எடப்பாடி அரசின் பச்சை படுகொலைகளை கண்டித்து சாலை மறியல் செய்து சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி, இளந்தமிழகம் இயக்க தோழர்களை உடனடியாக விடுதலை செய் !
பாலன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி
கடந்த 100 நாட்களாக அமைதியான வழியில் மக்களின் வாழ்வை, சுற்றுசூழலை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சமரசமற்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்து போராடி வந்தனர். ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நடக்கிறது என்றும், தமிழக அரசு ‘போராடும் மக்களோடு தான் இருக்கிறது’, சட்ட ரீதியாக ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்றும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு இருந்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது என்று ஆணவத்தோடு பேசிவந்தார். அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை அதன் விரிவாக்க பணியை ரகசியமாக நடத்திக்கொண்டு இருக்க, ஸ்டெர்லைட் ஆலையை மூடியே தீரவேண்டும் என்பது தூத்துக்குடி மக்களின் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் ஒன்று கலந்ததாக மாறி இருந்தது. தங்கள் மண்ணை காக்க, எதிர்கால சந்ததியின் வாழ்வை காக்க எந்த தியாகத்தையும் செய்ய, சமரசமற்ற போராட்டத்தை நடத்தத் தயாராக இருந்தனர். இந்த நிலையில் 22 மே, செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.
ஸ்டெர்லைட் நிர்வாகத்தோடு கைகோர்த்துக்கொண்ட தமிழக அரசு, கார்பொரேட்களுக்கு எதிரான தமிழ்நாட்டுக்கே முன்னுதாரணமாக இருந்த தூத்துக்குடி மக்களின் எழுச்சிமிக்க போராட்டத்தை கூடங்குளம்,ஜல்லிக்கட்டு போராட்டங்களை எப்படி காவல்துறையை ஏவிவிட்டு வன்முறைமூலம் முடித்ததோ அதே போன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தையும் முடிக்க நினைத்தது. செவ்வாய்க்கிழமை காலை ஆயிரக்கணக்கான மக்கள் மாதாகோயிலில் கூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல ஆரம்பித்தனர். ஆயிரக்கணக்கான காவல்துறையினரை இறக்கி விட்டு மக்களின் பேரணியை தடுக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு தடையையும் உடைத்து மக்கள் முன்னேறினர். மக்கள் பேரணியை தடுக்க முடியாத தடுக்க முடியாத தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது. வண்டிகளுக்கு தீ வைத்தல்,குடியிருப்புகளுக்கு தீ வைத்தல், தடியடி உள்ளிட்ட பலவற்றை நடத்தி அதையே காரணமாக்கி மக்களை வன்முறையாளர்களாக கட்டமைத்து துப்பாக்கி சூட்டை நடத்த உத்தரவிட்டது. 10 க்கும் மேற்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை குறிவைத்து பச்சைபடுகொலை செய்தது. 3000 காவல்துறையினரை கொண்டு தூத்துக்குடி நகரை திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்றி மக்கள் அமைதியாக இருக்க வேண்டும், வீட்டை விட்டு வராதீர்கள் மீறி வந்தால் கைது செய்யப்படுவார்கள் என மிரட்டிக்கொண்டு இருக்கிறது. ஒரு மாபெரும் மனித உரிமை மீறலை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இறந்த பலபேரின் உடல்களை வெவ்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றிக்கொண்டும் மருத்துமனைகளுக்கு உள்ளேயே சென்று மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திக்கொண்டு தன் வன்முறை வெறியாட்டத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
கார்பொரேட் கைக்கூலி எடப்பாடி அரசின் இந்த அரச வன்முறையை எதிர்த்து தமிழ்நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆங்காங்கே சாலை மறியல்களும் முற்றுகை போராட்டங்களும் நடக்கின்றன. ஒரு பக்கம் தூத்துக்குடி மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துள்ள தமிழக அரசு, அம்மக்களுக்கு ஆதரவாக போராட்டம் தமிழகம் முழுக்க பரவிவிடாமல் தடுக்க போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குகளை பதிந்து சிறையில் அடைக்க ஆரம்பித்துள்ளது.
இன்று சென்னை,நந்தனம் சாலை சந்திப்பில் காலை 10 மணி அளவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியால் ஒருங்கிணைக்கப்பட்ட சாலை மறியல் கலந்து கொண்ட மக்கள் முன்னணி மற்றும் இளந்தமிழகம் தோழர்கள் 22 பேரை கைது செய்தது. பிறகு கைது செய்யப்பட்ட பெண்களை மட்டும் விடுவித்து விட்டு 14 ஆண் தோழர்கள் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில்(341,353,143,188,506) பொய் வழக்கை பதிந்து சிறையில் அடைத்து விட்டது.கார்பொரேட்டுகளுக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் தமிழக அரசின் கைது நடவடிக்கையை தமிழ்த் தேச முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட தோழர்களை மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோருகிறது.