பாசிச மோடி அரசும் தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்
தமிழகத்தில் கடந்த ஒருமாத காலத்தில் பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள், மின்சாரவாரிய தொழிலாளர்கள் போராட்டம், ஓரகடத்தில் MSI, ராயல் என்பீல்ட், யமஹா ஆலைத் தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, நிரந்தர வேலை, குறைந்தபட்ச ஊதியம் என பல்வேறு கோரிக்கைகளுக்காக ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனபோதும் இதுநாள் வரையிலும் இப்போரட்டத்திற்கான தீர்வு எட்டப்படவில்லை. இந்த சூழலில், தொழிலாளர் போராட்டங்கள் தற்போது தீவிரமாகிவருவதன் பின்னணி என்ன? இந்திய சட்டங்கள் வழங்கிய குறைந்தபட்ச தொழிலாளர் நல சட்டப் பாதுகாப்பை அமல்படுத்துவதில் அரசே முரண்பட்டு நிற்பதேன்? மென் மேலும் தொழிலாளர் சட்டங்களில் என்னென்ன திருத்தங்களை அரசு மேற்கொண்டுவருகிறது என்பதை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் தொட்டு நாடெங்கிலும் மதச் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், விவசாயிகள், பெண்கள் மற்றும் உழைக்கும் மக்களின் மீதான தாக்குதல்கள் தீவிரமாகி வருகின்றன. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் பொருளாதாரக் கொள்கையானது முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கொள்கையைப் போலவே உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பையும் கனிம வளத்தையும் சூறையாடுகிற தாராளமய-தனியார்மய முதலாளித்துவ நலனுக்கு சேவை செய்கிறது. மறுபுறம் இந்துத்துவ வகுப்புவாத சித்தாந்தத்தை அதிகாரத் துணையுடன் செயல்முறையாக்க முனைகிறது. இவ்வாறு முதலாளித்துவ வர்க்கசார்பு கொள்கையையும் இந்துத்துவ வகுப்புவாத கலவர சித்தாந்த கொள்கையும் ஒன்றாக இணைப்பது மோடி ஆட்சியின் தற்போதைய செயல்போக்காக உள்ளது.
கடந்த 2002-07 ஆம் ஆண்டில் பெரும் வகுப்புவாத கலவரத்தையும் முதலாளித்துவ சேவையையும் இணைந்த ஆட்சியை வழங்கிய குஜராத் முதல்வர் இன்று இந்தியப் பிரதமராக ஒட்டுமொத்த நாட்டையும் குஜாரத் பாணியிலான ஆட்சியாக மாற்ற முனைகிறார். இத்தாலி சர்வாதிகாரி முசோலினியில் சொற்களின் சொல்வதென்றால் ‘அரசாட்சியையும் கார்பரேட்டையும் இணைப்பது’ என்ற கொள்கையின் இந்திய பதிப்பை மோடி மேற்கொண்டு வருகிறார். சூறையாடும் இந்திய முதலாளிகளும் (குறிப்பாக பார்ப்பன, பனியா சமூகத்து முதலாளிகள்) பன்னாட்டு நிதி முதலைகளும் நரேந்திர மோடியைப் பிரதமராக்க பிரச்சாரம் செய்தது முதலாக ஆட்சியில் அமர பாடுபட்டதன் ரகசியம் இதுதான்.
மோடி அமித்ஷாவின் கும்பலாட்சியில் ஒருபுறம், நாட்டு மக்களின் வரிப்பணத்தையும் மூலதனத்தையும் சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடிக்கிற கார்ப்பரேட் கொள்ளையர்களான நீரவ் மோடி, விஜய் மல்லையாக்களும் மேலும் மேலும் பணக்காரர்களாகின்றனர். இவர்களுக்கு உழைத்தே தேய்ந்த போன சொத்தற்ற உழைக்கும் வர்க்கம், மென் மேலும் ஏழைகளாக வறியவர்களாகின்றனர். மறுபுறம் ஒட்டுமொத்த நாட்டையே தனது இந்துத்துவமயமாக்கிறார்கள். அதில் நீதிமன்றமும் விதி விலக்கல்ல! ‘நீதித்துறை என்ற இந்த நிறுவனத்தைப் பாதுகாக்கத் தவறினால் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் போய்விடும்’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மக்களிடத்தில் முறையிடுவது இதற்குமுன் இந்திய அரசியல் உலகம் கண்டிராத நிகழ்வு.
கடந்த காலங்களில் மூலதன முதலைகளுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்ற பல அரசியல், பொருளியல் உரிமைகளை காங்கிரசை விஞ்சுகிற வகையில் தற்போது மோடி அரசு வேகமாகப் பறித்து வருகிறது.
உழைப்பாளர்களின் ஊதியமற்ற உழைப்பின் (உபரி மதிப்பு) மதிப்பை ஆலை முதலாளிகள் பெறுவதற்கு தடையாக இருக்கிற அனைத்து தொழிற்சாலை சட்டங்களிலும் வேகமாக திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர் விரோத கொள்கைக்கு சற்றும் சலைக்காத காங்கிரஸ் உள்ளிட்ட இதர முதலாளிய ஆதரவு கட்சியின் ஆதரவுடன் பல தொழிலாளர் விரோத சரத்துகளை மாற்றிவருகிறது. 1948 தொழிற்சாலை சட்டம்,.அப்ரண்டீஸ் சட்டம் 1961, 1988 சட்டங்களை ஏற்கனவே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்துவிட்டது. இதுபோக, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்திலும் அபாயகரமான மாற்றங்களை மேற்கொண்டுவருகிறது.
தொழிற்சாலை சட்டம் – 1948
இந்தச் சட்டத்தின்படி, தொழிலாளர் சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்கு குறைந்தபட்சமாக மின்னூக்கி (Electricity Driven) ஆலையாக இருந்தால் 10 தொழிலாளர்களும், இல்லாவிட்டால் 20 தொழிலாளர்களும் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற வரைமுறை இருந்தது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆலைகள் 1948 சட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர் உரிமைகளையும் வழங்க வேண்டும். ஆனால் இந்த தொழிலாளர் வரைமுறை தற்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மின்னூக்கி ஆலையாக இருந்தால் 20 தொழிலாளர்களும், இல்லாவிட்டால் 40 தொழிலாளர்களும் கட்டாயம் இருக்க வேண்டும் என திருத்தப் பட்டுள்ளது. பழைய சரத்து நடைமுறையில் இருக்கும் போதே ஐம்பது தொழிலாளர்கள் வேலை பார்க்கிற பணியிடங்களில் வெறும் பத்து தொழிலாளர்கள் என வருகைப் பதிவேட்டு ஆவணத்தில் பதியப்பட்டு நலன் பறிக்கப்பட்டது. தற்போது சொல்லவே வேண்டாம்!
பழைய சட்டத்தின்படி பெண் தொழிலாளர்கள் மாலை 7 மணி முதலாக காலை 6 மணி வரையிலும் ஆலைகளில் பணி செய்வதற்கும் ஆபத்தான பணிகளில் வேலை செய்வதும் தடை செய்திருந்தது. தற்போது எத்தனை நேரம் வரையிலும் வேலை பார்க்கலாம் எனவும் எந்த ஆபத்து சூழலிலும் பணி புரியலாம் என வெக்கமற்ற வகையில் சட்டத்தை திருத்தியுள்ளது.
மேற்குறிப்பிட்டதெல்லாம் மேற்பார்வைக்கு தெரிகிற சிறிய பனி முகடு மட்டும்தான். இந்த அரசு மேற்கொண்டுவருகிற சட்டத்திருத்தமோ எண்ணற்றவை. குறிப்பாக,
- 44 மத்திய தொழிலாளர் சட்டங்களை நான்கு வகையினமாக சுருக்குவது.
- பொது வேலை நிறுத்த முன்அறிவிப்பு காலக்கெடுவை 14 நாட்களில் இருந்து 44 நாட்களாக உயர்த்துவது
- இதுபோல தொழிலாலாளர் வேலை நேரத்தையும் தற்போது 12 மணி நேரமாக உயர்த்தியுள்ளது
- தொழிற்சங்க பதிவு, ஆவணங்கள் பராமரிப்பில் சிறு தவறு இருப்பினும் சங்கப் பதிவை ரத்து செய்வது
- முன்பு நூறு தொழிலாளர்களுக்கு குறைவான ஆலைகளில், தொழிலாளர் பணி நீக்கத்திற்கு அரசு அனுமதி தேவையில்லை என்ற விதி இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையை முன்னூறுக்கும் குறைவான தொழிற்சாலை என திருத்த உள்ளார்கள்.
- ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கையை உயர்த்துவது
என பட்டியில் நீள்கிறது.
மேற்குறிப்பிட்ட அனைத்து சட்டத்திருத்தங்களும் பாராளுமன்றத்தில் ஒப்புதல் ஆவதற்கு முன்பாகவே பாஜக ஆட்சி செய்கிற ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அம்மாநில சட்டமன்ற ஒப்புதலின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் இம்மாதிரியான தொழிலாளர் விரோத சட்டத்திருத்த நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறையை பொதுச் சேவை பிரிவில் கொண்டுவந்தது. உத்திரகாண்டில் ஆலை முதலாளிகளே தொழிலாளர் சட்ட நடைமுறை ஆவணங்களை சொந்தமாகச் சான்றளித்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தோழர்களே ! நாம் முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் உள்ளோம். 1917 ஆம் ஆண்டில் சோவியத் ரஷ்யாவின் பாட்டாளி வர்க்க புரட்சியின் பலனாக தொழிலாளர்களுக்கென ஒரு நாட்டை முதல் முறையாக பெற்றோம். ரஷ்யாவில் எழுந்த இந்த கோடிக் கால் பூதத்தை கண்டு அஞ்சு நடுங்கிய ஏகாதிபத்திய நாடுகள், தம் நாட்டில் பாட்டாளி வர்க்க உணர்வை மட்டுப்படுத்தும் விதமாக தொழிலாளர்களுக்குப் பல சலுகைகளைக் கொடுத்து பணிந்துகொண்டு தன்னை காப்பாற்றிக் கொண்டது. இந்த அனுபவத்திலேயே இந்தியாவில் தொழிற்சங்க சட்டம் -1926 , கூலி சட்டம்-1936, வேலை வாய்ப்பு சட்டம்-1947, ஆலை சட்டம் – 1948 என பல சட்டப்பூர்வ உரிமைகளை தொழிலாளர்கள் பெற்றார்கள்.
(தாராளமய பொருளியல் கொள்கை அமாலாக்கத்திற்கு முன்பான காலகட்டத்தில் நிலவிய) சேநல அரசுகளின் (Welfare state) கீழ் உறுதிப்படுத்தப் பட்டிருந்த பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், சட்டங்கள் யாவும் தற்போதைய தாராளமய கொள்கை திணிப்பால் ஒவ்வொன்றாக வேகமாக பறிக்கப்பட்டு வருவதாலும், ஆளும்கட்சியாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசானது ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பலிடம் அடிமைப்பட்டு “அரசியல்” சுயாதினமற்று அரசுகளாக செயல்படுவதாலும் இந்நாடுகளின் பெரும் மக்கள் தொகையினர் , வேலைவாய்ப்பின்மையாலும், வறுமையாலும் சமூகப் பாதுகாப்பற்ற விளிம்பு நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சமூகப் முரண்பாடுகள் பொருளியில் அடித்தளத்தில் கூர்மையடைந்துவருகிற நிலையில், இந்துத்துவ பாசிச சக்திகள் வகுப்புவாத கலவரத்தின் வழியேவும், அதீத தேசியவாத கூச்சலின் வழியேவும் வர்க்க விழிப்புணர்வை சிதறடிக்கிற அடிப்படைவாத அரசியலில் தேர்ச்சியுடன் கையாண்டு வருகிறார்கள். இதனால்தான் முதலாளித்துவத்திற்கு மிகவும் உகந்த (ஒப்பீடளவில்)ஆளும்கட்சியாக பாஜக உள்ளது.
இந்தியாவின் மோடி அரசும் சூறையாடும் முதலாளிகளும் தொழிலாளர்களின் போராட்ட உணர்வையும் ஒற்றுமை உணர்வையும் வகுப்புவாத, இனவாத, சாதிவாத மோதல்களின் வழியாகவும், அதன் தொழிற்சங்க கைகூலிகளின் வழியாகவும் திசை திருப்புகிறார்கள். தொழிலாளர்கள் மீது மோடி அரசு தொடுத்துள்ள போரானது ஒட்டுமொத்த சமூகத்தின் மீது தொடக்கப்பட்ட போரின் ஓர் அங்கமாகும். நமது நகரப்புற இளைஞர்களோ, வேலை வாய்ப்பில்லாமல் திண்டாடுகிறார்கள், கிராமத்திலோ பேரழிவுத் திட்டங்கள், இயற்கை வளக் கொள்ளை என தமிழகத்தை வேட்டைக் காடாக மாற்றியுள்ளார்கள்.
இத்தனை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கடந்த ஓராண்டுகளில் பேருந்து தொழிலாளர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம், மின்சார வாரிய தொழிலாளர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், விவசாயிகளின் போராட்டம், மாணவ இளைஞர்கள் போராட்டம், மதச் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டு மக்களின் போராட்டம் தீவிரமாகி வருகிறது. உழைப்பு சுரண்டல், இயற்கை வளச் சுரண்டலுக்கு எதிரான அத்தனை போராட்டங்களுக்கும் துணை நிற்ப்போம்! கரம் கோர்த்துப் போராடுவோம்! உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை ஓங்கட்டும்!
-அருண் நெடுஞ்செழியன்