13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு! தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்!

13 Aug 2018

” பாரதீய சனதா 4 1/2 ஆண்டு கால ஆட்சியில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ” எனும் தலைப்பில் 09-08-18 அன்று காவல்துறை அனுமதித்துள்ள இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட அமைப்பாளர் தோழர் தொ.ஆரோக்கியமேரி மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் அனுமதி விண்ணப்பம் அளித்திருக்கிறார். தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி எட்டாம் தேதி இறுதி நிகழ்வு. எனவே 9ஆம் தேதி பொதுக்கூட்டத்தை தள்ளி வைக்க காவல்துறையும் கோர, சூழல் கருதி கூட்டம் 13-08-18 அன்று நடத்த மீண்டும் அனுமதி விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், பொதுச்செயலாளர் தோழர் பாலன், தலைமைக்குழுத் தோழர் விநாயகம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் தோழர் கே.எம்.சரீப், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தூத்துக்குடி பி.மி.தமிழ்மாந்தன் ஆகியோர் கலந்து கொள்வதாக துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் பரப்புரை இயக்கம் நடத்தப்பட்டது. முதல் நாளிரவு 9-30 மணிக்கு காவல்நிலையத்திலிருந்து காவலர் மூலம் அனுமதி மறுக்கப்பட்டதாக கடிதம் வழங்குகிறது. மதுரை மாநகர் திலகர் திடல் சரக காவல் உதவி ஆணையர் கையொப்பமிட்ட கடிதத்தில்….. ” மதுரை மாநகரில் தாங்கள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டிருக்கும் பகுதியானது முக்கிய சாலையாக உள்ளதாலும், உங்களது அமைப்பு பதிவு செய்யப்படாத அமைப்பாக உள்ளதாலும், அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளதாலும், பல அமைப்பை சார்ந்தவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாலும், மேலும் தாங்கள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியுள்ள பகுதியானது அதிகமான வாகனங்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளதாலும் வணிக வளாகங்கள், வியாபார ஸ்தலங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதாலும், எனவே பொதுமக்கள் நலன் கருதியும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும், தங்களுக்கு 13-08-18ம் தேதி மாலை 19.00 மணிக்கு பெத்தானியாபுரம் குரு தியேட்டர் எதிரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தோழர்களே! அனுமதி கேட்கப்பட்ட இடம் கரிமேடு காவல்நிலையத்திற்குக் கீழ் பொதுக்கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வரும் பகுதி. பதிவு செய்யப்படாத அமைப்பாம்! பதிவு செய்யப்பட்ட த.ம.ச.க. காரைக்குடி கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே! விதி ஏதும் உள்ளதா? அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்பதா? இது என்ன கதை! கருத்துரிமையைப் பறிக்கும், சனநாயத்தின் குரல்வலையை நெறிக்கும் மோடியின் எடுபிடி, எடப்பாடி அரசின் காவல்துறையை தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்! அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஆட்சியாக நடப்பது நீடிக்கக் கூடாது. போராடும் இயக்கங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பைக் கட்டமைப்போம்!

RELATED POST
1 comments
  1. அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பும்க, ண்டனம் தெரிவிக்கும் சனநாயகக் கருத்துரிமைப் பறிப்பை எதிர்கொள்வோம் !

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW