மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்!

ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து உரையாற்றியதற்காக, கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் நேற்று கைது செய்யப்பட்டு, இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 14 பேருக்கு வீரவணக்கக் கூட்டம் நடத்த வேண்டுமென்றால் கூட உயர்நீதிமன்ற அனுமதி பெற வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் வேல்முருகன் விமானநிலையத்திலேயே கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆறு பேர் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது. எட்டுவழிச்சாலைக்கு எதிரான கருத்துச் சொல்லும் சனநாயக உரிமை பறிக்கப்பட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு, தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. நடைப்பயணம் தொடங்கிய சிபிஐ-எம் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் எமது தமிழ்த்தேச மக்கள் முன்னணி பரப்புரை இயக்கப் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறை தற்போது அனுமதி மறுத்துள்ளது. தற்போது வெளிநாட்டில், ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் பேசியதற்காக தோழர் திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கடந்த ஆண்டு குண்டர் சட்டம் போட்ட அரசு, தற்போது தேசத்துரோக வழக்குப் போடுகிறது. தமிழ்நாட்டில் நிலவும் அரசு அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் இயக்கங்கள் ஓரணியில் திரள தமிழ்த்தேச மக்கள் முன்னணி, அடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறைகூவல் விடுக்கிறது
10.08.18