கு சொந்தகாரர்கள் தமது நிறுவனப்பெயரை ஸ்டிக்கராக ஒட்டிக் கொண்டு கஜாப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ’கண்ணீர்’ சிந்தியபடி துயர்தணிப்பு பொருட்களைத் தருகின்றனர்! அந்த கண்ணீர் முதலைக் கண்ணீர் மட்டுமல்ல, முதலைப் பெருக்குவதற்கான கண்ணீர்! அன்னை நிலத்தை பாழ்படுத்த விடோம் என்று வெஞ்சினம் கொள்ளும் மக்களை விலைக்கு வாங்கிவிட முடியுமா? என்ற முயற்சி.
இன்னொருபுறம் சிலைக்கு மூவாயிரம் கோடி ரூபாய் செலவு செய்துவிட்டு கஜாப் புயலால் கலங்கி நிற்கும் மக்களுக்கு முந்நூறு கோடி தருவதாக சொல்லும் வெட்கங்கெட்ட ஆர்.எஸ்.எஸ். கூட்டம் துயர்தணிப்புப் பணி செய்கிறதாம். காவி அரசியலால் கவர்ந்திழுக்க முடியாத மக்களை கஜா புயல் பேரிடரின் போது வென்றெடுக்க முடியுமா? என்று கணக்குப்போடுகிறது.
மத்தியில் ஆட்சி செய்யும் காவிக் கூட்டம் கார்ப்பரேட்களுக்கு நம் நிலத்தைத் தாரை வார்த்துக் கொண்டே உழவர்களுக்கு தூக்கு கயிற்றையும், பூச்சி மருத்தையும் கொடுக்கிறது. கஜாப் புயலோ 12 மாவட்டங்களைப் பதம் பார்த்து போனது. ஆனால், கார்ப்பரேட் கஜாக்களோ தமிழ்நாட்டின் எட்டுத் திக்கும் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது.
ஆற்று மணலை அள்ளக் கூடாதென்றால் அள்ளியவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கூடாதென்றவனை சிறையில் அடைப்பார்கள். விளை நிலங்களில் கெயில் குழாய் பதிக்காதே என்றால் நிலத்துக்கு சொந்தக்கார்களை மிரட்டுவார்கள். கன்னியாகுமரி இணையத்தில் எதற்கு வர்த்தக துறைமுகம் என்று போராடினால் காது கொடுக்க மாட்டார்கள்.
சாகர்மாலா – கடல் மாலையாம்! மாலையென்றால் யார் கழுத்துக்கு மாலை? யார் கழுத்துக்கு சுருக்கு? இத்தனை ஆயிரம் ஆண்டுகளாய் அவர்களைக் கடல் காத்ததும் கடலை அவர்கள் காத்ததுமாக நிலைத்த மீனவனின் வாழ்வுக்கு முடிவுகட்டும் கழுத்துச் சுருக்கு அது. ஓக்கிப் புயலில் காணாமல் போன மீனவர்களுக்காக, நடுக்கடலில் அன்னியப் படையால் சுட்டு வீழத்தப்படும் மீனவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்த நினையாத நரிகளாக சாகர்மாலாவுக்கு எதிரானக் குரலுக்கு காது கொடுத்துவிடப் போகிறார்கள்?
திருமறைக்காட்டில் உட்புகுந்த கஜா தேனிவரை சேதம் செய்து கொண்டே போனது. அந்த தேனியில்தான் நியூட்ரினோ என்ற பெயரில் ஆய்வுக்கூடம் ஒன்றை அமைக்கப் போகிறார்களாம்! பல்லுயிர் சூழல் ததும்பும் மேற்கு தொடர்ச்சி மலையில் இதை செய்யாதே என்று வழக்கு, ப்சுமை தீர்ப்பாயம், நீதிமன்றம் என ஒரு சுற்று சுற்றிவிட்டு கடைசியில் நீதிமன்றம் அனுமதித்துவிட்டது என்று சொல்வார்கள். அதை தாண்டிப் போராடினால் வழக்கு, கைது, சிறை! அதை மீறிப்போராடினால் தடியடி, கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கிச் சூடு. இந்தக் காட்சிகளை எத்தனை முறைப் பார்ப்பது. கூடங்குளத்தில் இரண்டு அணு உலையில் தொடங்கி ஆறு அணு உலைகளுக்கு அடிக்கல் நாட்டும்வரை இந்தப் படலங்கள் நடக்கக் கண்டோம். அடுத்து ஸ்டெர்லைட்! அடுத்து நியூட்ரினோ! அடுத்து சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை.
நீதிமன்றங்கள் நிதி மூலதனத்திற்கான தீர்ப்புதரும் மன்றங்கள்! சட்ட மன்றங்கள் மக்களை சட்டை செய்யாத மன்றங்கள் ! நாடாளுமன்றம் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக கழகம் ஆகியவற்றின் கட்டளைகளை நிறைவேற்றும் அலுவலகம்! காவல்துறை கார்ப்பரேட்களின் ஏவல் துறை! சிறைச்சாலைகள் போராடுபவர்களை அடைத்து வைக்கும் கூடங்கள்! ஊடகங்கள் ஆளும்வர்க்கத்தின் ஊதுகுழல்கள்! மண்ணும் நிலமும் காற்றும் மண்ணுக்கு அடியில் இருக்கும் வளங்களும் கார்ப்பரேட்களின் வயிறு வீங்க இருப்பவை! மக்கள் அவர்களுக்கு உழைப்பை விற்பவர்கள் என்பதைவிட அவர்கள் விற்கும் பொருட்களை வாங்கிப் பணச் சுழற்சிக்கு உதவும் அஃறிணைகள்! இத்தகைய ஆட்சிக்குப் பெயர் நாடாளுமன்ற சனநாயகமாம்!
காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தின் வழி தமிழர் நிலத்தை அழிக்கப் போகும் பேரழிவுத் திட்டங்கள் எனும் கஜாக்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தலானவை. வாத்துகள் இடும் தங்க முட்டைகளை உடைத்துவிடுவது வேறு; ஆனால், முட்டையிடும் வாத்துகளின் வயிற்றைக் கிழிப்பது வேறு. கடலில் இருந்து வந்த கஜாப் புயல் முட்டைகளைத் தான் உடைத்தது! ஆனால், கார்ப்பரேட்களின் கஜாக்கள் வாத்தின் அடிவயிற்றைக் கழிப்பவை. ஆம், தமிழர் நிலத்தை அழிப்பவை. மீட்டெடுக்க முடியாத அழிவை மட்டும் மிச்சம் வைப்பவை.
தமிழகத்தை சுழற்றியடிக்கும் காவி-கார்ப்பரேட் கஜாக்களாம் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராய் எழுந்து நிற்போம்!
தென்னை விழுந்தால் பத்தாண்டுகளில் புதிய ஒன்றை வளர்க்கலாம்!
மண்ணை இழந்தால் எத்தனை ஆண்டுகளானாலும் மீட்க முடியாது!
தமிழர் நிலம், தமிழர் வளம், தமிழர் தன்மானம் காக்க துணிவோம்! அணியமாவோம்! அணி திரள்வோம்!
7 தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே!
– தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம், 9/12/18, மாலை 5 மணி, தஞ்சை
செந்தில், இளந்தமிழகம்
tsk.irtt@gmail.com, 9941931499