மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக் கூடாதாம் – எடப்பாடி அரசின் அட்டூழியம்!

22 Nov 2018

மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக்கூடாதெனவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், தொண்டு நிறுவனங்கள்தான் நிவாரணப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் இடர் மீட்புப் பணிக்கு முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு.

கடந்த ஆறு நாட்கள் திருத்துறைப்பூண்டியில் தங்கி தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள், தமிழ்நாடு மாணவர் இயக்கத் தோழர்கள் பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக உட்புற சிற்றூர்ப் பகுதிகளுக்கான பாதைகளை சீர்செய்தல், நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு வழி அமைத்தல், சுற்றுப் புறத்தே கூலி விவசாயிகள் வாழும் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்த்தல் என பணியாற்றிக் கொண்டுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே அவர்கள் தங்கியிருக்கும் பள்ளியில் இருந்து அவர்களை விரட்டியடிக்க முயன்று வருகிறது தமிழக உளவுத்துறை. அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சென்று மேலே சொன்ன வாக்கியத்தை சொல்லியுள்ளனர். ”மாண்வர்கள் ஏன் இதில் ஈடுபடுகிறார்கள்? தேர்தலில் பங்குபெறும் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் மட்டுமே நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும். மாணவர்கள் ஈடுபட்டால் மக்களை போராட்டத்தில் ஈடுபட வைத்து விடுவார்கள்” என்று சொல்லியுள்ளனர்.

கனமழையில் அல்லும் பகலும் ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மின்கம்பங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் தன்னார்வலர்களும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் வீடு வாசல் இழந்து தெருவில் நின்றுக் கொண்டிருக்கும் பொழுது ’கனமழை பெய்கிறது, பிறகு வருகிறேன்’ என அம்மக்களின் முதல்வர் சொல்வராயின்  பேரிடலும் பேரிடர் இதுவல்லவா? இன்னொரு அமைச்சர் கேள்வி கேட்கும் மக்களைப் பார்த்து ‘விபச்சாரி மகன்’ என்று திட்டுகிறார். இன்னொரு அமைச்சர் மக்களை எதிர்கொள்ள முடியாமல் இரு சக்கர வாகனத்தில் தப்பி ஒடுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக கொத்தமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குற்றவாளிகளைப் கைது செய்து காட்டுமிராண்டித்தனத்தை நிகழ்த்தியது அரசு. ’எதிர்க்கட்சிகள் போராட்டத்தைத் தூண்டி விடுகின்றன, இயக்கங்கள் மக்களைப் போராடச் சொல்கின்றன’ என்று பழிபோடும் பரப்புரையை இந்நேரத்திலும் செய்வார்களாயின் இந்த ஆட்சியாளர்களை நம்பி இருந்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமாகிவிடும்?

இப்படிப்பட்ட நிலையில் அரசு இயந்திரத்திற்கு வெளியே மக்களே தம்மை தாம் மீட்டுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தானே, வர்தா, சென்னைப் பெருவெள்ளம், வறட்சி போன்ற இடருக்கெல்லாம் மத்திய அரசு சில நூறு கோடிகளைத் தாண்டி பணம் தந்ததில்லை. நீரவ் மோடிகளும் மல்லையாக்களும் மெகுல் சோக்சிகளும் அம்பானிகளும் பல்லாயிரம் கோடிகள் கடன் வாங்கி தூர தேசத்திற்கு தப்பி ஓடிவிடுவார்கள். ஆனால், தென்னை மரங்கள் சாய்ந்த சோகத்தில் இருந்தும் வாங்கிய கடனிலும் மீள முடியாத ஏழை விவசாயி அரசு, அரசமைப்பு சட்டம், கட்சிகள், இயக்கங்கள், கடவுள், மதங்கள் என எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையற்றவனாய் தற்கொலை செய்து கொள்கிறான். நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது!

இந்நேரத்தில் மாணவர்களா, இயக்கமா, கட்சியா, தொண்டு நிறுவனமா என இடர் மீட்பில் இருப்போரை இனம் பிரிப்பது நிலைமையை மேலும் குழப்பி அதில் மீன் பிடிக்க முயல்வதாகும். இது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் இந்த திருகல் போக்கை சனநாயக ஆற்றல்கள் கண்டிக்க முன்வர வேண்டும். களத்தில் நிற்கும் ஊடகங்கள் இதை அம்பலப்படுத்த வேண்டும்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர்

செல்வம் தேய்க்கும் படை

 

-செய்து குழு , மக்கள் முன்னணி ஊடகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW