செப்டம்பர் 12 ஈகியர் நினைவு நிகழ்ச்சியைத் தடுக்க தோழர்கள் சித்தானந்தம், ரமணி, இராமசந்திரன், வேடியப்பன் சிறையிலடைப்பு!

10 Sep 2018

எடுபிடி தமிழக அரசுக்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ-மா)வின் கண்டனம்!

தமிழக மக்களே! அடக்குமுறையைத் தூள் தூளாக்க ஈகியர்களின் நினைவோடு உறுதியேற்போம்!

செப்டம்பர் 12 அன்று நக்சல்பாரி கம்யூனிஸ்ட் ஈகியர் அப்பு, பாலன் நினைவிடம் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாயில் ஆண்டுதோறும் ஈகியர் நினைவு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ.(எம்-எல்) மாநிலக் குழு உறுப்பினரும் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவருமான தோழர் சித்தானந்தம், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ-மா) வின் உறுப்பினரும் சாதி ஒழிப்பு முன்னணியின்  பொதுச்செயலாளருமான நாய்க்கன்கொட்டாய் நத்தம் கிராமத்தைச்  சேர்ந்த தோழர்  ரமணி   மற்றும் தோழர்கள் பூதிப்பட்டி இராமச்சந்திரன், வேடியப்பன் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கான பரப்புரையில்  ஈடுபட்டிருந்த போது  இன்று தருமபுரி காவல்துறையால் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது  188, 143 மற்றும் 7(1) (a) CLA ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

தோழர் அப்பு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் கோவைப் பகுதியில் தொழிற்சங்க தலைவராகத் திகழ்ந்தவர். பிறகு நக்சல்பாரி இயக்கம் உருவான பொழுது ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்களின் விடுதலைக்கு நக்சல்பாரி அரசியலே தீர்வென அதற்கு தலைமை ஏற்று தமிழகத்தில் மார்க்சிய லெனினிய இயக்கத்தைக் கட்டியமைத்தவர். அவ்வியக்கம் உருவான 1967 இல் இருந்து 70 வரை தலைமை தாங்கிய தோழர் அப்பு 1970 ஆவது ஆண்டு தமிழக அரசால் கைது செய்யப்பட்டு   படுகொலை செய்யப்பட்டார். இன்றுவரை அவரைத் தமிழக அரசு தேடப்படுவோர் பட்டியலில் வைத்திருக்கிறது.

தோழர் பாலன் 1970 களின் மத்தியில் இருந்து தருமபுரி விவசாய இயக்கத்தைக் கட்டியமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர். சாதி தீண்டாமைக்கு எதிராகவும் கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராகவும் உள்ளூர் பண்ணையாதிக்க சக்திகளுக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி மக்கள் நீதிமன்றங்களில் மக்கள் விரோதிகளுக்கு பாடம் புகட்டியவர். மார்க்சிய லெனினிய இயக்கத்தைக் குறுங்குழுவாத தன்மையில் இருந்து விடுவித்து ஒரு வெகுசனப் பாதையில் முன்னெடுத்துச் சென்றதில் முன்னோடியாக இருந்தவர். நக்சல்பாரி வெகுசனத் தன்மையைப் பெற்று ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி வந்த பொழுது அச்சமடைந்த அன்றைய எம்.ஜி.ஆர் அரசு 1980 இல் பட்டப்பகலில் ஒரு பொதுக்கூட்டத்தில் தோழர் பாலனைக் கைது செய்து கடும்சித்திரவதைக்குப் பிறகு அவரைப் படுகொலை செய்தது. அவர் உடலைத் தந்தால் தருமபுரி கிராமங்கள் எங்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அணி திரள்வார்கள் என்ற அச்சத்தில் அவர் சாம்பலைத் தான் தந்தது.

 

இவ்விரு ஈகியரும் செப்டம்பர் மாதத்தில் தமிழக அரசால் படுகொலை செய்யப்பட்டவர்கள். தோழர் அப்பு  கட்சியை நிறுவிய தலைவர், தோழர் பாலன் வெகுசனப் பாதையில் கட்சியை வழிநடத்தியவர். இந்த இரண்டு ஈகியருடைய நினைவைப் போற்றும் வகையில் இரண்டு பேரின் சிலைகளை அமைத்து 1984 இல் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்று நினைவிடம் திறக்கப்பட்டது. அந்த நினைவிடத்தில் தருமபுரி வட ஆற்காட்டில் படுகொலை செய்யப்பட்ட 25 க்கும் மேற்பட்ட நக்சல்பாரி  ஈகியருக்கும்  தென்னாற்காட்டில் ஈகியரான தோழர்கள் சர்ச்சில், கணேசன், காளியப்பன் ஆகியோருக்கும் 1980 களின் பிற்பாதியில் படுகொலை செய்யப்பட்ட தோழர் தமிழரசன் உள்ளிட்ட ஈகியருக்கும், தோழர் மச்சக்காளை உள்ளிட்ட பிற பகுதி நக்சல்பாரி ஈகியருக்கும் நினைவுகூறும் நாளாக செப்டம்பர் 12 அன்று நினைவேந்தல் நிகழ்வு நடந்துவருகிறது.

அப்பு, பாலன் நினைவு நாளாக கடைபிடிக்கத் தொடங்கி, ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும்,  சாதி ஒழிப்புக்கும், பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகவும் போராடி உயிர்விட்ட ஒட்டுமொத்த நக்சல்பாரி ஈகியருக்குமான மாதமாக செப்டம்பர் ஈகியர் மாதம் உருப்பெற்றுவந்தது.  நக்சல்பாரி இயக்கம் கடுமையான அடக்குமுறையைச் சந்தித்து பல தோழர்கள் இன்னுயிர் நீத்தப் பின்னர் அவர்களுடைய நினைவைப் போற்ற வேண்டும் என்ற நோக்கில் விடுதலையின் குறியீடாக புரட்சியின் நம்பிக்கையாக அந்த மாபெரும் தலைவர்களை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சிலையாக நிறுவிக் கொண்டாடினார்கள். எம்.ஜி.ஆர். – வால்டர் தேவாரம் நரவேட்டை ஆடிய அந்தக் காலகட்டத்தில் அடக்குமுறைக்கு அஞ்சாமல் ஏழை,எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் சிறு கரங்களால் தாங்கள் உழைத்து சேர்த்த காசால் அந்த சிலைகளை நிறுவினார்கள். ஆனால், இன்று ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழித்து மக்கள் விரோதிகளுக்கு சிலையமைக்கும் இந்த அரசு அப்பு, பாலன் சிலையை நிறுவிய காலத்தில் இருந்தே அச்சத்துடன்தான் பார்த்து வருகிறது. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பல்வேறு தடைகளைத் தாண்டிதான் ஒவ்வொரு ஆண்டு நினைவு நிகழ்வும் நடந்துவந்திருக்கிறது.  இன்றைக்கு சாதி ஆதிக்க வன்முறையின் களமாக, உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கான கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும் அந்த மண்ணிலே நக்சல்பாரி அரசியல் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சாதித்துக் காட்டியது. அந்த மகத்தான வரலாற்றின் கருவிகளாக அங்கு மக்களோடு நின்ற இந்த தலைவர்கள் சாதிகள் கடந்து உழைக்கும் மக்களின் தலைவர்களாக மக்களின் நெஞ்சங்களில் இருக்கிறார்கள்.

 

2012 ஆம் ஆண்டு சாதி ஆதிக்க வன்முறையாக தருமபுரி நாய்க்கன்கொட்டாயில் உள்ள நத்தம் காலனியில் நடந்த தீ வைப்பு சம்பவங்களின் போதே இந்த சிலைகளைத் தகர்த்துவிடலாம் என மக்கள் விரோதிகள் கங்கணம் கட்டினார்கள். ஆனால், அதையும் மீறி மக்கள் அந்த சிலைகளைப் பாதுகாத்து நின்றார்கள். இந்த சூழலில்தான் இப்போது புதியதாக அந்த சிலையிருக்கும் பட்டா நிலம் புறம்போக்கில் இருக்கிறதென சொல்லி அரசும் அதனுள்ளூர் கைக்கூலிகளும் சிலையை அகற்றிவிடலாம் எனத் துடித்தார்கள். இந்த மக்கள் தலைவர்களின் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் எம்.எல். இயக்கங்கள் ஒருங்கிணைந்து சனநாயக சக்திகளையும் பங்குபெறச் செய்து  இந்த ஆண்டு செப்டம்பர் 12 அன்று ஈகியர் நினைவு நாளைப் பெருந்திரள் நிகழ்வாக நடத்திட  கூட்டியக்கம் கண்டது. இந்நிகழ்வுக்கு உள்ளூர் காவல் துறையிடம் வாய்மொழி அனுமதியும் பெற்றிருந்தது.  அதற்கானப்  பல்வேறு பரப்புரைகளை அக்கூட்டியக்கத்தின் தோழர்கள் மேற்கொண்டு  வந்தனர்.   ஆனால், காவல் துறையும் மக்கள் விரோத அரசும் இந்நிகழ்வை இறுதி நேரத்தில் தடுப்பதற்காக திட்டம் தீட்டியிருக்கிறது. அந்த திட்டத்தின் பகுதியாகத் தான்,  சி.பி.ஐ.(எம்-எல்) மாநிலக் குழு உறுப்பினரும் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவருமான தோழர் சித்தானந்தம், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ-மா) வின் உறுப்பினரும் சாதி ஒழிப்பு முன்னணியின்  பொதுச்செயலாளருமான நாய்க்கன்கொட்டாய் நத்தம் கிராமத்தைச்  சேர்ந்த தோழர்  ரமணி   மற்றும் தோழர்கள் பூதிப்பட்டி இராமச்சந்திரன், வேடியப்பன் ஆகியோர் இன்று பரப்புரையின் போது தருமபுரி காவல்துறையால் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

தோழர் அப்புவின் உடலை மறைத்தவர்கள், தோழர் பாலனின் உடலைத் தர மறுத்து சாம்பலைக் கொடுத்தவர்கள் இன்றைக்கு அவர்களின் நினைவு நாள் கடைபிடிக்கப்படுவதைக்கூட கண்டு அச்சம் கொள்கிறார்கள். காவிப் பாசிஸ்டுகளும் அவர்களின் தமிழக அடிமைகளும் ஆட்சிக் கட்டிலில் இருக்கின்ற நிலையில் இன்றைக்கு இந்தியாவெங்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை ‘நீங்களும் நக்சலைட்கள்’ என அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில் ஊபா(UAPA) போன்ற கருப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கானோரைக் கைதுசெய்து கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கைதையும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்க்காத விதமாக அவர்களுடைய ஒவ்வொரு அடக்குமுறை நடவடிக்கையும் பெரும் மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

 

”நானும் நகர்ப்புற நக்சல்தான்” என  கலைஞர்களையும் படைப்பாளிகளையும் முகநூலில் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் பேச வைத்திருக்கிறது. தொடரும் இந்த அடக்குமுறை ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தால் முறியடிக்கப்பட வேண்டும். எழுந்திருக்கின்ற நகர்ப்புற நக்சல்கள் இந்த உண்மையான நக்சல்பாரி கம்யூனிஸ்ட் ஈகியர்களின் கனவை சமூகத்தின் கனவாக மாற்ற வேண்டும் . காவி – கார்ப்பரேட் சர்வாதிகார அரசின் அடக்குமுறைகளைத் தூள்தூளாக்க வேண்டும்.  சனநாயக சக்திகள் ஒன்றுபட்டு நின்று அடக்குமுறையை முறியடிக்க வேண்டும். இக்கைது நடவடிக்கையை சனநாயக சக்திகள், மனித உரிமை ஆற்றல்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

மக்கள் தங்கள் எளிய கரங்களால், சிறிய காசுகளால் ஆயிரக்கணக்கான சிலைகளை சிவப்பு ஈகியருக்கு நாடெங்கும் நிறுவி இருக்கிறார்கள் .எழுகின்ற பாசிச எதிர்ப்பு வெகுமக்கள் இயக்கமும் பாசிஸ்டுகளின் கொடுங்கனவைக் குழி தோண்டிப் புதைத்து அந்தக் கல்லறையின் மேல் நம் ஈகிகளின் பதாகைகளைப் பறக்கவிட வேண்டும்.

 

செட்பம்பர் 12 – நக்சல்பாரி கம்யூனிஸ்ட்  ஈகியர் நினைவு நீடூழி வாழ்க! ஈகியர் கனவை நனவாக்குவோம்!

 

தோழமையுடன்

பாலன், பொதுச் செயலாளர்,

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ-மா)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW